கவிதை: அவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல – அகவிபேரெழுச்சியின் நெருப்புப்பீறிடலின்
மக்கள் வெப்பம்
ஒன்றரை கோடிக்கு மேல்
அதிகாரக்காடு
எரியத் தொடங்கி விட்டது
தெரியாமல்
தண்ணீர் பீய்ச்சி
கூட்டத்தைக் கலைப்பதெல்லாம்
ஆகாச நெருப்பை
நாய்மூத்திரம் கொண்டு
அணைப்பது .
வாழ்வு கவ்வும்
முரணைத் திருத்த
கலப்பைப் பெருங்கூட்டம்
கோடியைத் தாண்டி
 குமுறலைக்
கக்குவதால்
கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகின்றனர்
தேசத்தின்
ஆகார
ஜீவன்கள்
அல்லோல கல்லோலப்படுகிறார்கள்
கொடும் அரசியலை
குழி தோண்டிப்
புதைக்க நெருங்கும்
நியாயக் கிளர்ச்சியாளர்களைத்
தடுக்க
சாலைகளைக்
குழிகளாக்கி
பிணமென பேசாமல்
நிற்கிறது அதிகார எந்திரம்.
இரவுகளால் செய்த
பகல் ஆயுதங்களாய்
விவசாயிகள் .
கோதுமைகளே
நிலங்களை
சுமந்து வந்தாற்போல்
பாராளுமன்றம் நோக்கி
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்
ஊடகங்களின்
கண்கள்
ஜால்ரா பொறி பட்டு
புண்களாகி விட்டன
லத்திகளின் வீரம்
ராணுவ
ஆயுதங்களின்  அடக்குமுறை
கார்ப்பரேட் தோழமையின்
கட்டவிழ்த்த வெறி
எதனாலும் சரி கட்ட முடியவில்லை
சனநாயகத்தின் பேரவ
மானத்தை.
அவர்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்கள்
மனிதர்கள் மட்டுமல்ல
நிலங்கள்
விதைகள்
உரிமைக்காய் சிவந்த
ஏர் முனைகள்
அவர்கள்
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்