வெறுமையான அனல் காற்றின் ஊடாக பயணிக்கும் ஒரு கரிசக்காட்டு கதை…

அசுரன் என்ற படத்தின் ஆதார படைப்பு. அசுரன் படத்திற்கு முன்பாகவே நான் படிக்கத் தொடங்கிய புத்தகம்.படத்தை பார்த்த பின்பு புத்தகத்தின் பக்கங்கள் எல்லாம் படத்தையே மீண்டும் மீண்டும் படம் போட்டு காட்டி கொண்டிருந்தன. ஆனால் புத்தகத்தின் இறுதிப் பக்கங்களை வாசிக்கையில் படம் முழுவதும் மறைந்து புத்தகமே வென்று நின்றது.

தங்களுடைய வாழ்வாதாரங்களையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள முற்படும், எளிய மனிதர்களின் மூர்க்கத்தனமான போராட்டமே இக்கதையின் மையம்

புத்தகம் தொடங்கும்போதே மூர்க்கத்தனமாகவே தொடங்குகிறது. ரத்தம் தெறிக்க ஒரு வெட்டு… பூமி பிளக்க ஒரு குண்டு… அங்கு ஓட ஆரம்பித்த கால்கள் புத்தகத்தின் கடைசி பக்கங்கள் வரை
ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன.

அசுரன்' படம் குறித்து 'வெக்கை' நாவல் ...

படத்தில் காட்டியவாறு இக்கதையில் ஆக்ரோஷங்கள், வெறித்தனங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என எதுவும் நாவலில் இல்லை. கதை எளிமையான நேர்கோட்டிலேயே பயணிக்கிறது.

கதையில் எங்கும் சாதிய பற்றிய குறிப்புகளும் இல்லை. இந்த கதையை நாம் ஒரு தலித் இலக்கியம் என்று நேரடியாக முத்திரை குத்த முடியாது.

இக்கதை ஒரு பணக்காரனுக்கும் ஏழைக்குமான கதையாகவும் இருக்கலாம்
அல்லது ஏதாவது 2 சாதிகளுக்கு இடைப்பட்ட கதையாகவும் இருக்கலாம். ஆனால் பேசுவது எல்லாம் தலித்தியம் தான்.

கதையில் எல்லாமே குறியீடுகளாக தான் வெளிப்படுகின்றன. ஏனென்றால், இக்கதை முழுவதும் 15 என்ற ரெண்டுங்கெட்டான் வயதுடைய சிறுவன் சிதம்பரத்தின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.

கதையில், அப்பாவுக்கும் மகனுக்குமான பாசம், அம்மாவுக்கும் மகனுக்குமான பாசம், இப்படி மாமா, அத்தை, தங்கச்சி, சித்தி, சித்தப்பா என கச்சிதமான குடும்ப பாசங்கள் புத்தகம் முழுவதும் நிரம்பி வழிகிறது. மேலும் குடும்பங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது என பல இடங்களில் புத்தகத்தின் மையக்கருத்து மறைந்து பாசமே மேலோங்கி நிற்கிறது.

சிதம்பரம் வெட்ட நினைத்தது என்னவோ கையை மட்டும் தான். ஆனால் உயிரை எடுத்தது குறித்து
அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை. சொல்லப்போனால் சிதம்பரம் வெட்டிய கத்தி கூர் மழுங்கி விட்டது என கவலை கொள்ளவும் செய்கிறான்,

இதெல்லாம் 15 வயது சிறுவனின் எண்ணங்கள் என்பதால் கொஞ்சம் நெருடலாக தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கான வலியும் காரணமும் நாவலின் ஓட்டம் நமக்கு புரிய வைக்கிறது.

poomanis vekkai novel hits new record in amazon kindle which plot ...

காட்டில் தினம் ஓரிடத்தில் உணவுக்காக அலைந்து திரியும் போதும், கிடைத்ததை உணவாகக் கொள்ளும் போதும், பசியில் இருக்கும் போது கூட விவசாயின் உழைப்பை திருடக் கூடாது என்ற எண்ணமும் அவர்கள் தங்களின் வாழ்விடங்களோடு எவ்வாறு ஒன்றியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

சிதம்பரம் தன் அண்ணனை பல இடங்களில் நினைவுகூர்ந்தாலும் காட்டில் அவன் தனியாக இருக்கும்போது அண்ணனுடன் கிட்டி விளையாடுவதாக கற்பனை செய்துகொண்டு விளையாடும்
பக்கங்கள் மட்டும் மிகுந்த கணத்துடன் திரும்பின.

இக்கதையில் சமூகம், சட்டம், காவல் துறை ஆகியவற்றின் சாதிய சார்புகள் ஏற்றத்தாழ்வுகள், நில உரிமை ஆகியவற்றை பூடகமாகவும், கிளைக்கதைகளின் வழியாக கரிசகாட்டு மக்களின் வாழ்வியல் நுட்பங்களையும், பணம் என்னும் பூதத்தின் குதியாட்டத்தையும் எளிய மனிதர்களின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது.

“சட்டம்னா அது பொதுவா தான இருக்கணும், அது நம்மள மட்டும் ஏன் கேள்வி கேட்குது” என்ற சிதம்பரத்தின் கேள்விதான் கதை முடிந்த பின்பும் நமது காதுகளில் எதிரொலிக்கிறது.

~இர.யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *