நூல் அறிமுகம்: எழுத்தாளர் ச. சுப்பாராவ்-ன் *விரலால் சிந்திப்பவர்கள்* – கார்த்தி டாவின்சி

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ச. சுப்பாராவ்-ன் *விரலால் சிந்திப்பவர்கள்* – கார்த்தி டாவின்சிநூல்: விரலால் சிந்திப்பவர்கள்
ஆசிரியர்: எழுத்தாளர் ச. சுப்பாராவ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு: 2019- டிசம்பர்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/viralal-sindhippavarkal/

விரலால் சிந்திப்பவர்கள் என்கிற இத்தொகுப்பு சுப்பாராவ் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகிவிட்டது. விரலால் சிந்திப்பது என்பது வெறுமனே அனைவருக்கும் தோன்றும் யோசனைகளும் கருத்துக்களும் சிந்தனை அளவில் மட்டுமே நின்று விடாமல் அவற்றை எழுத்தாக மாற்றி பலர் அறிய வைக்க முயல்கிறவர்களையே விரலால் சிந்திப்பவர்கள் என்கிறது இந்த நூலின் தலைப்பு. ‘எழுதுவது என்பது என் விரலால் சிந்திப்பது’ என்கிறார் ஐசக் அசிமோவ். அவரது சொற்றொடரை வைத்தே இந்நூலின் தலைப்பு கம்பீரமாக அமைந்திருக்கிறது.

முதல் கட்டுரையே அவரது வாழ்க்கைப் பற்றித்தான். அப்படியென்ன அவருக்கு சிறப்பு என்றால்… 3ம் வயதிலேயே படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டவர். பதின் வயதுமுதல் எழுதத் தொடங்கி, உலகின் பெரும் அறிவியல் எழுத்தாளர்களின் பட்டியலில் இருக்கிறார். இவரது சிறுகதை தொகுப்புகள் ஏராளம். அவற்றில் பல திரைப்படங்களாக வந்துள்ளன. I, ROBOT என்ற கதையும் அதையே படமாக எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இவரது சில சிறுகதைகள் தமிழிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில வெளியாகியுள்ளன. ‘சில்லு மனிதனின் புன்னகை’ என்று பொறிஞர் செங்கோவின் மூலம் தமிழாக்கம் பெற்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.

மிக வேகமாக தட்டச்சில் அடிப்பாறாம். பலமணி நேரம் உட்கார்ந்து எழுதுவாராம். இப்படியாக 1000 சொற்களுக்கு குறையாமல் அன்றாடம் தன் எழுத்து வெளியாகும் அளவிற்கு எழுதி குவித்திருக்கிறார். இன்னும் ஏராளமான சிறப்புகளைப் பற்றி நாம் நூலில் காணமுடியும்.

மூன்றுதுப்பாக்கி வீரர்கள் என்ற நாவலை நான் விரும்பி, ரசித்து படித்ததுண்டு. மாபெரும் வாள்வீரர்களின் கதை அது. ஆனால் அதில் ரசிக்க சண்டைபோடும் வீரர்கள்தான் நிரம்பி இருந்தனர். ஆனால் அதைவிட பிரபு மாண்டி கிறிஸ்டோ என்னை மிகவும் கவர்ந்து விட்டான். 3 துப்பாக்கி வீரர்கள் என்ற நாவலின் ரசனையை அவன் உடைத்து விட்டான். அவ்வளவு உயிர்ப்பான ஒரு கதாநாயகன்.

நண்பர்களால் துரோகம் இழைக்கப்பட்டு, காதலியை இழந்து குடும்பத்தை இழந்து கார்டிஃப் சிறையில் வதைபட்டு சிக்கலான வாழ்வை அவ்வளவு தூரம் கடந்து வந்து அவனது துரோக நண்பர்களை தேடி விதவிதமாய் பழிவாங்கியவன். அதன்பின் வாழ்வை தன் இஷ்டப்படி அமைத்து அதில் தானே ராஜாவாக நின்றவன். டூமாஸின் சிறந்த நாயகன்.

அந்த கதையைப் போலவே டூமாஸ் தனியாக ஒரு கோட்டைக் கட்டி அதிலேயே குடியமர்ந்துவிட்டார். அது அன்றிலிருந்து மாண்டி கிறிஸ்டோ கோட்டை என்றே அழைக்கப்படுகிறது. அந்த எழுத்தாளரின் பெயர்கூட மறந்துபோய் விட்டாலும் அந்த கோட்டையை அம்மக்கள் மறக்கவில்லை. எல்லாம் மாண்டி கிறிஸ்டோ என்னும் நாயகனால்தான்.அலெக்சாண்டர் டூமாஸ் ஒரு பிரஞ்சு கருப்பின எழுத்தாளர். பிரஞ்சுத் தந்தைக்கும் அடிமைப் பெண்ணுக்கும் பிறந்தவர். அவரது எழுத்துக்கள். புகழ்பெற்ற காலத்தில் அவர் மீது நிறத்தை வைத்தும் பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவரது கதைகளை திருடி படிக்கும் வாசகர்கள் ஏராளமாக இருந்தனர். கதை அச்சடித்து வரும்போதே, வழியில் வண்டியை மடக்கி இதழ்களைத் திருடி படிப்பார்களாம்.

அலெக்சாண்டர் டூமாசின்(Count of Monte Christo) கவுண்ட் ஆஃப் மாண்டி கிறிஸ்டோ என்ற நாவல், ‘மாண்டி கிறிஸ்டோ பெருமகன்’ எனவும்,’அமரசிம்மன்’ எனவும் தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. அலெக்சாண்டர் டூமாசின் Three Musketeers என்ற நாவலை, ‘அன்னியின் காதல்’ எனவும், ‘மூன்று வீரர்கள்’ எனவும் ‘மூன்று போராளிகள்’ எனவும் ‘நான்கு நண்பர்கள்’ எனவும் பலர் தமிழ்ப்படுத்தியுள்ளனர்.

இவரது The Man in the Iron Mask நாவல் தமிழில் இரும்பு முகமூடி மனிதன் என்று நாவலாகவும் பின்னர் காமிக்சிலும் வெளியாகியிருக்கிறது.வண்ண வண்ண தாள்களை பயன்படுத்தியதில் அவருக்கு இணை அவர்தான். நாவல் எழுதுவதற்கு நீல நிற காகிதமும் கவிதைக்கு மஞ்சள் நிறக் காகிதமும் கட்டுரைக்கு இளஞ்சிவப்பு நிறக் காகிதமும் பயன்படுத்தி வந்துள்ளார்.

80 நாவல்கள், கவிதைகள் பயணக் கட்டுரைகள் என மொத்தம் 1200 நூல்கள். தன் 68 வயது வரையும் எழுதிக்கொண்டே இருந்தார். ஒரு நாவலை எழுதி முடித்து வைக்காமலேயே அவர் இறந்துவிட்டார். பின்னர் அது – முடிக்கப்பட்டு வெளியானது..!அதுவும் Best Selling Novel பட்டியலில் இடம் பிடிக்கிறது.

அமெரிக்காவின் ஆற்றங்கரையில் ஆடையை ஒரு பாறைமேல் அடித்து துவைக்கிறார். அருகில் உள்ள பாலத்தில் அமெரிக்க மக்கள் நின்று கொண்டு அதை வியப்பாக பார்க்கின்றனர். அந்த மனிதர் அந்த துணியால் பாறையை உடைக்க முயல்கிறார் என்று பேசிக்கொள்கின்றனர். துணியால் மட்டுமே பாறையை உடைக்க முடியாது என்பதால் துணியை ஈரப்படுத்தி பாறையில் அடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர். பாறையை உடைக்கும் புது யுக்தி என்று அந்த செயல் பிரபலம் அடைகிறது. அமெரிக்கா எங்கும் இதைப்பற்றிப் பேசுகின்றனர்.

இது சாவி என்றழைக்கப்படும் சா. விஸ்வநாதன் எழுதிய ‘வாசிங்டனில் திருமணம்’ என்ற நாவலில் வரும் ஒரு காட்சி. இந்தியர்களின் திருமணமுறை அமெரிக்கர்களால் எப்படி பார்க்கப்படுகிறது என்று நகைச்சுவையாக எழுதப்பட்ட சிறப்பான நாவல். அதுதான் நான் படித்ததில் சிறந்த நகைச்சுவை ரசனை கொட்டிக்கிடக்கும் படைப்பு.

இதை எழுதுவதற்காக அவர் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பதை இக்கட்டுரையில் நாம் காணலாம். இங்கிருந்தே வாசிங்டனில் ஒருவருக்கு வழி சொல்ல முடியும் என்ற அளவிற்கு தெரிந்நு வைத்திருக்கிறார் சாவி. ‘மற்றொரு அக்ரஹாரத்து அதிசய மனிதர்’ என்று அண்ணா அவரை அழைக்கிறார். அதையே இக் கட்டுரைக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்.

‘பெரிய பக்திமான். சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை அற்றவர். பூணூலை கழட்டி போட்டு விட்டவர். இளம் வயதில் கணவனை இழந்த இரு புதல்விகளுக்கும் மறுமணம் செய்து வைத்தவர். சங்கராச்சாரியாரின் பரம பக்தர். ஆனால் தனது பக்தி தனது தொழிலில் தலையிடாதபடி பார்த்துக் கொண்டவர். தந்தை பெரியார் மேலும் அவருக்கு பக்தி அதிகம்.’ இப்படியாக அவரைப்பற்றி சொல்லப்பட்டிருக்க, படிக்கும்போது பக்திமானானாலும் பகுத்தறிவோடும் வாழ்ந்தவர் என்று வியக்கத் தோன்றுகிறது. இதைவிட முக்கியம், பல்வேறு இதழ்களில் வேலை செய்தவரான சாவி விகடனில் வேலை செய்யும்போது அதன் போக்கையே மாற்றியிருக்கிறார். அதுவரை யாரும் விகடனில் செய்யாத திருத்தம் அது. அதை நான் சொல்வதைவிட இக்கட்டுரையில் அதை மிக எளிமையாக சுப்பாராவ் சொல்லியிருக்கிறார்.” விகடனில் சாவி செய்த மாற்றங்களால்தான் விகடன் இன்றளவும் முன்னணியில் நிற்கிறது என்று சொல்லலாம். விகடனின் பிராமண பாஷை அதன் வளர்ச்சிக்கு பெரிய தடை என்று உணர்ந்து அதை மாற்ற போராடினார். பிராமணரல்லாத எழுத்தாளர்களை அதில் எழுத வைக்க போராடினார். ஜெயகாந்தனை விகடனுக்கு கதை எழுத கேட்டபோது ‘விகடனில் அவாள்தானே எழுதனும்.? என்ன கேக்குறீங்க..?’ என்று மறுத்தாராம். சாவிதான் கெஞ்சி கூத்தாடி எழுத வைத்திருக்கிறார்.” இப்படியாக, சாவி தனது வேலைக்கான மரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இதய அறுவை சிகிச்சை செய்த மூன்றே நாளில் மீண்டும் அச்சுப்பிழைத் துருத்தம் செய்ய உட்கார்ந்தாராம். 85 வயதில் மெயில் அனுப்ப கற்றுக் கொண்டாராம். இப்படிதான் எழுத்துலகில் சாவி நிற்கிறார்.
‘மொழிக்கு உயிர் தந்தவர்’ என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில்,ஷேக்ஸ்பியர் என்ற நாடக அறிஞரை நாமெல்லாம் அறிந்திருப்போம். அவரது கதைகள் எல்லாமே உலக பிரசித்தம். இங்கிலாந்தின் தேசியக் கவிஞராக இருந்தவர். ஆனால் அவரைப்பற்றிய வரலாறு என்றால் அது மர்மங்களாகவும் அனுமானங்களாகவும் தகவல்களாகவும் ஆதாரமற்றும்தான் இருக்கின்றன. அவரது வாழ்க்கையில் இது இப்படிதான் நடந்தது என்று தீர்மானமாக, ஆதாரத்தோடு யாராலும் சொல்ல முடியவில்லை. 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை இவ்வளவு ஐயங்களோடு இருப்பது ஆச்சர்யம்தான். இந்த ஐயங்கள் எல்லாமே அவர் தனது சொந்த ஊரைவிட்டு லண்டனுக்கு வந்ததிலிருந்துதான் தொடங்குகிறது. அவர் ஏன் இங்கு வந்தார்? என்று தொடங்கி எப்படி நாடறிந்த நாடகமேதையானார் என்பதுவரை எல்லாமே ஐயம்தான். இந்த கட்டுரை, பில் பிரைசன் என்பவர் எழுதிய ஷேக்ஸ்பியர் என்ற நூலினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. மொழிக்கு உயிர் தந்தவர் என்பது இந்தக் கட்டுரையின் தலைப்பு. அந்த காலத்தில் நிகழ்ந்த மொழிப்போராட்டம் பற்றி இதன்மூலம் அறிய முடிகிறது.

ஆங்கிலம் உருவாகி முழுதாக 600 வருடங்களுக்கு மேலாகிறது. அதற்கு முன்பு இங்கிலாந்து என்ன மொழி.? எனக் கேட்டால் பதில், லத்தீன் மொழி, தேவ பாஷையாக கோலோச்சிக் கொண்டிருந்தது. அந்த காலத்தில் பைபிள் லத்தீன் மொழியில்தான் அதிகம் படிக்கப்பட்டது. ஆங்கிலம் நீசபாஷையா
கருதப்பட்டது. ஆனால், அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து வர்த்தகப் பகுதியாக இருந்தது. அங்கிருந்த மக்கள் அதிகம் ஆங்கிலத்தை பேசக் கூடியவர்களாக இருந்தனர். பல நாட்டவர் வியாபாரம் செய்ய அங்கு வந்தனர். அவர்களும் ஆங்கிலத்தையும் பயன்படுத்தினர். ஆங்கில மொழி வளம் பெற்று வளர்ந்தது.
மக்கள் பகலில் உழைத்துவிட்டு மாலை முதல் இரவு வரை நாடகங்கள் பார்த்து நாளை கழிப்பர். Pits மற்றும் Groundlings என்று அந்த உழைக்கும் மக்களை அழைப்பர். அவர்கள் மூலம்ஆங்கிலம் பரவத்தொடங்கியது. அவர்களே அதிகமாக இருந்தனர். இவர்களை நாடகத்தின் பால் ஈர்ப்பதன் பொருட்டு
ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளையும் அவர்கள் பேசும் சொற்களையும் நாடகத்தில் பயன்படுத்துகிறார். அது அவர்களிடத்தில் பிரசித்தம் அடைகிறது. ஆக, மக்களின் பேச்சு மொழியான ஆங்கிலத்தில் முதன்முதலில் எழுதினார் என்பதே ஷேக்ஸ்பியரின் சிறப்பு. ஷேக்ஸ்பியர் 2035 புதிய ஆங்கிலச் சொற்களை உருவாக்கியுள்ளனர். இதனால் ஷேக்ஸ்பியரியன் அகராதியையே உருவாக்கி வெளியிட்டிருக்கிறது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம். இரட்டை அர்த்தமுள்ள சொற்களை உருவாக்கினார். உதாரணமாக, கிங் லியர் நாடகத்தில் Uncle என்ற சொல்லை நகைப்புக்காக Nuncle என்று மாற்றி பயன்படுத்தினார். சில சொற்களின் முன்பு Un சேர்க்கும் முறையை ஆங்கில மொழியில் உருவாக்கினார். Bed Room என்பது அவர் உருவாக்கிய சொல்தானாம். இதற்கு முன்பு படுக்கையறையை சேம்பர் (chamber) என்று அழைத்தனர். ஆக, இலக்கியம் என்றாலே லத்தீன் மொழியில் தான் என்ற நிலையை அவரது காலத்தில் மாற்றி ஆங்கில மொழிக்கு சிறந்த அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார் ஷேக்ஸ்பியர். இதற்கு நேரடி உதாரணம், அவரது பிறப்பு சான்றிதழ் லத்தீன் மொழியிலும் இறப்பு சான்றிதழ் ஆங்கில மொழியிலும் உள்ளன.

இந்நூலின் 19ஆவது கட்டுரை ‘ரஷ்யாவின் கே. ராமச்சந்திரன்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. அதாவது 96 என்ற திரைப்படத்தின் “கதாப்பாத்திரம்” கே.ராமச்சந்திரன் அவர்களின் பெயரை வைத்து இந்த கட்டுரை. ஆனால் இது ராமச்சந்திரன் பற்றிய கட்டுரை அல்ல. 96 என்ற படத்தில் பதின் பருவம் முதல் இளமைப் பருவம் வரையிலான காதல் அனுபவங்களை ரசனையை நமக்கு கொடுத்தவர் இயக்குனர் கே.ராமச்சந்திரன். அதைப்போல ரஸ்யாவிலும் ஒரு எழுத்தாளர் காதல் ரசத்தை தன் எழுத்துக்களில் ஊற்றி எழுதியுள்ளார். அவர்தான் இவான் துர்கனேவ்.

இவரது ‘மூமு’ என்ற சிறுகதை மிகப் பிரசித்தமானது. அவரது ‘மூன்று காதல் கதைகள்’ பலரையும் உணர்ச்சி பெருக்கெடுக்க வைத்திருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களுக்கு எழுத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 5000 அடிமைகள் கொண்ட ஒரு சிற்றரசியின் மகன். அவரது குடும்பத்திற்கு நாடெங்கும் பெரும் மதிப்பு இருந்தது. ஆனால் அதுவரை இருந்த ஆண்டான் அடிமை முறையில் துர்கனேவ் சற்றேனும் வித்தியாசமாக இருந்தார். அவர் மனிதத் தன்மையோடு சிறிதேனும் நடந்துகொண்டார். தனது சொந்த நிலங்களை அடிமைகளுக்காக தந்து உதவினார். ஆனால் இது மட்டுமே அவரது வாழ்க்கை இல்லை. தன் இளம் வயதில் பலீனா கார்சியா வியர்தோ என்ற ஒரு பெண்ணைப் பார்த்து காதற்வயப் படுகிறார். அவர் ஒரு மேடைப் பாடகி. ஏற்கனவே மணமாகி பிள்ளைகள் பெற்றவள் பலீனா. அவர் காதலில் மயங்கி இவரிமும் வரவில்லை. இவரும் பலீனாவை விடவில்லை.

அவர்கள் சென்ற இடத்திற்கெல்லாம் துர்கனேவும் கூடவே சென்றார். அவர்களது குடும்பத்தில் ஒருவர்போல இருந்தார். அவர்களது குழந்தைகளை தன் குழந்தைகள் போல கருதினார். வீடுகளை பரிசளித்தார். ஆனாலும், காதலி அவரிடம் வரவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து பிள்ளைகள் பெற்றாலும் கூட அந்த காதல் முழுதாக கை வரவில்லை.இன்னொரு கட்டத்தில் துர்கனேவை வீட்டைவிட்டு துரத்தியிருக்கிறார்கள். அப்போதும் எதிரிலேயே குடியமர்ந்து தன் காதலியை காண்கிறார் என்றால் பாருங்கள். ஆனால் ஒருபோதும் தன் காதலை மட்டும் துர்கனேவ் கைவிடவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் அவரைக் காதலித்துக் கொண்டே இருந்தார். ஆனால் பலீனா அப்படியல்ல. அவர் ஒரு Anti-Heroine. தனது வாழ்க்கை முழுவதும் ஒரு ‘உறவு இடைவெளி’யை பின்பற்றியே வந்திருக்கிறார் பலீனா. துர்கனேவின் காதலையும் ஏற்காமல் காதலனையும் விடாமல் ஒரு இக்கட்டான சூழலில் வாழ்ந்து இருக்கிறார் பலீனா.

ஒருவேளை இதுதான் டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலுக்கு மூலமாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில், டால்ஸ்டாயின் எழுத்துக்கு முன்னோடி துர்கனேவ். இவரது வாழ்க்கையை நேரடியாக கண்டவர் டால்ஸ்டாய். ஏன் இப்போதெல்லாம் கதைகள் எழுதுவதில்லை என்று உரிமையோடு கேட்டவர். இதைவிட, ஒரு சமயத்தில் பலீனாவின் விசயத்தில் இருவருக்கும் வாக்குவாதம். இருவருக்கும் ஒத்தைக்கு ஒத்தை துப்பாக்கி சண்டையே வந்துவிட்டது. பின்னர் இருவரும் சமாதானமாகிக் கொண்டனர்.

துர்கனேவின் கதைகளை படிக்கும் அனைவருமே காதலை ரசிக்க தொடங்குவர். அப்படித்தான் தஸ்தயேவ்ஸ்கி தனது வெண்ணிற இரவுகள் நாவலின் தொடக்கத்தில் துர்கனேவின் கவிதையை மேற்கோள் காட்டி கதையைத் தொடங்குவார். ஆனால் துர்கனேவோ தஸ்தயேவ்ஸ்கியைத் திட்டி தீர்த்து வலிப்பு வர வைத்தவர். தஸ்தயேவ்ஸ்கியும் தன் பங்குக்கு டெவில்ஸ் என்ற படைப்பில் துர்கனேவ் போல ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கி பகடி செய்தார். இதை அறிந்த இந்நூலாசிரியரும் ‘எழுத்தாளர்களின் பொறாமை உலகளாவியது போலும்’ என்று சொல்கிறார்.

துர்கனேவின் காதல் வாழ்க்கை பற்றிய நல்ல விரிவான பதிவு எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலக இலக்கியம்’ என்ற நூலில் இருக்கிறது. அவரது காதல் அனுபவங்களை வைத்து ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ என்று ஒரு நாவலையே எழுதி இருக்கிறார்.

இதுபோல இந்நூலில் பல ஆச்சர்யமான தகவல்கள் பல எழுத்தாளர்களின் வித்தியாசமான வாழ்க்கைமுறை சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல். இலக்கிய விரும்பிகளுக்கும் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் அவசியமான நூல். இவ்வளவு எழுத்தாளர்களின் வாழ்க்கையை எளிமையாக எழுதுவதற்கு சுப்பாராவ் எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும், எவ்வளவு தூரம் விரலால் சிந்தித்திருக்க வேண்டும்.. என்பதை நினைத்து பார்க்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது. அவரது உழைப்புக்கு என் மரியாதைகள்..!

– கார்த்தி டாவின்சி
ஜூன், 2021.Show 2 Comments

2 Comments

  1. நீலவேணி

    சிறப்பான கட்டுரை கார்த்தி 👌👌

    • Karthi Davinci

      💚💘⭐🌟✨❤💘💓

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *