எந்த பேரிடர் காலத்திலும் பாதிக்கப்படுவது அந்த நாட்டின் பூர்வ குடிகளும், சமுகத்தால் புறக்கணிக்க பட்ட உழைக்கும் மக்களும் தான். அனைவருக்கும் தெரியும் கொரோனா இந்தியா முழுக்க இருக்கும் புலம்பெயர் தொழிலாளிகளை கடுமையாக பாதித்தது என்று. பாதி கொரோனாவால் என்றால் மீதி அரசின் ஒழுங்கற்ற திட்டத்தினாலும். அது மட்டும் இல்லாமல் நாடு முழுக்க பரவி கிடக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இருக்கும் பான் இந்தியா (PAN India) மார்க்கெட்டை முதலாளித்துவ ஊடகங்கள் பயன்படுத்தி கொண்டது. சரி நம்ம ஏரியாக்கு வருவோம், பணக்காரர்கள் தங்கள் நுரையீரலை தூய்மையாக வைக்கவேண்டும் என்று நம் மெட்ராஸ் க்காக உழைத்த மக்களை தூக்கி வெளியே போட்டோம். 20 – 25 ஆண்டுகளாக சமுக விலகளில் இருக்கும் அந்த மக்கள் பற்றி நமக்கு ஒரு கவலையும் இல்லை. கிட்டத்தட்ட அகதி முகாம்களைப் போன்று காட்சி அளிக்கும் அந்த பகுதி அரசுக்கு ஷூட்டிங் வாடகை விடும் இடமாக மாறிவிட்டது. “நீ சென்னைக்கு உழைத்தது போதும், இனி உனக்கு omr” என்று செல்வம் படைத்தவர்களுக்கு மேலும் செல்வம் சேர்க்கும் கருவியாகவே மாற்றப் பட்டிருக்கிறார்கள் கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி மக்கள்.
இந்த பேரிடர்காலத்தில் யாரும் கண்டுக்காத பகுதியாகவே மாறிவிட்டது. கானா பாடலை மட்டும் எடுக்க வந்த ஊடகங்கள் இந்த காலத்தில் காவல்துறை அதற்கும் வழிவிட வில்லை. 2 ஊடகங்கள் மட்டும் வந்து இருக்கிறது அதுவும் காவல் துரையின் சாகசங்களை எடுக்க. இப்படியாக உள்ளே நுழையும்போது கூச்சலிட்ட கண்ணகி நகர் மக்கள். “வா.. பா 3 மாசம் கழிகிச்சு இப்போ தான் உங்களுக்கு வர தோணுச்சா ? என்றார் ஒரு கோட் பாதர். சரி நா பேசுறீங்களா ? என்றேன். “இல்லை பா.. எல்லா கட்சிகாரங்களுக்கும் என்னை தெரியும், கட்சி பெயரை சொல்லி வோட் இல்லைநோனே போய்ட்டாங்க. நானே இருக்குற காசை வெச்சி எங்க தெரு புள்ளைங்களுக்கு சோறு போடுறேன் 3 மாசமா. அதையும் கெடுக்க விரும்பல என்றார். இப்போது உங்களுக்கு தெரியும் நான் ஏன் அவரை கோட் பாதர் என்று சொன்னேன் என்று. நான் இவரோடு பேசிக்கொண்டு இருக்க “ஈனா பா அங்க” னு மூன்றாம் மாடியில் இருந்து ஒரு சத்தம், திரும்பி பார்த்தால் அக்கா அதுக்குள்ள கிழ வந்து என்ன பா பேசணும் என்றார் ராகினி அக்கா. “மூணு வேலை சோறு துன்னவே கஷ்டமா இருக்கு, ஒரு வேலை ரேஷன் அரிசி சாப்பிட முடிலனு கஞ்சி ஆக்கி துண்ணுறோம், இப்படியே மூணு மாசம் போச்சு” என்றார். இதுவே இந்த மக்களில் பெரும் பிரச்சனையாக இருக்கு.
பசி, பசி, பசி… இப்படி நீங்கள் கட்டி வைத்த வத்திப்பெட்டி வீடுகளின் ஒவ்வொரு குச்சியும் எரிகிறது. பொதுவாகவே கண்ணகி நகர், பெரும்பாக்கம் என்றால் கெட்ட வார்த்தை போல் பார்க்கும் பெரும் நிறுவனங்கள் இந்த தொற்று கால கட்டத்தில் இவர்களை முழு சமூக விலகளுக்கு ஆளாக்கியுள்ளது. இத்தனைக்கும் இந்த பகுதியில் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏதோ சேரிகளால் தான் இந்த தொற்று வந்தது மாதுரி அரசாங்கமும் நடத்துவது கடும் மன உளைச்சலை உருவாக்கி உள்ளது. இப்படியே பிரச்சனைகளாக பேசிய இவர்களிடம் வலுக்கட்டாயமாக நிறுத்தி ஒன்று கேட்டேன்.. சரி கா இப்படி இருக்கு நிலைமை, என்ன பண்ணனும் ? நான் அவர்கள் பேசும்போது குறுக்கிட்டதுக்கு கூட கோப படாமல் ஒன்றை சொன்னார்கள்… “எங்களோட வாழ்ந்து பாருப்பா .. தெரியும் ” அப்போது ஒன்று புரிந்தது எளிய மக்கள் பேசும் அரசியல் மிகவும் எளிமையானது காத்திரமானது என்று. இந்த மக்களை மட்டுமே நம்பி.. இவர்களை வைத்து அரசியல் நடத்தி, இவர்கள் ஓட்டிற்கு மட்டுமே பயன்படுவார்கள் என்று பயன்படுத்தி.. ஆட்சியில் அமர்ந்திருக்கும், அமைய சமயம் தேடி காத்திருக்கும் கட்சிகளுக்கு இவர்கள் தெரிவதில்லை.
சென்னைக்கு தெற்கே இப்படி என்றால் வடக்கு நம்மை வேறு விதமாக யோசிக்க வைக்கிறது. பழவேற்காடு இயற்கையின் பெரும் காட்சியகம். இங்கே 80% சதவீதத்திற்கும் மேல் மீன்பிடி தொழிலையும் கடலையுமே நம்பி வாழ்பவர்கள். இங்கு யாருக்குமே கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான ஊர் பஞ்சாயத்தாலும், கட்டுபாட்டாலும் இங்கு கொரோனாவால் வர முடியவில்லை என்றாலும் கடும் பசி இவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. பழவேற்காட்டில் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் பெண்கள் பெரும்பாலும் தனது கணவர்களை இழந்தவர்கள். புயல், மழை, எல்லை பிரச்சனை போன்றவைகளால். கிளி(எ)கிளியாம்பாள் என்ற மீனவ பெண்ணை சந்தித்து பேசிய போது இந்த தரவுகள் நமக்கு கிடைத்தது. 3 மாத காலமாக கடும் நெருக்கடியை சந்திக்கிறார்கள் இந்த பெண்கள். இதில் அரசு வருடத்திற்கு ஒரு முறை மீனவர்கள் கடலுக்கு போகாமல் இருக்கும் காலத்தில் இரண்டு மாதங்களுக்கு ரு.5000 தருவார்கள் இவை மீன்கள் முட்டையிடும் காலம். இந்த தொகை எப்பொழுதுமே ஜூன் மாதம் தரப்படும் ஆனால் அரசு இதை மார்ச், ஏப்ரல் குடுத்து அதை கொரோனா நிவாரண நிதி போல கணக்கு காட்டியிருக்கிறது.
அரசுக்கு தெரியாது மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று. இதில் 3 மாதம் கழித்து ஒரு சிறிய தகடை வைத்து சிறு மீன்களை கடலில் இருந்து பொறுக்கி கடை வைத்தால் காவல்துறையின் அராஜகம். ஏதோ கொரோனாவிற்கு இந்த எளிய மக்கள்தான் அண்ணன், தம்பி போன்று இவர்கள் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். “ஒன்று மட்டும் நிச்சயம், இவர்கள் அதிகாரத்தை எங்களிடம் மட்டும் தான் காட்ட முடியும்” என்கிறார் மங்கா. இப்படி 30, 40 வருசமாக கடலை மட்டுமே நம்பி இருந்த மீனவர்கள் நிலை இந்த பேரிடர் காலத்தில் பசி, பட்டினியோடு உளவியல் சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது. கிளியாம்பாளிடம் கடைசியாக ஒரு கேள்வி “இந்த நிலை நீடித்தால், என்ன செய்வீர்கள் ? கிளி ” செத்துதான் போவேன் …” என்று ஒரு பெரிய சிரிப்பை சிரித்தார். “1000 ருபாய் குடுத்து 3 மாசம் வயிறார சாப்பிட்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள்” என்று சொன்ன அரசுக்கு அது வெறும் நகைச்சுவையாக மட்டுமே தெரியும். கொரோனா காலத்தில் இப்படி நான் களத்தில் கண்ட அனுபவங்களிலிருந்து “மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்தே அரசியலுக்கு வருவார்கள்” என்று கூறிய லெனினின் வரிகளை அடைய பெரும் தூரம் இல்லை.. பிரச்சனைகள் அதிகம் ஆக பொதுவுடைமை சித்தாந்தங்களின் தேவை அதிகம் ஆகிறது.
– மதன் குமார் U S
Super