ஒரு கேள்வி- ஐ.தர்மசிங் |A question-Poem-I. Dharmasingh

இறைவன்
கனவாகவே இருக்கும்
இன்னொரு பொம்மை

சாத்தான்
பயமுறுத்தும்
இன்னொரு பூச்சாண்டி

மதம்
ரசனை ததும்பும்
இன்னொரு பாட்டிக் கதை

போர் விமானம்
சிறகடிக்காமல் பறக்கும்
அதிசய பட்டாம்பூச்சி

வெடிகுண்டு
விழாக்கால
நவீனப் பட்டாசு

உள்நாடு
துள்ளி விளையாடும்
சொந்த வீடு

அயல் நாடு
சுவர் எழுப்பிய
அண்டை வீடு

சண்டை
ஒருவருக்கொருவர்
“கா ” விடுவது

சமாதானம்
ஒரு இனிப்பை
கடித்துப் பகிர்வது

உலகமே அறியாத
இந்தப் பிஞ்சு குழந்தைகளை
கதறக் கதற
கருவறுக்க கற்றுத்தந்த
கருணை மிக்க மதம் எது?

நெருப்பைத் தெளித்து
சமூகத்தைப் புனிதப் படுத்துவதாகப்

புலம்புகிறீர்கள்

ரத்தக் கடலில்
முத்துக் குளிப்பதாக
நடிக்கிறீர்கள்

உங்களிடம்
ஒரே ஒரு கேள்வி

சாம்பலில் பிறக்கும்
சமாதானம்
பூக்களையா மலரச் செய்யும்?

 

எழுதியவர் 

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *