மறுப்பு அல்ல வரலாறு – நேர்காணல்: பழ.அதியமான்

மறுப்பு அல்ல வரலாறு – நேர்காணல்: பழ.அதியமான்

பழ.அதியமான் தமிழில் இயங்கும் ஒரு முக்கியமான ஆய்வாளர். தமிழ்ச் சிந்தனைமரபில் விடுபட்ட கண்ணிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் கடந்த 25 ஆண்டு காலமாக இயங்கி வருபவர். நவீன தமிழகத்தின் வரலாறு தொடர்பாக மூன்று முக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் வேற்றுமை தொடங்கக் காரணமாயிருந்த சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், அதை முன்னின்று நடத்திய பெரியாரின் நண்பர் வரதராஜுலு நாயுடு வாழ்க்கை வரலாறு, சமூக சீர்திருத்தவாதியாகப் பெரியார் வரலாற்றில் கால் பதித்த வைக்கம் போராட்டம் ஆகியன அம்மூன்று நூல்கள்.

பத்தாண்டுக்கும் மேலாக உழைத்து வைக்கம் போராட்டம் குறித்து ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகச் சந்தையில் அதிகம் விற்பனையான நூலாக அது தமிழ்நாட்டின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இவ்வாய்வாளரை நேர்காணல் செய்வது பொருத்தமானது என்று கருதுகிறோம்.

புதிய புத்தகம் பேசுது இதழ் சார்பாக வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக, படைப்பிலக்கியம் செய்பவர்களைப் பற்றி, அவர்களின் எழுத்துகளை வைத்து அவர்களின் இளமைக்காலம், வாழ்சூழல், பூர்வீகம் போன்றவற்றை ஓரளவுக்கு அனுமானித்து விட முடியும். ஆனால், கட்டுரையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எடுத்துக்கொண்ட வடிவத்தை வைத்து இதுபோன்ற அவர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பெறமுடிவதில்லை. ஏறக்குறைய 25 ஆண்டுகால நட்பிலும்கூட, உங்கள் பூர்வீகம், உங்கள் இளமைக்காலம் போன்ற தகவல்களைக் குறித்து அறிந்துகொள்ள முடிவதில்லை. உங்கள் இளமைக்காலங்களைக் குறித்து நம் வாசகர்களுக்கு கொஞ்சம் விரிவாகச் சொன்னால் நல்லது…

அன்றைய தென்னாற்காடு, இன்றைய விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூர் எனது ஊர். அப்பா அரசு ஊழியர். இருந்தும் அரசுப் பள்ளியில் எட்டாவது வரை தமிழ்வழிப் படிப்பு. கிராமப்புறத்தின் திறமையான மாணவர்களைப் பொறுக்கி எடுத்து (Talent Hunting) நகரத்தில் நடவு செய்யும் ஒரு மத்திய அரசுத் திட்டத்தின் மூலம் கடலூர் மஞ்சகுப்பம் புனித வளனார் பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தேன். இத்திட்டத்தில் நகரம் வந்தடைந்த எனக்குத் தெரிந்த இன்னொருவர் அ.ராமசாமி. இப்போது அந்தத் திட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படித் தெரியும், நான்தான் நகரத்துக்கு வந்து விட்டேனே. பக்கத்து ஊரில் இருந்த கிளை நூலகமும், கடலூர் பள்ளிப் படிப்பும் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் இடத்திற்கு என்னை அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
சென்னையில் இளமறிவியல், தமிழ் முதுகலை, தமிழை ஜனநாயகப்படுத்திய வ.ரா. பற்றிய முனைவர் பட்ட ஆராய்ச்சி எனப் படிப்பு தொடர்ந்தது. ஆய்வு முடிந்ததும் முடியாததுமாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழி தமிழ்நாட்டரசில் வேலை கிடைத்தது. இரண்டாண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடுவணரசுப் பணி. கல்விதான் கீழே இருப்பவரை எக்காலத்திலும் மேலுயர்த்தும் ஏணி. ‘எழுத்தறியத் தீரும் இழிதகைமை’ என்பது ஒரு தனிப் பாடலின் முதல் தொடர். இதைப் பரிமேலழகர் கல்வி அதிகாரத்தில்தான் மேற்கோளாகக் காட்டுகிறார். இன்னொரு கொசுறுத் தகவல் முனைவர் பட்டத்தை நண்பர்கள் சிலரைப் போல நானாகப் பயன்படுத்துவதில்லை. அதில் என்ன பெருமை. அது ஒரு அனுபவம் அவ்வளவுதான்.

ஒரு தொகுப்பாசிரியராக ‘சென்னைக்கு வந்தேன்’ தொகுப்பில், நீங்கள் சென்னைக்கு வந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டீர்களே?

சென்னைக்கு வந்தேன் (2008) தொகுப்பு தமிழ்நாட்டின் உள்கிராமங்கள் பலவற்றில் பிறந்து சென்னை நகரத்துக்கு வந்து, பார்த்து, குடியேறிய இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர் சிலரின் அனுபவங்களைக் கொண்ட சிறு நூல். 1958-59 சரஸ்வதி இதழில் பட்டினப் பிரவேசம் என்ற பகுதியில் வெளிவந்தவை இச்சிறுநூலின் பெரும்பாலான கட்டுரைகள்.

சி.சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, க.நா. சுப்ரமண்யம், ந.சிதம்பர சுப்ரமண்யன், ஜெயகாந்தன், எம்.வி. வெங்கட்ராம் முதலான எழுதுவதற்காகச் சென்னை வந்து கஷ்டப்பட்டவர்களின் அனுபவங்களைக் கொண்டது இந்நூல். நானோ 1979இல் கல்விக்காகச் சென்னை வந்தவன். இடையில் ஆறாண்டுக் காலம் புதுவை சென்று (அப்போது தான் உங்களைப் பார்த்தது) பின் சென்னை மீண்டேன். இடையிடையே வெளியே போனாலும் சென்னையோடு பல்லிபோல ஒட்டிக் கொண்டது என் வாழ்வு. இந்தத் தொகுப்பு எண்ணம் கண்ணனுக்கு உதித்தது. பெருமாள் முருகன் தன் அம்மா பற்றி எழுதி, ஆங்கிலத்திலும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் ‘தோன்றாத் துணையும் அவருக்குத் தோன்றியதுதான்.

பழுப்புத் தாளைப் பார்த்தாலே, தமிழ்நாட்டில் பலருக்கு ஆ.இரா.வேங்கடாசலபதியும் நானும் தான் நினைவுக்கு வருவோம் போல. பழையது என்பதால் நான் அதைச் செய்தேன். சென்னைக்கு வந்தேன் நூலைப் பார்த்துவிட்டு ‘நாங்களும் சென்னைக்கு வந்தோம்’ என்று எங்களிடம் கட்டுரை வாங்கி இன்னொரு தொகுப்பைப் போடுங்கள் என்றார் ஒரு நண்பர். தில்லிக்குப் போனோம் என்று அவர் எழுத வேண்டிய காலமும் வந்துவிட்டது. நான்தான் இன்னும் செய்யவில்லை. எதற்கும் அவகாசமெடுத்து செய்யும் என் ஆய்வு இயல்பு படைப்பிலக்கியத்திற்கும் தொற்றிக் கொண்டது. அது பிழை. பழைய எழுத்தாளர்களுக்குச் சென்னை என்பது வாய்ப்பு (அ) இடர் பாட்டின் குறியீடு. அல்லது கெட்ட பிறகு வந்துசேரும் இறுதி இடம். இப்போதைய எழுத்தாளர்களுக்கு அது முட்டி நிமிர்ந்த முன்னேற்றத்தின் அடையாளம். ஒரே சென்னை மனிதர்தோறும் எப்படி காட்சி தருகிறது!

நீங்கள் படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்தாதது ஏன்? பொதுவாகத் தமிழ்த்துறை சார்ந்த ஆய்வாளர்கள் படைப்பிலக்கியம் பக்கமே வருவதில்லையே ஒரு சிலரைத் தவிர? ஏன்? அதற்கு என்ன காரணமாக இருக்கலாம்?

வராதது தான் காரணமாக இருக்க வேண்டும். எனினும் கு. அழகிரிசாமி சிறுகதைகள் மொத்தத் தொகுப்பு முன்னுரையைப் படித்துவிட்டு ஆத்மாநாம் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்த கல்யாணராமன் பேசினார். படைப்பிலக்கியத்தின் பக்கம் வாருங்கள் என்று அவர் அப்போது 20 நிமிட நேரம் வற்புறுத்தியது, நினைவுக்கு வருகிறது. அது நடந்தது 2011இல். 2017இல் முதல் முறையாக சந்தித்த தேனி சீருடையானும் ஆறு வருடத்திற்கு முன் வந்த அந்த முன்னுரையால் மட்டுமே என்னை நினைவு கூர்ந்தார். அந்நூலை வெளியிட்டு பேசிய ச.தமிழ் செல்வனும் முன்னுரை நன்றாக வந்திருப்பதாகவே சொன்னார் (அ) கடிந்துரைக்கவில்லை. என் ஆசிரியர் தி.வ.மெய்கண்டாரும் முதுகலை படிக்கும் போதிலிருந்தே படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிக் கொண்டார். எனினும் ஆய்வில் ஈடுபட்டபிறகு என் கவனம் திரும்பிவிட்டது. இரண்டிலும் மனம் செலுத்தும் ஆற்றல் பஞ்சு போன்றவர்களுக்கு இருக்கலாம், எனக்கில்லை. அதெல்லாம் சரி, நான் தமிழ்த்துறை என்று யார் சொன்னது?

காலச்சுவடு இதழுடன் உங்களுக்கிருக்கும் தொடர்பு குறித்து பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. நீங்களோ, மற்ற உங்கள் நண்பர்களோ விரும்பாத விஷயங்கள் காலச்சுவடில் பிரசுரமானால், நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களின் செல்லிடப்பேசியில் சமஸ்கிருதம் ஒரு மொழி அல்ல என்ற ஒரு வாசகம் உண்டு. ஆனால், காலச்சுவடில் சமஸ்கிருதம் குறித்த கட்டுரைகள் நிறைய பிரசுரமாகியுள்ளன. அவற்றில் சொல்லப்பட்ட தரவுகள் குறித்த சரியான புரிதல்கள் உள்ள நபர்கள் உங்கள் குழுவில் இருக்கிறார்களா? ஒரு கட்டுரை சரியான நம்பகத்தன்மையுள்ள தரவுகளைக் கொண்டுள்ளதா என்பது குறித்து தெரியாமலேயே பிரசுரம் செய்துவிடுவீர்களா? அப்படி அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? மாறாக, கீழடி குறித்த மெத்தனமான குறிப்புகளைத் தாங்கிய கட்டுரைகளையும் பார்க்க முடிந்தது; இவை எல்லாம் உங்கள் அனைவரின் சம்மதத்துடன் தான் நடந்ததா?

பெரும்பாலானவர்கள் அனுமானங்களாலேயே காலச்சுவடை அவதானிக்கிறார்கள். நண்பர்கள் அனைவருக்கும் உடன்பாடானதும் பிடித்தமானதும்தான் அதில் பிரசுரமாகிறது என்பது ஒரு மூட நம்பிக்கை. ஏன் அதன் ஆசிரியருக்குப் பிடிக்காததுதான் அதில் அதிகமாக வருகிறது. அவ்விதழ் ஒரு கருத்துகளின் களம். பல பார்வையுள்ளவர்களும் எழுதும், படிக்கும் ஒரு இதழ். அல்லது அப்படி ஒரு இடத்தின் தேவையை அது பூர்த்தி செய்ய முயல்கிறது. சமீபத்தில் கூட இந்தி குறித்த கண்ணனின் பார்வையை மறுத்து பா. மதிவாணன் கருத்தறிவித்திருந்தார். விரிவாக்கித் தந்திருந்தால் அதை வெளியிடுவதில் அவ்விதழுக்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்காது.

இதில் நீங்கள் பதிலே சொல்லவில்லை என்று தோன்றுகிறது?

உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறேன் என்றே கருதுகிறேன். என் தரப்பு கருத்தைத் தான் நான் சொல்லமுடியும். பத்திரிகையின் கருத்தைப் பத்திரிகையின் அதிகாரபூர்வ ஆசிரியர்கள்தாம் சொல்ல வேண்டும். சமஸ்கிருதம் ஒரு மொழி அல்ல’ என்ற தொடரை Whatsappஇல் D.P.ஆக வைத்துள்ளது பற்றி குறிப்பிட்டுள்ளீர். சமஸ்கிருதம் ஒரு மொழி அல்ல என்ற தொடரின் பொருள் நேரடியானதா என்ன? அது ஒரு மொழி அல்ல ‘அது ஒரு பண்பாடு’ என்பது நான் உணர்த்த விரும்பும் குறிப்புப் பொருள். இன்னொரு மொழியாக மட்டும் அது இருந்தால் அதைக் கற்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஜப்பான், மலையாள, தெலுகு வகுப்புக்கெல்லாம் நான் போயிருக்கிறேன். சம்ஸ்கிருதம் அப்படி அல்ல. நான் அதைக் கற்றால் அதன் பண்பாட்டுக்குள் நுழைய வேண்டியிருக்கும். என் தாய்மொழியால் என்னிடம் காலம்காலமாக வந்து சேர்ந்திருக்கும் மரபார்ந்த இன அடையாளமான என் பண்பாட்டுக்கும் அதற்கும் ஓயாத போராட்டம் என்னுள் நிகழும். மொழி சார்பில்லாத வேறு புறச்சூழலும் என் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும். விளைவாக என் அமைதி கெடும், என் அறிவுச்செல்வம் சிதையும். எனவே இதையெல்லாம் எப்போதும் எனக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கவே அந்தத் தொடரைச் செல்பேசியில் வைத்துள்ளேன்.

மற்றவர்கள் இத்தொடரை எப்படி எப்படியோ புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதையும் நான் அறிவேன். என்னிடம் விவரம் கேட்டவர்கள் பலர். நமக்குப் புரிந்ததை விட வேறு என்ன இருந்துவிட முடியும் என்றும் சிலர் இருக்கலாம். சம்ஸ்கிருதத்தை மொழி அல்ல என்று ஒருவர் சொல்ல முடியுமா? அப்படியும் ஒருவர் சொல்வார் எனில் அவர் அறியாமைக்காரராகவோ (அ) வேறு நோக்கம் கொண்டவராகவோ தான் இருக்க இயலும்.

உங்களது சமீபத்தைய வைக்கம் போராட்டம் நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஒரு புத்தகத்தில், நான் வாசித்து 30 ஆண்டுகள் இருக்கலாம், 1958 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது(மலையாளத்தில்) பெற்ற நூலில், பெரியார், வைக்கம் போராட்டம் போய் வந்தது, ஒர் இன்பச் சுற்றுலா போன்றதொரு அனுபவம்தான் மற்றபடி வேறு பெரிதாக அவர் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யவில்லை என்னும் பதிவு உண்டு (அது பெரியாரைக் குறித்த புத்தகம் அல்ல).

Image result for periyarபெரியார், அந்தச் சந்தர்ப்பத்தில் 141 நாள் வைக்கம் இன்பச் ‘சுற்றுலாவை மேற்கொண்டார். இன்பச் சுற்றுலாவில் அவர் முக்கியமாகப் பார்த்த இடங்கள் அருவிக்குத்துச் சிறையும் திருவனந்தபுரம் சிறையும். அச்சிறைகளில் மாத வாடகை செலுத்தாமல் இரண்டரை மாதம் தாமசித்து இன்புற்றார். சிறைக் காலத்தில் அஞ்சல் உறை தயாரிப்பது போன்ற பசைமிகுந்த இன்பக் காரியங்களில் ஈடுபட்டார். சிறைத் தாமசத்தில் ‘முழங்காலுக்குக் கீழே தொங்குகிற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட மரப்பட்டை, கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய்’ ஆகியவற்றுடன் அவர் சுற்றிக் களித்ததாக உடன் இன்பச் சுற்றுலா மேற்கொண்ட கே.பி. கேசவ மேனன் என்ற கேரளச் சுற்றுலாக்காரர் கூறியுள்ளார். ‘சிங்கிள் ரூம்’ என்ற வசதியும் பெரியாருக்குக் கிடைத்தது.

‘மீதி 67 நாள்களைத்தான் மொத்த திருவாங்கூரைப் பார்க்க பயன் கொண்டார். வைக்கமும் சுற்று வட்டாரத்தையும் தவிர சேர்த்தலை, கொச்சி, நாகர்கோயில், திருவனந்தபுரம் போன்ற பல இடங்களில் அவர் தனது இன்பச் சுற்றுலாவை அமைத்துக் கொண்டார்’.
அய்யாமுத்து, எம்.இ.நாயுடு போன்ற கூட்டாளிகளை மட்டுமல்ல. பெரியார் தன் மனைவி, குடும்பத்தவரையும் கூட இன்பச் சுற்றுலாவில் இணைத்துக் கொண்டார். சுற்றுலா செலவிற்குத் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியிடமிருந்து ரூ.1000த்தையும் கூட வாங்கிக் கொண்டார்.’ அது உண்மையிலேயே இன்பச் சுற்றுலாவாக இருந்தால் அதை இப்படி கிண்டலாக வர்ணிக்க முடியும். உண்மை அதுவல்ல. வைக்கம் போராட்டம் பற்றி என் முழு நீள வரலாற்று நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அதில் விரிவாக இருக்கிறது இந்தக் கேள்விக்கான கிண்டலற்ற பதில்.
நூலில் எழுதியுள்ள அனைத்திற்கும் அன்றைய பத்திரிகை, அரசு ஆவண ஆதாரங்களை குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வதற்கு நினைவு மட்டும்தான் ஆதாரம். அக்கருத்தைச் சொல்லும் புத்தகத்தின் பெயரைச் சொல்லத் தேவையில்லை, எழுதியவர் பெயர் வேண்டாம். எந்தச் சூழ்நிலையில் எழுதியவர் இன்பச்சுற்றுலா என்று குறிப்பிட்டார் என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் சொல்லுவதை நம்புவதற்கு ஒரு கூட்டம் காத்திருக்கிறது. அழகாக மட்டும் நீங்கள் சொன்னால்போதும். அதனால்தான் உங்களால் எந்தத் தயக்கமுமின்றி தைரியமாக இன்பச் சுற்றுலா எனச் சொல்ல முடிகிறது. இங்கே நீங்கள் எனப்படுவது நீங்கள் இல்லை.

Image result for periyarஅப்படியல்ல, அந்த நூல் கேசவ மேனன் எழுதிய ‘கடந்த காலம்’ என்ற நேஷனல் புக் ட்ரஸ்ட் பதிப்பித்த மொழிபெயர்ப்பு புத்தகம், அந்த புத்தகம் இன்னும் என் வீட்டில் இருக்கிறது, அதை ஆதாரமாக காட்டமுடியும். ‘இன்பச்சுற்றுலா’ என்னும் ராஜம் கிருஷ்ணனின் வார்த்தை மொழிபெயர்ப்பு இன்னும் சரியாக எனக்கு ஞாபகத்தில் உள்ளது; நான், பெரியாரின் போராட்டங்களை இல்லை என மறுக்க முன் வரவில்லை என்பதை நீங்கள் அடிப்படையில் புரிந்துகொண்டால் நல்லது. நான் சொல்ல வருவதெல்லாம், பெரியாரின் இந்தப் போராட்டம் குறித்து ஒரு பெரிய விவாதமே நடந்து முடிந்திருக்கிறது. மேலும் ஒரு ஆய்வாளராக, இதுபோன்ற தகவல்களையும் கருத்தில் கொண்டு அதற்கும் உங்கள் பதில் இருக்குமாறு அமைத்திருந்தால், அது இன்னும் முழுமையை நோக்கிய ஒன்றாக இருந்திருக்குமே என்ற நோக்கத்தில்தான் இக்கேள்வியைக் கேட்டேன். மேலும், தமிழ்நாட்டில் கிடைத்த தரவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, உங்களின் அவதானிப்புகளைக் கட்டமைக்கிறீர்கள்; ஆனால், சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைக்கும் பதிவுகளையும் நீங்கள் ஒரு ஆய்வாளராகக் கணக்கில் கொள்ள வேண்டும். பெரியாரின் பங்களிப்பை நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். நீதிமன்ற நடைமுறையில் ஒரு வழக்கு உண்டு அதாவது ‘the place of the cause of action’ என்று. வைக்கம் போராட்டம் பற்றி பெரும்பாலும் இங்கு வெளியான தரவுகளையே மேற்கோள் காட்டுகிறீர்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘கடந்த காலம்’ ராஜம் கிருஷ்ணன் மொழிபெயர்த்த கே.பி.கேசவ மேனனின் சுயசரிதை. நேஷனல் புக் டிரஸ்ட் 1980இல் வெளியிட்டது. வைக்கம் போராட்டம் பற்றிய வரலாற்றை எழுதும் ஒருவர், டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன் வரலாறுகளைப் படிக்காமலா இருந்திருப்பார். இந்த வைக்கம் நூலில் இந்த மொழிபெயர்ப்பு நூலைப் பற்றி மூன்று பக்க அளவில் (பக். 463 – 465) குறித்திருக்கிறேன். ராஜம் கிருஷ்ணன் மொழிபெயர்த்த அந்த நூலில் ‘இன்பச் சுற்றுலா’ என்ற தொடரோ, இந்தப் பொருள் தொனிக்கும் வேறு தொடரோ பெரியார் தொடர்பில் காணப்படவில்லை. இப்போது நீங்கள் கேள்வி எழுப்பிய பிறகும் ஒரு முறை மீண்டும் தேடிப் பார்த்தேன். இருக்குமிடம் தெரியவில்லை.

வைக்கம் தொடர்பில் ‘நடந்ததாக’த் தாங்கள் கூறும் விவாதத்திற்குக் காரணம் போராட்டம் பற்றிய அடிப்படையான தரவுகள் தமிழில் இல்லாதது தான். சில பேர் அதைக் கோயில் நுழைவுப் போராட்டம் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தேவையை நிறைவு செய்தலே இவ்விவாதத்திற்கான பதிலாகவும், அடிப்படையாகவும் அமையுமென நான் கருதினேன். அதனால் தான் ‘News Paper Clippings’ என்ற நிலைமை நேர்ந்தாலும் பரவாயில்லை என்று ‘objective’ ஆக முதல் இயலை விரிவாக அமைத்திருந்தேன். இங்கே எழுந்த சர்ச்சைகளுக்குள் நுழைந்து அதற்குப் பதில், பதிலாக எழுதினால் இது மறுப்பு நூலாக மாறிவிட்டிருக்கும். நான் வரலாற்று நூலையே எழுத விரும்பினேன்.

கேள்வியின் மூன்றாம் பகுதியில் ‘பெரும்பாலும்’ தமிழ்நாட்டில் கிடைத்த தரவுகளை வைத்துக் கொண்டு அவதானிப்புகளைக் கட்டமைக்கிறீர்கள்’ என்று சொல்கிறீர்கள். திருவாங்கூர் அரசின் ஆவணங்கள், சுதேசமித்திரன் இதழ், தி இந்து இதழ், மலையாள இதழ்களில் வெளிவந்த செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்து தந்த த.அமலாவின் நூல், கேரள ஆவணக்காப்பக வெளியீடுகள், டி.கே.ரவீந்திரன், மேரி எலிசபெத் கிங் போன்றோரின் வைக்கம் நூல்கள் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தியுள்ளேன். அவற்றையெல்லாம் சுதேசமித்திரனை தவிர தமிழ்நாட்டுத் தரவுகள் என்ற வகையில் எப்படி அடக்க முடியும் என்று தெரியவில்லை.
The place of the cause of action’ என்ற நீதிமன்ற நடைமுறையைச் சுட்டி, சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கும் பதிவுகளைக் கணக்கில் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறீர்கள். நல்ல அறிவுரை. இதை உங்களிடமிருந்து பெறுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி இந்நூலை எழுதியிருக்கிறேன். நூலின் முன்னுரையிலேயே இதைத் தெரிவித்துமிருக்கிறேன். முன்னுரையைப் படித்திருந்தால் உங்கள் பாராட்டை நான் பெற்றிருப்பேன். வாய்ப்பு தவறிவிட்டது.
சம்பவம் நடந்த கேரளத்திற்கு 2011 முதல் 2017 முடிய ஏழாண்டில் 12 முறை சென்று வந்ததைத் தேதியுடன் கொடுத்துள்ளேன். வைக்கம் சத்தியாகிரக நினைவு நூலகம், திருவனந்தபுரம் வரலாற்று ஆராய்ச்சிக் குழு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆவணக் காப்பகங்கள், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் என கள ஆய்விற்காக அலைந்துள்ளேன். கேரள நகரங்களின் பல சாலைகள் பழக்கமாகிவிட்டன.

Image result for book writeமேரி எலிசபெத் கிங்கின் ஆங்கில நூலுக்கு உள்ளுர் உதவி செய்த, மலையாளத் தரவுகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து உதவிய வரலாற்றுப் பேராசிரியரை, கோழிக்கோட்டிற்கு அருகில் உள்ள ஊரில் ஒரு நீதிமன்றத்தில் கொதிக்கும் வெயிலில் தேடிப் போய்ப் பார்த்தது ஒரு சம்பவம். இவ்வாறு கேரளத்தில், தரவுகள் சேகரித்த விவரங்களையெல்லாம் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தும், சம்பவஇடத்து தரவுகளைப் பயன்படுத்தவில்லை என்று சொல்வது வருத்தமளிக்கிறது. புத்தகத்தை இன்னமும் வாசிக்காத வாசகர் என்ன நினைப்பார். தொலைக்காட்சி விவாதங்கள் போல நமது நேர்காணல்களும் சரிந்து விட வேண்டுமா?
எனினும் இத்தகைய கேள்வி எழுப்பியது வாசக நோக்கில் நல்லதுதான். இல்லையெனில் இந்த ஆதார விவரங்களையெல்லாம் ‘சுய தம்பட்டம்’ என்று ‘தன்னை வியத்தல்’ என்ற குற்றம் நோக்கி நேர்காணலில் சொல்லாமல் தவிர்த்திருப்பேன். எனினும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ‘தன்னை வியத்தலும் தகும் புலவோர்க்கே’ என்று அனுமதியளிக்கிறது நமது நன்னூல்.
வைக்கம் தொடர்பான எதையும் நம்புவதற்கு முன் வைக்கம் போராட்டம் என்ற இந்த நூலையும் படித்து விடுங்கள். ‘உண்மை கிளம்புவதற்குள் வதந்தி ஊரைச் சுற்றி முடித்துவிடுகிறது’ என்ற பொருளில் ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.

உங்களுடைய வைக்கம் போராட்டம் நூலில், போராளி அய்யன்காளி இடம்பெறவில்லை என்னும் குறிப்பும் உண்டு; ஆனால் உண்மையில் அய்யன் காளி கோவில்நுழைவுப் போராட்டக் கமிட்டியில் இருந்துள்ளார், போராட்டக் கமிட்டியினரோடு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் உள்ளது; ஆதாரம் இன்றி எதையும் சொல்வதற்கான தைரியம் என்னிடம் இல்லை. கேரளாவில் நிறைய கோவில் நுழைவுப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றுள் அய்யன்காளியின் பங்கு மிகப் பெரியது. இது தொடர்பாக, கேரளா வந்திருந்த காந்தி அவர்கள், வெங்கானூருக்கே சென்று அய்யன்காளியைச் சந்தித்திருக்கிறார். கோவில்நுழைவுப் போராட்டக் கமிட்டியில் பிறருக்கு நிகராக அவரும் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. மேலும், அய்யன்காளியின், தெருக்களுள் நுழையும் போராட்டங்களே, கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருந்தது. அது சரியான காலகட்டம். இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், அய்யன்காளி குழுவில் இடம்பெற்றிருந்தார், தோன்றாத்துணை என்று முடிக்கிறீர்கள். இது அய்யன்காளியின் பங்கேற்பைக் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடாதா?

Image result for ayyankaliகோவில்நுழைவுப் போராட்டக் கமிட்டியில் இருந்துள்ளார். அவர்களோடு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் உள்ளது’ என்று சொல்கிறீர்கள். ஆதாரம் இன்றி எதையும் சொல்வதற்கான தைரியம் என்னிடம் இல்லை என்று வேறு உறுதி அளிக்கிறீர்கள். நல்லது. அந்தத் தைரியம் என்னிடம் இருக்கிறது என்பது உங்கள் உட்கிடை என்பதும் புரிகிறது. உங்கள் முடிவுக்கு வாழ்த்துகள்.
எனக்குத் தெரிந்து, எனக்குக் கிடைத்த அரசு ஆவணங்கள், வைக்கம் பற்றிய வரலாற்று நூல்கள், டி.கே.ரவீந்திரன், மேரி எலிசபெத் கிங், திருவனந்தபுரம் ஆவணக் காப்பக வைக்கம் வெளியீடுகள் என எதிலும் அய்யன்காளியின் பெயர் இடம்பெறவில்லை. எனவே வைக்கம் போராட்டத்தில் போராளி அய்யன்காளிக்கு நேரடிப் பங்கு இல்லை என்றே இன்னமும் கருதுகிறேன். போராட்டக்காரர்கள் அய்யன்காளியோடு படம் எடுத்துக் கொண்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படத்தையும் நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நீங்கள் சரியான ஆதாரத்தைக் கொடுத்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் சேர்த்துக் கொள்வேன். பத்தாண்டு கால உழைப்பில் கிடைக்காத ஒன்று கிடைத்தால் மகிழ்ச்சிதானே. அய்யன்காளி பற்றி நிர்மால்யா மிகச் சமீபத்தில் பெருநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘விரிவான ஆய்வுக் குறிப்புகளுடன், சரி பார்க்கப்பட்ட தகவல்களுடன்’ வெளிவந்துள்ளதாகப் பிரபல எழுத்தாளர் ஒருவரால் பாராட்டப்பட்டுள்ள அந்த நூலிலும் நீங்கள் குறிப்பிடும் தகவல்கள் இடம்பெறவில்லை. தவிர, டி.எச்.பி. செந்தாரசேரி எழுதிய அய்யன்காளி பற்றிய சிறுநூலிலும் மேற்சொல்லப்படும் தகவல் இல்லை. எனவே அத்தகவல் கிடைத்தால் நிச்சயம் மகிழ வேண்டும்.

Image result for ayyankaliநான் எழுதியிருப்பது வைக்கம் போராட்டம் பற்றிய நூல். 1925இல் காந்தி வைக்கம் போராட்டத் தொடர்பில் வந்தபோது அய்யன்காளியைச் சந்தித்ததாகத் தகவல் இல்லை. 1937இல் வந்தபோது சந்தித்ததாகவே தெரிகிறது. அய்யன்காளி வைக்கம் போராட்டத்தில் பங்கேற்காததைக் குறையாகவும் நான் கருதவில்லை. சத்தியாகிரகம் என்பது கேரளத்திற்கு வெளியே இருந்து வந்த புது முறை. அதைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ அவருக்குப் பிரச்சனை இருந்திருக்கலாம். அய்யன்காளி பற்றி இரண்டு இடங்களில் என் நூலில் சிறப்பாகக் குறித்திருக்கிறேன். ஒன்று நூலின் முடிவுரையில். அவர் வைக்கத்தில் பங்கேற்காததற்கான என் யூகத்தை அதில் குறித்திருக்கிறேன்.‘சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ளாத இன்னொரு தாழ்த்தப்பட்டோர் தலைவரான அய்யன்காளி (1863 – 1941) ஈழவ எதிர்ப்பாளரோ, வைதிக ஆதரவாளரோ, கோழையோ, அறிவிலியோ அல்ல. புறக்கணிப்பையும் மீறலையும் உள்ளுர் வழிகளாக உள்ளுர்க்காரர்களான குருவும் அய்யன்காளியும் முறையே கருதினார்களோ என்னவோ’ (ப.515, வைக்கம் போராட்டம்).
கேரளத் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தில் அய்யன்காளியின் பங்கை ஒருவரும் மறுக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எனவே தான் அவரைப் பற்றிய ஒரு சிறுவிவரக் குறிப்பையும் பின்னிணைப்பில் சேர்த்துள்ளேன். அதிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு.
‘நேரடி எதிர்ப்பு நடவடிக்கையில் தனி நபராகப் பங்கேற்றவர் (அய்யன்காளி) இரண்டு வெள்ளை மாடுகளை வாங்கி, வெண்கல மணிகளைக் கழுத்தில் கட்டி வண்டியில் பூட்டினார். உயர்சாதியினர் அணியும் வகையில் மார்பை மூடிய உடை அணிந்து கீழானவர்கள் அணிய அனுமதியில்லாத தலைப்பாகையை அணிந்து திருவனந்தபுரத்தின் வடக்கு கிராமமான வெங்கானூரிலிருந்து விழிஞ்ஞம் வரை அந்த வண்டியை ஓட்டிச் சென்றார். இந்த இரு குடியிருப்புகளையும் இணைக்கும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட சாலையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரது இச்செயல் திகைப்பையும் கிலியையும் ஏற்படுத்தியது. யாராவது தடுத்தால் வாளுக்கு இரையாக நேரும் என்று எச்சரித்திருந்தார். பின்னாளில் வைக்கம் போராட்டம் போன்றதொரு மக்கள் எழுச்சிக்கு முன்னோட்டமாக அறத்துணையாக வாழ்ந்த வாழ்க்கை அய்யன்காளியுடையது எனினும் இவர் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. தோன்றாத் துணை’ (ப.536, வைக்கம் போராட்டம்). இது அவரைக் குறைத்து மதிப்பிடுவதாகவா இருக்கிறது. பிரதியை உள்ளிருந்து பார்ப்பவருக்கு நிச்சயம் அப்படித் தோன்றாது. வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

திராவிடர்கள் என்னும் சொல்லாடல் முதலில் பறையர்களைக் குறித்ததான சொல்லாக இருந்திருக்கிறது, பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின்போது, அந்தச் சொல் அவர்களிடமிருந்து நழுவிப் போய்விட்டது என்னும் ஒரு சில பதிவுகளைப் பார்க்க முடிகிறது; குறிப்பாக எம்.சி. ராஜா, அயோத்தி தாசர் மற்றும் ரெட்டமலை சீனிவாசன் இவர்களுடைய பதிவுகளில். அப்படி அந்தச் சொல்லாடல் அவர்கள் கையை விட்டு நழுவிச் சென்றது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Image result for vaikom struggleதெரியவில்லை. ஆனால் ஹரிஜன் என்ற பெயரை காந்தி சூட்டியபோது அதைக் குறித்து வரதராஜுலு நாயுடு கேள்வி எழுப்பினார். ஆதி இந்து என்றே பலகாலம் பயன்படுத்தினார். குறிப்பாக (31 ஆகஸ்ட் 1934) தேதிய இதழ். நான் ஒன்றும் திராவிட இயக்க அறிஞர் அல்லன். ஏதோ நேரத்தை வீணாக்காமல் இருக்க முயல்கிறேன் என்பதைத் தவிர வேறில்லை.

Non Fiction எழுத்துகளில், Narrative மற்றும் Creative Non-Fiction என்னும் வகைமைகள் உண்டு. இந்த இரண்டு வகைமைகளிலும் நீங்கள் முயற்சித்துப் பார்த்தது உண்டா?
பெரியாரின் நண்பர்: வரதராஜுலு நாயுடு வரலாறு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், வைக்கம் போராட்டம் போன்றவை எடுத்துரைப்பு அல்புனைவு வகையில் நான் முயன்றவை. நவீனத் தமிழ் ஆளுமைகள், கிடைத்தவரை லாபம் போன்ற கட்டுரை நூல்களைப் புனைவுத் தன்மை கலந்தவை எனலாம். இத்தன்மையின் சாயல் படிந்த கட்டுரைகள் மிகுந்த மனவெழுச்சியைத் தருவன. இறப்பில் உயிர்க்கும் பண்பாடு என்ற மரணம் பற்றிய கட்டுரை ஒரு சான்று. அப்படைப்பு எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்திருந்தது. சின்ன குத்தூசி அறக்கட்டளையின் பரிசு அதற்குக் கிடைத்தது. அதற்கான விழா, சென்னைப் பாவாணர் நூலக வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு அசாதாரண சூழலில் நிகழ்ந்தது. அது ஒரு அடக்குமுறைக் கதை. ‘காசி டைரி’ பற்றிய என் இன்னொரு இவ்வகைக் கட்டுரைக்குக் கணையாழியின் பரிசு கிடைத்தது. அதுவும் ரூ.10,000தான் என்று நினைக்கிறேன். என் விமர்சனக் கட்டுரைகள் எனக்கும் தொடர்புடையோருக்கும் மிகுந்த வருத்தத்தையே அளிப்பன. வாசகர்களுக்கன்றி மற்றவர்களுக்கு ‘களியாதே’ என்ற தன்மை கொண்டன அவை.

சொற்களிலும் தொடர்களிலும் கவனம் செலுத்தி புனையப்படும் என் கட்டுரைகளைப் படித்துவிட்டு வ.சுப. எழுத்துபோல இருக்கிறது, தனஞ்செய் கீர் எழுத்துபோல இருக்கிறது என்று ரெங்கையா முருகனும், இன்னொருவரும் சில சமயம் சொல்வர். பலரும் பல சமயமும் இப்படிச் சொல்ல வேண்டுமென்று கூடுதலாக உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் பலரும் மெளன குருக்களாகவே வாசித்து முடிக்கின்றனர். ஆனால் நான் தலைமைக் கணக்கர் தாயுமானவர் இல்லையே, மெளனத்திலும் உபதேசம் உணர.

உங்களது அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் என்னும் நூலுக்கான உருவாக்கத்தில், ஆதாரங்களைத் தேடுவதிலுள்ள சிரமங்களும் சிரத்தைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்தத் தேடலின் சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்லுங்களேன்.

Image result for vaikom struggleசுவாரஸ்யங்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த அஞ்சறைப் பெட்டியில் போட்டுவிட முடிகிற சில நேர்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று பின் வருவது. கு. அழகிரிசாமியின் மொத்தச் சிறுகதைகளைத் தொகுக்கும் வேளையில், ‘செவிசாய்க்க ஒருவன்’ என்ற தேன்மழைப் பதிப்பகம் வெளியிட்ட அவரது தொகுப்பின் முதல் பதிப்பைத் தேடிக் கொண்டிருந்தேன். முடங்கி விட்ட அப்பதிப்பகத்தின் உரிமையாளரை, ஆலந்தூரின் தெருக்களில் தேடிக் கண்டுபிடித்து விசாரித்தேன். கு.அ.வின் இரு மகன்களிடம் கேட்டிருப்பேன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. புதுக்கோட்டை ஞானாலயா, இராஜபாளையம் காந்தி கலைமன்றம், சென்னை மறைமலையடிகள், ரோஜா முத்தையா, நடராஜர் கல்விக்கழகம் ஆகியவை அப்போது நான் தேடியலைந்த நூலகங்களுள் சில. ஒரு குறிப்பிட்ட நாளில் பாவண்ணன் போன்ற பலரிடமும் கேட்டு அயர்ந்து போய் மாலையில் திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைக்கு யதேச்சையாய்ப் போனேன். விரித்து வைத்திருந்த மேல் பரப்பிலேயே ‘செவி சாய்க்க ஒருவன்’ என்னைப் பார்த்து கண்ணடித்தான். இதை எப்படிப் புரிந்து கொள்வது. தற்செயல் நிகழ்வுதான் எனினும் மனம் கொப்பளித்து மகிழ்ந்தது. பொதுவாக வாசிப்பின் விஸ்தீரணம் அதிகரிக்கும்போது, அவற்றில் சில விஷயங்கள் விடுபட்டுப் போய்விட்டன, இன்னும் கொஞ்சம் தொட்டுச் சொல்லவேண்டிய விஷயங்களைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணுகின்றபோதுதான், அ-புனைவு மனதில் வடிவம் கொள்ளுகின்றன; இது தவிர, இயல்பாகவே ஒரு விஷயத்தின் மீதுள்ள ஆர்வத்தில்
அ- புனைவை நோக்கிச் செல்லுவதற்கான காரணங்கள் உண்டா? அப்படிப்பட்ட அனுபவங்களைப் பகிருங்களேன்.

Image result for periyarஉலகில் எதுவும் திட்டம் போட்டு நடப்பதாக தெரியவில்லை. திருடுவது, கொள்ளையடிப்பது, ஏமாற்றுவது போன்றவை வேண்டுமானால் திட்டமிட்டுச் செய்யப்படலாம். அல் புனைவிற்கான இயல்பே என்னிடம் உறைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
1980களில் நடுப்பகுதி. தொலைக்காட்சிப் பெட்டி வாங்க நேர்ந்த சமயம். அப்போதெல்லாம் கருப்பு வெள்ளை, வண்ணத் தொலைக்காட்சி என்று இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அதைப் பற்றி வீட்டில் பேச்சு வந்தது. கருப்பு வெள்ளையை ஆங்கிலத்தில் White and Black என்று சொன்னேன். அதை Black and White என்று அப்பா திருத்தினார். அப்படிச் சொன்னால் தவறா என்றேன். தவறில்லை ஆனால் வழக்கில்லை (usage) என்று விளக்கினார். விவிலியத்தில் ‘தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று’ (1:3) என்று வருகிறதல்லவா. அப்படியானால் முதலில் இருள் (அதாவது கருப்பு) தானே நிகழ்ந்தது. ஆக இருளும் ஒளியும் என்பது தானே கால நிரல் என்றார். நாங்கள் கிறித்துவர்கள் அல்ல என்பதையும் இங்குச் சொல்லி வைக்கிறேன். அவர் சொன்னது சரியோ தவறோ ஆனால் இப்படி வார்க்கும்போதே ஏதோ ஒரு குறிப்பிட்ட அச்சில் ஊற்றிவிட்டார். உங்களைப் போல இளகிய மனமும் இயல்பும் கொண்டவர்களே படைப்பிலக்கியத்துக்குப் பொருத்தமானவர்கள். தேவி பாரதியின் பிறகொரு இரவு சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா? அதையெல்லாம் படித்துவிட்டு என்னைப் போல் ஒருவர் புனைவெழுத்தை எழுதத் தைரியம் கொள்ள முடியுமா?

Image result for keeladai

கீழடி ஆய்வு முடிவுகள், திராவிட இயக்கங்களுக்கு ஒரு புத்தெழுச்சியைத் தருவதாக உள்ளன. இது குறித்த உங்களுடைய நிலைப்பாடு என்ன?
கீழடி பற்றி நான் இன்னும் படிக்கவில்லை. வெறும் செய்தித்தாள் செய்திகளை மட்டுமே படித்திருக்கிறேன். அதை மட்டும் வைத்துப் பேச நான் தைரியசாலி அல்ல.

திராவிடம் என்னும் சொல்லைக் கேட்டாலே ஒரு தீண்டத்தகாத வார்த்தையைப் பார்ப்பது போலப் பார்க்கிற ஒரு பாசிச வல்லாதிக்க மனோபாவம் ஒரு சில அறிவுஜீவிகள் (?) மத்தியில் காணப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆம் முகநூலில்தான் அதை வெளிப்படையாகப் பார்க்கிறேன். காலம் காலமாக அனுபவித்து வந்த வசதியை, வாய்ப்பை, அதிகாரத்தை இழக்கும்போது இயற்கையாக ஏற்படும் இழப்பின் வலிதான் பாசிசமாக மாறுகிறது. முன்பெல்லாம் அதைத் தமிழ்நாட்டினர் பலர் அதைச் சமாளித்துக் கொண்டனர் அல்லது அதை வெளிக்காட்டவில்லை. இப்போது வெளிப்படுத்துகின்றனர். எனினும், வடநாட்டு அர்னாப் கோஸ்சுவாமியைப் போல ஊளையிடுகிறவர்கள் தமிழ்நாட்டில் இல்லையே. வட மாநிலத்தை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டினர் தேவலாம். இது சமூக இயங்கியலில் ஒரு நிலை என்பதைத் தமிழ்நாட்டில் பலர் உணர்ந்துள்ளனர். மற்றவரும் உணர வேண்டுமோ என்னவோ. ஒரு தீவிரவாதம் உருவாவது இன்னொரு தீவிரவாதத்தால்தான் என்று நோம் சோம்ஸ்கி சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு மாலைவேளையில் பேசியது சம்பந்தத்தோடு நினைவுக்கு வந்து போகிறது.

பாரதியார் கவிதைகளின் தொகுப்பு, உண்மையில் உங்களுடைய வாழ்நாள் சாதனை என்றே எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக, ஒரு கவிஞரின் ஒட்டுமொத்தக் கவிதைகளையும் ஒரு இலக்கிய ஆர்வலர் வாசித்திருக்க முடியுமா என்பதே கேள்விக்குறிதான். அப்படியிருக்க, பாரதியாரின் அனைத்துக் கவிதைகளையும், ஏறக்குறைய அதன் சொல் நயம் மாறாமல், அழகு மாறாமல் தமிழ் இலக்கிய உலகில் பதிப்பித்து, அதற்கு ஒரு மிகப்பெரிய ஆய்வுக்கட்டுரைபோல பல்வேறு அபூர்வமான தகவல்களையும் திரட்டி முன்னுரை வழங்கியிருப்பது ஒரு எளிய வாசகனை நிச்சயம் பிரமிக்க வைக்கக் கூடியதாக இருக்கிறது. இப்படி ஒரு வேலைத் திட்டம் உடனடியாக ஏற்பட்ட ஒன்றாக இருந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. இதைச் செய்யவேண்டும் என்ற உத்வேகம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

Image result for tamil languageதமிழின் பழைய பாடல்களைப் பலரும் படிக்கச் சிரமப்படுவதைப் படிக்கும்இடத்திலும் வேலைசெய்யும் இடத்திலும் சந்தித்திருக்கிறேன். பாரதி கவிதைக்கும் அப்படி நேரும் என்று ஓர்மையுடன் நான் நினைத்ததில்லை. ஆனால் அப்படி ஒரு நாள் நேர்ந்தபோது துணுக்குற்றேன். நான் காலையில் எழுந்ததும் தமிழ்ப் பாடல் படிப்பது பல்லாண்டு வழக்கம் (அந்த அனுபவங்களை எழுத இன்னும் வாய்ப்பு நேரவில்லை). அப்படி நான் அன்று படித்துக் கொண்டிருந்த பாரதி பாடலை, பக்கத்தில் வந்து நின்ற மகளை வாசிக்கச் சொன்னேன். அவள் திணறினாள். அப்போது அவள் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். பின்னர் இந்தத் தலைமுறையின் பல வயதுள்ள படித்தவர்களிடம் இதைச் சோதித்து பார்த்து, அது அவளது குறை அல்ல, ஒரு தலைமுறையின் நிலை என்றறிந்தேன். இப்பிரச்சனையை முன்னுணர்ந்த வையாபுரிப் பிள்ளை 49 தமிழ் இலக்கியங்களைச் சந்தி பிரித்து வைத்தார். அவை இன்னும் கையெழுத்து பிரதியாகக் கல்கத்தா தேசிய நூலகத்தில் பூதம் காத்துக் கிடக்கின்றன. நான் பாரதி பாடல்களை மட்டும் சந்தி பிரித்து பதிப்பித்தேன். தினமும் ஒரு பாடல் என்ற முறையில் படிக்கவும் திருத்தவும் என இப்பணி நடந்தது. என் மகள் இளங்கலை மூன்றாமாண்டை முடிக்கும் தறுவாயில் வாயில் நுரை தள்ள இந்தப் பெரு வேலை நிறைவுற்றது.

தெளிவுறவே அறிந்திடுதல்’ என்ற செயல்பாட்டினை நோக்கிச் செல்லும்போதுதான் பாரதி பாடல் வாசிப்பு பிரச்சனையாகிறது. மொன்னைத்தனமாகப் படிக்கும்போது ஒரு சிக்கலும் இல்லை. பாரதியின் சொற்கள், வாக்கிய அமைப்பு, செய்யுள் புணர்ச்சி முறைகள் அனைத்தும் மேற்பார்வைக்கு எளிமை போன்று தோற்றமளிப்பன. உண்மையில் அவை அப்படி இல்லை. சில சொற்களை மட்டும் சான்றுக்குச் சொல்கிறேன். ‘வாலைக் குமரியடி கண்ணம்மா, மருவ காதல் கொண்டேன்’ என்ற தொடர் உங்களுக்குத் தெரியும். வாலை என்றால் என்ன? என்று எத்தனை பேர் அறிவர்.

மின்னும் நின்தன் வடிவில் – பணிகள் மேவி நிற்கும் அழகை என் உரைப்பனே டீ- திருவே (லஷ்மி பிரார்த்தனை) என்ற பாடல் வரியில் வரும் ‘பணிகள்’ என்ற சொல்லுக்கு ஆபரணங்கள் எனப் பொருள் தெரியவில்லையானால் அந்த வரிகள் வாசகனுக்குத் தரும் பயன் என்ன? ‘பணிக் கொடியோன் -இளையவர் சகுனியோடும்’ (பாஞ்சாலி சபதம்) என்று ஒரு வரி வரும். இதில் இடம்பெறும் பணிக்குப் பாம்பு என்று பொருள். பாம்புக் கொடியை உடையோன் என்பது அர்த்தம். இப்படித் தற்காலத்தில் வழக்கில் இல்லாத பல அருஞ்சொற்கள் பாரதியிடம் உள்ளன.
இங்கே குறிப்பிட்ட சொற்களுக்கு அகராதி பொருள் கூறிவிடும். ஆனால் பிரபல அகராதிகளில் பொருள் இடம்பெறாத ‘வாலிகன், கதலி, பதசதுரம்’ போன்ற சொற்களின் பொருத்தமான பொருளை அறிய என்ன செய்வது? தெளிவுறவே அறிந்திட வேண்டுமென நினைப்பவருக்கு இதற்கெல்லாம் பொருள் தந்துள்ள என் பாரதி பாடல் முழுத் தொகுப்பு பயன்படலாம். இளைஞர்களுக்கானது இந்தப் பதிப்பு என்று நான் குறிப்பிட்டுள்ளது ஒரு மரியாதைக்காக. பழைய தமிழில் சொல்வதானால் இடக்கரடக்கல்.

Image result for tamil languageஉங்களின் ஆய்வு முறைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
மூல ஆவணங்களை வைத்து எழுதுவதையே என் ஆய்வு முறையாகக் கொண்டிருக்கிறேன். இது ஆ.இரா.வேங்கடாசலபதியின் தொடர்பு ஏற்பட்ட பிறகு மாற்ற முடியாததாகவும் ஆகிவிட்டது. அதற்கு முன்னால் பெரிதும் நூல் ஆதாரங்களைக் கருதும் ஆய்வுச் சூழலில் இருந்தேன்.
செய்யும் ஆய்விற்கேற்ப, சமகால பத்திரிகைத் தரவுகள், ஆவணக்காப்பக ஆவணத் தரவுகள், தொடர்புடையோரின் தனிப் பதிவுகள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆய்வை அமைக்கிறேன். இரு தரப்பு மற்றும் நடுநிலையான சமகால இதழ்களைத் தேடுவேன், பயன்படுத்துவேன். சான்றுக்கு, 1953இல் குலக்கல்வி திட்டம் எதிர்ப்புப் போராட்டம் நிகழ்ந்தபோது பிரதமராக இருந்த நேரு காங்கிரஸின் எந்தத் தரப்பை ஆதரித்தார் என்பதை அறிய விரும்புகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது சமகால தினமணி, தி இந்து, விடுதலை முதலிய பல தரப்பு இதழ்களையும் பார்ப்பேன். இராஜாஜிக்கோ, வரதராஜுலுவுக்கோ நேரு எழுதியிருக்க வாய்ப்புள்ள கடிதங்களைத் தேடி அலைவேன். நேரு எழுத்துகளின் தொகுதிகளில் தேடுவேன். இதைக் குறித்து சம காலத்தவர், சம காலத்தில் எழுதியவற்றை அவர்கள் கருத்தாகக் கருதுவேன். தவிர தொடர்புடையோர் தம் வாழ்க்கை வரலாற்றில் எழுதியவற்றையும் மற்றவர் வாழ்க்கை வரலாற்றில் எழுதியவற்றையும் சற்று மாற்றுக் குறைந்த கருத்துகளாகக் கருதுவேன். பிற்கால வாழ்க்கை அவர்களது கருத்தைச் மாற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா. இயன்றவரை மூல ஆவணங்களைத் தேடுவதால்தான் என் ஆய்வுகள் நீண்ட கால அவகாசத்தைக் கோரி நிற்கின்றன.

இதுவரை நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்

Image result for brahminஅடிப்படையான, வேறெவரும் செய்திராத, சமூக வரலாற்றில் இடைவெளிகளாய்த் தங்கிவிட்டவை பற்றிய ஆய்வுகளையே நான் செய்ய முயல்கிறேன். இன்றைய நிலையைப் புரிந்து கொள்வதற்கு நேற்றைய சமூகத்தைப் புரிந்து கொள்வது முன் தேவை அல்லவா? நேற்று உண்ட உணவு தானே இன்றைய உற்சாகத்திற்கும் வயிற்று வலிக்கும் காரணமாகிறது. அதனால் நேற்றைய தீர்வைத் தெரிந்து கொள்வது இன்றைய பிரச்சனையை எதிர் கொள்வதற்கு முக்கியமில்லையா? தவிர, காயங்களைக் கிளறி வலி ஏற்படுத்த அல்ல.
பிராமணர் – பிராமணரல்லாதார் என்ற பிளவே தமிழ்நாட்டில் கடந்த அறுபதாண்டுக் கால ஆட்சியைத் தீர்மானித்துள்ளது. அந்தப் பிளவு நேர்வதற்குக் காரணமாக அமைந்தது சேரன்மாதேவி குருகுலப் போராட்டம். அப்போராட்டம் பற்றிய முழுவிவர வரலாறு அறிவுலகில் இல்லாதிருந்தது. எனவே அது என் ஆய்வுகளுள் ஒன்றானது.பிராமணரின் ஆதிக்கத்திலிருந்த காங்கிரஸில், பிற்படுத்தப்பட்டோர் எழுச்சி பெறுவதுடன் நிகழ்ந்த பிராமணர் நீக்கம் ஒரு வரலாற்று நுண் நிகழ்வு. அந்த அசைவியக்கம் 1925இல் தொடங்கி 1953வரை ஏறக்குறைய முப்பது வருடங்களில் நிகழ்ந்தது. அந்த ஆதிக்க எதிர்ப்பு வரதராஜுலு நாயுடுவால் தொடங்கி, பெரியாரால் காமராசரால் இறுதியும் பெற்றது என்று நெகிழ்வாகச் சொல்லலாம். சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் தொடக்கம் பெற்ற அது, குலக் கல்வித் திட்ட எதிர்ப்பால் இராஜாஜி முதலமைச்சர் பதவி நீங்குவது வரையில் சிறிது சிறிதாகத் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. பெரியார், வ.உ.சி., திரு.வி.க. போன்ற தலைவர்கள் காங்கிரசின் பயணத்தில் மூச்சு முட்டி வழியில் நின்றனர்.

1953 இல் காமராசர் முதலமைச்சரானதுதான் அந்நிகழ்வின் வெற்றிப் புள்ளி. இராஜாஜிக்குப் பிறகு ஜெயலலிதாவைத் தவிர்த்து எந்தப் பிராமணராலும் முதலமைச்சராக முடியவில்லை. இத்தகைய பெரும் அசைவியக்கம் தமிழகத்தின் தேசிய இயக்கத்தில் உள் நீரோட்டமாக நிகழ்ந்து முடிந்தது. இதற்குப் பின்னணியாகப் பலர் இருந்தனர். அவர்களுள் முக்கியமான ஒருவர் வரதராஜுலு நாயுடு. அவரே சேரன்மாதேவி போராட்டத்திலும் குலக் கல்வித் திட்ட எதிர்ப்பிலும் முன்னணியில் இருந்த காங்கிரசுக்காரர். காங்கிரஸ், சொந்தக் கட்சி, இந்து மகாசபை, காங்கிரசு என அவர் அலைபாய்ந்ததை எல்லாம் இச்செயல்பாட்டின் விளைவுகளாகவும் எதிர் விளைவுகளாகவும்தான் பார்க்க வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொள்ளப் பயன்படும், அவரைப் பற்றிய வரலாறு இல்லாதிருந்தது. அதை அவர்கள் குடும்பத்தாரின் தகவல் உதவியுடன் எழுதி முடித்தேன். அந்நூலின் அட்டைப் படம் எனக்குப் பிடித்தவற்றுள் ஒன்று.

Image result for brahminபெரியார் சமூக சீர்திருத்தவாதியாக வரலாற்றில் நினைக்கப்படுவதற்குக் கால் கோளிட்டது வைக்கம் போராட்டம். காங்கிரசின் போராட்டமாக இருந்தாலும் அது வரலாற்றில் பெரியாருடன் இணைந்து நினைக்கப்படுகிறது. அப்போராட்டத்தை யொட்டி பெரியாரும் காந்தியும் எதிர் எதிராக நிறுத்தப்படுகின்றனர். இந்தப் போராட்டம் பற்றி முழுவிவர நூல் இல்லாததால், பெரியாரின் பங்களிப்பு குறைவாகக் கருதப்படுகிறது, காந்தி- பெரியார் எதிர்நிலையாகக் கருதப்படுவதும் நிகழ்கிறது. முழு விவரத்தைத் தந்துவிட்டால் அவரவர் அபிப்பிராயம் உருவாக்கிக் கொள்ள அவ்விவரம் பயன்படும். இந்தப் பணி பல்லாண்டு உழைப்பால் இப்போது நிறைவேறியுள்ளது. இம்மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் வரலாற்றை நேரடியாகச் சொல்லவில்லையானாலும் அதன் எழுச்சி, தாக்கம் குறித்த விவரங்களின் விளைவாக அமைகின்றன. எனவே தானோ என்னவோ, ஆ.இரா.வேங்கடாசலபதி திராவிட இயக்கத்தின் முந்நூல்கள் என இவற்றைத் தடம் நேர்காணலில் குறிப்பிட்டார்.சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் (334), பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு (480), வைக்கம் போராட்டம்(646) ஆகிய மூன்று நூல்களும் சேர்ந்து ஏறக்குறைய 1500 பக்கங்களாகின்றன. நூலாகியுள்ளவை இவ்வளவு பக்கங்களெனில் மூன்று மடங்கு பக்கங்களை எழுதியிருப்பேன் (அதைவிட ஆறு மடங்கு தரவுகளைச் சேகரித்திருப்பேன்). நான்கு தடவைக்கு மேல் கையால் அவற்றை எழுதியிருப்பேன். ஐந்து தடவைக்குமேல் மெய்ப்பு பார்த்திருப்பேன்.

தட்டச்சானதை ஆறு தடவைக்குமேல் படித்திருப்பேன். நூல் எழுதுதல் எனக்கு முழுநேர வேலையில்லை என்பதையும் கருதுங்கள். என் நூல்கள் என் சனி, ஞாயிறுகள். என் நூல்கள் என் ஓய்வைப் பிரதி செய்தவை. என் நூல்கள் என் மகளுடன், மனைவியுடன் செலவழித்திருக்க வேண்டிய நேரத்தின் மாற்றுகள். ஓய்வு நாளை ஓய்விற்காகவே செலவழிக்க வேண்டும் என்பது பழைய ஏற்பாடு. மனுசன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுசனுக்காக உண்டாக்கப்பட்டது என்கிறது புதிய ஏற்பாடு (மாற்கு 2:27). இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. அந்த நீதிநெறி விளக்கப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’.

உங்கள்ஆய்வுகளின் பயன்களைக் குறித்துச் சொல்லுங்கள்

என் ஆய்வுகள் தனி மனித, தனிச் சம்பவ விவரிப்புகளாக முதல் பார்வையில் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவை அப்படிப்பட்டவை மட்டுமல்ல. தி.ஜ.ர.வின் வரலாறு, ஒரு சாதாரண எழுத்தாளனின் ஏழ்மையின் கதையா? நவீனத் தமிழ்ச் சமூகத்தில் அவ்வளவாகப் படிக்காத ஒரு பிராமணர் எழுத்துத் திறனால் கல்வி சிறந்த தமிழ்நாட்டில் ஒரு இடத்தை உழைப்பால் பெற்ற கதை அல்லவா? நாட்டில் சிலரிடம் முடங்கிவிட்ட தமிழைப் பலரிடமும் கொண்டு சேர்த்த ஜனநாயகப்படுத்திய போராட்டம் அல்லவா வ.ரா.வின் வாழ்க்கை. இந்துஸ்தானத்து அரசியல் போக்கை 1930களுக்கு முன் தம் சிந்தனையால் எழுதியவர்கள் என்று இராஜாஜியையும் ஜார்ஜ் ஜோசப்பையும் சுட்டுகிறார் வ.ரா. அந்த அறிவாளி ஜோசப் சென்னையில் தொழில் நடத்த முடியாமல் மதுரைக்குப் போய், அங்கும் சொந்த காங்கிரசுக்காரர்களால் தோற்கடிக்கப்பட்ட அவலநாயகன் அல்லவா? காங்கிரசில் பிராமணரல்லாதார் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறிய சூழலில், அதில் தாக்குப்பிடித்து வளர்ந்ததன் அடையாளம் அல்லவா வரதராஜுலுவின் வரலாறு.

பிற்படுத்தப்பட்டவர் சம உரிமை பெறுவதில் கடந்த முதல்படி சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் எனில் தாழ்த்தப்பட்டவர் தம் எழுச்சியில் பதித்த பாதபடி அல்லவா வைக்கம் போராட்டம். எனவே இந்த ஆய்வுகள் தனிமனித வாழ்க்கை சரிதங்களாகவோ தனிச் சம்பவ விவரிப்புகளாகவோ சுருங்கி விடுபவை அல்ல. இவை தமிழ் அறிவுலக வரலாற்றின் குறிப்புகள். ஒரு திறமையான ஆய்வாளன், நான் எழுதியுள்ளவற்றையும், எம்.எஸ்.எஸ்.பாண்டியன், எஸ்.வி.ஆர், ஆ.இரா.வேங்கடாசலபதி, ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியவற்றையும் கொண்டு நவீனத் தமிழ்ச்சமூகத்தின் அறிவு வரலாற்றைச் சிறப்பாக எழுதிவிட முடியும் என்றே நினைக்கிறேன்.

Image result for research
அடுத்த ஆய்வு என்ன…
இதைச் சொல்வதில் கூடத் தயக்கம் காட்ட வேண்டியுள்ளது. வை.கோவிந்தன் என்ற தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமையைப் பற்றி நான் எழுதியபோது, நான் எழுத நினைத்திருந்தேன் என்று ஒரு சக்திமிக்க எழுத்தாளரும், நாங்கள் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று ஒரு இடதுசாரி பதிப்பாளரும் வருத்தம் தெரிவித்தனர். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் பற்றிய நூல் வெளிவந்திருந்த சமயத்தில் அந்தக் குருகுலத்தை ஒரு பெரிய காவல் அதிகாரியான நண்பருடன் போய்ப் பார்த்தோம். தானே இந்நூலை எழுதியிருக்க வேண்டும் என்று அவர் நேரிலேயே புகாரிட்டார். அவை இருக்கட்டும்.

நான் முன்பே சொல்லியிருந்தவாறு, சொ.முருகப்பா, ஜி.சுப்பிரமணிய ஐயர், ராய.சொக்கலிங்கன் போன்றோரது பெரு வாழ்வை எழுத வேண்டும். தமிழ்நாடு நிலத் தொடர்பில் இழந்ததையும் இருத்தியதையும் பற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட நாட்டின் செல்வாக்கு கட்டுமானத்துறை தொடங்கிப் பரவி வருவதைக் குறித்து கவலை கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் வானொலி நுழைந்து நிலை பெற்ற வரலாற்றைத் தமிழ்ப் படைப்பாளர் வழி சொல்ல விருப்பம் கொண்டிருக்கிறேன். எது முதலில் வெளிச்சம் காணும் என்பதை என்னாலும் சொல்ல இயலாது.
நீங்கள் விரும்பிய வண்ணம் விரிவான நேர்காணலாக இது அமையாது போய்விட்டது. எனினும் போதுமான விவரங்கள் உள்ளன. தொடர்ச்சியாக இல்லையென்றாலும் புத்தகம் பேசுது இதழைக் கவனித்து வருகிறேன். வேறெவருக்கும் வாய்க்காத அளவுக்கு கூர்மையான கேள்விகளைப் பெறும் நற்பேறு எனக்குக் கிட்டியிருக்கிறது. தொடர்புடைய தோழர்களுக்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்.

சந்திப்பு: ப்ரதிபா ஜெயசந்திரன்

படங்கள்: கவாஸ்கர்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *