மேலுதட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை முடிகள் தலை காட்டின. மீசை நரைத்தபிறகு டை அடிக்க சரியாக வரவில்லை. எனவே இப்போதெல்லாம் மீசையை எடுத்துவிடுகிறேன். வழுக்கை, கண்ணாடி, சுத்தமாக வழிக்கப்பட்ட முகம் என எனது தோற்றத்தில் அறிவுக்களை சொட்டுகிறது. வக்கீல் முகம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மனைவி சொல்வாள்.
சுந்தர் செல்லில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். ஷேவிங் செய்யலாமா என்று யோசித்தேன். மீசை எடுக்கத் தொடங்கிய பிறகு ஒரே நாளில் வளர்கிறது.
“சார் பொன்னுசாமி நாட் ரீச்சபிள்லேயே இருக்கிறாரு.”
“ட்ரெயின் கரெக்ட் டைமுக்கு வருதா?”
“ஆமா சார். பன்னெண்டே முக்காலுக்கு வருது. கேன்சல் பண்ணீரலாமா சார்?”
“இல்ல, நாம கெளம்பலாம்”
“சார்” சுந்தர் அதிர்ச்சியுடன் கேட்டான்.”
“வேல இருக்குப்பா போய்த்தான் ஆகணும்”
”பொன்னுசாமி ?”
“அது அவன் பிரச்சினை. பொன்னுசாமியே பாத்துக்கட்டும்”
”சார். அவர் அட்ரஸ் தேடி போயிருக்கார் போலிருக்கு. ஃபோன் நாட் ரீச்சபிள்ல் இருக்கு. விக்னேஸ்வரன் பஞ்சாயத்து வேற போயிட்டிருக்கு” என்றான் சுந்தர்.
நான் பதில் பேசாமல் மனைவிக்கு போன் செய்தேன். வருவதைச் சொன்னதும் அவளுக்கு மகிழ்ச்சி. மறக்காமல் மாத்திரை போடுங்க. இன்னபிற. அன்பு நிறைந்த ஆலோசனைகள். இதைக் கேட்டபிறகு அன்றைய கடமை முடிந்த திருப்தி. சுந்தர் என்னை ஒருவிநாடி ஆழ்ந்து பார்த்து விட்டு விக்னேஸ்வரன் கும்பலிடம் சொல்வதற்காகக் கிளம்பிப் போனான். செல்போன் ஒலித்தது.
“என்னப்பா என்ன பண்ணீட்டிருக்கிறீங்க?” ஒரு பெண் குரல் குழைந்தது. எனக்கு அப்பா என்று சொந்தம் கொண்டாடும் பெண்களைப் பிடிக்காது.
“இதோ பார் அன்பே. உனக்குத் திருமணம் ஆகி விட்டது. நான் கிழவனாகி விட்டேன்.” என்றேன்.
“அப்படித் தெரியலையே” மறுமுனையில் குரல் கிளுகிளுத்து சிரித்தது.
***
எனக்கு பயணங்கள் பிடிக்கும். ஓட்டல் அறைகள், ஒயின், சிகரெட், பால்கனி இத்தியாதி விஷயங்கள் பிடிக்கும். ஆனால் அலுவல் ரீதியான பயணம் பிடிக்கவே பிடிக்காது. வேறு ஊருக்குப் போய் பிரீஃப்கேசிலிருந்து கேஸ்கட்டை எடுத்து ஓட்டல் அறை படுக்கையில் உட்கார்ந்து நோட்ஸ் போடுவது கொஞ்சமும் பிடிக்காது. திருப்பூர், பொள்ளாச்சியைத் தாண்டி வழக்கு இருக்குமானால் நிர்தாட்சண்யமாக முடியாது என்று சொல்லிவிடுவேன்.
ஆனால் பொன்னுசாமி இந்த வழக்கைத் தூக்கிக் கொண்டு வருவதற்கு முன்பு ஷேர்மார்க்கெட்டில் சரியான அடி. பணம் வேண்டியிருந்தது. ஆதோனி வர முடியுமா என்று கேட்டபோது இரண்டு மனமாகத் தானிருந்தேன். எனது நட்டத்தையெல்லாம் ஈடுகட்டுவது போல் ஒரு தொகையைச் சொன்னேன். ஆச்சரியமளிக்கும் விதமாக பொன்னுசாமி ஒப்புக் கொண்டான். நானும் ஒப்புக்கொண்டேன். எனக்கென்ன எங்கு போனாலும் ஒரே வேலைதானே!
பொன்னுசாமியின் அப்பாவின் சொத்துத் தகராறு வழக்குகளை நான்தான் பார்த்து வந்தேன். உண்மையில் எனது சீனியர் வைத்தியநாதனின் கட்சிக்காரர் அவர். அந்த காலத்தில் அவருக்கு நாற்பது ஏக்கர் நிலமும், இருநூறு ஆடுகளும், முப்பது மாடுகளும் இருந்தன. பொளித் தகராறில் பங்காளி ஒருவனை போட்டுத் தள்ளினார். கீழ் கோர்ட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சீனியர் ஹைகோர்டில் போராடி ஜாமீன் வாங்கிவிட்டார். இனி வழக்கு வருவதற்கு பத்தாண்டுகள் ஆகும். பிரச்சினை இல்லை. ஐயாயிரம் ரூபாய் பீஸ் கேட்கலாம் என்று சீனியர் நினைத்திருந்தார். அந்தக் காலத்தில் அது ஒரு பெரியதொகை. முழுமையாகக் கிடைத்தால் தடாகம் பக்கம் ஒரு தோட்டம் பார்க்கலாம் என்ற திட்டமும் இருந்தது. சீனியர் இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது அவர் வந்தார். மஞ்சப்பையை பவ்யமாகக் கொடுத்து விட்டு வணங்கினார்.
“ நாற்பதாயிரம் ரூபாய் இருக்குதுங்கய்யா. என்னால முடிஞ்சது.’
“ மை காட் . . . நாற்பதாயிரமா?” சீனியருக்குக் குரல் எழும்பவில்லை. தான் கேட்பது உண்மையா பொய்யா என்பதும் புரியவில்லை.
“எறங்காடு உங்களுக்குத்தான்னு நெனச்சிட்டிருந்தேன். வித்துக் கொண்டாந்திட்டேன்.”
அந்தப் பரம்பரையில் வந்த பொன்னுசாமி. விட்டுவிடமுடியுமா!
பொன்னுசாமியின் காட்டுப்பக்கம் கல்லூரிகள் வந்தன. மென்பொருள் நிறுவனங்கள் வந்தன. இன்னும் என்னென்னவோ வந்தன. பங்காளிகள் கண் முன்னால் காட்டை விற்று திருப்பூர் சென்று பனியன் கம்பெனிகள் வைத்தார்கள். அரசியலில் புகுந்து வட்டம், மாவட்டம் என்னென்னவோ ஆனார்கள். ரியல் எஸ்டேட்டிலும், வட்டித் தொழிலிலும் கொடிகட்டிப் பறந்தார்கள். பொன்னுசாமி அந்த புகழ பெற்ற நிறுவனத்தில் சி.எம்.ஜி. மிஷன் ஆபரேட்டர். கை நிறைய சம்பளம். இருந்தாலும் பைத்தியம் பிடித்தது.
நேரடி ரியல் எஸ்டேட்டைவிட வில்லங்க சொத்து வாங்குவது லாபம் என்று முடிவு செய்து முதலில் வாங்கிய சொத்து கோவில் நிலம். கவக்காளி அம்மனுக்கே இந்த சொத்தின் பெயரில் எத்தனை பத்திரங்கள் இருக்குன்றன. எத்தனை பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்பதில் குழப்பம். சப் ஜட்ஜுக்கு எப்படித் தெரியும். மனுக்கள். இடை நிலை மனுக்கள், தடையாணைகள், உயர் நீதிமன்ற உத்தரவுகள் என்று இழுத்துக் கொண்டு சென்றது. அடுத்த ஒப்பந்தம் போட்ட சொத்தின் உரிமையாளர் சீட்டுக் கம்பெனி நடத்தி போண்டி, பலபேர முடித்துக் கட்டித் தலைமறைவாகிவிட்டார். சீட்டுப் போட்டவர்களுக்கும், கடன்காரர்களுக்கும், பொன்னுசாமிக்கும் இடையே குடுமிபிடி சண்டை நடந்து வந்தது.
இந்த சமயத்தில்தான் ஆதோனியில் ஒரு மில்லை பிரித்து விற்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டான். இந்த இடத்தில் புவியியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக சில விளக்கங்கள் கொடுத்துவிடுகிறேன். ஆதோனி கர்னூல் மாவட்டத்தில் இருக்கிறது. ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிந்தவுடன் ஆதோனி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது. நகரைச் சுற்றி நான்கு புறமும் தொடுவானம் வரை பரந்து விரிந்திந்திருந்தன பருத்திக் காடுகள்.
ஊரில் ஏராளமான ஆயில் மில்கள் பருத்திக் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுக்கின்றன. கோவைக்குத் தேவையான பருத்தி இங்கிருந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து மந்திராலயம் செல்பவர்களும், தமிழ்நாடு கர்நாடகாவிலிருந்து புட்டபர்த்தி செல்பவர்களும் கடந்து செல்லும் பாதையில் இருக்கிறது.
இந்த மில்களுக்கான இயந்திரங்கள் பெரும்பாலும் கோவையிலிருந்து செல்கின்றன. கோவையிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதோனி வருவது வழக்கம். அப்படி வந்த ஒரு ஃபோர்மேன் ஒரு மில்லை விற்கப் போகிறார்கள், இயந்திரங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி விடலாம் என்றதும் பொன்னுசாமியின் மூளையில் ஏழரை நாட்டு சனி குடியேறியது.
பொன்னுசாமி ஆதோனி கிளம்பி வந்தான். மெஷின்களுக்கு இருபத்தைந்து லட்ச ரூபாய் விலை பேசி ஐந்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து மேனேஜரோடு ஒரு ஒப்பந்தம் போட்டான். பின்பு கோவை வந்து ஒரு முதல் தரமான மொடக்குவாதம் பிடித்தவரான ஒரு செட்டியாரிடம் முப்பது லட்ச ரூபாய்க்கு அந்த மெஷின்களை விற்பதாக ஒப்பந்தம் போட்டான். செட்டியார் லாரிகளோடு மெஷின்களை எடுக்கச் சென்றபோது செட்டியாரின் கெட்ட நேரமா, பொன்னுசாமியின் கெட்டநேரமா சரி யாரோ ஒருவரது கெட்ட நேரம் செட்டியாருக்கு நேரெதிரே மேனேஜர் நின்றுகொண்டிருந்தார். செட்டியார் கடுங்கோபத்தோடு மேனேஜரிடம் சென்று
“இதே இருபத்தைந்து லட்சத்துக்கு நான் கேட்டபோது தராத நீ இவனுக்கு மட்டும் எப்படிக் கொடுத்தாய்?” என்று கர்ஜித்தார்.
“உன்னைக் கண்டால் பிடிக்கவில்லை. உன் பேச்சு பிடிக்கவில்லை. உனக்குக் கொடுக்கக் கூடாது என்றுதானே அவனுக்குக் கொடுத்தேன். நீயே எப்படி வந்து நிற்கிறாய்?”என்று மேனேஜர் பிளிறினார்.
“யார்றா நீ முதலாளியா என்னை வேண்டாமென்று சொல்ல?” செட்டியார் எகிறி மேனேஜரின் சட்டையைப் பிடித்தார்.
மேனேஜர் கூலாக சட்டையைக் கழற்றி செட்டியாரிடம் கொடுத்துவிட்டு அறைக்குச் சென்று பொன்னுசாமிக்குப் போட்ட கண்ட்ராக்டை ரத்து செய்துவிட்டார். பிரச்சினை இதுதான் என்று தானே நினைப்பீர்கள். அதுதான் இல்லை. இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. சரியாகச் சொன்னால் ஒன்றல்ல. இரண்டு மூன்று ட்விஸ்டுகள் உள்ளன. வக்கீலிடம் எதையும் மறைக்கக் கூடாது என்று கட்சிக்காரர்களுக்கு சொல்லப்படுகிறது. அதே போல கட்சிக்காரர்கள் சொல்வதை முழுமையாக கேட்க வேண்டுமென்று வக்கீல்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. இப்படி ஒரு என்.ஜி.ஓ நடத்திய கிளியண்ட் ஹியரிங் வகுப்பில் ஒரு பேராசிரியர் போட்ட ரம்பத்தை இப்போது நினைத்தாலும் மயிர் கூச்செறிகிறது.. சில கட்சிக்காரர்களிடம் பொறுக்கமுடியாமல் பிரச்சினையை மட்டும் சொல்லுங்க என்று நான் மிரட்டுவதுண்டு. பொன்னுசாமியிடம் எதுவும் செல்லுபடியாகாது. ஆயில் மில் ஓடுவதைப் போலவே கடகட வென்று பொழிந்து கொண்டே இருப்பான்.
வக்கீல் பேசுவதற்கு மட்டுமல்ல கேட்பதற்கும் ஃபீஸ் உண்டு என்று அன்று பொன்னுசாமிக்குத் தெரிந்தது. நான் மன்மதலீலையில் வரும் ஹரிஹர ஐயர் என்று அவன் நினைத்துவிடக் கூடாது பாருங்கள். சரி கதை இப்போது.
ஆதோனி மேனேஜர் கண்ட்ராக்டை ரத்து செய்ததும் பொன்னுசாமி ஒரு டானிடம் சென்றான். ஆசாத்கான். ஆதோனியில் பல ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து இறங்குகிறார்கள், பணம் புழங்குகிறது என்று கேள்விப்பட்டு ஹைதராபாத்தில் குட்டி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த ஆசாத்கான் தனது பரிவாரங்களோடு வந்து இறங்கியிருந்தான். பொன்னுசாமி ஆசாத்கானிடம் தனது சோகக் கதையை உள்ளம் உருக விவரித்த போது அந்தக் கடுமை நிறைந்த முகத்திலும் பரிதாபத்தின் ரேகைகள் தென்பட்டன. புரியாதவனைக் கூட உருக்கிவிடும் தன்மை கொண்டதல்லவா தமிழ்மொழி! இரண்டுபேர் உட்காரக் கூடிய சோஃபா முழுவதையும் நிறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆசாத் மிகுந்த நட்புணர்வோடு பொன்னுசாமியின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.
“பாயி, இனிமே உன் பிரச்சினை என் பிரச்சினை”. ஆசாத்கான் ரதகஜதூர பதாதிகளுடன் வந்திறங்கியதைப் பார்த்ததும் மில் நிர்வாகம் பயந்து போனது. மீதி பணத்தைக் கொடுத்துவிட்டு பொருளை எடுத்துக் கொண்டு போ என்றது.
”பணத்தை என்னிடம் கொடு. நீயே போனால் ஏமாற்றி விடுவார்கள்” என்றான் ஆஸாத் கான். நீங்கள் எதிர்பார்க்கும் படியே பொன்னுசாமி அந்தத் தவற்றைச் செய்தான். பணத்தை ஆஸாத்திடம் கொடுத்து விட்டான். ஆஸாத் பணத்தைக் கொடுத்து மெஷின்களை எடுத்து தானே விற்றுவிட்டு பொன்னுசாமிக்கு டாட்டா காட்டிவிட்டான்.
அதிர்ச்சியடைந்த பொன்னுசாமி வேறு யாரோ பெரியதாதாவைப் பிடித்து கானை மிரட்டி, பணத்தைத் திருப்பித் தருவதாக ஒரு பத்திரம் எழுதி வாங்கியிருக்கிறான். தெலுங்கில் வேறு இருந்தது. இரண்டுங்கெட்டான் பத்திரம் என்பது பார்த்தாலே தெரிந்தது. இந்தப் பத்திரத்தை வைத்துக் வழக்குப் போட்டிருக்கிறான். ஆசாத் கான் தலைமறைவாகிவிட்டான். இந்த சூழலில்தான் நான் பொன்னுசாமிக்குத் தேவைப்பட்டிருக்கிறேன்.
ஆதோனியில் ராஜ்ய ஸ்ரீ என்ற ஓட்டலில் பொன்னுசாமி அறை போட்டிருந்தான். நல்ல அறைதான். பொன்னுசாமிக்கும் அதே அறையில் கீழே பெட் போட்டுப் படுக்கும் எண்ணம் இருந்திருக்கும் போலிருக்கிறது. தனியாப் போ என்று விரட்டி விட்டேன். வழக்கை என்னிடம் கொடுத்துவிட்டால் கட்சிக்காரர்கள் தொடர்ந்து அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காது.
—————————
பொன்னுசாமி கேசரி ஆர்டர் செய்தான், எனது ஜூனியர் சுந்தர் பதறிப் போய் சீனியருக்கு அதெல்லா வேண்டாம் என்றான். மனைவி அவனை எச்சரித்து அனுப்பியிருந்தாள். நானொன்றும் சொல்லவில்லை. இருக்கட்டும். அதே நேரத்தில் ஜூனியர் பயல்களூக்கும் எல்லாவற்றையுமே தாங்கள் செய்வதாக எண்ணமும் வந்துவிடக் கூடாது. பார்த்துக் கொள்ளலாம். இந்த ஸ்வீட் இல்லாவிட்டால் நைட் பிராந்திஅடிக்கலாம். இட்லி, சட்னி சுமாராக இருந்தது. சாம்பார் இனிப்பாக பாயாசம் போல் இருந்தது. பொன்னுசாமி யாரையோ பார்த்து சைகை காட்டிக் கொண்டேயிருந்தான். அவன் காட்டிய திசையில் கருப்பாக, குண்டாக பார்த்தாலே தமிழர்கள் என்று தெரியும்படி சில உருவங்கள் நின்றிருந்தன. சாப்பிட்டு முடிக்கும் நேரம் பொன்னுசாமி பவ்யமாக பேச்செடுத்தான்.
“ஐயா. மெட்ராசிலிருந்து தலைவர் வந்திருக்காரு. ஏதோ பஞ்சாயத்தாமா, கொஞ்சம் பேசணுங்கிறாங்க”
“இத பாருங்க பொன்னுசாமி, நா வந்து பார்பர்ஷாப் நடத்தல.. கொஞ்ச நேரம் பேப்பர் படிச்சிட்டு, அரசியல் பேசிட்டு போறதுக்கு. சாப்பிட இடத்தில, கைகழுவற இடத்தில எல்லாம் கேஸை டிஸ்கஸ் பண்ண முடியுமா?”
“ஐயா நீங்க எங்க வரச் சொன்னாலும் வருவாங்க. அப்பாயின்மெண்ட்தான் கேக்கறாங்க”
“சரி ஒன் அவர் கழிச்சு ரூமுக்கு வரச் சொல்லு”
விக்னேஸ்வரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்ஜினியர். லதா கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலி. இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. பெண் கர்ப்பமானதும் விக்னேஸ்வரன் ஊருக்கு ஓடிப் போய்விட்டான். போலீஸ் கம்ப்ளெய்ண்ட் ஆகி விட்டது. தமிழ்நாட்டுக்கு போலீஸ் தேடிவந்ததும் ஆளுங்கட்சிக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனில் விஷ்யத்தைப் பேசி முடிக்க ஆதோனி கிளம்பி வந்திருக்கிறார்கள். யாரோ உள்ளூர் பிரமுகரின் சிபாரிசோடுதான் வந்திருக்கிறார்கள் என்றாலும் இன்ஸ்பெக்டருக்கு முரட்டுத் தனம் அதிகம். மொழிப் பிரச்சினை வேறு. வக்கீலின் உதவி தேவைப் படும் போலிருந்தது. சட்டென்று மனதுக்குள் ஒரு கணக்குப் போட்டேன். என்னுடைய வேலை ஒரு நிமிடம்தான்.
“எனது ஜூனியர் சுந்தரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அதற்கு முன் காலை ஒன்பது மணிக்குள் ஃபீஸ் வந்து விட வேண்டுமென்றேன்.
——————————————
கோர்ட் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. அந்த வளாகம் எனக்குத் திருப்பூரை நினைவு படுத்தியது. சற்று தள்ளி தேங்கி நின்று கொண்டிருந்த தண்ணீரும், மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளும் மட்டுமே புதியவை. கோட்டுப் போட்டு செருப்பு போட்டிருக்கும் வக்கீல்கள் எப்போதுமே அவலட்சணமாகத் தெரிவார்கள். அதிலும் இன் பண்ணாமல் கோட்டுப் போட்டிருக்கும் வக்கீல்களின் லைசன்ஸை உடனடியாக கேன்சல் செய்துவிட வேண்டுமென்பது எனது நீண்ட நாள் கோரிக்கை. அப்படிப் பார்த்தால் ஆதோனியில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பேரை தொழிலை விட்டுத் துரத்த வேண்டியிருக்கும். தமிழகத்தில் பழைய கோர்ட்டுகள் இருக்கும் அதே அமைப்பு, அதே உடைந்த ஆங்கிலம், அதே சொற்கள். எல்லா தனித்துவத்தையும் உடைத்து ஒன்று போலவே மாற்றிவிட்டான் வெள்ளைக்காரன். எனது முறை வந்தது. ஆசாத்கானைக் காணவில்லை. கண்டுபிடித்து சம்மன் அனுப்ப இரண்டு மாதம் வாய்தா கேட்டேன். ஜட்ஜ் சரியான முடை. இருபது நாள் டைம் கொடுத்தார். சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஓவியம் ஸ்ரீரசா
கோர்ட் எப்படி இயங்கிறது, எப்படிப் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள உட்கார்ந்தேன். கிரிமினல் வழக்குகள் கூப்பிடத் தொடங்கினார்கள். ஒன்று இரண்டு மூன்று சுமார் இருபது வழக்குகள். ஒவ்வொன்றிலும் ஏழெட்டு பேர். பெரும்பாலும் பஞ்சத்தில் அடிபட்ட தோற்றம். சிலர் உள்ளே வரும் போது தலப்பாகை கட்டிக் கொண்டார்கள். வெளியே போகும்போது கழற்றிக் கொண்டார்கள். விசித்திரமான மரியாதை தான். என்ன வழக்குகளாக இருக்கும்? எஸ்.சி. என்று அழைத்தார்கள். செஷன்ஸ் கேஸ். அப்படியானால் கொலை வழக்கு. வாரம் ஒருமுறை கொலை வழக்குகள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனவாம். இந்தச் சின்னஞ்சிறிய ஊரில் ஒரு வாரத்திற்கு இருபது கொலைவழக்குகள் விசாரணைக்கு வருகின்றனவா? இந்த பஞ்சப் பரதேசி கும்பல் கொலை செய்ததா? எனக்கு வியப்பு தாள முடியவில்லை. ஜட்ஜ் கோர்டை கலைத்து விட்டு எழுந்து போனார்.
பெஞ்ச் கிளார்க் அம்மா எங்களிடம் ஓடி வந்தார். சுந்தரும் பொன்னுசாமியும் பணத்தை அள்ளி விட்டிருந்தார்கள். எனவே அன்புமழை பொழிந்து கொண்டிருந்தது. ஒரு அமீனாவை அறிமுகப்படுத்தி ’இவரை சில இடங்களுக்கு அழைத்துக் கொண்டுபோய் ஆசாத்கானைத் தேடுங்கள்’ என்றார் அந்த அம்மா. பொன்னுசாமியை அமீனாவோடு அனுப்பிவிட்டு அறைக்கு வந்தேன். செல்லில் நான் எதிர்பார்த்தபடியே மூன்று மிஸ்டு கால்களும், இரண்டு மெசேஞ்களும் இருந்தன. ஒரே சொல்தான்.’
என் மீது கோபமா, சாரி’
கோபமா இல்லையா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் கொஞ்ச நாட்களாக இது பெரும் தொல்லையாக மாறிவிட்டதென்னவோ உண்மைதான். போன் … எஸ் எம் எஸ் … திருமப்வும் போன் …. தொடக்கத்தில் கல்லூரி நாட்கள் திருப்பிவிட்டது போல நினைத்திருந்தேன். பின்பு ஒரே தொல்லை. எனக்கு இது ஒன்றுதான் வேலையா? மிரட்டல் கொஞ்சல் கண்ணீர் பிரிவு திரும்பவும் போன் . . . கணவன் திரும்பவும் வந்து அழைக்கிறானாம். அழுகிறானாம். இவளுக்கும் குழந்தைகளுக்கு அப்பன் வேண்டும் போலிருக்கிறதாம்.
சரி. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அதுதான் எனக்கும் புரியவில்லை. அவளுக்கும் புரியவில்லை.
உடனே லைன் கிடைத்து விட்டது.
“நாந்தான்”
“ஏன் போனே எடுக்கல?” அந்தக் குழைவான இழுப்பு.
“நான் கோர்ட்ல இருப்பேன்னு தெரியாது?’
“ம்”
“ம்?”
“பேசணும்”
“பேசலாம்”
“எனக்கு கில்டியா இருக்கு. நான் அப்பார்ட்மெண்ட்டுக்கு வரமாட்டேன்”
“ஓக்கே..” கொஞ்சநாட்களாக இதை எதிர்பார்த்துத்தான் வந்தேன்.
“பார்த்தீங்களா? என்னக் கட் பண்ணி விடறீங்க. ஒரு நட்பா இருக்க முடியாதா?ஒரு ஹலோ, ஒரு குட் மார்னிங், உங்க மேடம் போன எடுத்தா நல்லாயிருக்கீங்களான்னு ஒரு டீஸெண்ட் டாக். இப்படி இருக்க முடியவே முடியாதா?”
அடிப்பாவி. இந்த நல்லாயிருக்கீங்களா இத்யாதிகளைச் சகிச்சுக்கறதே அந்த விவகாரத்துக்காகத்தானேடி? நான் ஹாஹ்ஹ வாய்விட்டுச் சிரித்தேன்.
“சிரிக்ச்காதீங்கப்பா.”
திரும்பவும் சிரித்தேன்.
“முடியாதா?’ குரலில் சோகம் வழிந்தது.
“நீதான முடியாதுங்கற?”
‘அது வேற இது வேற….”
இந்தப் பேச்சுக்கு முடிவே கிடையாது. மணிக்கணக்கா போயிட்டே இருக்கும். கோர்ட்ல கூப்டறாங்கன்னு கட்பண்ணினேன்.
பொன்னுசாமியும் அமீனாவும் உள்ளே வந்தனர். ஆஸாத்கானைக் காணவே இல்லையாம். எங்கோ ஓடிவிட்டானாம். புதிதாக வாங்கிய மில்லை இடித்து ரியல் எஸ்டேட் செய்து கொண்டிருக்கிறானாம். ஆதோனி முழுக்கத் தேடிவிட்டார்களாம்.
‘சரி உட்கார்” என்று சொல்லிவிட்டு பொன்னுசாமியின் தெலுங்குப் பத்திரத்தை எடுத்து அமீனாவிடம் கொடுத்தேன்.
“இது என்ன என்று பார்த்துச் செல்லு” தமிழ்+ஆங்கிலம்+ பொன்னுசாமியின் தெலுங்கு.
அமீனா அதைப் படித்து விட்டு அதிர்ச்சியடைந்தான்.
‘இதில் வாரம் பங்காரம்மா சாட்சிக் கையெழுத்துப் போட்டிருக்காங்க”
“யார் அது”
“பெரிய டான். நீங்க கோர்ட்ல பாத்தீங்கல்ல கொலை கேசுக. எல்லாம் அவங்க ஆளுகதான்”
“மைகாட் எல்லாக் கொலையும் பங்காரம்மா பண்ணதா? யோவ் பொன்னுசாமி யார்யா இந்த சொர்ணக் ….சே பங்காரம்மா? உனக்கு எப்டித் தெரியும்?’
பங்காரம்மா வாரங்கல்லில் ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு எம் எல் ஏ அவர் குடும்பத்தில் எல்லோரையும் கொன்று விட்டான். பங்காரம்மா எம் எல் ஏவின் எதிரியுடன் சேர்ந்து அவனையும் பதினோரு அடியாட்களையும் குண்டு வீசிக் கொன்று விட்டார். பின்பு பெரிய டானாகிவிட்டார். ஆசாத்கானைச் சமாளிக்க பங்காரம்மாவால்தான் முடியும் என்று கேள்விப்பட்டு பொன்னுசாமி அவரிடம் சென்று தான் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி உதவி கேட்டான். ஒல்லியாக குள்ளமாக சாந்தமான முகத்துடனிருந்த பங்காரம்மா கட்டணமாக எழுபத்தைந்தாயிரம் பெற்றுக் கொண்டு ஒரு தடியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்கக் கதவைத் திறந்த அடியாள் பங்காரம்மாவைக் கண்டு பதறிப் பின்வாங்கினான். பங்காரம்மா அலட்சியமாக வீட்டில் நுழைந்து ஆசாத்கானையும் அவனது அடியாட்களையும் நிற்காமல் சாத்து சாத்து என்று சாத்தினார்.
”என்ன பத்திரம் வேணாலும் எழுதி வாங்கிக்கோ” என்றார்.
பொன்னுசாமிக்கு எதுவும் தெரியாததால் அவரே எழுதி வாங்கித் தந்தார்.
“பொன்ஸூ வாங்கறதே வாங்கறீங்க. நல்ல எழுதி வாங்க்யிருக்கலாமில்ல. புரோநோட் வங்கியிருக்கலாம். வெத்துப் பேப்பர்ல கையெழுத்து வாஞ்கியிருக்கலாம். கடன் பத்திரம் வாஞ்கியிருக்கலாம். எதுவுமே இல்லாம இது என்னய்யா டாக்குமெண்ட்? அதுல ஊரறிஞ்ச டான் பங்காரம்மா கையெழுத்து வேற?”
“சார் ….” பொன்னுசாமி வேதனையுடன் இழுத்தான். ‘பங்காரம்மாவுக்கு கிரிமினல் கேஸ்தான் தெரியும் சார். சிவில் மேட்டர் தெரியாது. அந்த நேரத்துல வேற வழி இல்ல”
பங்காரம்மா சிவில் சட்டமும் தெரிஞ்சுகிட்டா வக்கீல் பொழப்பு உருப்பட்ட மாதிரிதான். “சரி அப்புறம் என்ன ஆச்சு?”
‘நம்ம ஆதோனி கோர்ட்டுக்கு எதிர்ல ஒரு எடம் இருக்குல்ல சார். அத பங்காரம்மா 12 கோடிக்கு வெல பேசினாங்க. எடத்துக்காரனுக்கு அது புடிக்கல”
”ஏன்?”
“எத்தன கோடியா இருந்தாலும் எடத்துச் சொந்தக்காரனக் கேட்டுத்தான முடிவு பண்ணனும்?”
‘நியாயம்தான்’
“பங்காரம்மா வழக்கம் போல லாரி மோதி குண்டு வீசிட்டாங்க. இப்ப கேச்ல கடப்பால ஜெயில்ல இருக்காங்க. அவங்க உள்ள போனதும் ஆசாத்கான் பணம் தரமாட்டேன்னுட்டான். கேஸ் போட்டாச்சு. இப்ப அம்மா வெளிய வராங்க. அதனால தலை மறைவாயிட்டான்”
“தலைமறைவானவனுக்கு எப்ப சம்மன் தர்றது?”
“கோர்ட்ல சொல்ல வேண்டியதுதான”
பொன்னுசாமியின் பேச்சில் சார் இல்லாதது கண்டு எனக்கு கடும் கோபம் வந்தது. கட்சிக்காரன் மொட்டையாகப் பேசுவதை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
“பொன்னுசாமி உங்க மாமனார் பேர் என்ன?”
“நஞ்சே கவுண்டர்”
“நீஙக் நஞ்சே கவுண்டர எப்படியாச்சும் ஆதோனி ஜட்ஜா ஆக்கிருங்க. அப்புறம் கோர்ட் நாம் சொல்றதக் கேட்கும். இல்லாட்டி நாலு வாய்தா ஆகித்தான் பேப்பர் பப்ளிகேசன் வாங்க முடியும்”
பொன்னுசாமி விரக்தியடைந்து தலையைத் தலையை ஆட்டிக் கொண்டான்.
—————————————-
‘சார் அது சின்னப் பொண்ணு சார். பதினேழு வயசுதான் ஆச்சு. கொழந்தை மாதிரி இருக்கு. ஈஸ்ட் கோதாவரியாம். ஊர்ல வெவசாயம் போய்ச்சுப் போச்சுன்னு ஆதோனில வேல கெடக்குதுன்னு வந்திருக்கு. நம்ம பையன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிக் கெடுத்திட்டான். இப்ப கர்ப்பமா இருக்கு” சுந்தரின் கண்களில் வருத்தம் தெரிந்தது.
‘போலீஸ் என்ன சொல்லுது?”
‘மைன்ர் பொண்ணு. அதனால ரேப் கேஸ் ஆயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கலேன்னாம் உள்ள போடுவோம்ங்கறான்”
நான் விக்னேச்வரனையும் தலைவரையும் பார்த்தேன். “எங்க வீட்ல ஒத்துக்கவே மாட்டாங்க. கர்ப்பத்துக்கு நான் காரணமில்ல. வேற ஆளுகளும் இருக்கலாமில்ல”
“அதான சார். பிளாட்பாரத்துல படுக்கறவ. எத்தன பேர் இருந்தாங்களோ என்னவோ? நம்ம பையனுக்கு எப்படி சார் கல்யாணம் பண்ணி வெக்க முடியும்?”
“விக்னேஷ் ரெண்டுுவழி இருக்கு. கல்யாணம் பண்ணிட்டு விவாக்ரத்து கேஸ் போட்டுடு. இவளால கோர்ட்டுக்கு வர முடியாது. எக்ஸ்பார்ட்டி ஆயிடும். அது வேண்டாம்னா இந்த ஊரை விட்டு ஓடிடு. முன் ஜாமீன் முயற்சி செய்யலாம். ஆனா கஷ்டம். என்ன சொல்ற?”
“நாளைக்கு இன்னொரு தடவ அந்தப் பொண்ணுகிட்ட பேசிப் பாக்கறேன் சார். முடியாட்டி பார்க்கலாம்.” என்றார் தலைவர்.
———————————————————
டைனிங் ஹாலில் உட்கார்ந்த போது செக்கச் செவேலென்று பெரிய மனிதத்தோரணையுடன் மூன்று பேர் வந்து எதிரே உட்கார்ந்தனர்.
“கௌடா, கௌடா கௌடா …..”
யார் யார் என்னென்ன கௌடா என்பது மனதில் நிற்கவில்லை.
கௌடாக்கள் கர்நாட்காவில் பெங்களூருவ்ல் ரியல் எஸ்டேட் வியாபாரிகள். புதிதாக உள்கட்டுமானத்தை விரிவுப்படுத்தி வரும் ஆந்திராவுக்கு தொழிலை விஸ்தர்க்க வந்திருக்கின்றனர். ஆசாத் கானுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். நிலம் ஆசாத் கானுடையது. இவர்கள் வீடு கட்டி விர்கப் போகிறார்கள். அறுபது லட்சம் முடக்கம்.
“உங்களுக்கு என்ன பிரச்சினை?” ஒரு கௌடா கேட்டார்.
“ஒரு பிரச்சினையுமில்லை. உங்களுக்குதான் பிரச்சினை. ஆசாத் கான் வ்ராவிட்டால் அவன் சொத்துக்களை அட்டாச் செய்யச் சொல்லி மனு போடுவோம். நிலம் கோர்ட்டால் ஜப்தி செயப்பட்டுவிடும்.”
கௌடாக்களின் முகம் வெளுத்தது. ‘நோ நோ “ என்று பதறினார்கள். வேண்டாம். நாங்கள் முடிந்து போய்விடுவோம்” என் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள்.
“நான் என்ன செய்ய முடியும்? எனது கட்சிக்காரருக்கு முப்பது லட்ச ரூபாய் வர வேண்டும்”
நாளை வருகிறோம் என்று கௌடாக்கள் தள்ளாடியபடி கிளம்பிச் சென்றனர்.
செல்போனைப் பார்த்தேன். ஐந்து மிஸ்டு கால்களும் எட்டு குறுஞ்செய்திகளும் இருந்தன. “ஏன் என்னைச் சித்திரவதை செய்கிறிர்கள். உங்கள் அன்பை ஏன் எனக்கு மறுக்கிறீர்கள்”
“வாட் டு யூ வாண்ட்” என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.
‘சுந்தர் நாளைக்கு ட்ரெய்ன் எத்தனை மணிக்கு?”
’12.50 க்கு சார். ஆனா நம்மால் போக முடியுமா?”
”பார்க்கலாம்”
அன்றைய இரவு மிகவும் பிசியான இரவு.
பொன்னுசாமி ஆசாத்கானைப் பிடித்தே தீருவது என்று கங்கணம் கட்டினான். அதோடு ”ஆதோனியில் ஆர்கானிக் கடலைக்காய் கிடைக்கிறது. இங்கே யார் உரம் போடுகிறார்கள். பருத்தியைக் கூட மழை நீர் கொண்டுதான் வளர்க்கிறார்கள். எனவே இரண்டு செக்கு வைத்து கடலை வாங்கி எண்ணெய் எடுத்து கோவையில் சாயிபாபா காலனியிலும் ஆர். எஸ் புரத்திலும் இயற்கை ஆயில் என்று விற்கலாம் என்றிருக்கிறேன். சார் வெடியால கிளம்பிடுவேன். வேலையெல்லாம் முடிச்சுட்டு ரயிலுக்கு வந்துடுவேன்” என்று உறுதியளித்தான்.
இரவு எனக்கு போன் வந்தது. “நண்பா நீ உடனே கிளம்பி வா.” உத்திரவிட்டது கோவையில் கல்வித்தந்தையாக உருவாகிக் கொண்டிருப்பவனும், ரியல் எஸ்டேட் அதிபனும், எனது கிளையண்டுமான ராஜ்.
‘என்ன அவசரம்?”
“ டிரஸ்ட் கேஸ்ல நீ ஒரு நல்ல ஆர்டர் வாங்கிக் கொடுத்திருக்கே இல்ல. பார்ட்டி ஆடிப் போயிருச்சு. காம்ப்ரமைஸ் வராங்க. மினிஸ்டரோட தம்பி திடீர்ன்னு வந்து பிரச்சினையைப் பேசி முடிக்கணுன்னு உக்கார்ந்துட்டார். இப்போதைக்கு நம்ம ரிசார்ட்டுக்குக் கொண்டு போய் சரக்கு ஊத்தி விட்டு அமுக்கியிருக்கேன். நீ வந்தாத்தானே பேச முடியும். ஓடி வா.”
“கிரேட். நீ சாணக்கியண்டா”
“நீ வர்ரே”
‘வந்தாச்சு”
சொன்னபடியே காலையில் எழுந்தபோது பொன்னுசாமியைக் காணவில்லை. கானைத் தேடுகிறானோ, கட்லையைத் தேடுகிறானோ தெரியவில்லை. விக்னேஷ் லதா பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டு சென்றது. அது முடிவது போலத் தெரியவில்லை.
குறுஞ்செய்தி வந்தது. அன்பு ஒருநாளும் மாறாது. உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் பிரிவென்பதே இல்லை.
சனிக்கிழமை அப்பார்ட்மெண்ட்டில் இருப்பேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.
“சுந்தர் ரெடியாகு”
“சார் பொன்னுசாமி, விக்னேஷ். லதா?”
“பொன்னுசாமிய அட்ராஸ் கொண்டு வரச்சொன்னோம். கொண்டு வர்றது அவன் வேல. விக்னேசை ஓடிப் போக சொன்னோம். போகாம பஞ்சாயத்துப் பேசப் போய் இருக்கான். தப்பிச்சு வெளிய வ்ந்தால் பாக்கலாம். நீங்க இவனுக்காக ஹைதராபாத் ஹைகோர்ட் போக ரெடியா இருங்க. இப்ப ட்ரெய்ன மிஸ் பண்ண முடியாது.
சுந்தர் திகைப்புடன் தலையாட்டினான்.
நான் புன்முறுவலுடன் துணிகளை அடுக்கத் தொடங்கினேன்.
பிரச்சினையை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும். உணர்வு பூர்வமாக அணுகுவது தொழில் தர்மத்துக்கு விரோதமானது.
சமகாலத்தில் எரியும் பிரச்னையை கதையாக்கியுள்ளார்,
நெஞ்சை பதற வைக்கும் துடிப்பான காங்ஸ்டர் கதை,
திரைப்படமாக எடுக்கப்படுகையில் ஒரு புதிய பரிணாமம் கிடைத்திடும்,
வாழ்த்துக்கள், இன்னும் இது போன்ற காங்ஸ்டர் கதைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்திட இவருக்கு தெம்பும் திராணியும் அளிக்க வேண்டுமென்று நான் அன்றாடம் வணங்கும் வள்ளி தெய்வாணை சூழ காட்சியளித்திடும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை பிரார்த்திக்கிறேன்,
நல்லா ஆவிங்க நீங்க நல்லா ஆவிங்க
நோயும் போவுங்க உடம்பு குணமும் ஆகுங்க..
நல்லா ஆவிங்க நீங்க நல்லா ஆவிங்க
நோயும் போவுங்க உடம்பு குணமும் ஆகுங்க..
அட சிரிப்பாலே எங்களைத்தான்
பூமி அழகுங்க இந்த வானம் அழகுங்க
நீரும் அழகுங்க உங்க பேரும் அழகுங்க
பூமி அழகுங்க இந்த வானம் அழகுங்க
நீரும் அழகுங்க உங்க பேரும் அழகுங்க
அட தெம்பாக கைவீசி நல்லா வருவீங்க
……………….
ஆதோனி… அடுத்தவர்களின் கதை தான் வழக்கறிஞர்களின் மூலதனம், அதுவும் அந்த வழக்கறிஞர் எழுத்தாளராகவும் இருந்து விட்டால் கதைகளுக்கா பஞ்சம். நண்பர் இரா. முருகவேளின் ஆதோனி சிறுகதை, அட்டகாசமான களம். நாவலாகவும் விரித்து எழுதக்கூடிய வாய்ப்பு இருந்தும், பிறந்தநாளில் கேக்-கில் ஒரு துண்டு வெட்டி எடுத்து சாப்பிடுவது இல்லையா? அதுபோல சிறுதுண்டு இந்த சிறுகதை.
ஈரோட்டையும், திருப்பூரையும், கோவையையும் களமாக கொண்டு எழுதிவிடக் கூடிய கதை தான். ஆனால் ஆதோனிக்கு அழைத்துச் சென்று ஊர் சுற்றிக் காட்டியிருக்கிறார் இரா.முருகவேள். வெடிகுண்டு வீசும் பெண் ரவுடி பங்காரம்மாவை ஈரோட்டில் எப்படி உலவ விட முடியும்? அதற்கு ஆதோனி தான் சரியான வாய்ப்பு.
இத்தனை சிறிய கதைக்குள், வழக்கறிஞர் – உதவி வழக்கறிஞர் உறவு, வழக்கறிஞர் – அரசியல்வாதிகளுடனான உறவு, கித்தாய்ப்புக் காட்டும் ரவுடிகளுடனான உறவு, மனைவியிடம் பேசுவதையே மாபெரும் கடமையாக கொண்டுள்ள சமகால கணவன்களின் ஒரு சாம்பிள், கிளுகிளுப்புக்காய் ஆசைப்பட்டு ஆப்பசைத்த குரங்காக அல்லல்படும் பலரின் ஒரு சாமபிள் என்று பல சமாச்சாரங்களை போட்டு அடைத்து தந்திருக்கிறார் முருகவேள்.
ரயிலுக்கு புறப்பட தயாராவதற்குள் நாம் சிலரது வாழ்க்கையின் ஒட்டுமொத்த சக்கரத்தையும் சுற்றி வந்து விடுகிறோம். இதில் நீங்கள் பொன்னுசாமியா, விக்னேஷ்வரனா, ஆசாத் கானா, பங்காரம்மாவா, சுந்தரா என்று யோசித்துக் கொள்ளுங்கள். சிலருக்கு மட்டும் தான் சீனியர் வைத்தியநாதன் போல் வாழ்க்கை லக்கி பிரைசை தருகிறது. பலருக்கு பங்காரம்மாவின் வெடிகுண்டு காத்திருக்கிறது. ஒன்று நேரடியாக அல்லது குறுஞ்செய்தியாக…
ஆதோனி, உலகின் எந்த நிலப்பரப்பிலும் இருக்கக்கூடிய ஒரு ஊர். ஏனென்றால் உலகம் என்பதே ஆதோனிகளின் கூட்டுத்தொகை தான்.
வாழ்த்துகள் முருகவேள் சார்…