எனக்கு ஜெயகாந்தனை அவ்வளவாக பிடிக்காது என்ற ஒரு வரி முன்னுரையைச் சொல்லிவிட்டால் உங்களுக்கு இந்தக் கட்டுரையை வாசிப்பதற்கு எளிமையாக இருக்கும் என்பதை விட அதுவே அறிவு நாணயம் என்றும் நான் நினைக்கிறேன்!
அவரது புனைவுகளை உருகி உருகிப் படித்த என்னால், அவரது கட்டுரைகளை வாசிக்க முடியவில்லை. ஏனென்றால் அவரது அரசியல் நிலைப்பாடுகள் வேறு. எனது அரசியல் எண்ணங்கள் வேறு. வேறுவேறு என்பதுகூட சரியானது அல்ல, இரண்டும் முற்றிலும் மாறுபட்டது. அதுவும் அவர் தனது படைப்புலகத்தை விட்டுவிட்டு மிகத்தீவிரமான அரசியல் உலகத்தில் இருந்தபோது அவரது எழுத்துக்களை வாசிக்க ஆரம்பிக்கும் வயதுள்ளவர்களுக்கு ஏற்படும் மூளை நெருக்கடி எனக்கும் ஏற்பட்டது. எனது பெரியார், திராவிட அரசியல், தமிழ்த்தேசியக் கொள்கைகள், திக, திமுக ஆதரவு நிலைப்பாடுகள் அனைத்துக்கும் முற்றிலும் எதிரானவர் ஜெயகாந்தன். அதுவும் 1980களின் இறுதியில் மிகத்தீவிரமான ஈழப்போராட்டக் காலம். விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாடு கொண்ட மாணவர்களாக நாங்கள் இயங்கி வந்த நேரம் அது. இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நேரடிப் போர் நடந்து வந்த காலத்தில் புலிகளை ஆதரித்து கோவில்பட்டியில் இயங்கிவந்த 1986-87 காலக்கட்டம் அது. அப்போது தமிழீழத்துக்கு எதிராகவும் புலிகளைப் பாசிஸ்ட்டுகள் என்றும் முழங்கி வந்தவர் ஜெயகாந்தன். கயிலை மன்னனும், ஜெயகாந்தனும் சோவும் ம.பொ.சி.யும் ஒரு அணியாகப் பேசிவந்தார்கள். இத்தகைய கொந்தளிப்பான அரசியல் கட்டத்தில் தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவனாக நான் இருந்ததால் ஜெயகாந்தனின் படைப்புகள் – அரசியல் ஆகிய இரண்டு முரண்பட்ட சிந்தனைகளை உள்வாங்கியாக வேண்டிய நெருக்கடி வந்தது.
சினிமாவுக்குப் போன சித்தாளு, ஒருமனிதன் ஒரு வீடு, ஒரு உலகம், சமூகம் என்பது நான்கு பேர் என்ற புனைவுகளைவிட அவர் நடத்தி வந்த ‘கல்பனா’ இதழின் சில பிரதிகள் எனது தந்தையாரின் அலமாரியில் இருந்தது. அவை எனக்குப் பிடித்திருந்தது. கலைஞரை ஜெயகாந்தன் எடுத்த மிக நீண்ட பேட்டி ஒன்று அதில் உண்டு. ( அது கிடைத்தால் மீண்டும் வாசிக்க வேண்டும்!) இதன் மூலமாக ஜெயகாந்தன் ஈர்ப்பு ஏற்பட எங்கள் வீட்டில் இரண்டு புத்தகங்கள் என் கையில் மாட்டியது. ஒன்று ஜெயகாந்தன் முன்னுரைகள், ஜெயகாந்தன் முன்னுரைகளை ஆய்வு செய்து ஜனார்த்தனம் எழுதிய புத்தகம் ஆகிய இரண்டும். மிக அருமையான பேச்சாளர் ஜனார்த்தனம். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தில் கர்ஜித்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர். ஜெயகாந்தனின் கதைகளைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை ‘ஜெயகாந்தன் முன்னுரைகள்’ புத்தகம் தான் ஏற்படுத்தியது. இந்த ஆர்வம் கோவில்பட்டி கிளை நூலகத்துள் இருந்த ஜெயகாந்தன் நூல்கள் அனைத்தையும் அள்ளத் தோன்றியது. அதில் ஒன்று தான் ‘ஓர் இலக்கியவாதியில் அரசியல் அனுபவங்கள்’. பல பகுதிகள் என்று சொல்வதை விட முக்கால் பகுதிகளில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது என்றாலும் எனக்கு என் இளமைக் காலத்தில் எழுத்தார்வம், சொல்லும் திறன், எழுதும் பாங்கு, எடுத்து வைக்கும் வாதங்கள் ஆகியவற்றின் மீது ஆர்வம் மட்டுமல்ல, அதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த புத்தகங்களில் ஒன்று ஜெயகாந்தனின், ‘ஓர் அரசியல்வாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்பதாகும்!
1970களின் தொடக்க காலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக துக்ளக் இதழில் தனது வாழ்க்கை வரலாற்றை ஜெயகாந்தன் எழுதினார். திமுக எதிர்ப்பு அணியில் ஜெயகாந்தனும் ஈவெகிசம்பத்தும் கண்ணதாசனும் சோவும் நடத்தி வந்த காலக்கட்டம் அது. எனவே, ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்ற தலைப்பில் ‘ஓர் இலக்கியவாதியின் திராவிட இயக்க எதிர்ப்புகள்’ என்று சொல்லும் அளவுக்கு அந்தக் காரம் தான் அதிகமாக இருக்கும். ( அந்த அரசியல் குறித்து நாம் இங்கு பேசப்போவதும் இல்லை!) ‘துக்ளக்’ இதழில் எழுதுவதன் காரணமாக இந்தக் காரத்தை ஜெயகாந்தன் அதிகம் தூவியும் இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த அரசியலும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இந்த தொடரை ஜெயகாந்தன் எழுதினார்.1947 முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகத்தீவிரமாக இயங்கிய அவர், ‘ஓர் அரசியல் கட்சிக்குச் சார்பாகக் கொடி தூக்கிப் பிரச்சாரம் செய்வது எனக்குப் பழக்கப்பட்ட காரியம் தான். ஆனால் இப்போது நான் அந்த நிலையில் இல்லை’ என்று பீடிகை போட்டுக் கொண்ட தொடர் அது. தன்னை ‘பற்றற்ற நாயகன்’ என்று சொல்லிக் கொண்டார். ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை விட்டவர் அவர். ஊர் சுற்றி வந்த அவரை சொந்த ஊரான கடலூரில் இருந்து விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு தனது மாமா பி.புருஷோத்தமன் மூலமாக கம்யூனிஸ்ட் ஆகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விளையாட்டு பயிற்சி கொடுத்து இளைஞர்களை ஈர்ப்பதைப் பார்த்து இவர், ‘விழுப்புரம் ரயில்வே காலனி பாலர் சங்கம்’ அமைத்து பயிற்சி கொடுத்து இளைஞர்களை கம்யூனிஸ்ட் அமைப்பின் பக்கமாக ஈர்க்கிறார். கம்யூனிஸ்ட் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக பாரதியார் பாடல்கள் பாடுபவராக 12 வயதில் கட்சிக்குள் அறிமுகம் ஆகிறார். விழுப்புரத்தில் இருந்து ஒரு கடிதம் எடுத்துக் கொண்டு சென்னை வருகிறார். சென்னையில் இருக்கும் ஜனசக்தி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அச்சுக்கோர்க்க கற்றுக் கொள்கிறார்.
அவரைப் போலவே அங்கு பலரும் வாழ்ந்து வருகிறார்கள். ஒருவித கம்யூன் வாழ்க்கை அவருக்கு வாய்க்கிறது. பத்திரிக்கை விற்பது, பிரசுரம் விநியோகிப்பது என்று செயல்படுகிறார். அவருக்கு மாத ஊதியம் 50 ரூபாய். தோழர் ஜீவாவுக்கும் மாத ஊதியம் அதேதான்! கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை ஏற்பட்ட காலம் வரை கொஞ்சம் நிம்மதியான வாழ்க்கையாக போகிறது. கட்சிக்கு தடை விழுந்தபோது நெருக்கடி முற்றுகிறது. இது பற்றி ஜெயகாந்தன் எழுதி இருப்பதை படித்தால் நெஞ்சு கனக்கிறது. ”ஜனசக்தி தினசரிக்காக சேர்த்த நிதியெல்லாம் கட்சியின் புரட்சிகர நடவடிக்கைக்காகக் கரைந்து போயிற்று.
வாங்கிய ரோட்டரியும் விற்கப்பட்டு விட்டது. ஐம்பது அறுபது பேராக இருந்த கம்யூன் அங்கத்தினர்கள் பத்துப் பதினைந்து பேராகக் குறைந்து போயினர். எங்களையும் இரவு பகல் எந்நேரமும் போலீசார் முற்றுகையிட்டிருந்தனர். திடீர் திடீரென இரவு பகல் பாராமல் போலீஸ் லாரிகள் வந்து நிற்கும். நாங்கள் வசிக்கிற பிரதேசத்தையே ராணுவ முற்றுகை மாதிரி நூற்றுக்கணக்கான போலீசார் சூழ்ந்து கொள்வார்கள். ஆயுதம் தாங்கிய போலீசார் உள்ளே புகுந்து சோதனையிடுவார்கள். எங்கள் உடமைகளையெல்லாம் தாறுமாறாகக் கலைத்துப் போடுவார்கள். வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளைக் குடைவார்கள். தலைவர்களின் பெயர் லிஸ்ட்டைப் படித்து யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்பார்கள். லிஸ்டிலே இருக்கிறவர்கள் யாராவது தப்பித் தவறி அங்கே இருந்தால் அவர்களைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தப்பித்துச் சுவரேறியோ மரமேறியோ குதித்து வருவார்கள். சிலர் தப்புகிற முயற்சியில் பிடிபட்டு அடிபட்டுக் கைதாவார்கள்” என்று எழுதி இருக்கிறார் ஜெயகாந்தன்.
காந்தி – நேரு பற்றாளராகவும் கம்யூனிஸ்ட்டாகவும் இருக்கும் ஜெயகாந்தனுக்கு இந்த தடை செய்யப்பட்ட காலம் சிந்தனை மாற்றத்தை உருவாக்குகிறது. பக்குவம் ஏற்படுத்தாமல் பலாத்காரம் என்பது சரியானது அல்ல என்று நினைக்கிறார். அதனால் மீண்டும் ஊருக்குச் சென்று விடுகிறார். பல இடங்களில் பல்வேறு வேலைகளைப் பார்க்கிறார். ரயில் நிலையத்தில் சுமை தூக்குவது, திரையரங்குகளில் பாட்டு புத்தகம் விற்பது, ஜட்கா வண்டிக்காரர்களுக்கு உதவியாளராக இருப்பது என்று காலத்தை ஓட்டினார்.1956 காலக்கட்டத்தில் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஊழியராகிறார். ‘நீ கம்யூனிஸ்டா?’ என்று சிலர் தன்னைப் பார்த்துக் கேட்டதாக ஜெயகாந்தன் சொல்கிறார். அதற்கு அவரே சொன்ன பதில் இது:
”ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பதற்கு எந்த விதமான தகுதியும் எனக்கு இல்லை என்ற தாழ்வுணர்ச்சி எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது. அதைமீறி ஒரு நல்ல கம்யூனிடாக இருக்க நான் முயன்றேன்” என்பதோடு ஜெயகாந்தன் நிறுத்தி இருக்கலாம். அவரது சித்தாந்த குழப்பங்கள் அடுத்தடுத்த வரிகளில் விழுகிறது….
”ஆசாரமான பிராமணர்களின் பந்தியில் வந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பிடிபட்ட ஒரு புலையனைப் போல நான் அவமானப்பட்டேன். அவன் எவ்வளவு சுத்தமாகவும் ஆசாரமாகவும் இருந்து என்ன பயன்?” என்று எழுதுகிறார். இதைத் தொடர்ந்து எழுதும் கம்யூனிஸ்ட் இலக்கணம் குழப்பத்தின் உச்சம். கம்யூனிஸ்ட்டுகளை சமூக விஞ்ஞானிகள் என்று கணிக்கும் ஜெயகாந்தன், கொள்கை, லட்சியம், அறிவு ஆகியவற்றை விட ஒரு மனிதனின் சுயபண்புகளே முக்கியம் என்கிறார். ‘வர்ணாசிரமம் என்பதே வர்க்கச் சுரண்டலற்ற சமூகம் தான்’
என்கிறார். ‘நான் ஏற்றுக் கொண்டிருக்கின்ற சித்தாந்தம் வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல, எனது விருப்பும் வெறுப்பும் வெறும் சூழ்நிலைகளைப் பொறுத்ததும் அல்ல. அவற்றுக்கு ஓர் ஆன்மிக, சமூக அடிப்படை உண்டு’ என்கிறார். இறுதியாக நான் ஹிந்து என்று முடிப்பார். ‘ஹிந்து என்பதை கலாச்சாரம்’ என்பார். அவருக்குள் ஏற்பட்ட சித்தாந்த முரண்களை முழுமையாக இந்த நூலில் சொல்லிச் செல்வார். இயக்கம், கட்சிச் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தவரை மீண்டும் இணைக்கிறார் தோழர் ஜீவா. கலை இலக்கியப் பெருமன்றம் அதற்கு அடித்தளம் அமைக்கிறது. கலை இலக்கியப் பெருமன்றத்துக்கான தொடக்கக் கலந்துரையாடல் காரைக்குடியில் நடந்தபோதும் முதல் மாநாடு கோவையில் நடந்தபோதும் கலந்து கொள்கிறார்.
அங்கும் தனது முரண்பாடுகளைச் சொல்கிறார். இலக்கியப் பணியை அரசியல் நோக்கம் கலக்காத பணியாக வரித்துக் கொள்கிறார். கட்சியில் சேரமால், எனது பணியை கம்யூனிஸ்ட் உணர்வுடன் செய்வது என்று கோடு போட்டுக் கொள்கிறார். ஆனால் தோழர் பாலதண்டாயுதம் இவரை மீண்டும் கட்சிக்குள் நெருக்கமாக ஆக்குகிறார். அந்த மேடைகளை முழுமையாக திராவிட இயக்கத்தை விமர்சிக்கும் மேடையாக மாற்றிக் கொள்கிறார். ”நான் அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் திக, திமுகவின் நிரந்தரப் பகைவனாக இருந்திருக்கிறேன். அவர்களோடு ஒத்துப்போகிறவர்களோடு கூட என்னால் ஒத்துப்போக முடியவில்லை. அவர்களுடைய எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களோடு எனக்கு ஓர் ஒற்றுமை ஏற்பட்டது’ என்று சொல்லிக் கொண்டார். திருச்சி எழுத்தாளர் மாநாட்டில் பெரியாருக்கு முன்னதாக இவர் பேசிய பேச்சு மிக முக்கியமானது. அதனை முழுமையாக உன்னிப்பாக கவனித்து பேச அனுமதித்த பெரியார் இறுதியாக, ‘நீங்க பிராமணப்பிள்ளையா?’ என்று பெரியார் கேட்டுள்ளார். ஜெயகாந்தனின் துணிச்சல், வாதத்திறமை, சொல்லாட்சியின் அழுத்தம் தெறிக்கும் பேச்சு இது.
இவை அனைத்தும் எனது பள்ளிக் காலத்தில் படிக்கும் போது அவரை விரும்பியும் வெறுக்கவுமான காலமாக இருந்தது. அவர் வெறுத்தவைகளோடு இறுதிக் காலத்தில் உடன்பட்டுப் போனார். அவரே சொன்னது மாதிரி, ‘ஒவ்வொரு மனிதனின் நிலைப்பாடுகளும் அந்தந்த நேரத்து நியாயங்கள்’. இதைப் புரிந்து கொண்டால் அவர் எழுத்து என்றும் ஜெயம். அனைவர்க்கும் அவர் காந்தம்!
-எழுத்தாளர் திருமாவேலன்