வெள்ளை யானை (வம்சி புக்ஸ்) - ஜெயமோகன் | White elephant - Jayamohan

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட கொடூரப் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட எழுத்தோவியம் ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ நாவல். நூல் அறிமுகம் பேரா.பெ.விஜயகுமார் சமீப காலமாக தமிழில் நிறைய வரலாற்று நாவல்கள் எழுதப்படுவது நல்ல திருப்பமாகும்.

’வெள்ளை யானை’ நாவல் 1875-78 களில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தை மட்டுமல்லாது தலித்துகள் இணைந்து போராடிய முதல் தொழிற்சங்கப் போராட்டத்தையும் சித்தரிக்கிறது. மதராசப்பட்டனம் என்றழைக்கப்பட்ட இன்றைய சென்னை மாநகரின் வரலாற்றினைக் காட்டிடும் சாளரமாகவும் நாவல் அமைந்துள்ளது.

ஜெயமோகன் தமிழகம் நன்கறிந்த எழுத்தாளர். சிறுவயதில் தொடங்கிய எழுத்து முயற்சி இன்றுவரை செழிப்புடன் தொடருகிறது. ரப்பர், வெண்முரசு, விஷ்ணுபுரம், கன்யாகுமரி, காடு, ஏழால் உலகம், அனல் காற்று, இரவு, உலோகம், கன்னிநிலம் போன்ற நாவல்களும் நிறைய சிறுகதைகளும், இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் படைத்துள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கோவை ஞானியிடம் ஏற்பட்ட தொடர்பினால் தனக்கு இலக்கியத்தில் சமூகப் பொறுப்பு பற்றிய பிரக்ஞை ஏற்பட்டது என்கிறார். வெள்ளை யானை நாவல் ஜெயமோகனின் சமூகப் பொறுப்பு குறித்த பிரக்ஞையின் சாட்சியமாய் திகழ்கிறது. எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நினைவுகளை ‘சுரா, நினைவின் நதியில்’ என்ற நூலிலும், எழுத்தாளர் ஆ.மாதவனின் நினைவுகளை ‘கடைத்தெருவின் கலைஞன்’ என்ற நூலிலும் பதிவு செய்துள்ளார்.

சென்னை மாநகரில் அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கும், மேல்சாதி தமிழர்களுக்கும் குற்றேவல் செய்துவந்த தலித் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியான ’கறுப்பர் நகரம்’ பற்றிய விவரணைகளைக் படிக்கும்போது கல்நெஞ்சமும் கரையும். பஞ்சத்தின் கோரப்பிடியில் அகப்பட்டு தலித்துகள் செத்து விழுந்தபோதும் கிஞ்சித்தும் கருணையும், நீதியுணர்வுமின்றி வேடிக்கை பார்த்த மேல்சாதி மக்களின் சாதி வெறியை கதாப்பாத்திரங்கள் வழி ஜெயமோகன் சித்தரிக்கிறார். தலித் மக்களின் வலி, வறுமை, துயரம், மரணம் அனைத்தும் கடவுளின் செயல்; அதில் தலையிடுவதற்கு நாம் யார் என்று தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்து எளிதில் கடந்து செல்லும் கல்நெஞ்சர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியும்போது நம் நெஞ்சம் பதறுகிறது.

சென்னை நகரவாசிகள் எத்தனை பேருக்கு திருவல்லிக்கேணியில் இருக்கும் ஐஸ்ஹவுஸ் பற்றிய வரலாறு தெரியும்? ஆங்கிலேய அதிகாரிகள் மதுவில் கலந்து குடிப்பதற்கு தேவையான ஐஸ் கட்டிகள் எட்டாயிரம் மைல்கள் கடந்து வட அமெரிக்காவின் நியூஇங்கிலாந்தின் நன்னீர் ஏரியில் இருந்து ஐஸ்பாறைகள் வெட்டி எடுத்து கப்பலில் கொண்டுவரப்பட்டன. இந்த இராட்சஸப் பனிப் பாறைகள் வெள்ளை யானை என்றழைக்கப்பட்டன. ஃப்ரெடெரிக் டியூடர் என்ற அமெரிக்க நிறுவனம் இவ்வணிகத்தில் பெரும் லாபம் அடைந்தது. மெரினா கடற்கரையில் இருந்து பாறைகளை ஐஸ்ஹவுஸ் தூக்கிச் சென்று, உடைத்து, துண்டுகளாக்கி சென்னை நகரின் மேட்டுக்குடி மக்களுக்கு விற்றது. பார்மர் என்ற ஒற்றை அமெரிக்க நிர்வாகியின் தலைமையில் நூற்றுக்கணக்கான தலித் கூலிகள் வேலை பார்த்தனர். உள்ளூர் மேல்சாதி மேஸ்திரிகள் கூலிகளை சாட்டையில் அடித்து வேலை வாங்கினர்.

இராட்சஸப் பாறையின் அடிப்பகுதி கரைந்து, மெல்ல நகர்ந்து சுவரில் மோதி விபத்துகளும் அடிக்கடி நடந்தன. பாறைக்கும், சுவருக்கும் இடையில் சிக்கி உயிரிழந்த தலித் கூலிகள் ஏராளம். தலித்துகளின் உயிர் துச்சமென மதிக்கப்பட்ட அக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவித இழப்பீடும் நிர்வாகம் கொடுத்திடவில்லை. பனிக் கட்டிகளுடன் நாள்தோறும் பல மணி நேரங்கள் வேலை செய்த கூலிகளின் கால்களும், கைகளும் விளங்காமல் போய் அவதிப்பட்டனர். பஞ்ச காலத்தில் இந்த ஆபத்தான வேலைக்கும் கடும் போட்டி இருந்தது தலித் மக்கள் வாழ்விலிருந்த துயரத்தின் உச்சமாகும்.

இக்கொடூரங்கள் நடந்த ஐஸ்ஹவுஸ் வெகு அருகில் சென்னை நகர் இராணுவ அதிகாரியின் அலுவலகமும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் இருந்தன என்பது நகைமுரண். அயர்லாந்தில் இருந்து எய்டன் என்ற இளைஞர் இராணுவ அதிகாரியாக சென்னை நகரில் பொறுப்பேற்பதில் தொடங்குகிறது நாவல். காப்டன் எய்டன் அயர்லாந்தில் ஓர் எழைக் குடும்பத்தில் பிறந்தவர். எய்டனின் தந்தை பகலில் மாடுகள் மேய்த்தும், இரவில் வேட்டையாடியும் வாழ்நாளைக் கழித்தார். எய்டன் தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் முடித்துவிட்டு இங்கிலாந்தில் இராணுவப் பள்ளியில் படித்து காலனிய நாடுகளில் அதிகாரியாகப் பணியாற்றுவதற்கான தகுதி பெறுகிறார். அன்பான பெற்றோர்களையும், உடன்பிறப்புகளையும் பிரிந்து இந்தியா வருகிறார். அடர்ந்த காடுகளையும், மேகங்கள் தவழ்ந்திடும் மலை முகடுகளையும், நீண்டு வளைந்தோடும் அழகிய கடற்கரைகளையும் கொண்ட எழில்மிகு அயர்லாந்து நாட்டைவிட்டு இந்தியா நோக்கிப் பயணிக்கிறார்.

எல்லா அயர்லாந்து நாட்டினரிடமும் இருக்கும் விடுதலை ஏக்கமும், தாகமும் எய்டன் மனதிலும் குடிபுகுந்திருந்தது. இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றிட பல நூறாண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கும் நாடுதானே அயர்லாந்து. படிக்கும் காலத்திலிருந்தே புரட்சிக் கவிஞன் ஷெல்லியின் மீது தீராக் காதல் கொண்டவர் எய்டன். அதிலும் பீட்டர்ஸ் ஃபீல்டு எனுமிடத்தில் இங்கிலாந்து நாட்டின் தொழிலாளிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தின் தியாகத்தைப் புகழ்ந்து ஷெல்லி எழுதிய உணர்ச்சிமிகு கவிதை எய்டன் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தது.

சென்னை நகரின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் அவர் சந்தித்த முதல் பிரச்சனை ஐஸ்ஹவுஸில் நடந்த கொலை சம்பவமே. ஐஸ்ஹவுஸில் வேலை பார்த்த தம்பதிகள் இருவரை நீலமேகம் என்ற கங்காணி சாட்டையால் அடித்துத் துன்புறுத்துவதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். விசாரணை மேற்கொள்ள ஐஸ்ஹவுஸ் செல்கிறார். அங்கு நிலவிடும் கொடூர நிலைமைகளைக் கண்டு கண் கலங்குகிறார். தொழிலாளிகள் சாவின் விளிம்பில் நின்று பணியில் ஈடுபடுவதைப் பார்த்து மனம் பதறுகிறார். ஐஸ்ஹவுஸ் நிர்வாகி பார்மர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஐஸ்ஹவுஸ் இயங்குவதாகச் சொல்லிச் சமாளிக்கிறார்.

எய்டன் கொடூரத் தாக்குதலுக்குள்ளான தம்பதிகளை தன்னுடைய அலுவலகத்தில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்று பார்மரிடம் கட்டளையிடுகிறார்.
அலுவலகம் திரும்பியதும் தலித் கூலிகளின் அவல நிலையை நினைத்துத் தூங்க முடியாமல் தவிக்கிறார். துயரத்தில் இருந்து விடுபட பல ரவுண்டுகள் விஸ்கி குடிக்கிறார். விஸ்கியில் போடுவதற்கு ஐஸ் கட்டிகளைக் கொண்டுவரும் ஆடர்லியைத் திட்டி விரட்டுகிறார். அன்றிலிருந்து ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவதில்லை என்று உறுதிகொள்கிறார். ஐஸ்கட்டிகளில் தலித் கூலிகளின் இரத்தத் துளிகளைக் காண்கிறார். இரவில் மரிசா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண் அவரை மகிழ்விக்க வருகிறாள். மரிசா மற்ற ஆங்கிலேய அதிகாரிகளிடம் இல்லாத நற்குணங்களை எய்டனிடம் கண்டு வியக்கிறாள்.

மறுநாள் காலையில் காத்தவராயன் என்ற தலித் மக்களின் தலைவன் வருகிறார். காத்தவராயனிடமிருந்து இந்தியாவில் இருக்கும் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானம் பற்றித் தெரிந்துகொள்கிறார். கட்டுமானத்தின் கீழடுக்கில் இருக்கும் தலித்துகள் மற்ற சாதியனருக்கு அடிமைகளாக இருக்க விதிக்கப்பட்டவர்கள், சபிக்கப்பட்டவர்கள் என்பதறிந்து பரிதாபப்படுகிறார். இதற்கு விடியலே இல்லை என்பது மேலும் கவலையளிக்கிறது. ஷெல்லியின் விடுதலை உணர்ச்சிகளைப் பொங்கி எழச்செய்யும் கவிதைகள் மீண்டும், மீண்டும் மனதில் பளிச்சிடுகின்றன. இவைகளெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா? அர்த்தமில்லையா என்று ஏங்குகிறார்.

எய்டனை தலித்துகள் வாழ்ந்திடும் கறுப்பர் நகரத்துக்கு காத்தவராயன் அழைத்துச் செல்கிறார். மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியற்ற சேரியில், எலிப் பொந்துகள் போன்ற வீடுகளில் புழுக்களைப் போல் வாழும் மக்களைப் பார்த்து எய்டனின் கண்கள் கலங்குகின்றன. வறுமையும், நோயும் கைகோர்த்துக் கொண்டு தலித்துகளை சொல்லொண்ணா துயரத்துக்கு இட்டுச் செல்வதைப் பார்த்து செய்வதறியாது திகைக்கிறார். சேரியில் ஒரு மூதாட்டி எய்டனுக்கு எலுமிச்சைச் சாறு கொடுத்து மகிழ்கிறார். மூதாட்டியின் முகத்தில் தெரியும் அன்பில் தன் தாய் காஸிடியின் அன்பு பொங்கும் முகத்தினைப் பார்க்கிறார். ஐஸ்ஹவுஸ் கங்காணி நீலமேகம் அடித்துத் துன்புறுத்திய கூலிகள் இருவரும் இறந்த செய்தியையும் காத்தவராயன் சொல்கிறார். கொலை செய்யப்பட்ட தம்பதிகளின் பிணங்களை ஐஸ்ஹவுஸ் முன்னால் கொண்டுவரச் சொல்லி காத்தவராயனைக்கு ஆணையிடுகிறார்.

சென்னையில் எய்டனுக்கு அமைதியையும், ஆறுதலையும் தரும் ஒரே ஜீவன் மரிசா மட்டுமே. ஒரு நாள் மரிசாவுடன் சாரட் வண்டியில் பயணித்து ராயபுரம் கத்தோலிக்க சர்ச்சின் பாதிரியார் பிரண்ணனைச் சந்திக்கச் செல்கிறார். சாரட் வண்டியிலிருந்து எய்டன் இறங்குவதற்கு வசதியாக ஒரு தலித் கூலி ஓடோடிவந்து குனிந்துகொள்கிறான். அவன் முதுகில் மிதித்து எய்டன் இறங்குவதைக் கண்டு மரிசா அதிர்ந்து போகிறாள். அவளையும் அதேபோல் எய்டன் இறங்கச் சொல்கிறார். இப்பாவச் செயலைச் செய்திட மரிசா மறுத்ததும் அவளை சாரட் வண்டியிலிருந்து அப்படியே தூக்கி இறக்குகிறார். மரிசா சர்ச் அருகில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு ஓடிவிடுகிறாள்.

சர்ச்சில் பாதிரியார் பிரண்ணனும் எய்டனும் பஞ்ச நிலைமைகள் பற்றி நீண்ட நேரம் விவாதிக்கின்றனர். பஞ்சத்திற்குக் காரணம் பிரிட்டிஷ் அரசின் தவறான கொள்கையே என்பதை மனந்திறந்து பேசுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நல்ல விளைச்சல் இருந்தபோதும் ஏன் இந்தப் பஞ்சம்? விளைந்த தானியங்கள் எல்லாம் சென்னை, நாகப்பட்டினம், விசாகப்பட்டினம் வழியாக கப்பல்களில் ஐரோப்பாவில் போரில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதே காரணம் என்பதை யாவரும் அறிவர். பிரிட்டிஷ் பேரரசுக்குத் தெரியாதா? இதைத் தடுக்க முடியாதா?

பஞ்ச நிலைமையை நேரில் கண்டு வருவதற்கு எய்டன் விரும்புகிறார். சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை பயணித்தாலே போதும் சென்னை ராஜதானியில் நிலவிடும் பஞ்சத்தின் அளவைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் பாதிரியார் பிரண்ணன். எய்டன் செங்கல்பட்டு வரை பயணிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். பஞ்சத்தின் கொடுமையிலிருந்து மீள்வதற்கு சென்னையை நோக்கிப் பயணிக்கும் தலித் மக்கள் பட்டினியில் செத்து விழுகிறார்கள். தெருவெல்லாம் பிணங்கள். ஸ்காட்டிஷ் மிஷனரிகள் மட்டும் ஆங்காங்கே நிவாரண வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கிறார். பிணங்களைப் புதைத்து, இறுதி மரியாதை செய்கிறார்கள். செங்கல்பட்டு கலெக்டரைச் சந்தித்து பஞ்சம் குறித்த அறிக்கையை பெற்றுக்கொண்டு சென்னை திரும்புகிறார் எய்டன்.

தன்னுடைய அனுபவங்களையும் ஓர் அறிக்கையாக எழுதி சென்னை கவர்னரிடம் கொடுப்பதற்கு தயார்படுத்திக் கொள்கிறார். இத்துடன் ஐஸ்ஹவுஸ் சம்பவம் குறித்தும் ஒரு ரிப்போர்ட் எழுதிக்கொண்டு கவர்னரை சந்திக்கச் செல்கிறார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த ஆடம்பரத்திற்கும், கறுப்பர் நகரில் இருந்த அவலத்திற்கும் இடையிலான நிலைமை அவர் மனதைக் கொந்தளிக்கச் செய்கிறது. கவர்னர் பொறுமையாகக் கேட்டு ரிப்போர்ட்டை வாங்கிக் கொள்கிறார். எய்டனின் இரக்கக் குணத்தையும், நேர்மையையும் மெச்சுகிறார். திருப்தியுடன் எய்டன் தன்னுடைய அலுவலகம் திரும்புகிறார். ஊழலில் திழைக்கும் ஆங்கிலேய அதிகார வட்டம் நேர்மையான முடிவுகளை எடுக்குமா என்ற சந்தேகமும் மனதில் தோன்றுகிறது.

அலுவலகம் திரும்பும் காப்டன் எய்டனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. கவர்னர் அலுவலகக் கடிதம் ஒன்றை லெஃப்டினெண்ட மக்கன்ஸி கொடுக்கிறார். காப்டன் எய்டனின் திறமையைப் பாராட்டி அவர் மேஜராகப் பதவி உயர்வு பெற்று, தென்காசிக்கு மாற்றலாகி இருப்பதைக் கடிதம் தெரிவிக்கிறது. பொறுப்புகளை காப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ள மக்கன்ஸியிடம் ஒப்படைத்துவிட்டு மறுநாளே தென்காசி செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல் இருக்கிறது. இருப்பினும் திட்டமிட்டபடி ஐஸ்ஹவுஸ் தொழிலாளிகளின் பிரச்சனைகளை அன்று மாலையே தீர்த்துவைத்து அவர்களுக்கு நியாயம் வழங்கிடலாம் என்று நினைக்கிறார், காத்தவராயன் ஐஸ்ஹவுஸ் நிர்வாகத்தால் கொல்லப்பட்ட இருவரின் பிணங்களையும் எடுத்துக்கொண்டு ஐஸ்ஹவுஸ் வந்து சேருகிறார். ஐஸ்ஹவுஸ் கூலிகள் தங்களுடன் வேலை பார்த்தவர்களின் பிணங்களைப் பார்த்ததும் கொதித்தெழுவார்கள் என்று எய்டனும், காத்தவராயனும் திட்டமிட்டு செயல்பட்டது வெற்றி அடைகிறது. அவர்கள் எதிர்பார்த்ததுபோல் ஐஸ்ஹவுஸ் கூலிகள் வேலை நிறுத்தம் செய்து வாசலில் திரண்டு நிற்கின்றனர். காத்தவராயன் அதற்கான ஏற்பாடுகளையும் முன்னதாகவே செய்து முடித்துள்ளார். எய்டனும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு பிளட்டூன் குதிரைப் படையுடன் ஐஸ்ஹவுஸ் வருகிறார். இந்திய மண்ணில் முதல் தொழிற்சங்கப் போராட்டம் வெடித்து எழுந்துள்ளது கண்டு எய்டன் மகிழ்ச்சி அடைகிறார். ஷெல்லி புகழ்ந்து பாடும் புரட்சிக் கனவு நனவாகிறது என்று நினைத்துப் பூரிப்படைகிறார், இப்போராட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவாகப் போகிறது என்று எண்ணிப் பெருமை கொள்கிறார்.

ஐஸ்ஹவுஸ் நிர்வாகி பார்மரை நெருக்கிக் கோரிக்கைகளை வென்றடையும் தருணத்தில் முரஹரி அய்யங்கார் வந்து சேருகிறார். தன்னைக் கேட்காமல் பார்மர் எந்தவொரு உடன்பாட்டையும் செய்ய முடியாது என்கிறார். கம்பெனியின் பெரும் பகுதி பங்குகளை தான் வாங்கியுள்ளதையும், மற்ற பங்குதாரர்களின் வக்கீல் என்பதால் அவர்களின் சார்பாகப் பேசுவதற்கு தனக்கு முழு அதிகாரம் இருப்பதையும் எழுத்துப் பூர்வமாகக் காட்டுகிறார். ஐஸ்ஹவுஸ் நிர்வாகம் தற்போது தன்னுடைய கைகளில் இருப்பதால் பார்மரின் உடன்படிக்கை எதுவும் செல்லாது. கூலிகளின் எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை உடனே கலைந்து செல்லும்படி காப்டன் எய்டன் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அய்யங்காரின் முயற்சிகளுக்குப் பின்னால் கவர்னர்

மாளிகையின் சதியும் இருக்கிறது என்பதை எய்டனால் ஊகிக்க முடிகிறது. நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்துகொள்கிறார். எய்டன் எந்தவொரு முடிவை எடுக்க முடியாமல் திகைத்து நிற்பதைப் பார்த்த சார்ஜெண்ட் நிலைமையை தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு குதிரைப் படையை தட்டிவிடுகிறான். கூலிகள் சிதறடித்து விரட்டப்படுகிறார்கள். எய்டன், காத்தவராயன் இருவரின் கண் முன்னாலேயே தொழிலாளிகள் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள்.

தோல்வியுடன் திரும்பும் எய்டன் அளவுக்கு மீறிக் குடிக்கிறார். அமைதியை மரிசாவிடம் பெறலாம் என்று நம்பி அவள் வீட்டுக்குச் செல்கிறார். அங்கும் ஏமாற்றம் காத்திருக்கிறது. அன்றொரு நாள் எய்டன் சாரட்டிலிருந்து கிழிறங்க தலித் கூலியின் முதுகின் மீது கால்வைத்து இறங்கிய செயலை அவள் மறக்கவில்லை.

ஆங்கிலேயர்களின் அதிகாரம், ஆணவம் இவற்றின் அடையாளமான செயலாகவே இதனை அவள் கருதினாள். ஒரு தலித் கூலியை அவமரியாதை செய்த எய்டனை அவள் மன்னிக்கத் தயாரில்லை. எய்டனை வீட்டுக்குள்ளேயே அனுமதிக்காமல் விரட்டிவிடுகிறாள். துயரத்துடன் அலுவலகம் திரும்பும் எய்டன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறார்.

தக்க நேரத்தில் இராணுவ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைக்கிறார். எய்டனைப் பார்ப்பதற்கு காத்தவராயன் மருத்துவ மனை வருகிறார். குதிரைப் படையின் தாக்குதலினால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்ற நல்ல செய்தியைச் சொல்கிறார். செய்தி கேட்டு எய்டன் மனம் ஆறுதல் கொள்கிறார். எய்டனின் தற்கொலை முயற்சி தவறானது என்பதைக் காத்தவராயன் சுட்டிக்காட்டுகிறார். எய்டன் போன்ற நல்ல அதிகாரிகளின் தலையீடுகளால் மட்டுமே தலித்துகள் ஏதேனும் சில சலுகைகள் பெற முடியும். சாதியக் கொடுமைகளை நாள்தோறும் அனுபவிக்கும் தலித்துகளுக்கு எய்டன் போன்றவர்களே ஆறுதலாய் இருப்பதைக் கூறுகிறார். உடல் நலம் பெற்று சென்னையிலிருந்து பல மைல்கள் தொலைவிலிருக்கும் தென்காசி நகரில் இராணுவ மேஜராகப் பொறுப்பேற்று, ஐஸ்ஹவுஸ் போராட்ட நினைவுகளில் தன் நேரத்தைக் கழிக்கிறார்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : வெள்ளை யானை

ஆசிரியர் : ஜெயமோகன்

வெளியீடு : வம்சி புக்ஸ்

விலை : ரூ.600

 

எழுதியவர் 

பேரா.பெ.விஜயகுமார்

 

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *