பெருமாள் முருகனின் கெட்டவார்த்தை பேசுவோம் நூலை இது என்னதான் சொல்கிறது, பார்ப்போம், என்ற குறுகுறுப்பினால்தான் படித்தேன். ஆனால், உண்மையில் இது கிட்டத்தட்ட ஒரு இலக்கண இலக்கிய நூல். முன்னுரையிலேயே இலக்கணம் ஆரம்பித்துவிடுகிறது. “கெட்ட வார்த்தை பேசுவோம் என்பது எழுவாய்த் தொடர் அல்ல, ஏவலும் அல்ல, கெட்ட வார்த்தையைப் பேசுவோம் என்ற இரண்டாம் வேற்றுமைத் தொகையாகக் கூட இதை எடுக்க வேண்டாம், கெட்ட வார்த்தையைப் பற்றிப் பேசுவோம் என இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாக எடுத்துக் கொள்ளுங்கள், அப்போது நூலின் பொருள் சரியாகப் பொருந்தும் என்பது என் பதில், நூலை வாசித்தவர்கள் மற்றவர்களுக்குச் சொன்னது தலைப்பை வைத்து முடிவு செய்யாதீர்கள். வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் என்பதுதான்,“ என்று முன்னுரையில் அவர் சொல்வது சரிதான்.

புத்தகம் சொற்களைப் பற்றி, அவற்றை நல்ல சொற்கள், கெட்ட சொற்கள் என்று நாம் ரகம் பிரிப்பது பற்றி, அந்த ரகம் பிரிப்பு காலம் தோறும் மாறி வந்தது பற்றி, உ.வே.சா போன்ற பெரும் அறிஞர்களிடம் இந்த வார்த்தைகள் பற்றி இருந்த புரிதல் (அல்லது புரியாமை?) பற்றி மிக மிக விரிவாகப் பேசுகிறது. நல்லவிதமாகப் பொருள் கொள்ளப்படும் ஒரு சொல்லிற்கு திடீரென சாதி சார்ந்த ஒரு இழிவு ஒட்டிக் கொண்டுவிடுகிறது. மலையாளிகள் இன்னமும் சோறு என்பதை இயல்பாகப் பயன்படுத்த, இங்கு அதற்கு எப்படியோ சாதி சார்ந்த இழிவு சேர்ந்து கொண்டுள்ளது.

ஆனாலும், கெட்டவார்த்தைகளில் மட்டும்தான் பிறமொழிக் கலப்பு ஏற்படவில்லை என்று தனித்தமிழ் நண்பர் ஒருவர் சொன்னதாக பெருமாள் முருகன் குறிப்பிடுவதும் சுவையானது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ...

புத்தகம் பற்றி முழுமையாக நான் சொல்லவில்லை. நான் ஆங்காங்கே அடிக்கோடிட்டு வைத்த, நான் ரசித்த, என்னை நிறைய நேரம் யோசிக்க வைத்த சில வரிகளை புத்தகத்திலிருந்து அப்படியே இங்கு தருகிறேன்.

நாம் இன்பத்தை ஏன் தேடுகிறோம்? துன்பத்தை ஏன் வெறுக்கிறோம்? பெருமாள் முருகன் சொல்வது என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது – “இன்பம் என்பது நிலைத்த தன்மை உடையதா? சிற்றின்பமாக இருந்தாலும் சரி. பேரின்பமாக இருந்தாலும் சரி அதற்கு நிலைத்திருக்கும் இயல்பு கிடையாது.  அதனாலேயே மனம் இன்பத்தை நாடுகிறது. இன்பம் நினைவாகக் கூட நீடித்திருப்தில்லை. சில சந்தர்ப்பங்களில் அது ஏக்கமாக நீடிக்கும்.அவ்வளவே. ஆனால், துன்பத்திற்கு நிலைத்த இயல்புண்டு. அதனால்தான் நாம் அதனை விரும்புவதில்லை.“

“கடவுள், யான், நான் ஆகியவை அரிய சொற்கள் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பொருள் மாறாமல் வழங்கி வருபவை“.

“ஒரு பொருளைக் குறிக்க ஒற்றைச் சொல் இருப்பதுதான் மொழி வளம் ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்தால் அது விளக்குதல் என்னும் செயலாகிவிடும்”. இதற்கு அவர் தரும் உதாரணம் அருமை. புணர்ச்சி என்பதே சரியான சொல்.  உடலுறவு என்பது அதை விளக்கும் சொல்தான் !

“நிந்தா ஸ்துதி என்றால் நிந்திப்பது போல் போற்றுதல் என்று அர்த்தம். உண்மையில் நிந்திப்பதுதான். ஆனால் எதையும் உள்ளடக்கிக் கொள்ளும் மதம் நிந்தித்தாலும் போற்றுவதுதான் என்று சொல்லி ஏற்றுக் கொள்கிறது”.

“இரட்டுற மொழிதல் என்பதை எளிமைப்படுத்திச் சொன்னால் இன்றைய திரைப்படங்களில் வரும் இரட்டை அர்த்த வசனம் போன்றதுதான். இரட்டை அர்த்த வசனங்களில் ஒன்றைச் சொன்னால் இன்னொன்றைப் புரிந்து கொள்ளலாம். சிலேடையில் இரண்டுமே சொல்லப்பட்டுவிடும்“.

கெட்ட வார்த்தை பேசுவோம் – சொல்வனம் ...

இப்படி இலக்கண வகுப்பாகவும் இருக்கும் இந்த நூலில் காளமேகப் புலவரின் பல தனிப்பாடல்கள், கம்பரின் தனிப்பாடல்களில் உள்ள கெட்ட வார்த்தைகள், அதன் பொருள். இலக்கணம் வழுவாது மிக நயமாக அவற்றைக் கோர்த்துவிட்ட படைப்பாளியின் திறமை, ஒரு காலத்தில் அப்படிப்பட்ட பாடல்கள் மிக இயல்பாக சமூகத்தால் ஏற்கப்பட்டது, பின்னர் அச்சுப் புத்தகம், பழம் இலக்கியங்களைப் பதிப்பிப்பது என்று முன்னேற்றம் வந்த காலத்தில் பதிப்பாசிரியர்கள் மெல்ல மெல்ல இப்படிப்பட்ட பாடல்களைத் தவிர்த்தது, தவிர்க்காமல் சேர்த்தாலும் அவற்றிற்கு வலிந்து நல்ல அர்த்தம் தந்து தமிழ்ப் பண்பாட்டைக் காத்தது என்று ஏராளம் ஏராளமான செய்திகள்.

பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கும் ஆ.ரா.வேங்கடாசலபதியின் “வாயில நல்லா வருது !“ கட்டுரையும் அருமை.

“ஒரு சமூகத்தில் கெட்ட வார்த்தையாகக் கருதப்படுபவை வேறொரு சமூகத்தில் அவ்வாறு கருதப்படுவதில்லை. ஒரு மொழியிலும்கூடச் சூழலுக்கேற்பவும், காலத்திற்கேற்பவும் வரையறை மாறுகின்றது. வழக்கொழிதல் நடக்கின்றது. தோன்றிய போது மிகக் கடுமையானதாக்க் கருதப்படும் வசைகள் காலப்போக்கில் தேய்ந்து பொருளற்றனவாகவும் ஆகிவிடுன்றன.  மூலப்பொருள் இழந்து போவதே வசவுகளின் இலக்கணம் என்றுகூடச் சொல்ல முடியும்,“ என்கிறார். வேங்கடாசலபதி. ஊதியமில்லாமல் கட்டாய உழைப்பு நல்கவேண்டிய கீழ்நிலையிலுள்ளவரைக் குறிக்கும் முட்டாள் என்று கல்வெட்டுகளில் வழங்குகிற சொல் பின்னாளில் வசவாக மாறியிருக்கிறது. மார்க்சிய – கம்யூனிஸ்டு இயக்கச் சொல்லாடலில் சீர்திருத்தம் (reform), திருத்தல்வாதி (revisionist)முதலானவை கெட்ட வார்த்தைகள் ! என்கிறார் அவர்.

பெருமாள் முருகன் ஓரிடத்தில், “எந்த ஒரு சொல்லையும் மொழி புறக்கணிப்பதில்லை. மொழியைக் கருவியாகக்கொண்டு தனது படைப்பை உருவாக்கும் படைப்பாளன் மொழியின் மீது அளவற்ற வேட்கை கொண்டவன். மொழி தோன்றிய காலம் தொட்டுச் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை தொற்களையும், அத்தனை வளங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புவான்.

படைப்பாளன் எந்தச் சொல்லையேனும் இது நல்ல சொல், இது மோசமான சொல் என்று பிரித்து ஒதுக்குவானா? அவன் பொருத்தமான சொல்லா, பொருந்தாத சொல்லா என்று பார்ப்பானே தவிர, நல்லது, கெட்டது என்ற பார்வை கொண்டிருக்க மாட்டான். மொழியில் உள்ள ஒரு சொல்லை வெறுப்பவன் படைப்புத் தொழிலில் ஈடுபட முடியுமா?“ என்று கேட்கிறார்.

இந்த நூலின் மொத்த சாராம்சமும் அதுதான்.

—————————————————————————————————————————————-

கெட்டவார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன்

காலச்சுவடு வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *