தேசம் உறங்கி கொண்டிருக்கிறது
நிர்ச்சலனமின்றி…
நீங்களும் நானும்…
நம் காலைத்தேநீர் பொழுதில் உணர்கிறோம்
பஞ்சநதிகளின் புதல்வர்கள் துயில்வதில்லை..
மூதாட்டிகளும்..குழந்தைகளுங்கூ
அவர்களுக்கு முன் விதவிதமான யோசனைகள்
தம்மைத் தடியால் தாக்கும்..
நீர்ப்பீய்ச்சி சிதறடிக்கும் பொறுப்புணர்வின் சின்னங்களான சட்டமொழுங்கின் பசிக்கு
ருசியான துணைப்பதார்த்தம்
என்ன வகையானதாக செய்வதின்று…
குளிருக்கு தோதாக இதச்சூட்டு குடிநீர்..இப்படியாக…
அவர்களுக்கு முன் விதவிதமான திட்டங்கள்
மதிகெட்ட மகாராஜா..மகட்டை மந்திரிகளின் பொய்மழைத் தடுக்கும் குடை எது?
தூங்குவது போல நடிக்கும் ஊடகப்பாறைகளை உசுப்புவதெங்ஙனம்…?
அவர்களுக்கு முன் ஒளிர்கிறது தூரத்து தீபங்கள்..
மொழிகளின் எல்லைகளைத்தாண்டி
உழுகுடிகளின் உயர் நியாயம்
ஏர்மகன்களின் அறத்தூய்மையைத்
தம் தோள்களில் தாங்கி பாரெங்கும் விதைக்கும் தோழமைத்தோள்களை அணைக்கும் நாளெது…?
துயில் புறந்தள்ளி குளிர்காயும் தீக்கொழுந்து சிவந்து மலர்ந்தொளிர
அதிர்கிறது செங்கோட்டை…