கோவிலூர் வேதாந்த மட நூலகத்திற்கு சென்று குறிப்புதவி வேலையை (Reference) முடித்து விட்டு மதுரை செல்லலாம் என்றெண்ணி திருப்பத்தூரில் இறங்கிய போது எனது நண்பர் திரு. சவுந்திரபாண்டியன் வேம்பத்தூர் சங்கர ஜெயந்தி நாளை நடைபெற இருப்பதால் இந்த விழாவுக்கு பல முக்கிய அன்பர்கள் வருவார்கள் என்று ஞாபகப் படுத்த அப்படியே அவர் வேம்பத்தூர் சிலேடைப்புலி பிச்சுவையர் வம்சாவளியைச் சார்ந்த கண்ணபிரான் என்பவரை தொடர்பு கொள்ளச் சொல்லி அலைபேசி எண் கொடுத்தார்.

பின்பு மதுரை செல்வதை தவிர்த்துவிட்டு சிவகங்கை சென்று இறங்கிய பொழுது இரவு 9.00 மணி. பசி வயிற்றை கிள்ளிற்று. கடைசி டவுண் பஸ் எந்த நேரத்திலும் வரும் எனபதால் இரவு சாப்பாட்டைத் தவிர்த்தேன்.

சிவகங்கையிலிருந்து வேம்பத்தூர் கிராமத்துக்குச் செல்லும் டவுண் பஸ் 9.15 மணிக்கு வந்து சேரும் பேருந்தே இறுதி வண்டி என்பதால் கிராமத்துக்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் வேளையில் வண்டியும் வந்து விட்டது.

திடீர் திடீரென திட்டமிடாத பயணத்தின் சாகசம் என் வாழ்வில் பல அனுபவங்களினைத் தந்திருக்கிறது. அப்படியான தருணத்தில் பயணம் பண்ணுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்த நான் டவுன் பஸ்ஸில் ஏறி விட்டேன்.

கிராமத்துக்கு அன்னியனான நான் இரவு நேரத்தில் செல்ல இருப்பதால் நண்பர் சொன்ன நபர் இல்லையெனில் ஏதாவது ஊர்க் கோவில் வாசலிலோ அல்லது ஊர்ச் சாவடியிலோ தூங்கி விட்டு வந்து விடுவோம் என்ற எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வேம்பத்தூர் கிராமம் என்னை கவர்ந்திழுக்கக் காரணம் வடமொழி இலக்கியங்களின் பல முக்கிய நூல்களினை முதன் முதலில் தமிழுக்கு கொண்டு வந்த பலபுலவர்களின் புகலிடம் வேம்பத்தூர்.

மேலும் தாய் மொழித் தமிழ்ப் பற்றும் தமிழ் தாத்தா உ.வே.சா. வினுடைய என் சரித்திரம் நூலூம். ஒரு நூற்றாண்டு முன்பாக உ.வே.சா. அவர்களும் வண்டி கட்டிக் கொண்டு சென்ற ஊர் வேம்பத்தூர்.

வாரியார் சுவாமிகள் வேம்பத்தூர் என்ற பெயர் கேட்டாலே தமிழ் வளர்த்த ஊர் என்று எழுந்து நின்று மரியாதை தருவாராம்.

முனைவர் சு. வேங்கடராமன் எழுதிய அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு நூலும்தான்.

தமிழ் சார்ந்த காப்பியப் புலவர் முதல் இன்றைய கால தமிழ் தாத்தா உ.வே.சா., வரை அந்த கிராமத்து மண்ணில் பெரியவர்கள் பாதம் பட்ட வேம்பத்தூர் பூமியில் ஒரு இரவாவது தங்க வேண்டும் என்ற வேட்கை என்னை இழுத்து விட்டது.

1901 ல் பாண்டித்துரைத் தேவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் சங்கம் உலகமே அறியும். ஆனால் அதற்கும் முன்பாக முன்பாக 1878 ம் ஆண்டு வேம்பத்தூர் கவிராஜா பண்டிதர் செந்தமிழ் சங்கம் உருவாக்கப்பட்ட கிராமம் பெரும்பாலான தமிழ் உலகம் அறியாது.

தமிழ் வழி வேதாந்தத்திற்கு மூலக் கர்த்தாவான பாடுதுறை பாடிய தத்துவராயர், வரதுங்கராம பாண்டியர் ஆசிரியரான ஈசான முனிவர், வடமொழியிலிருந்து சுந்தர தமிழில் பாடிய ஆதிசங்கரரின் சவுந்தர்யலகரி பாடிய வீரை கவிராசபண்டிதர், திருவிளையாடற் புராணம் இயற்றிய பெரும்பற்றப் புலியூர் நம்பி, ஞானவாசிட்டம் தந்தருளிய வீரை ஆளவந்தார், பகவத் கீதையை முதன்முதலில் தமிழுக்கு கொண்டு வந்த பட்டனார், பராபரமாலை பாடிய அம்பிகாபதி, நெல்லை வர்க்கக் கோவை பாடிய திருநெல்வேலி பெருமாளையர், அழகர் கலம்பகம் இயற்றிய கவிக்குஞ்சர பாரதி, அழகர் பிள்ளைத் தமிழ் இயற்றிய சாமிகவி காளத்திருத்திரர், அரிச்சந்திர புராண விருத்தம் பாடிய வீரை ஆசு கவிராயர் பிரபந்த தீபிகை இயற்றிய முத்து வேங்கட சுப்பையர் இராமநாதபுர சேது சமஸ்தான வித்வான் சிலேடைப்புலி பிச்சுவையர், பாகவதத்தை தமிழில் மொழிபெயர்த்த செவ்வைச்சூடுவார் போன்ற பல புலவர் பெருமக்கள் வேம்பத்தூர் குழாம் வகைச் சார்ந்த சோழிய பிராமண பரம்பரையினர்.

பல்வேறு வடமொழி இலக்கிய நூல்கள் பெரும்பாலானவை முதன் முதலாக தமிழுக்கு கொண்டு வந்த பரம்பரையினர் வேம்பத்தூர் கிராமத்துப் புலவர்களே.

வேம்பத்தூர் புலவர்கள் முன் அடைமொழி வீரை என்ற பெயராலும் அறியப்படுகிறது. வேம்பத்தூரை மையமாக கொண்டு சமபந்த வழியில் கொண்டும் கொடுத்தும் இராமநாதபுரசமஸ்தானத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த புலவர் பெருமக்கள்.

நிம்பை வனமான வேம்பத்தூர் புலவர்களுக்கும் திருவிளையாடற்புராணத்திற்க்கும் பெரிய தொப்புள்குடி பந்தம் உண்டு.

பரஞ்ஜோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம் இந்த வேம்பத்தூர் புலவ்ர்களிடத்தில் அரங்கேற்றம் செய்த பொழுது நம் ஊர் மீனாட்சி அம்மனை சோழநாட்டு புலவன் பாடியிருக்கையில் நாம் எப்படி பாடாமல் விட்டு விட்டோம் என்றெண்ணிய வேம்பத்தூர் வழியினர் செவி வழிச் செய்திகளாக பரவிக் கிடந்த மதுரை சொக்கநாதரின் திருவிளையாடல்களினை சேகரித்து பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவரால் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் இயற்றப்பட்டது.

சிருங்கேரி மடத்திற்கு மடாதிபதியான ஒருவரும் இந்த வேம்பத்தூர் சார்ந்தவர்.

மூன்றாம் தமிழ்ச்சங்க வளர்ச்சியிலும் வேம்பத்தூர் புலவர்களுக்கு பெரும் பங்குண்டு. அந்த சேவைக்காக மானியமாக பாண்டியன் மன்னன் கொடையாக அளிக்கப்பட்ட ஊரே வேம்பத்தூர்.
இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு கோபுரம் வேம்பத்தூரார் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.

Image

மீனாட்சியம்மன் பிறக்கும் முன்பாக நூறு சிவாலயங்கள் கட்டப்பட்டதில் வேம்பத்தூர் ஆவுடைநாயகி சமேத கைலாசநாதர் கோவில் என்ற சிவாலயம் இருக்கும் ஒரு ஊர் வேம்பத்தூர். நீளாதேவி சமேத சுந்தரராஜபெருமாள் கோவிலும் உள்ளது. இவ்வளவு செய்திகள் வேம்பத்தூர் கிராமத்துக்குப் பயணிக்கையில் மனவோட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது.

சிவகங்கையிலிருந்து இரவு வேளையில் டவுண்பஸ் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது சிறிது பயம் இருந்தது. ஊரைத் தவறிவிடக் கூடாது. நண்பர் கொடுத்த அலைபேசி எண் கிடைக்கவில்லை. எனது பக்கத்தில் அமர்ந்தவரிடம் பேச்சுக் கொடுக்க நன்றாக உரையாடி வந்தார். அவரும் உங்களைக் கண்டால் ஏதோ தூரத்து ஊரில் இருந்து வருவதாக தெரிகிறதே

” எந்த ஊர் என்றார்”

“ சென்னை என்றேன்”
.
”என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்” “எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார்.

தம்பி நான் வேம்பத்தூர் செல்கிறேன். அந்த ஊர் வரும் வேளையில் இறக்கி விடுங்கள் என்று அவரிடம் கூறினேன்.

அப்பொழுது அவர் சார் நான் வேம்பத்தூர் முன்பாக இடைக்காட்டூர் என்ற ஊரில் இறங்கி விடுவேன் என்றார்.

யார் வீட்டுக்குச் செல்ல இருக்கிறீர்கள். வேம்பத்தூர் கிராமத்தார் சில நண்பர்கள் என்னுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
அதற்கு நான் ஊருக்கு புதிது. வேம்பத்தூர் கிராமத்தில் யாரையும் எனக்குத் தெரியாது. அங்குள்ள பிராமணர் அக்ரகாரத் தெருவில் ஒருவர் இருக்கிறார். ஆனால் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றேன்.

சார் நீங்க நினைப்பது மாதிரி கிடையாது . ஊர் ஒரு மாதிரியான சூழலில் இருக்கிறது. நீங்க வேற இரவு நேரத்தில் தெரியாத நேரத்தில் இப்படி பயணம் பண்ணயிருக்கக் கூடாது.

நான் சிவகஙகையில் பி.இ. இஞ்சினியரிங் படித்துக் கொண்டு வருகிறேன். எனக்குத் தெரிந்த வேம்பத்தூர் நண்பரிடம் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை சொல்லட்டுமா என்றார்.
அதற்கு நான் பரவாயில்ல, பார்த்துக் கொள்கிறேன் என்றேன்.

என்ன விசயத்திற்காக அக்கிராமத்துக்குச் செல்கிறீர்கள் என்று நான் அறிந்து கொள்ள இயலுமா என்று கேட்டார்.

தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவரிடம் நான் வந்த வருகையை எப்படி சொல்வது என்று நினைத்து, சார் அந்த கிராமம் தமிழ் வளர்த்த ஊர் மற்றும் பண்டைய காலங்களில் கம்பன் முதல் காளமேகப்புலவர், உ.வே.சா. வரை உள்ள அனைத்து தமிழ் புலவ்ர்களும் மிதித்த பூமி தம்பி. ஆகையால் அந்த ஊரில் ஒரு இரவு தங்கிட வேண்டும் என்பதற்காகச் செல்கிறேன் என்றேன்.

என்னை முதலில் ஒரு மாதிரியாக பார்த்து, என்ன சார் அப்பேர்பட்ட ஊரா சார் வேம்பத்தூர்? என்றார். மேலும் ஆச்சரியப்பட்டு கம்பன் இந்த ஊருக்கு வந்திருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டு , எங்களுக்கே எதுவுமே தெரியாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நீங்கள் தமிழ் பாடத்தை வாசித்துக் கொண்டு இந்த ஊரைத் தேடி இந்த இரவில் பயணம் செய்து வருவதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்றார்.

ஆனால் நீங்க சொல்லும் எந்த கதையும் பிராமணர் அக்ரகாரத்தை தாண்டி யாருக்கும் ஒரு விசயம் கூட தெரியாது என்று சொல்லிவிட்டு நான் என் ஊரில் இறங்காமல் உங்களுடன் வந்து வேம்பத்தூரில் இறக்கி விட்டு பொறுப்பான இடத்தில் உங்களை ஒப்புவித்து பின்பு எனது ஊருக்குச் செல்கிறேன் என்றார்.

ஏனென்றால் வேம்பத்தூரில் முதல் நாள் இரு வேறுபட்ட சமூகத்தாருக்கும் சண்டை வந்து கொலையில் முடிந்த நாளில் நான் பயணம் செய்வதால் அந்த நண்பர் கொஞ்சம் விசனப்பட்டார்.

போலீஸ் பந்தோபஸ்து வேம்பத்தூரில் போட்டிருக்கிறார்கள். நீங்கள் இரவு வேளையில் இறங்கும் போது தேவைஇல்லாத சந்தேகம் வரும் என்று நல்வழிப்படுத்தினார்.
ஆனால் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் ஊரிலேயே இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய பிறகு எனது மொபைல் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு ஏதாவது உதவி என்றால் உடனே போன் செய்யுங்கள் என்று கூறி விட்டு அவரது கிராமத்தில் இறங்கினார்.

நான் அடுத்த அரை மணி நேரத்தில் இரவு 10 மணி அளவில் தமிழ் வளர்த்த வேம்பத்தூரில் இறங்கி கண்ணபிரான்(ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்) என்பவருக்கு போன் செய்தேன். எந்த சிரமமும் இல்லாமல் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று முதலில் கை கால் அலம்பி வரச் சொல்லி குடும்பத்தினர் அனைவரையும் அறிமுகப்படுத்தி விட்டு நல்லதொரு இரவு உணவு படைத்தார்.

கண்ணபிரான் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) என்பவர் உ.வே.சா. குறிப்பிட்டபடி மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சிறந்த கவிஞர் என்று போற்றப்பட்டவரும், இராமநாதபுரத்தில் சேது சமஸ்தானத்தில் இரண்டரை நாழிகைக்குள் 12 சிலேடை வெண்பாக்களை பாடி சிலேடைப்புலி என்ற பட்டப் பெயர் பாஸ்கரசேதுபதியால் வழங்கப்பட்டவருமான சிலேடைப்புலி பிச்சுவையர் தாய் வழிப்பரம்பரையின் நான்காவது வாரிசுதாரர்.

எந்த பந்தவும் இல்லாமல் மிகவும் இயல்பாக அவரது வீட்டில் இதமான சூழழினை எனக்கு உண்டாக்கி பின் இரவு நீண்ட பொழுது வேம்பத்தூர் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணபிரன் வம்சாவளியைச் சேர்ந்த சிலேடைப் புலி பிச்சுவையர் இராமநாதபுர சேது சமஸ்தான தர்பாரில் அரசவை அமைச்சர் குழாம்களுடன் குழுமியிருக்க, அச்சமயம் வந்த பிச்சுவையர் அரச சிம்மாசனம் அருகே அமைந்துள்ள ஆசன இருக்கையில் யாரும் அமராமல் இருக்கக்கண்ட பிச்சுவையர் நேராக சென்று அரசன் அருகில் உள்ள ஆசனத்தில் அனுமதி இல்லாமல் அமர்ந்து விட்டாராம். அரசன் அனுமதி இல்லாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட சபையில் உள்ளோர் சற்று அஞ்சியிருக்கும் வேளையில் தனது புலமைத் திறத்தால் அரசும் வேம்பும் (வேம்பத்தூர்) அருகருகே இருந்தால் நலம் வாய்க்கும் என்ற போது அரசன் முதல் சபையோர் அசந்து விட்டனராம்.

இரவு எனக்கு நல்ல அமைதியான தூக்கம் கொள்வதற்காக சிறப்பான ஏற்பாடு செய்து தந்தார் கண்ணபிரான் அய்யா. காலை உணவு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் உங்கள் பழக்க உணவு எதை தயார் செய்கிறீர்களோ அதையே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால் முன்ன மாதிரி சாதி வித்தியாசம் பார்க்காமல் விருந்தினரை உபசரிப்பதில் பாகுபாடு பார்க்காமல் சிறப்பாகவே கவுரவப்படுத்தினார். அவர் உரையாடியதில் சில தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன்.

தனிப்பாடல் பாடுவதில் சிறப்பு பெற்ற காளமேகப் புலவர் வேம்பத்தூர் கிராமத்திற்குள் நுழையும் பொழுது வாசலை பெருக்கி கொண்டிருந்த ஒரு சாதாரண பெண்மணி
”காளமேகம் என்னும் கட்ட வெளக்கமாறு இவர்தானோ” என்ற பொருள் தரும் விதமாக காளமேகத்தின் புலமையை கிண்டல் பண்ணினாளாம். அதற்கு காளமேகம் ”பெருக்க பெருக்க உனக்கு தெரியும்” என்று அப் பெண்மணியைச் சபித்தாராம். அந்த பெண்மணி பெருக்கி பெருக்கியே காலமாகிவிட்டதாக செவி வழிக் கதை உண்டாம்.

காளமேகப் புலவர் வேம்பத்தூர் கிராமத்தினுள் நடந்து வரும் பொழுது வெளியில் மலம் கழித்துக் கொண்டிருந்த சிறுவனை நோக்கி கிண்டல்தொனியில்
“ சிறு வேம்பும் கசக்குமோ ‘’ எனக் கேட்க உடனே அச் சிறுவன் தனது மலத்தைப் பார்த்துக்கொண்டு அதே தொனியில் “ தன் மூலமும் கசக்குமோ” என்றானாம்.

வேம்பத்தூர் கிராம மக்களை அவ்வளவு எளிதாக வெளியூரில் உள்ள புலவர்கள் ஏமாற்ற முடியாதாம். அதாவது யாராவது புதுப் புலவர்கள் இக்கிராமத்திற்குள் நுழைந்தால் வரும் புதிய புலவரை பாடச்சொல்வார்களாம். அச்சமயம் மேல்மாடியில் இருக்கும் புலவர் கேட்பாராம். பின்பு புதிய புலவர் பாடியமாத்திரதிலேயே அப்படியே திரும்பவும் வரி விடாமல் மேல்மாடியில் இருப்பவர் பாட, அப்படியே கீழ் தளத்தில் இருப்பவர் ஓலைச்சுவடியில் எழுதி விடுவாராம். ஓலைச் சுவடியில் எழுதிய பிறகு வந்த புலவர் ஏற்கனவே எந்த புலவர் படித்த பாடலில் இருந்து திருடி பாடியிருக்கிறாரா என்பதை உடனே கண்டுபிடித்து விடுவார்களாம்.

அதே மாதிரி வேம்பத்தூர் கிராமத்தை நன்றாக புரிந்து கொண்டு வந்தவர் காளமேகப் புலவர். இதே மாதிரி காளமேகப் புலவரைப் பாடச் சொல்லி கேட்க, இப்புலவர் பாடிய சந்தமிக்க சிலேடை வெண்பாவுடன் “கண்டங்கத் தரிக்கொத்துக் காய்” என்பதை இறுதியடியாக அமைத்து குறித்த காலத்தில் பாடி முடிக்க வேம்பத்தூர் கிராமப் புலவர்களால் எழுத முடியவில்லை.

பின்பு காளமேகப் புலவருடைய பாடல் இயற்றும் திறமையை பாராட்டி 13 மா அளவுள்ள நன்செய் வாய்மொழியாக தானமாக கொடுத்துள்ளார்கள்.

இந்த ஊரில் இன்றும் காளமேகம் நன்செய், கம்பன் தாமியற்றிய இராமாயணத்தை படித்து காட்டியதற்காக கம்பன் நன்செய், ஒட்டக்கூத்தன் நினைவாக கூத்தன் நன்செய். அவ்வையார் திடல் , இந்த ஊரின் தெற்கே இருக்கும் ஆற்று வெளிக்கு காளமேகத்தாறு என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

1960 களுக்குப் பிறகு நில அளவையாளர்களால் அளக்கப்பட்ட பிறகு இன்றைய இளைய தலைமுறையினரிடையே இச் சொல்வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

காளமேகப் புலவருக்கு வாய்மொழியாக தானமாக வழங்கப்பட்ட நன்செய் நிலத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்று வைகை ஆற்று வழியே திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த வேளையில் புலவரின் பின்னால் இரண்டு வேம்பற்றூர் குடியானவர்கள் ”தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தை என்ன செய்யப் போறிங்க” என்று கேட்டுக் கொண்டே பின் தொடர, காளமேகப் புலவர் ஒரு கட்டத்தில் ஆற்றின் கரையில் நின்று தண்ணீரை எடுத்து குடியானவர்களிடம் தெளித்து 16 பங்காக தான நிலத்தை பிரித்துக் கொள்ளுங்கள். எஞ்சியிருக்கும் நிலத்தில் என் பெயரில் சுடுகாடாக வைத்துக் கொள்ளுங்கள் என்றாராம். வேம்பத்தூர் சுடுகாட்டுக்கு இன்றும் காளமேகம் சுடுகாடு என்றுதான் அழைக்கிறார்கள்.

ஆசிரியர் கண்ணபிரான் அந்த ஊரைக் குறித்தான செவி வழிக் கதைகள் இரவு நேரத்தில் இது போன்ற பல்வேறு கதைகள் பகிர்ந்து கொண்டார்.

பின் இரவு 1.00 மணி அளவில் தூங்கச் சென்று மறுநாள் காலையில் 6.00 மணிக்கு எழுந்தேன். எழுந்தவுடன் சிரம பரிகாரம் செய்ததும் நல்ல காபி கொண்டு வந்து கொடுத்தார். அக்ரகாரத்து வாசலில் காலையில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் உரையாடல் தொடர்ந்தது. பின்பு குளித்து விட்டு காலையில் அக்கிராம அக்ர சங்கர ஜெயந்தியை முன்னிடடு இக்கிராமத்தின் பல வெளியூர் பிரமுகர்கள் வந்து கொண்டிருந்தனர்.

கிராம நகர் வலம் வந்தேன். மிக நீண்ட அக்ரகாரத்து தெரு இன்று ஆளரவமற்று களையிழந்து கிடக்கிறது.பலப் பல வடமொழி நூல்களினை சுந்தர தமிழாக்கித் தந்த பெரும்புலவர் பட்டாளமே வாழ்ந்த அக்ரகாரத்து தெருவில் ஞான வாசிட்டம் தந்த வீரை ஆளவந்தார் இந்த வீதியில் நடந்திருப்பாரோ, ஆதிசஙகரரின் சவுந்தர்யலகரி தந்த வீரை கவிராசபண்டிதர் பாதம் பட்ட பூமியின் மண்ணில்,சிலேடைப்புலி பிச்சுவையர் வீட்டினர் பரம்பரையில் நான் சாப்பிட்டதும், உ.வே.சாமிநாதய்யர் பேருந்து இல்லாத காலக் கட்டத்தில் இக்கிராமத்துக்கு எப்படி வந்திருப்பார் என்று யோசித்துக் கொண்டே மீண்டும் மீண்டும் அக்ரகாரது வீதியில் சுற்றிக் கொண்டுருந்தேன்.

எனது நண்பர் அட்வகேட் திரு. காந்தி மற்றும் காந்திகிராம பல்கலை பேராசிரியர் சுந்தர்காளி அவர்களிடமும் அலைபேசியில் மகிழ்ச்சித் துள்ளலில் உ.வே.சா. அலைந்த அதே வீதியில் நடமாடிக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தேன்.

வேம்பத்தூர் பிராமணர்கள் குலசேகரபாண்டியன் காலத்தில் சாகேதபுரி (இன்றைய அயோத்தியா) என்ற இடத்திலிருந்து 2008 பேரை அழைத்து வந்து தானமாக வழங்கப்பட்ட கிராமம் என்று பழைய வெண்பாவிலிருந்து குறிப்பிடுகிறார் உ.வே.சா.

”தனக்கொருபத் தேழு கலிக்கொருபத் தாறு
புனக்குடுமிக் கோமான் புதல்வன் – மனக்கினிய
தென்னிம்பை யூரதனை சீர்மறையோ ருக்களித்தான்
கன்னன் குல சேகரன்”.

வேம்பத்தூர் சோழிய பிராமணர்கள் ஆமர்த்தக மடமரபைச் சார்ந்தவர்கள் என்றும் கருதவும் இடமுள்ளது. இந்த ஊரைச் சார்ந்த முத்து வேங்கட சுப்பையர் வேம்பத்தூர் மடம் என வழங்கும் ஆமர்த்தக மட பூர்வ உற்பவ வரலாற்று நூலினை எழுதியுள்ளார்.

1878 ம் ஆண்டு சிலேடைப்புலி பிச்சுவையர் என்பவரால் கவிராஜர் செந்தமிழ் சங்கம் நிறுவி அன்னைத் தமிழுக்கு பல்வேறு பங்களிப்பு செய்துள்ளனர். இச் சங்கம் வேம்பத்தூர் அடுத்த மைக்கேல் பட்டினத்தில் தற்பொழுது இயங்கி வரும் பஞ்சாயத்து அலுவலகம் அருகில்தான் கவிராஜர் செந்தமிழ்ச் சங்கத்திற்கு அளிக்கப்பட்ட நிலம் அமைந்திருந்தது. தற்பொழுது எந்த சுவடும் இல்லை. இந்த சங்க கட்டிடத்தின் நிலம் மாற்றப்பட்டதற்கான பத்திர நகல் ஒன்று இருக்கிறது.

சினிமா துறையில் பெரும்பங்காற்றியவரும், தமிழ் அறிஞருமான வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்கள் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தவரைக் கண்டு வேம்பத்தூர் போய் வந்த தகவலை சொல்லியதும் அந்த முதுமை வயதிலும் ஆனந்த கண்ணீர் வடித்து என்னை ஆரத் தழுவி உன்னைக் கண்டு பெருமை கொள்கிறேன் என்று சொல்லி அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் அன்பளிப்பாக வழங்கினார்.

மாம்பலகவிச்சிங்க நாவலர் பாடிய வெண்பாவில் வேம்பத்தூர் குறித்து

“பொங்கு கடல் வாழி புயல் வாழி சீர் வாழி
தங்கு நூல் வாழி தமிழ் வாழி – தூங்கமிகுந்
தேசமெங்கும் போற்றத் திறல் படைத்த வேம்பத்தூர்
மாசானங்கள் வாழி மகிழ்ந்து”.

என்று புகழ்ந்தோதிய வேம்பத்தூர் தமிழ் படைத்த புலவர்குழாம்கள் வாழ்ந்த மண் பெருமை தெரியாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தமிழகத்தில் முதல் தமிழ் செவ்விலக்கிய களஆய்வாளர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தந்து புலவர் புராணத்தில் 2973 ம் பாடலில்

“வேம்பத்தூர் பனவர், மதுரையூர்ச் சிவன் செய்
வியன் விளை யாடல்கள் இணைத்தும்
தேம்பட்ட கவியால் சொற்றபின், பரஞ்சோ
திமுனியாம் சைவதே சிகந்தான்”.

நன்றி: திரு. கண்ணபிரான், ஓய்வு பெற்ற ஆசிரியர் , வேம்பத்தூர்

திரு. சவுந்திரபாண்டியன், மதுரை

கட்டுரையாக்கம்: ரெங்கையா முருகன்

One thought on “வேம்பத்தூர் தமிழ் புலவர்கள் – ரெங்கையா முருகன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *