கவிதை: *இப்போது இல்லையென்றால் எப்போது ? சலோ…* – துரை வசந்தராசன்**************************************************
இப்போது இல்லையென்றால் எப்போது ? சலோ…
*************************************************
இனி
கடனுக்கே விளையும் கழனிகள்.
வரப்புச் செருப்புகளைத் தலைசுமந்து
வயிறுகாய கையேந்தும் வயல்கள்.
புல்லுருவிகளே நெல்லுருவும்.
நிலம்வழி நுழைந்து
மனிதர்களைக்
குத்தகைக்கு எடுக்கும் குபேரம்.
பங்காளிச்சண்டைகளை
பாரதமே வடிவமைக்கும்.
வெள்ளை அடிமைத்தனம்
மீண்டும் தலையெடுக்கும்.
சொந்தவீட்டிலேயே
வாடகைக்குக் குடியிருந்து வரியும் கட்டவைக்கும்.
சொத்தடிமைகளுக்குக்
கொத்தடிமையாகப் போகும்
குலத்தொழில்.
எல்லா முட்டைகளையும் எசமானர்களின் விருப்பப்படியே இடக் கட்டளையிடப்படும்.
அளவுகள் கூடினாலோ குறைந்தாலோ
கோழிகள் கழுத்தறுபடும்.
பத்திரப்பதிவு இல்லாமலேயே பட்டா கைமாறும்.
வீட்டுவாடகையில் காலம்தள்ளுவதுபோல்
நாட்டு வாடகையில் காலந்தள்ளுவார்கள்
நம் எசமானர்கள்.
நம் வியர்வைகளில் ரத்தம் தயாரித்து
நம் ரத்தத்தில் சதைபெருக்கும்
சிந்தனைக் களவாடல்கள்
நம் தலைமீதமர்ந்து நமக்கே ஆணையிடும்.
கணவாய்க் கால்களுக்குச்
செருப்பாகத் தேய்ந்தாலும்
தெருவில்தான் நிற்கிறது தேசம்.
சமையல்காரனுக்கே ருசிபார்க்க அனுமதி கிடைக்காத கூடத்தில்
பந்தியிலிருப்பவர்கள்தான் பரிதாபமானவர்கள்.
பரிதாபமானவர்களே….
வயல்கள் குனிந்ததால் நிமிர்ந்த தேசத்தின்
பாதையில்
காய்ந்துகிடக்கின்றன வயல்கள்.
என்ன செய்யப்போகிறீர்கள் ?
பால்கொடுத்த மார்பகங்களில்
புற்றுவைக்கத் துடிக்கிறது புதிய எசமானம்.
என்ன செய்யப்போகிறீர்கள் ?
கை கொடுங்கள்!
வேடிக்கை பார்க்கும்
உங்களைத்தான்…
“இப்போது
இல்லையென்றால்
வேறு எப்போது ?”
*************************************************
துரை வசந்தராசன்
**************************************************