நதியின் மரணம்
*********************

அமைதியாக சலசலத்தோடும் நதியில்
விடும்குஞ்சு மீன்களோடு இருகரையிலும்
விதைகளையும் தூவினால் நாளாகும்போது
இரண்டுமே வளர்ந்துவிடுகின்றன.

ஒரு கல்லைத்தூக்கி வீசும்போது
கூழாங்கற்களாய்ப் பெருகி நதிக்குள்ளயே
அங்குமிங்குமாய் நகர்ந்து விளையாடி
அழகாகும் அதிசயம் அரங்கேற

ஒரேயொரு நெகிழியை தூரத்திலிருந்து
தூக்கியெறிவதை தொடங்கிவைத்த ஒருவனால்
பின்னொரு நாளில்
நதியே ஸ்தம்பித்துப் போகுமென
அறியாமல் வீசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
வீணாகிப் போனவையெல்லாம்

கட்டடங்களின் உயர வித்தியாசமெதுவுமின்றி
குப்பிகளிலிருந்து உடைத்தொழுகும்
சயனைடு திரவங்களாய்
இரகசியக்குழாய்களின் வழியே
சாக்கடைநீராகி யாருடைய சம்மதத்திற்கும்
நிற்காமல் நதியின் மொத்த ஆழத்திலும்
ஊடுருவி
நச்சாய் பரவிக்கொல்கிறது
நதியை
நதியை நம்பியிருந்த உயிர்களை

மீன்களும் மரங்களும் அவற்றை நட்ட மனிதரும்
மெல்ல மெல்ல மரணிப்பதைக் கண்டு
மண்ணில் இனியும் ஒடிஒளிய வேறெங்கும்
இடமில்லையென்று
வறண்டே மரணிக்கிறது நதியும்

மழை…..

தூறல்களாய் விழும்போதெல்லாம்
கரையோர மரங்களின்
வேருக்கும் தெரியாமல்
கண்ணீர்சிந்தி வறண்டநதியின் கால்தடமும்
அழுகிறது
மழைத்துளியைக் கடன்வாங்கி

நீச்சல் பழகிய நீரோடையில் நீளத்துக்கும்
தோண்டியெடுத்த மணல் குழிகளிலிருந்து
மீளத் தெரியாமல்
அடுத்தத் தலைமுறையும் விழுகிறது தாகத்தில்

அயிரைகள் துள்ளிவிளையாடிய நதியில்
அழுக்குமூட்டைகளும் நெகிழிக்
காகிதங்களுமே

காற்றின் போக்கில்
நகர்ந்து நதியை நாசமாக்க

கரைகளையும் விட்டுவைக்க மனமில்லா
ஆக்கிரமிப்புகள்
வழிமறித்த பாவங்களால் விடாதுகொட்டும்
அடைமழை நாளில் விழும்
துளிகளொவ்வொன்றையும் எதிர்பார்த்து
காத்திருக்கிறது…

ஊரோரம் ஓடிய நதியும்
ஊரைவிட்டு வெளியேற…

–கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு

மழையின் கண்ணீர்
***********************
பனை ஓலையில் போர்த்திய மாட்டுச்சாளையின்
ஒருமுனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய்
அரித்து ருசிக்கும் கரையான்களும்
கூரைக்குள் ரகசியமாய்க் குடித்தனமிருந்து தொல்லைதரும் எலிகளும்
கூரைவேய்ந்தவனின்
நிம்மதியைக் கெடுக்க

துருப்படிந்த கடப்பாறையும்
உழுதவயலிலிருந்த மண்ணை ஒட்டிவந்த கலப்பையும்
அதன் உச்சியில் மாட்டுவாசத்தை பூசிக்கிடக்கும் நுகத்தடியும்
ஒன்றுக்கொன்று அவரவர் கதையை பேசிக்கொள்ள

உழுதே தேய்ந்த உழவனைப் பற்றியெதுவும் பேசாததால்
உடைசல்களில் விழும் மழைத்துளிகள் கரையானையும் கலப்பையையும்
கண்ணீரால் கழுவி சிற்றாறாய் ஓடுகிறது மூத்திர வாய்க்காலில்….

ப(ரு)சித்த மாடு
******************
வறண்ட பூமியும் சுவாசித்திட
பழமாய்ப் பிளந்து கிடக்கும் மண்ணில்
பச்சையங்களை இழந்து நிற்கும்
மரங்களின் நிழல்களில் இளைப்பாறும்
பசுவொன்று சுற்றும் முற்றும் பார்வைகளால்
கொட்டகையில் பசியோடிருக்கும் பச்சிளங்கன்றின்
பசிபோக்கும் உலர்ந்த இலைகளைத் தேடியதில்

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காற்றின் வேகத்தில் வீசும் மண்புழுதியைத்தவிர எதுவுமேயில்லாமல்
முடிச்சினை அவிழ்த்து பங்காளியின் பயிரினில் மேய்ந்ததால்
மொட்டைப்பனையில் கட்டிய பசுவுக்குத் தண்டனை
சமரச உடன்பாட்டில் அபராதம் செலுத்திடும் முதலாளி வரும்வரை….

–கோவை ஆனந்தன்
குமாரபாளையம்
கிணத்துக்கடவு
919003677002

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *