உரைச் சித்திரக் கவிதை 47: நினைவுச் சுழல் – ஆசுநினைவுச் சுழல்
*****************
ஒவ்வொருவரும் வயதை கடக்கும்போது, நினைவுகளால் தளும்பி நிற்கிறது மனம்.கண்ணீரில் கரைந்த நாட்கள்
முள்ளாக தைக்கிறது.
காதலினால் கனத்த முத்தங்கள். முகச் சுருக்கத்தின் மடிப்பில் அழுக்கேறி கிடக்கின்றன. தொட்டுத் தடவி, எச்சிலான கடந்த நினைவுகள் மீண்டும்
கனவென கண்முன் நிற்கிறது.
வா, மீண்டும் குழந்தையாவோம். உள்ளிருந்து ஒரு குரல் சொல்கிறது. இந்த குழந்தை காலுதைக்கும் போதெல்லாம், ஏணைச் சிணுங்கி தானாக ஆடுகிறது.
“தாலாட்டின் பாடலில்
தாயொன்று தோள் சாய்கிறதே
தோள் சாய்ந்த குழந்தையோ
தாய்ச் சுரந்த பாலில்
பசிப் பொழுதை ஆற்றுகிறதே
தாயும் சேயுமாய்
கனத்த நெஞ்சம் பனியென மிஞ்சுகிறதே”
நினைவில் சுழன்றாடும் மனதில், தாயின் சன்னத் தாலாட்டாக ஒலிக்கிறது.
பருவத்தின் பாடலில், ஓர் அன்பை இசையாக குழைக்கும் காற்றுக்குத் தான்
நினைவின் வலி கனக்கிறது.
அநுபவத்தில் வலிகள் இறைந்து கிடக்கின்றன. காயமும் இரணமுமான
வாழ்வின் தடங்களில் ஏகிய அந்தக் கணங்கள், முன்னேயும் நீள்கின்றன.
ஏன்? எதற்கு? என்கிற கேள்வியுடன்,
நினைவின் பொழுதுகள் விடிகின்றன.
இந்த வாழ்வு முழுவதும், கொட்டிக்கிடக்கும் நம்பிக்கைகள்
நினைவுச் சுழலில் சிக்கித் தவிக்கின்றன. ஒரு பொழுதேனும் சிக்கல் இல்லாத பொழுதாக இருக்க வேணும் எனும் சிறிது வெளிச்சம்
விரல் நுனியில் சுடர்கிறது .
நினைவுச் சுழலின் மிகச் சிறியதான
சிறிதினும் பெரியதாய் நினைக்கும் மனம்.
ஆசு