புத்தக அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “வாழ்க வாழ்க” – அ.சொக்கலிங்கம் (இந்திய மாணவர் சங்கம்)

“உயரம்” என்ற பொருளை, தன் பெயரில் கொண்டிருக்கும் எழுத்தாளர் “இமையம்“, எப்பொழுதும் எந்த ஒரு சலனமும், சங்கடமும் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் உயர்குடி மக்களின் வாழ்க்கையை கதையாக எழுவதில்லை.  அவற்றுக்கு மாறாக அடக்குமுறையால், ஒடுக்குமுறையால்  ஏற்படும் சமூக முரண்கள் நிறைந்த விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை அவரின் கதையாக மாற்றாமல் நம் அனைவரின் கண்ணீராக மாற்றுகிறார்.

“500 ரூபாய் பணத்திற்கும், ஒரு புடவைக்கும்” வெங்கடேச பெருமாளினால் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஆண்டாள், கண்ணகி, சொர்ணம் ஆகிய கதாபாத்திரங்களில் உரையாடலின் வாயிலாக இமையம் “வாழ்க வாழ்க” குறுநாவலின் கதையை நகர்த்துகிறார்.  இந்தப் பணமும் புடவையும் என் பாலிய வயதில் ஸ்கூலுக்கு போகாமல் ஒரு பாக்கெட் ரஸ்னாவுக்கும், 20 ரூபாய் பணத்திற்கும், பிரியாணி என்று ஏமாற்றிக் கொடுக்கும் தக்காளி சோறுக்கு‌ ஊர்வலமாக சென்றதை நினைவூட்டியது”.

அரசியல் கட்சி பிரச்சாரக் கூட்டங்கள் மக்களுக்கானதாக, சமூக முன்னேற்றத்துக்கானதாக இல்லாமல் முழுக்க முழுக்க வணிகமயமாக்கப்பட்ட சூழலை அப்படியே பதிவு செய்கிறது.  எங்கும் பணம் எதிலும் பணம் என்பது இன்றைய அரசியல் மறைக்கமுடியாத உண்மையை, அதை இலைமறை காய்மறையாக கூட சொல்லாமல் நேரடியாக வாசகனுக்கு கடத்துகிறார்.  அரசியல் அதிகாரத்தால் களையப்பட வேண்டிய எல்லா முரண்களும், அவலங்களும், அசிங்கங்களும் இந்த மாதிரியான அரசியல் கட்சிகளால் தான் ஊக்குவிக்கப்படுகிறது என்பதை அங்கு நிகழும் சம்பவங்களின் மூலம் எடுத்துரைக்கிறார்.

குறிப்பாக மூன்று பெண்கள் சேர்ந்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணை நாற்காலியிலிருந்து எந்திரித்து போக சொல்லும் போது, இன்றும் ஊருக்கும் காலனிக்குமான இடைவெளியை அறிய முடிகிறது.

“நீ ஊரு இல்ல. பறத்தெரு”

“பழவங்குடியா இருந்தாலும் நீ பறத்தெரு. ஊரு வேற, பறத்தெரு வேற” என்று வரும் வரி இன்றைய சமூக மேம்பாட்டு தளம் எவ்வாறாக உள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.  நாற்காலிக்கு சண்டை போடும் பெண்களின் மூலம் அவர்களுக்கு இருக்கும் அதிகார பசியை கண்கூடாக காண முடிகிறது.  இவையெல்லாம் அந்த கூட்டத்தின் சலசலப்பில்  மிகவும் எதார்த்தமான உரையாடகளின் மூலம் அறியலாம்.

எழுத்தாளர் இமையம் - Buy Tamil Books Online ...

இமையம் எந்தக் கதாபாத்திரத்தையும் முற்போக்காக படைக்கவில்லை.  குறிப்பாக கண்ணகி கதாபாத்திரம் நிகழ்கால அரசியல் போக்கை விமர்சித்து  பேசினாலும் அவள் புரட்சியாளராக காட்சிபடுத்தப்படவில்லை.  “காலத் தூக்கி நடுத்தெருவுல நாய் மூத்தரம் வுடுற மாதிரி கண்ட எடத்துல வேட்டியத் தூக்கி வுட்டுட்டுப் போற பயலுவதான ? அவனுவளுக்கு எப்படி தெரியும் பொட்டச்சியோட கஷ்டம் ?” என்று ரௌத்திரத் தோடு கேள்வியை கேட்கும் ஆண்டாள் ஒரு முற்போக்கான பெண்ணியவாதியாக தோன்றவில்லை.  போகிற போக்கில் சாலையிலும், பேருந்திலும் கடந்து செல்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடுவில் வரும் “காயத்திரி” என்ற கதாபாத்திரம்  நம்மளை நிச்சயம் கலங்கடிக்கும்.  சிறுநீர் கழிக்க முடியாமல் தவிப்பதும் அதற்காக அலைவதும், அலைக்கழிக்கப்படும் வாசகர்களுக்கே நீர் சுளுக்கை உண்டாக்கலாம்.‌‌  வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு அசைவுகளிளும் அரசியல் கலந்திருக்கிறது என்று கூறும் இமையம், அதில் சிறுநீரும் விதிவிலக்கல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

அரசியல் என்பது அதிகார வர்க்கத்தின் ஆயுதம், அந்த ஆயுதத்திற்கு தினம் தினம் பலியாவது  சாமானிய மக்களே என்ற கருதியல் ஓட்டத்தில் கதை தொடர்ந்து பயனிக்கிறது.  “வெயிலும், வேர்வையும்” “ஏக்கமும், ஏமாற்றமும்” ஒருவனுக்கே சொந்தம், “குளிரும், குளுமையும்” “அரசியலும், அதிகாரமும்” ஒருவனுக்கே சொந்தம் என்ற பிரிவினையை ஒவ்வொரு காட்சியிலும் காண முடிகிறது.

ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய வரம் என்ன வென்றால், அவனுடைய கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும் கடிவாளம் போடாமல் இருப்பதே.  அந்த பணியை “க்ரியா”  நேர்த்தியாக செய்துள்ளது.

இறுதியாக பிரச்சாரக் கூட்டத்திற்கு ஹெலிகாப்டரில் வரும் அக்கட்சியின் தலைவி, ஹெலிகாப்டரில் இருந்து மேடைக்குச் செல்வதற்கு சொகுசு கார், தலைவியின் இருக்கை, தலைவியின் ஏ.சி கழிவறை பற்றிய பேச்சு, தலைவியின் தோற்றம், உருவம், உடை, நிறம் ஆகியவற்றை கீழே அமர்ந்திருக்கும் சாமானிய மனிதர்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியமான ஒன்று.  அவ்வாறு பார்க்கும் பொழுது சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்ற கொரியன் திரைப்படமான  பேராசைட் (parasite) நிச்சயம் நினைவுக்கு வரும்.

முக்கியமாக இன்றைய காலகட்ட இளைஞர்கள் இமையத்தின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.  “சமூக அவலங்கள், முரண்கள் சார்ந்து எந்த கேள்வியும் நமக்கு எழாமல், நாம் அம்பேத்கரியத்தையோ, பெரியாரியத்தையோ, மார்க்சியத்தையோ பின்பற்றி ஒன்றும் செய்ய இயலாது.   நமக்குள் வினாக்கள் இல்லாமல் விடைகளை வைத்திருத்தல் என்பது புலியை வைத்து பொறியை பிடிப்பது போல.

“வாழ்க வாழ்க”  பல ஆண்டுகால பொக்கிஷமான  புதையலுக்குல் இருந்து எடுக்கப்பட்ட புதிய கதையல்ல, அரசியலால் தினந்தினம் மண்ணிற்கும் செருப்புக்கு மான இடைவெளியில் நசுக்கி புதைக்கப்படும் சாமானியர்களின் கதை. முடிந்தால் இந்த கோரோனா காலத்தில் “வாழ்க வாழ்க புத்தகத்தோடு கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்.

2018 ஆம் ஆண்டுக்கான இயல் விருது ...

வாழ்க வாழ்க
இமையம்
முதல்பதிப்பு : ஜீன் 2020
க்ரியா பதிப்பகம்
விலை : 125