பிப்ரவரி 28. தேசிய அறிவியல் தினம். பிப்ரவரி 28 என்பது, அறிவியல் துறையில் நோபல் விருது பெற்ற முதல் இந்தியரான சி.வி.ராமனின் கண்டு பிடிப்பான ராமன் விளைவு 1928ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட தினம் ஆகும். 1986ஆம் ஆண்டு தேசிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான குழுவால் பரிந்துரைக்கப்பட்டு 1987ஆம் ஆண்டு முதல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை ஊக்குவித்து அவற்றைப் பிரபலப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு  தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய அறிவியல் தினம் தவிர, பல்வேறு அறிவியலாளர்கள் கலந்து கொள்கிற இந்திய அறிவியல் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெற்று வருகிறது.

ஆண்டின் துவக்கத்தில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்கிற முதல் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியாக கொல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு 1914ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் கழகத்தால் இந்த மாநாடு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 1914ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் மாநாட்டில் 105 அறிவியலாளர்கள் கலந்து கொண்டதோடு, அந்த மாநாட்டில் 35 ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் அயல்நாட்டு அறிவியலாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டனர். 2014ஆம் ஆண்டு பாஜக அரசாங்கம் மத்தியில் பதவியேற்ற பிறகு, இந்த இந்திய அறிவியல் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக மாறிப் போனது.

Vedic plastic surgery to test-tube Karna — non-science claims ...

1925ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹர்கிஷன்தாஸ் நரோத்தம்தாஸ் மருத்துவமனையை ரிலையன்ஸ் பவுண்டேஷன் தன்வசம் எடுத்துக் கொண்ட பிறகு, 2012ஆம் ஆண்டு அந்த மருத்துவமனை மூடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. சர் HN ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2014ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பிரதமர் மோடியால் அந்த மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. மகாபாரதத்தில் வருகின்ற கர்ணன் கதாபாத்திரம் குந்திதேவியின் கர்ப்பப் பைக்கு வெளியே பிறந்தவன் என்பதால், அந்த காலத்திலேயே நாம் மரபணுவியல் துறையில் சிறந்தவர்களாக விளங்கினோம் என்றும், விநாயகரின் தலையில் யானையின் தலையை ஒட்ட வைத்ததன் மூலம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அன்றைக்கே  இருந்தது நமக்குத் தெரிய வருவதாகவும், அந்த மருத்துவமனை திறப்பு விழாவில் மோடி  ஆற்றிய உரை பெருத்த சர்ச்சையை அறிவியல் வட்டாரத்தில் எழுப்பியது.

அந்த சர்ச்சையைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று மும்பையில் நடைபெற்ற 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பழங்காலத்திலிருந்தே இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்திருப்பதாக மட்டும் குறிப்பிட்டு அடக்கி வாசிக்க வேண்டியதாயிற்று. இருந்தாலும் அவரது ஆதரவாளர்கள் விடவில்லை. அந்த மாநாட்டில் பேசிய சுகாதாரத்துறை  அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட பித்தகோரஸ் தேற்றத்திற்கான பெருமையை கிரேக்கத்தவர்களுக்கும், அல்ஜிப்ராவிற்கான பெருமையை அரேபியர்களுக்கும் நாம் மிகுந்த பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விட்டதாக கூறினார்.

சினிமா கோலிவுட் பாலிவுட் சினிமா ...

சுகாதாரத்துறை  அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

விமானிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானியான கேப்டன் ஆனந்த் ஜே போடாஸ் மற்றும் விரிவுரையாளரான அமேயா ஜாதவ் ஆகியோர் இணைந்து ’பண்டைய இந்தியாவில் வானியல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் அந்த மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரையில், ’1903ஆம் ஆண்டு ரைட்ஸ் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடிப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் விமானங்கள் இருந்தன. பண்டைய காலத்திலேயே அனைத்து பக்கங்களிலும் பறந்து செல்ல முடிகிற, கிரகங்களுக்கிடையே பறந்து செல்கின்ற வகையில் 60 x 60 அடி அளவிலான விமானங்கள் நம்மிடம் இருந்தன.  விமானத்தை தெளிவாகக் காட்டுகின்ற ரூபஹர்ஷன்ரகஸ்யா என்கிற ரேடார் அமைப்பும்கூட அப்போதே இருந்தது’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தனர். இவ்வாறான அறிவியல் கருத்துக்கள் பற்றி மீண்டும் சர்ச்சைகள் எழுந்த போது, அவர்கள் வாசித்த அந்தக் கட்டுரை யார் கைகளுக்கும் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. கட்டுரையின் பிரதியைக் கோரிய போது, அதை மாநாட்டு அமைப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு கட்டுரையைச் சமர்ப்பித்த போடாஸ் கூறினார். அவரே தராத போது, அந்தப் பிரதியைத் தருவதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அமைப்பாளர்கள் அந்தக் கட்டுரையைப் பொதுவெளிக்கு கொண்டு வர மறுத்து விட்டனர்.

”கட்டுரைகளை இணைய தளத்தில் ஏற்றும் போது, யாராவது ஒருவர் அதனை எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் அது தன்னுடைய ஆய்வு என்று கோருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அது பதிப்புரிமையை மீறுகின்ற விஷயமாக மாறி விடுகிறது. ஏற்கனவே, இதுபோன்று அந்தக் கட்டுரையை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சில சமஸ்கிருத மாணவர்கள் அவை தங்களுடைய கட்டுரைகள் என்று கோரியதால் பிரச்ச்னைகள் எழுந்தன” என்று மும்பை பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையின் தலைவரான கௌரி மகுலிகர் கூறினார். இதனாலேயே அந்தக் கட்டுரையை இணையதளத்தில் பதிவேற்றுவதை தாங்கள் நிறுத்தி வைத்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

”இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக இந்தியாவில் விமானங்கள் இவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை நம்புவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை. நான் அதை நம்பவில்லை. திரும்பவொரு முறை யாராலும் செய்யப்படுகின்ற விதத்தில் எந்தவொரு தொழில்நுட்பத்தின் செயல்முறையும் விளக்கப்பட்டால் மட்டுமே, அது அறிவியலாக ஏற்றுக் கொள்ளப்படும்” என்று இதுகுறித்து நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தார். 2015ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அவர், ”இந்த அறிவியல் மாநாடு சர்க்கஸ் போன்று நடத்தப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு ஒரு நாள் மட்டும் நான் அந்த மாநாட்டில் கலந்து கொண்டேன். அறிவியல் குறித்ததாக அங்கு எதுவுமே விவாதிக்கப்படவில்லை. இனிமேல் என் உயிர் உள்ள வரையிலும் இது போன்ற மாநாடுகளில் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்று கூறியிருந்தார்.

Facebook

2016ஆம் ஆண்டு மைசூரூவில் நடைபெற்ற 103ஆவது அறிவியல் மாநாட்டில் உத்தரப் பிரதேசம் கான்பூரில் பணியாற்றி வந்த ராஜீவ் சர்மா என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரால் ’சங்கு ஊதுவதால் உடல்நலத்திற்கு உண்டாகும் பயன்கள்’ என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையில் ”நமது உடல், மனம் ஆகியவற்றைப் பேணுவதற்கு சரியான முறையில் சங்கை ஊதுவதே சிறந்த வழியாகும். நவீன மருந்துகள் உடல் நோயை மட்டுமே தீர்க்கும் தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. ஆனால் பாரம்பரியமான முறையில் சங்கை ஊதுவதன் மூலம் நமது உடல், மனம் ஆகிய இரண்டையும் சரியாகச் செயல்பட வைக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நல்ல வேளையாக இன்னுமொரு கட்டுரையை வாசிக்க வேண்டிய அகிலேஷ் பாண்டே என்பவர் வந்து சேராததால் ’கடவுள் சிவன்: உலகிலேயே தலைசிறந்த சுற்றுச் சூழலியலாளர்’ என்ற தலைப்பிலான அவருடைய கட்டுரை அந்த ஆண்டு வாசிக்கப்படவில்லை.

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகேஷ் சந்திரசர்மா 2017 ஜூன் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நாளில், பசுக்கள் எந்தவொரு விலங்கையும் விட அதிகப் புனிதமானவை என்பதால், அவற்றை தேசிய விலங்காக அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற தீர்ப்பை நீதிமன்றத்தில் வழங்கியதோடு நிற்கவில்லை. ”ஆண் மயில் ஒரு பிரம்மச்சாரியாகும். அது பெண் மயிலோடு ஒருபோதும் உடலுறவு கொள்வதில்லை. மாறாக பெண் மயில்கள் ஆண் மயில்களின் கண்ணீரைப் பருகுவதன் மூலமாகவே இனப்பெருக்கம் செய்கின்றன. அந்த புனிதத்தன்மையின் காரணமாகவே கிருஷ்ணர் தன்னுடைய தலையில் மயில் தோகையை அணிந்திருக்கிறார்” என்று நீதிமன்றத்திற்கு வெளியே அன்றைய தினம் அவர் கூறியது நகைப்பிற்குள்ளாகிப் போனது.

மயில்கள் கண்ணீரை குடித்துதான் ...

எந்தவொரு அடிப்படையான ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு சாஸ்திரங்களையும், வேதங்களையும் துணைக்கு அழைத்து அறிவியலில் நாம் முன்னோடிகள் என்று கூற இவர்கள் முனைந்த அதே வேளையில், 2018ஆம் ஆண்டு ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற வேண்டிய 105ஆவது அறிவியல் மாநாடு தள்ளி வைக்கப்பட்டு இம்பாலில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் வழக்கம் போல பிரதமர் மோடி ’இந்தியா பல கண்டுபிடிப்புகளைச் செய்து அறிவியலில் பலருக்கும் முன்னோடியாக இருந்த நாடு’ என்ற பல்லவியைப் பாடினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ஹர்ஷ்வர்தன், இந்திய வேதங்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முன்வைத்த மிகப் பிரபலமான சமன்பாடான  E = mc2 என்பதை விட உயர்ந்த கோட்பாடுகள் இருப்பதாக, அண்மையில் இறந்து போன மிகச் சிறந்த அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் கூறியிருப்பதாக அந்த மாநாட்டில் பேசினார். ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியது குறித்த தரவுகளை செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். ’ஊடகங்களில் இருக்கின்ற நீங்கள்தான் இந்த செய்தி குறித்த ஆதாரங்களைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு உங்களால் கண்டறிய முடியவில்லை என்றால் நான் பின்னர் உங்களிடம் அவற்றைத் தெரிவிக்கிறேன்’ என்று கூறி அத்தோடு முடித்துக் கொண்டார். பத்திரிக்கைத் துறை சார்ந்தவர்கள் சல்லடை போட்டுத் தேடிய போதும் ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியதாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு ...

சத்யபால் சிங்

தான் குரங்கிற்குப் பிறந்தவன் இல்லை என்பதோடு குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை எவரொருவரும் இதுவரையில் நேரடியாகப் பார்த்ததில்லை என்பதால், டார்வினின் பரிணாமக் கோட்பாடுகள் ஏற்கத் தக்கவை அல்ல என்று ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக இருந்த சத்யபால் சிங் 2018 ஜனவரி மாதம் கருத்து தெரிவித்திருந்தார். பலதரப்புகளில் இருந்தும் இதற்கு எதிர்ப்புகள் வந்த போது, தான் கூறிய கருத்துக்களிலிருந்து ஒருபோதும் தான் பின் வாங்கப் போவதில்லை என்றும், இது குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தன்னுடைய துறை சார்ந்த அமைச்சர் ஒருவர் இவ்வாறு அறிவியலை நீர்த்துப் போகச் செய்யுமாறு பேசுவதை நிறுத்துமாறு தான் கேட்டுக் கொள்ளப் போவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொத்தாம் பொதுவாகக் கூறி பிரச்சனையை அப்போதைக்கு முடித்து வைத்தார்.

106ஆவது இந்திய அறிவியல் மாநாடு நோபல் பரிசு பெற்ற ஆறு அறிவியலாளர்களுடன் ஏறத்தாழ 60 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 30000 அறிவியலாளர்கள் கலந்து கொண்ட மாநாடாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று முடிவடைந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். ஜெய் சவான், ஜெய் கிசான் என்று லால் பகதூர் சாஸ்திரி வைத்த முழக்கங்களுக்குப் பிறகு, வாஜ்பாயி அவர்களால் முன்வைக்கப்பட்ட ஜெய் விக்யான் என்ற முழக்கத்தைத் தொடர்ந்து, இப்போது ஜெய் அனுசந்தன் என்ற முழக்கத்தை தான் முன்னிறுத்துவதாக தன்னுடைய வழக்கமான பாணியில் மோடி அப்போது உரை நிகழ்த்தினார். பிரதமர் கலந்து கொண்ட இந்த மாநாட்டு அரங்கைச் சுற்றியும் வழக்கமான பாணியில் தனது இடது கையை உயர்த்தி ஆட்டுகின்ற மோடியின் படங்களைக் கொண்ட பதாகைகள், அறிவியல் மாநாட்டிற்கு வந்திருந்த அறிவியலாளர்களை வரவேற்றன.

இந்த அறிவியல் மாநாட்டில் தலைமை உரையாற்றிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெகு விரைவில் ஓட்டுநர் உரிமம் ஆதாருடன் இணைக்கப்படும். விபத்துகளை உருவாக்குபவர்கள் இனிமேல் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று தன்னுடைய துறை சார்ந்த அறிவியல் கருத்துக்களை முன்வைத்து அறிவியல் மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை எச்சரித்தார்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக டைனோசார்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற பஞ்சாப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அஷு கோஸ்லா அந்த மாநட்டில், டைனோசார்கள் இருப்பது குறித்து ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும் பிரம்மா, அவற்றை வேதங்களில் குறித்து வைத்திருப்பதாக கட்டுரை ஒன்றை வாசித்தார். இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரம்மன் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். அவனுக்கு எதுவும் தெரியாமல் இருக்கப் போவதில்லை. அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் நமது வேதங்களில் இருக்கின்ற  டைனோசார்கள் பற்றிய குறிப்புகளை எடுத்தே தங்களுடைய ஆய்வுகளை மேற்கொண்டதாக அவர் அப்போது தெரிவித்தார்.

The Real Dinosaurs Behind 'Jurassic World: Fallen Kingdom' | Time

டைனோசார் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். சமஸ்கிருதத்தில் டைனோ என்பது பயங்கரமானது, சார் என்பது பல்லி வகையைக் குறிப்பதாக இருக்கிறது. 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நர்மதா நதியோரத்தில் கண்டெடுக்கப்பட்ட டைனோசார் மாமிச உணவு உண்ணும் டைனோசார் என்பதால், சிங்கத்தைக் குறிக்கும் வகையில் ராஜா என்ற பெயருடன் நர்மதாவும் இணைக்கப்பட்டு ராஜாசாரஸ் நர்மதாயென்சிஸ் என்று அதற்குப் பெயரிடப்பட்டதாக அவர் கூறினார். ஒவ்வொரு முறையும் டைனோசார் புதைபடிமங்களைத் தோண்டியெடுக்கச் செல்லும் போதெல்லாம் தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டே செல்வதாகவும் அவர் கூறினார்.

அந்த மாநாட்டில் பேசிய ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ், ’ராமாயணமும், மகாபாரதமும் புராணக்கதைகள் அல்ல, வரலாற்றுப் புத்தகங்கள், கௌரவர்கள் ஸ்டெம் செல்கள் மூலமாகவும், சோதனைக் குழாய் குழந்தைகளாகவும் கர்ப்பப் பைக்கு வெளியே பிறந்தவர்கள், ராமன் எதிரிகளைத் தாக்கி விட்டு மீண்டும் தன்னிடமே திரும்ப வருகின்ற அஸ்திரங்களை வைத்திருந்ததன் மூலம் ஏவுகணை தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருந்தான், ராவணனிடம் பல்வேறு அளவுகளிலான 24 விமானங்களும், அதற்கான விமான நிலையங்களும் இருந்தன, டார்வினின் பரிணாமவியல் கோட்பாடுகளையே விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன’ என்று குழந்தைகளிடம் கதை பேசினார்.

வேதாத்ரி மகரிஷியால் துவங்கப்பட்டு தமிழ்நாட்டில் இயங்கி வருகின்ற உலக சமூக சேவை மையத்தில் பணி புரியும் உதகையைச் சார்ந்த கண்ணன் ஜெகதலா கிருஷ்ணன், ’புவியீர்ப்பு விசையைப் பொறுத்த வரை நியூட்டன் கொண்டிருந்த அறிவு குறைவானது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை முன்வைத்து இந்த உலகத்தை தவறான வழிக்கு நடத்திச் சென்றார் என்று கூறியதோடு நின்று விடவில்லை. தான் கண்டறிந்துள்ள கோட்பாடுகள் நிரூபிக்கப்படும் போது புவியீர்ப்பு அலைகளுக்கு மோடி அலைகள் என்றும், அப்துல் கலாமை விட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனே மிகச் சிறந்த அறிவியலாளர் என்பதால் புவியீர்ப்பு லென்ஸ் விளைவுகளுக்கு ஹர்ஷ்வர்தன் விளைவு என்றும் பெயரிடப்படும்’ என்று இதே மாநாட்டில் கூறியிருந்தார்.

இவர்கள் இருவரும் குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில் நடத்தப்பட்ட ’அறிவியலாளர்களைச் சந்தியுங்கள்’ என்ற நிகழ்ச்சியில் அறிவியலாளர்களாக கலந்து கொண்டு இளம் மாணவர்களுடன் உரையாடினர் என்பது வருத்தம் தருவதாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. அறிவியல் அறிஞர்கள் யாரும் இல்லாத நிலையில், தங்களுடைய ஆசிரியர்களுடன் மாணவர்கள் கூடியிருக்கும் இதுபோன்ற இடங்கள் இத்தகைய போலி அறிவியலாளர்களால் அறிவியல் கோட்பாடுகளை விமர்சனம் செய்கிற இடமாக இருக்க முடியாது என்பதில் உண்மையான அறிவியலாளர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கப் போவதில்லை.

சற்றும் அறிவியலற்ற இவ்வகையிலான கருத்துக்களை தங்களுடைய வெற்று வாய் வார்த்தைகளின் மூலம் மாணவர்களிடம் பரப்புகின்ற இந்த போலி அறிவியலாளர்களின் முகமூடிகளைக் கிழித்தெறியும் வகையில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தன்னுடைய கருத்தை மீண்டுமொரு முறை தெளிவாக எடுத்து வைத்தார். தி ஹிந்து பத்திரிக்கையின் அறிவியல் பகுதி ஆசிரியரான பிரசாத் ரவீந்திரநாத்திற்கு அவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில், ”நிபுணத்துவம் கொண்ட நபர்களைக் கொண்ட குழுவால் இவர்களின் கருத்துக்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கு மீறி இவ்வாறு தொடர்ந்து பேசப்படுமேயானால், கூட்டத் தலைவர் மேடையில் இருந்து இவர்களை அகற்றிட வேண்டும்” என்று தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

இனிமேல் குழந்தைகள் அறிவியல் மாநாடு உட்பட அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து உரைகளின் சுருக்கமும் முதலிலேயே பெறப்பட்டு பரிசீலிக்கப்படுவதன் மூலம். அறிவியலற்ற அல்லது போலியான அறிவியல் கட்டுரைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும், சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க உரைக்குப் பொருந்தாத வகையில் கருத்துக்களைச் சொல்பவர்களை மேடையிலிருந்து அகற்றுவதற்கென இந்திய அறிவியல் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் இனிமேல் செயல்படுவார் என்றும் அண்மையில் நடைபெற்ற இந்திய அறிவியல் கழகத்தின் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் கழகத்தின் பொதுச் செயலாளர் மாத்தூர் அறிவிக்க வேண்டியதாயிற்று.

Government of India,Indian Science Congress

இந்திய அறிவியல் மாநாடு

”பொதுமக்களைப் பொறுத்தவரை, இம்மாதிரியான கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றாமல் அறிவியலாளர்கள் காக்கின்ற மௌனத்தை அம்மாதிரியான கருத்துக்களுக்கான ஒப்புதல் என்றே அவர்கள் எப்போதும் புரிந்து கொள்வார்கள். மேலும் சிலர் கூறுவதைப் போல, இவர்கள் சொல்கின்ற கருத்துக்களை தனிநபர் ஒருவர் தன்னுடைய பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பதவியில் இருப்பவர்கள் இதைப் போன்று அதிகாரப்பூர்வமாகப் பேசுகின்ற விஷயங்கள் மிக விரைவிலேயே அரசின் கொள்கைகளாக மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று இந்த சர்ச்சைகள் குறித்து ஆய்வாளர் முகுந்த் தட்டை தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்.

யார் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும். நாம் பொய்யைத் துணிந்து சொல்வோம், திரும்பத் திரும்பச் சொல்வோம். சமூக ஊடகங்களின் வழி அவற்றைப் பரப்புவோம். புனைகதைகளை நம்பி அறியாமையில் உழல்கின்ற பொதுமக்கள் மீது அறிவியல் காற்று சற்றும் வீசாமல் பார்த்துக் கொள்வோம் என்று திட்டமிட்டுச் செயலாற்றுகின்ற இவர்களின் கைகளிலே சிக்கி சின்னாப்பின்னமாகி அறிவியல் மாநாடுகள் நடந்து முடிந்திருக்கின்றன. சமூக ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்து தங்களுடைய கைகளில் அவற்றை வைத்திருக்கும் இவர்கள் கூறுவது போன்று ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு நிமிடம் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் நிச்சயமாக சுற்றுச்சூழலைக் காக்க முடியாது.

சுற்றுச் சூழலைப் பாதிக்கின்ற அன்றாட நிகழ்வுகளை கவனத்துடன் பரிசீலித்து நம்முடைய அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிடாமல் சுற்றுச் சூழலைப் பேண முடியாது. அது ஒரு தொடர் முயற்சியாக, அன்றாட நிகழ்வாக நம்மிடையே இருக்க வேண்டும். சற்றும் அசராமல் எப்போதும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். அறிவியல் தினத்தை பிப்ரவரி 28 அன்று மட்டுமல்லாது தினந்தோறும் நாம் கொண்டாட முயற்சிகளை மேற்கொள்வோம். மூடநம்பிக்கைகளை அகற்றும் வகையில் அறிவியல் பரப்புவோரின் கரங்களை வலுப்படுத்திடுவோம்.

முனைவர் தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *