இனவாதிக்கத்தால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டும்.. மிரட்டப்பட்டும்.. கொலையாக்கப்பட்டும்.. எரியூட்டப்பட்டும்.. காரணமேதுமறியாமல் அப்பாவித் தமிழர்கள் யாழ் நிலத்தின் பேருந்துகளில் இருந்து தலைவேறு முண்டம் வேறாக  குண்டுகளின் வெடிப்பதில் தூக்கியெறிபப்பட்டு கருகிக் கொண்டிருந்த தமிழ் உடல்கள் ஈழத்து இளைஞர்களிடையே இன ஆதிக்கத்திற்கெதிரான ஆயுதம்தாங்கிய போராட்டம்மட்டுமே ஈழத் தமிழ் மக்களுக்கான விடுதலை என்கிற தேடுதலை.. உணர்ச்சியை தொடர்ந்து பயிற்றுவித்துக் கொண்டே இருந்தது.. விளைவு 1970களின் இறுதியும் 1980களின் தொடக்கமும் யாழ் நிலம் தனக்குள் 32க்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்டக்குழு , தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்குழுவென தனித்தனியாக  தனக்கே உரிய சாதிய, வர்க, பிரதேச உணர்வுகளைக் கொண்டதாக ஆங்காங்க சிறியதும் பெரியதுமான குழுக்களாக, சிறிய மீன்களை விழுங்கிய பெரிய மீன்களான அடையாளத்தோடு வளர்ந்து கொண்டே இருந்தன.
சிங்கள ராணுவத்திற்கெதிரான.. இனவெறிக்கெதிரான போராளிக் குழுக்களின் வீரம்மிக்க போராட்டத்தை தியாகத்தை உயிர் துறந்த எளிய மக்களின், வாழும் போராளிகளின் அனுபவத்தினூடாக நிஜங்களை,  மறைத்தொழிக்க முடியாத மெய்யான உண்மைகளைப் புனைவாக்கி தனக்கே உரிய நையாண்டித்தனத்தில் இருக்கும் வேதனையை, வலியை பொது வெளியில் ஈழத்து போராட்டாம் குறித்தான சத்தியமான மாயையில் இருந்து உணர்ச்சியேற்றிக் கொண்டிருக்கும் வகையில் நடித்து, குரல்வளை நரம்பு புடைக்க கூவி வியாபாரம் செய்துவரும் அரசியலுக்குள் விட்டில் பூச்சிகளாகி மாறிப் பறந்திருக்கும் மதிப்பு மிக்க மெச்சத்தகுந்த இளைஞர்களின் பொதுப் புத்திக்குள் ஆகப் பெரிய  உரசலை நிகழ்த்தி செல்லும் விதத்திலான இந்த திரில்லர் கிரைம் நாவலை புதுவிதமான ட்ரெண்டிங்கில் தைரியமாகப் பலத் தரவுகளை முன் வைத்து விறுவிறுப்பான மொழிநடையில் தமிழ்ச் சமூகத்திற்கு கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர் தம் “ஆயுத எழுத்து” நாவலில்.  ஈழ நிலத்தில் இருந்து போராட்டத்தை நிகழ்த்திய, அனுபவித்த, பார்த்தவைகளை அப்படியே கொண்டு வந்திருப்பார் “ஆயுத எழுத்து” தாக சாத்திரி அவர்கள்..
போராளிகளின் அடையாளத்தோடு அட்டைப்படத்தை வாசிக்கும் படியாக வடிவமைத்து அளித்திருக்கிறார் திலீபன் பதிப்பகத்தார்.
இருவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
இந்த நாவலை தமிழ் நிலத்தில் நீங்கள் கொண்டு வந்தபோது நிச்சயம் உங்களுக்கான எதிர்ப்பு வலுவாகவும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வந்திருக்க வேண்டுமே.. அப்படி இல்லை என்று நீங்கள் மறுப்பீர்களானால் அது நிஜாமக இருக்காது என்பதை என் உள்ளுணர்வு எனக்குச் சொல்லி என்னை இன்னும் இந்த தமிழ் நிலத்தில் என்னை எச்சரிக்கையோடே பயணிக்கச் சொல்லும்.
ஏனென்றால் இங்க உங்களின் போராட்டமும், தியாகமும், இழப்புமே எங்களின் உணர்ச்சியேற்றும் அரசியல்வாதிகளுக்கு பிழைப்பாகிக் கிடக்கிறது. இந்த நூல் அவர்களின் அடிவயிற்றினுள் ஐஸ் கட்டியை சொருகிடும் வலிமை மிக்கது. அப்படிபட்டவர்களின் எண்ணங்கள் கருகிடும் வாசம் தமிழ் நிலத்தில் இப்போது பரவத்தொடங்கி இருக்கிறது.
குறைந்த பட்டசப் போராளிகளைக் கொண்ட ஈழ விடுதலைப் புலிகள் எப்படி தன்னுடைய
சக்தியான.. குயுக்கியான, அறிவுப்பூர்வமான தாக்குதல்களை, எதிர்த்தாக்குதல்களை இலங்ககை ராணுவத்திற்கு எதிராக தொடுத்து அச்சுறுத்தியது என்பதையும்; தம் மக்களின் விடுதலைக்கான உந்து சக்தியாக நினைத்த இந்திய ராணுவம் தமக்கெதிராக பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் நிறுத்திய பொழுதில் விடுதலை ஒன்றையே நோக்கமாகிக் கொண்டு சமர் புரிந்த புலிகள் எப்படி இந்திய ராணுவத்தின் நினைப்பை துவம்சம் செய்து 50 நாட்களுக்கும் மேலாக அசைக்க முடியாத சவாலாக நின்றதையும் அப்படியே பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர் சாத்திரி. வாசிக்கும் போதில் வாசகனின் அருகிலேயே குண்டு வெடிப்பும்.. துப்பாக்கித் தோட்டாக்களின் சத்தங்களும்.. கட்டிடங்கள் இடிந்து விழும் ஓசையும்…பொது மக்களின் அலறலையும் கேட்க முடியும்.
சாத்திரியின் ஆயுத எழுத்து | Read Book ...
புரட்சிப் போராளிகளுக்கு எதிராக நின்றவர்கள்…இலங்கை ராணுவத்திற்கு ஆள்காட்டியாக மாறிய பெரும் பணக்காரர்களை, ஆள் காட்டிகளை போராளிக் குழுக்களால் எப்படிக் கொல்லப்பட்டர்கள்   என்பதை மானிப்பாய் கடைக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டதில் பதிவாக்கி இருப்பார். ஈழ மக்களின் விடுதலைக்கானப் போராட்டம் உலகம் முழுவதும் சிறப்புக் கவனத்தை, இலங்கை அரசின் தமிழ் இனவழிப்பிற்கெதிரான கொடூர, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை வெளிக் கொண்டுவந்ததில் அங்கே இருந்த பல போராளிக் குழுக்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும், பல் வேறு தமிழர் விடுதலை அரசியல் அமைப்புகளுக்கும் பெரும் பங்குண்டு.
இந்தப் பெரும்பங்கில் முதன்மை நீயா நானா என்கிற ஆதிக்க அதிகாரமே, போட்டியே எதிர்ப்பார்பற்று எழுந்த இளைஞர்களை, போராளிக் குழுக்களை பொது மக்களை முள்ளி வாய்க்காளுக்குள் தள்ளி தன்னை முடித்துக் கொண்டு  தியாகிகளின் நினைவுச் சின்னமாகிப் போனது. போராட்டக் குழுக்களுக்குள்ளும், அரசியல் அமைப்பிற்குள்ளும் கருத்து வேறுபாடுகளும், முரண்களும் நிச்சயம் வந்தே ஆகவேண்டும்.. வராமல் இருந்தால்தான் அங்குப் பிரச்சனை என்பதாகும். அப்படி வரக்கூடிய பிரச்சனை மாற்றுக் கருத்து கொண்டவர்களை அழித்தொழிப்பின்  வளையத்திற்குள் கொண்டு வரப்படும்போதுதான் நெருங்குகிறது எதேச்சதிகாரத்தின், பாசிசத்தின் கூர்முனை.
அதன் தொடத்ததின் ஒரு கன்னியாகவே தமிழகத்தில் 1982, மேமாதத்தின் பொழுதொன்றில்
சென்னை பாண்டி பஜாரில் பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு விடுதலை புலிகளுக்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை. ஆமாம் சண்டக்குள் ஈடுபட்டவர்கள் தோழர் பிரபாகரனும், தோழர் உமாமாகேஸ்வரனும்.. கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு வழக்கு நடந்த வரலாறும் தமிழகத்தில் உண்டு.  இந்தத் துப்பாக்கிச் சண்டை என்பது பின்னாளில் தனியொரு ஆதிக்கத்தின்.. அதிகாரத்தின் ஆரம்பப்புள்ளி, ஆரம்பக் குறீயூடு என்பதை அறியாத விடலைப்பருவம் அன்று எனக்கு.  தமிழகத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையிலான ஆட்சி அன்று  தமிழகத்தில் ஒரு தமிழர் ஆட்சியில் இல்லாததின் விளைவை தமிழகம் அனுபவித்திக் கொண்டிருக்கிறது என்று கைது செய்யப்பட்ட தமிழ்ப் புலிகளின் பெயராலும் இன அரசியல் வழியாகவும் தமிழக இளைஞர்களின் மனங்களுக்குள் தூபம் வீசப்பட்டது தமிழகத்திலும் மெது மெதுவாக ஆனால் ஆழமாக. என்னதான் இங்கே இன அரசியல் பேசப்பட்டாலும்  எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகே  இன அரசியல் பதவிக்கு வந்தது அது கூட அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டாதாலே என்பதும் வரலாறு. தமிழக மக்கள் பெரும்பான்மையானோர் தெளிவாகவே இருந்தார்கள் தம்மை எவர் ஆள வேண்டும் என்பதில்.
எந்த மக்களின் உயிர்களைக் காத்திட, உரிமைகளை நிலை நாட்டிட, சுய கெளரவம், சுய மரியாதைதனை பேனிட சொந்த மண் வாழும் தமிழ் மக்களின் ஆதரவோடு பல போராளிக்குழுக்கள் வளர்த்தெடுக்கப் பட்டதோ, ஈழத்தில் அந்தக் குழுக்கள் தங்களின் அதிகார வேட்டைக்காக சக குழுக்களை அவர்களின் ஆதரவு நிலைகளை குறிப்பறிந்து தாக்கி அழித்தொழிக்கும் வேலைகளையும் துவக்கினார்கள் படிப்படியாக இலங்கை இனவதா அரசுக்கெதிரான போராட்டத்தின் வேகத்தைப் போன்று சிறிதும் மாறுதலின்றி என்பதை நாவலாசிரியர் புதினத்தின் பல இடங்களில் குழுக்களின், தலைமை தாங்கி அழித்தொழிப்பு பணியில் ஈடுபட்டவர்களின் பெயர்களை பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர் சாத்திரி. ஒவ்வொரு போராளிக் குழுவும் இன்னொரு போராளிக் குழுவின் போராளிகளை கடத்திச் சென்று கொடுமைப்படுத்துவதும்.. சுட்டுக் கொல்வதும் அதற்கு பழிவாங்குவதுமாக பல இடங்களின்
றெலோ, புளெட், இ.பி.ஆர்.எல்.எப். விடுதலை புலிகள் இவர்களின் அழித்தொழிப்புகளை; அங்கமாக இருந்து எல்லாவற்றையும் இழந்து; இன்று சாட்சியாக நின்று பொதுச் சமூகத்தின் முன்பு தங்களின் தவறுகளை, அதன் வேர்களை நேர்மையோடு பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர். தாம் செய்த தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதிலும் தைரியம் வேண்டும்.
ஈழப் போராட்டத்தின் துயர நிழல் ...
இப்படியான அனுபவங்களே உலகமெங்கும் உயிரோடு இருக்கும் பல போராளிக் குழுக்களின் உயிர்ப்பாகும். இப்படி இப்புதினத்தில் நிஜங்களைப் போட்டுடைத்ததால் தமிழகத்தில் கட்டி வைத்திருக்கும் பூஜைக்குறிய, நேசத்துக்குறிய பிம்பங்கள் சுக்கு நூறாகி சிதறுவதென்பது மெய்யான ஒன்றாகிட, அதற்கு தமிழ் தேசிய வாதிகள் குய்யோமுய்யோ என அலறுவதும் இயற்கையானதொன்றே! அம்பலப்பட்டே போகும் அவைகள். ஏனென்றால் அவர்கள் தமிழ் ஈழத்தை இங்கிருந்து வளர்த்து அப்படியே பெயர்த்துக் கொண்டுபோய் இலங்கைக்குள் வைத்திடும் வித்தைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தவர்கள்.. இப்போதும் தேவைப்படும்போது வித்தைகளை  செய்து கொண்டிருப்பவர்கள்.
கொடூர அதிகார வேட்கையின் உச்சமாக விடுதலைபுலிகள் அமைப்பு எங்கு சென்றது என்பதுதான்  வலியான ஒன்றாகுமிங்கு. யாழ்குடாவில் தான் மட்டுமே அதிகாரம் என்றும் மற்ற அனைத்து குழுக்களும் தடை செய்யப் பட்டதாகவும்.. இருக்கும் குழுக்கள் அனைத்தும் தங்களை எல்.டி.டி.யோடு ஐக்கியமாக்கிக் கொள்ள வேண்டும் என உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் பொது அறிவிப்பினை ஆணையாக்கியதுதான் உச்சம். இது மற்ற போராளிக் குழுக்களை தங்களை தற்காத்துக் கொள்ள, எல்.டி.டி.க்கு எதிர் நிலைக்கு அழைத்துச் சென்று இலங்கை, இந்திய ராணுவத்திடம் தள்ளிவிட்டது. இரண்டு ராணுவமும் இவர்களை தங்கள் பகடையாக்கி போராளிக் குழுக்களுக்குள் மோதலை உருவாக்கி போராட்டத்தின் தன்மையை சீர்குலைத்து எந்த மக்களுக்காக இக் குழுக்கள் ஆயுதம் ஏந்தி களத்தில் நின்றார்களோ அதே மக்களை தாங்கள் உயிர்வாழ்ந்திட தங்கள் அதிகாரமும் ஆதிக்கமும் நிலைத்திட தங்களின் துப்பாக்கிகளை அம்மக்களுக்கு நேரெதிராக திருப்பி நின்று நெற்றிப் பொட்டில் தோட்டாக்களை செலுத்தியதுதென்பது பெரும் சோகம்.
இதனை நாவலாசிரியர் சாத்திரி அவர்கள் 1990 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் ஓர் நாளில் எந்த மண்ணில், எந்த மக்களோடு உறவுமுறை சொல்லி வாழ்ந்து வந்தார்களோ அந்த மக்களில் இருந்து வேரேடு பெயர்த்தெடுத்து ஒரு ராத்திரிக்குள் அகதிகளாக்கப்பட்ட 15000 முஸ்லீம் குடும்பங்கள் சேமித்து வைத்திருந்த அனைத்தும் புலிகளால் வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொள்ளப்பட்டு யாழிலிருந்தும் வவுனியா நகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கொடுமை வெய்யிலாலும் பசியாலும் செத்துப்போன  வயதான ஆயிசாவின் மரணத்தின் வழியாக; வாழ்நாள் நிமிடமெங்கிலும் உயிரும் சதையுமாகி கலந்திருந்த தன் பெட்டையாளின் இறந்த உடலை எங்கோ ஓரிடத்தின் கிடங்கொன்றில் புதைத்த கலாமின் ரத்தம் கலந்த கண்ணீர் வழியாகவும்.. ஒன்றுமறியா குழந்தையின் சுல்தான் பொம்மை வயிற்றினை கிழித்யொழிப்பில் விலை உயர்ந்த பொருட்களைத் தேடிய புலி ஒருவரின் கூர் முனை கத்தியின் பளபளப்பிலும், சொந்தப் பிள்ளைகளாலேயே அகதியாக்கப்பட்ட பெற்றவர்களின் துயரத்தில் இருந்து பதிந்திருப்பார்.
இவற்றின் குறியீடாக 11 வயது இஸ்மாயில் தனக்கான கிடங்கை தானே தோண்டிக் கொண்டு  “அண்ணோய்.. நான் தொழுகை முடித்தேன் வாருங்கள்” என்று சொல்லி முடித்த கையோடு கரிகாலன் பிஸ்டலில் சீறிய தோட்டவொன்று  இஸ்மாயிலின் நெற்றிப் பொட்டில் பாய பொத்தென கிடங்கிற்குள் வீழ்ந்த சின்ன உடலின் கைகால் துள்ளல்.. அய்யோ யோசிக்கவே மனசுக்கு நிறைய தைரியம் தேவைப்படுகிறது.
ஆயுத எழுத்து - YouTube
நாவலின் முக்கிய பகுதியாக நான் பார்ப்பது, உலகம் தழுவிய இப்படிப்பட்ட போராட்டக்குழுக்கள்.. போராளிகள் குழுக்கள்.. இவர்களை உள்ளடக்கிய நாடுகளின் ஆட்சி அதிகாரங்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்பவர்கள் யாரென்று பார்த்தால் பெரும்பாலும் எல்லோருக்கும் எல்லா நாட்டிலும் அவரவர் நாட்டில் இருக்கும் இடைத்தரகர்கள்தான். இந்த இடைத்தரகர்களுக்கு உலகம் முழுமைக்கும் பல்வேறு கடத்தல் கும்பலோடு, அதிகார பூர்வமாகவும், அதிகார பூர்வமற்ற முறையிலுல் தொடர்புகள் உண்டு.  ஆயுதம் தயாரிப்பிற்கான  பெரும் நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளின் சோதனைச்சாலையாக இப்படிப்பட்ட போராளிக் குழுக்களின் வழியாகவும்..
ஆட்சியில் இருப்பவர்களோடு சட்டப்பூர்வ ஒப்பந்தம்.. சட்டத்திற்கு புறம்பான ஒப்பந்தம் வழியாக அந்தந்த நாட்டு இடைத்தரகர்களைக் கொண்டு தன் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
இவர்களே இப்படிப்பட்ட போராளிக் குழுக்கள் தங்களுக்கு ஆயுதம் வாங்கிட பணமற்ற பொழுது போதைப் பொருள் விளைவித்து கொடுக்கவும்.. கடத்தவும் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட பெரும் கார்பரேட் நிறுவனங்கள் இன்று எல்லா நாடுகளிலும் பல தீவிரவாத, போராளிக் குழுக்களை வளர்த்தெடுப்பதே இவர்களுக்கு ஆயுத விற்பனைச் சந்தையை எப்போதும் உயிரோடு வைத்திருக்க உதவுகிறது தமது புதிய கண்டுபிடிப்புகளின் சோதனைக்களமாக மாற்றிக் கொள்கிறது . இதை தன் நாவலுக்குள் ஆப்பிரிக்க நாட்டின் நைஜீரியாவில் நடைபெறும் ரோவன் மற்றும் மெமே என்கிற ஆயுத வியபாரியின் சந்திப்பில் அப்படியே உரையாடலாக்கி இருப்பார் ஆசிரியர். சாபாஷ் சாத்திரி தோழர்.
இப்படி நாவலுக்குள் பல உலக அரசியலை தான் சந்தித்த நபர்களை கதாப்பாத்திரங்களாக மாற்றி, தானும் மாறி புனைவுகளூடாக உண்மைகளைப் பேசி இருப்பார் நாவலாசிரியர்.  ஆயுதங்கள் வாங்கிட உலகம் தழுவிய ஒரு இணைப்பு எப்படி இருந்தது.. புலிகளுக்காக திரட்டப்பட்ட நிதி திரட்டியவரின் வங்கிக் கணக்குள் புகுந்து அவரின் நிலங்களாக.. உலகின் பெரு நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களாக மாறிய விவரங்களையும் பதிவாக்கி இருப்பார்.
எந்த இலக்கிற்காக ஆயுதமேந்திய பெரும் வீரம் செறிந்த போராட்டத்தினை நிகழ்த்தினார்களோ அது சரியானதொரு தத்துவார்த்த அரசியல் புரிதலில்லாமல் தடம்மறிய தருவாயில் எப்படியெல்லாம் சிதறுண்டு போய்விடுகிறது.. அது சொந்த மண்ணுக்குள்  இருந்தும் நம்மை பிடிங்கி எறிகிறது என்பதை உலகில் பல நாடுகளில் வாழ்ந்து சிறறித் தவிக்கும்  தம் மண் சார்ந்த போராளிகளின் பசியில் இருந்தும். சுய சிந்தனையை மயக்கி வைத்திருக்கும் போதைகளில் இருந்தும் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர் சாத்திரி.
தமிழகத்தின் ஏதேனும் ஒரு இலங்கைத் தமிழர்கள் அகதி முகாமிற்குள் சென்று பாருங்கள் அங்கு நிச்சயம் ஆயுதம் தாங்கிய போராளியாக இருந்தவர் ஒருவரிருவர் இருப்பார்.. தன் உயிரை துச்சமென மதித்த கரும்புலிகள் எவரேனும் ஒருவர் இருப்பார் தன் சொந்த அடையாளம் அனைத்தையும் இழந்து.
நம் கண்முன்னே ஈழத்தில் இரண்டு தலைமுறைகளை எல்லாவிதத்திலும் வாரிக் கொடுத்து புதியதொரு பிடிமானம் கைகளுக்குள் கிடைக்காதவென  தவிப்பவரின் ஏக்க மூச்சின் வெப்பம் நம் உணர்ச்சிகளை உரசிக் கொண்டே எந்த நேரத்திலும்.
சொந்தச் சகோதரர்களுக்குள்
வன்மமும்.. வஞ்சமும்.. அதிகார வேட்கையும்..
தோற்றதின் பெருங்கூறில் முக்கியமானது..
கூடவே நிலவரைவியல் எதார்த்தம் மீறிய
அதிதீவிர முன்னெடுப்பு.
கலகம் செய்திருக்கும் “ஆயுத எழுத்து”
பேரன்பு வாழ்த்துக்களும்
அணுக்கமும் சாத்திரி தோழர்.
மீண்டும் திலீபன் பதிப்பகத்திற்கு
வாழ்த்துக்கள்.
கருப்பு அன்பரசன்.
ஆயுத எழுத்து
சாத்திரி
திலீபன் பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *