கவிஞரைப் பற்றிய அறிமுகம்

******************************************

டபிள்யு ஹெச் ஆடன் (21- 02 -1907 – 29 – 09 1973) ஒரு ஆங்கில அமெரிக்க முற்போக்குக் கவிஞர், கல்வியாளர் ,பேராசிரியர் உரைநடை ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்டு இயங்கியவர். ஆடனின் கவிதைகள் அதன் அழகியல் நளினத்திற்காகவும், அருமையான நவீன உத்திகளுக்காகவும் இன்றும் கொண்டாடப்படுபவை.அரசியல்

சமூகநீதி, காதல், மதம் என்று அனைத்து சாராம்சங்களையும் பாடித் தீர்த்தவர் அவர்.  அவருடைய சில சிறந்த கவிதைகளாக  Funeral Blues“, “September 1, 1939” and “The Shield of Achilles“, The Age of Anxiety, “For the Time Being” and “Horae Canonicae  ஆகியவைகள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.  1946 ஆம் ஆண்டு அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அந்நாட்டிற்கு இடம் பெயர்ந்துவிட்டார்.  பல அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் கௌரவப் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.  கவிதை பற்றிய பல கருத்தரங்குகளில் தன் குரலை ஓங்கி ஒலிக்க வைத்திருக்கிறார்.  அவருடைய படைப்புகள் பல வந்துள்ளன.  முதன்முதலாக, அவருடைய இருபத்தி மூன்றாம் வயதில் ‘கவிதைகள்’ Poems  ( 1930 )  என்ற கவிதைத் தொகுதியும் அடுத்ததாக இருபத்தி ஐந்தாவது வயதில் ‘உரைவீச்சாளர்கள்’  The Orators ( 1932 )  என்ற கவிதை நூலும்  வெளிவந்து புகழ் பெற்றன. அவர் கிரிஸ்டபர் ல்ஸர் உட் என்ற நாடகஆசிரியருடன் இணைந்து மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறார். அந்த மூன்று நாடகங்களும் இவருக்கு மிகச் சிறந்த இடது சாரி அரசியல் படைப்பாளி என்ற பெயரை பெற்றுத்தந்தன.

மேலும் இவருடைய சிறந்த படைப்புகளாக For the Time Being” and “The Sea and the Mirror ஆகிய நூல்கள் கருதப்படுகின்றன. 1947 ஆம் ஆண்டு இவருடைய The Age of Anxiety  ( நவீன யுகத்தின் பரபரப்பு )என்றகவிதை நூலுக்காக புலிட்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நவீன யுகத்தில் அந்தச்  சொற்றொடர் அதன் பின்பு மிகப்பெரும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்து விட்டது.அதன் பின்பு ஐந்தாண்டுகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்பணியாற்றினார். அப்போது அவருடைய சொற்பொழிவுகள் மாணவர்கள் மத்தியிலும் பேராசிரியர்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்குப்பெற்று திகழ்ந்தன. The Dyer’s Hand. (1962)என்ற அவருடைய உரைநடைத் தொகுப்பும் பெரும்பெயர் பெற்றது.

W H Auden – The British Library

ஆடனுக்கும் அவருடைய இலக்கியத் தோழருமான ல்ஸர் உட்டுக்கும்இடையிலான நட்பு அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய மூன்று நாடகங்களோடு முடிந்து போகவில்லை. அதையும் தாண்டி அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. இதற்கிடையில் ஆடன் செஸ்டர் கால்மென் மீது காதலில் விழுந்தார். ஆனால் கால்மென் திருமணம் என்ற உறவை ஆடன் போல அங்கீகரிக்கவில்லை. எனவே இறுதிவரை இருவரும் ஒரே வீட்டில் பாலினச் சேர்க்கையற்று நண்பர்களாக வாழ்ந்தனர்.

இதைத் தவிர்த்து ஆடன் மிகச்சிறந்த உரைநடையாளர். இலக்கிய திறனாய்வாளர். அரசியல் முதல் மதம் வரையிலும் அனைத்து துறைகளிலும் முற்றிலும் வித்தியாசமான கருத்துகள் கொண்டவர். குறும்படங்களில் பணிபுரிந்தவர்.கவிதை நாடகங்கள் இயற்றியவர். சுருக்கமாகச் சொல்வதென்றால் தன் வாழ்க்கை முழுவதும் மிகச்சிறந்த செல்வாக்கு செலுத்தியவரும் மிக மிக அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளானவரும் அவரே தான்.  அவருக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த மாபெரும் கவிஞர்களான டபிள்யு பி யீட்ஸ் மற்றும்  டி.எஸ் எலியட் ஆகியோரின் செல்வாக்கு தன் படைப்புகளில்  காணப்படாமல் சுயமாகப் படைப்புகள் படைத்த மாபெரும் கலைஞர் அவர் எனலாம்.

ஜோசப் ப்ராட்ஸ்கி என்ற விமர்சகர் இவரை ‘’ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மேதை ‘’ என்று கொண்டாடுகிறார். அவருடைய இறப்புக்குப்பின்பே அவருடைய படைப்புகள் ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றன. அவருடைய இரண்டு புகழ்பெற்ற கவிதைகளை இங்கே நான் மொழி பெயர்த்திருக்கிறேன். அதை இப்பொழுது நாம் மீள் வாசிப்பு செய்யும்  போதும் அவை இன்றைய சமூகச்சூழலுக்கு சரியாகப் பொருந்திப் போவதே அந்த மாபெரும் படைப்பாளியின் கலை மேன்மையை பறைசாற்ற போதுமானதாகும் கவிதையின் பங்கு பற்றி அவர் வார்த்தைகளிலேயே பேசுவதானால்

poetry is not concerned with telling people what to do, but with extending our knowledge of good and evil…” 

‘’ மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கல்ல கவிதை ஆனால் நல்லது கெட்டது சார்ந்த நமது அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கே ‘’

இந்தக்கவிதை 1939 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஐரோப்பாவையே இன வெறி துவேசத்தால் இருட்டாக்கி விட ஹிட்லர் போர் தொடுத்திருந்த சமயம். ஆடன் மிகவும் பதட்டமாக இருந்தார். தன்னால் இயன்ற ஒருவரையாவது காப்பாற்றி விடவேண்டுமென்று எழுத்தாளர் தாமஸ் மான் (யூதர் இனத்தை சார்ந்தவர் ) மகளான எரிக்கா மான் என்பவரைத்திருமணம் செய்து கொண்டார் பிறகு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.

கருத்துச் சுதந்திரம் காவு வாங்குவதும் சாதாராண பொதுசனங்கள் புள்ளி விவரங்களாய் மட்டும் மதிக்கப்படுவதும் ஒரு மனிதனின் மகிழ்ச்சியும் சுதந்திரமும் அரசாலும் ஆட்சியாளர்களாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுவதும்  ஒரு நாட்டின் பிரஜையை ஆன்மாவற்று அலைய விடுவதும் எத்தகைய இழிசெயல் என்பதை இந்தக் கவிதையில் சுட்டிக்காட்டியுள்ளார். தனி மனிதனைக் கீறீ கிண்டல் செய்வது போலவே இந்தக்கவிதை தோற்றம் தந்தாலும் அவனை அந்தவித அவலத்திற்கு ஆளாக்கிய சக்திகளையே இந்தக் கவிதையின் வாயிலாக அவர் சாடுகிறார்.

The Unknown Citizen

அறியப்படாத குடிமகன்

(To JS/07 M 378 This Marble Monument Is Erected by the State)

(அரசே அமைத்த நீத்தார் கல்வெட்டில் அவனைப்பற்றி இவ்விதம் பொறிக்கப்பட்டுள்ளது அவனது பெயர் குறிப்பிடப்படவில்லை  )

The Unknown Citizen" by W. H. Auden, 1907 - 1973 @ AMERICAN DIGEST

அரசு புள்ளியியல் துறை சொல்கிறது

‘’ அவன் மீது எந்தக்குற்றச்சாட்டுகளும் இல்லை ‘’

அவன் நன்னடத்தை சான்றிதழில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது

புதிய அர்த்தத்தில் பழைய வார்த்தைகளில் சொல்வதானால்

‘’ அவன் ஒரு துறவி ‘’

ஆம் அவன் ஒரு துறவி

அவன் தன்னாலான பங்களிப்பை இந்தச் சமூகத்திற்கு

செவ்வனே செய்திருக்கிறான்

போர்க்காலங்களைத் தவிர்த்து

பட்ஜ் மோட்டார் தொழிற்சாலையில்

அவன் உழைத்த காலங்களில்

எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானதில்லை

தன் முதலாளிகளை முழுமையாகவே

திருப்திபடுத்தியிருக்கிறான் அவன்

அதற்காக அவன் தொழிலாளிகளுக்கு

எதிரானவன் என்றல்ல

சங்கத்திற்குத் செலுத்த வேண்டிய

உறுப்பினர் தொகையையும்

தவறாது செலுத்தியே வந்திருக்கிறான்.

சமூக உளவியாலளர் அறிக்கைகளும்

அவனுக்கு சாதகமே

அவன் தன் நண்பர்கள் மத்தியில்

 நன்கு அறியப்பட்டவனே

அவ்வப்போது குடியையும் விரும்புவனே

பத்திரிகைகள் அவனைக் குறித்து திருப்தியே கொண்டிருந்தன

ஒழுங்காக அவன் பத்திரிகை வாங்குபவன் மட்டுமல்ல

அவர்கள் தரும் அதீத விளம்பரங்களுக்கு

அவனின் எதிர்வினைகள் எப்பொழுதும் எல்லை தாண்டுவதில்லை

அவன் பெயரில் எடுக்கப்பட்ட காப்பீட்டுத்திட்டங்கள்

அவன் பத்திரமாக பாதுகாக்கப்பட்டே

வந்திருக்கிறான் என்று தெரிவிக்கின்றன

அவனது உடல் நல அறிக்கை சொல்கிறது

அவன் ஒரு முறை மட்டுமே மருத்துவமனை சென்றுள்ளான் ஆனால்

உடல் நலம் தேறிய பின்பே வீடு திரும்பியுள்ளான்

உற்பத்தியாளர்கள் விளம்பரதாரர்கள்

உயர்ந்த முதலாளிகள் ஆய்வாளர்கள்

அனைவரும் ஒட்டுமொத்த குரலில் உரைக்கிறார்கள்

ஒரு நாகரீகமனிதனுக்குத் தேவையான

அத்தனை பொருட்களையும்

அவன் வாங்கி வைத்திருந்தான்

அதுவும் தவணை முறையில்

ஒரு கிராமபோன், ஒரு வானொலி

மற்றும் ஒரு குளிர்சாதனப் பெட்டி

பொதுக்கருத்தாக்க ஆய்வாளர்களின் அறிக்கை

அவனின் சீரிய கருத்துக்கள்

அத்தனை பொருத்தமானவை

என்றுரைக்கின்றன

‘’அமைதியான நேரத்தில் அவன் ஒரு அமைதி விரும்பி

போர்க்களங்களுக்குப் போகச் சொல்லும் நேரங்களில்

அவன் போர் விரும்பி ‘’

ஆம் எதிர்க் கேள்வியின்றி

அவன்போருக்கும் செல்பவன்

அவன் திருமணமானவன்

ஐந்து குழந்தைகளுக்கும் தந்தையானவன்

மக்கள் தொகைப் பெருக்கத்தை கணக்கில் கொண்டு

அரசு நிர்ணயித்த எண்ணிக்கையின்படி

ஐந்து குழந்தைகளுக்கும் தந்தையானவன்

ஆசிரியர்கள் சொல்கிறார்கள்

அவன் தன் குழந்தைகளின் கல்வியில்

ஒரு நாளும் தலையிட்டதில்லை

சரி தான் வேறு எதிலாவது

அவன் தவறாக நடந்திருந்தாலும்

எப்படியாவது வெளியில் தெரிந்திருக்குமே

இப்பொழுது சொல்லுங்கள்.

அவன் சுதந்திரமானவனா?

மகிழ்ச்சியானவனா?

இல்லை இந்தக்கேள்வியே

அத்தனை அபத்தமாகப்படுகிறதா உங்களுக்கு?

****************************************************

W. H. Auden, an Appreciation | Annotations: The NEH Preservation ...

மூலம். –டபிள்யு ஹெச் ஆடன்

மொழிபெயர்ப்பு -தங்கேஸ்

***************************************************

Funeral Blues

ப்ளுஸின் இறுதிச்சடங்கு

இந்தக் கவிதை 1936 ஆம் ஆண்டு The Ascent of F6, என்ற கவிதை நாடகத்திற்காக முதன் முதலில் இசைப்பாடலாக ஆடன் தன் நண்பர் கிறிஸ்டோபர் இஸர்வுட்டுடன் சேர்ந்து எழுதியது..அந்த நாடகத்தில் ஒரு அரசியல் தலைவர் ப்ளும்ஸ் இறந்து போகிறார். அவர் இறப்புக்கு முன்னால் உலகத்தின் இயக்கத்தையே நிறுத்தி விட வேண்டும் என்று அவரது விசுவாசிகள் முயல்வது போல இது எழுதப்பட்டது.  பிறகு இது பல நாடகங்களில் எடுத்தாளப்பட்டது.

இது எள்ளல் கலையின் அதீதம் என்று இன்றும் வர்ணிக்கப்படுகிறது.

மொழி பெயர்ப்பு – சில பகுதிகள்

Stop All the Clocks or Funeral Blues was written for the...

கடிகாரங்கள் அனைத்தையும் நிறுத்திவிடுங்கள்

தொலைபேசியை துண்டித்து விடுங்கள்
குரைத்து கூச்சலிடும் நாய்களையும் முதலில்

தடுத்து நிறுத்துங்கள்
பியானோ இசைக்கருவியையும்

மத்தளங்களையும் மௌனிக்க விடுங்கள்

இப்போது நீங்கள்

பிணத்தை வெளியே எடுத்து வரலாம்

துக்கம் அனுஷ்டிப்பவர்கள் உள்ளே வரலாம்

விமானங்களையெல்லாம் விண்ணிற்கு மேலே

வட்டமிடச் சொல்லுங்கள்

அவை காற்றில் கிறுக்கட்டும்

அவர் இறந்து விட்டாரென்று

அமைதியை விரும்பும் மனிதர்களின்

கழுத்தைப் பட்டையைச் சுற்றி முழுவதும்

துக்க உடையை அணிவித்து விடுங்கள்

போக்குவரத்து காவலர்கள் இன்று

கருப்பு கையுறைகளை அணியட்டும்

அவரே எனது கிழக்கு மேற்கு

தெற்கு வடக்கு

அவரே எனது ஒரு வார உழைப்பு

என் ஞாயிற்றுக்கிழமையின் ஓய்வு

மற்றும்

எனது நண்பகல் எனது நள்ளிரவு

எனது பேச்சு எனது பாடல்

அடடா

காதல் என்றென்றும் நீடித்திருக்கும்

என்றும் நினைத்திருந்தேன்

அவரின் மரணத்தால்

அந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டதே

நட்சத்திரங்கள் ஒளிவீசத் தேவையில்லை

அவற்றை அணைத்து விடுங்கள்

நிலவை மூடிவைத்து விடுங்கள்

சூரியனை இயந்திர பாகங்களைப்போல

கழற்றிப் போடுங்கள்

கடலை வாரி இறைத்து வற்ற வைத்து விடுங்கள்

மரங்களை எல்லாம் அழித்து விடுங்கள்

இந்த துக்கமான நாட்களில்

எந்த நல்லதும் நடந்து விடக்கூடாது

என்பதில் கவனமாக இருங்கள்

**************************************************

மூலம். –டபிள்யு ஹெச் ஆடன்

Image

மொழிபெயர்ப்பு –தங்கேஸ்

***************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *