சிறுகதை தொடர் 3: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்கேராமில்க்

நடராஜன் சார் என்றால் வகுப்பிலுள்ள எல்லோருக்கும் ஒருவித பயம் இ ருக்கத்தான் செய்தது. அவரது உருவமோ, கம்பீரக்குரலோ, கண்டிப்போ ஏதோ ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அன்றைய தினம் காலை முதல் வகுப்பே அவருடையதுதான். முதல் இரு பெஞ்ச் மாணவர்களும் அன்றைய குறுந்தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்க, அடுத்த இரு பெஞ்ச் மாணவர்கள் நேற்றைய தினம் நடராஜன் சார் வழங்கிய வீட்டுப்பாடத்தை எழுதிக் கொண்டிருக்க, கடைசி இரு பெஞ்ச் மாணவர்கள் மட்டும் நிகழ்காலத்தில் லயித்துக் கொண்டிருந்தனர்.

பாலா பேன்ஸி ஸ்டோரில் வாங்கிய பொல்லாதவன் படத்தின் பாட்டு புத்தகத்தை விரித்து வைத்தவாறு ‘எங்கேயும் எப்போதும்’ ரீமேக் பாடலை அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தனர் கடைசி பெஞ்சிலிருந்த சக்தி குழுவினர். பாடலின் இடையே வரும் தமிழ் ராப் வரிகளை மூச்சு விடாமல் பாடிக் கொண்டிருந்தான் அருண். அவன் பாடுவதைக் கேட்டபடியே சீனிச்சாமியும் சக்தியும் டெஸ்க்கில் தாளமிட்டுக் கொண்டிருக்க மற்றவர்களெல்லாம் தத்தம் வேலைகளில் மூழ்கியிருந்தனர். அவர்கள் செயல் யாருக்கும் இடையூறாகவுமில்லை, இடைஞ்சல் செய்யும் நோக்கமும் அவர்களிடமில்லை.

முதல் பாடலைத் தொடர்ந்து அடுத்த பாடலைப் பாட சக்தியின் முறை வந்தது. வசீகரா பாட்டு புத்தகத்தை திறந்து ‘ஆஹா என்பார்கள்’ பாடலை யாரையோ மனதில் கொண்டு பாடுவதைப் போல் கண்களை மூடி மணப்பாடமாக பாடிக் கொண்டிருந்தவன், ‘மூச்சு விடும் ரோஜாப்பூ பார்த்ததில்லை யாரும்தான் அவளை வந்து பார்த்தாலே அந்தக் குறை தீரும்தான்’ என்ற வரிகளைப் பாடியவாறே கண்களைத் திறப்பதற்கும், அகல்யா வகுப்பினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. அதுவரை யாரையும் சட்டை செய்யாமல் பாடிக் கொண்டிருந்த சக்தி, பாடுவதை நிறுத்தினான். அது அகல்யாவைப் பார்த்ததால் மட்டுமல்ல, அவளிடமிருந்த சிறு மாறுதல் எல்லோரையுமே ஒரு நொடி அவளைக் காணச் செய்தது.

அகல்யா அன்றையதினம் சீரூடையில்லாமல் புத்தாடை அணிந்திருந்தாள். அது ஒரு ஆரஞ்ச் நிறச் சுடிதார். அரைக்கையும் முட்டிக்கு கீழ் வரை நீண்டிருந்த டாப்ஸும் அதே நிற ஷாலும், அளவுக்கதிகமாய் அன்று அவள் அணிந்திருந்த புன்னகையும் அளவாய் சூடியிருந்த மல்லிகையும் சந்தேகமில்லாமல் எல்லோருக்கும் உணர்த்தியது அன்று அவள் பிறந்தநாள் என்று.

அகல்யாவைப் பார்த்த கண்களின் கட்டளையின் பேரில் சக்தி அனிச்சையாகப் பாடினான் ‘அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான், நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்’ என பாடி முடித்து திரும்புகையில் அருணும் சீனியும் சக்தியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் சக்தி பெரிதாக சட்டை செய்யவேயில்லை . அவன் கண்ட காட்சியின் விளைவால் மனமார மகிழ்ந்திருந்தான். சமானியர்களது சந்தோசம் அதிகரத்திலிருப்பவர்களுக்கு எப்போதுமே பிடிப்பதில்லை போலும். இந்தக் கடைசி பெஞ்சின் குதூகலத்தை தடை செய்யும் நோக்கில் அதிகாரம் தலை தூக்கியது. அதாவது அந்த வகுப்பின் தலைவன் எனும் அதிகாரத்திலிருந்த குமரேசன் எழுந்து போர்டின் அருகில் சென்று நின்றான்.“அதான! ஊருக்குள்ள எவன் சந்தோசமா இருந்தாலும் இவன் மூக்கு வேர்த்திடுமே! பெரிய வால்டர் வெற்றி வேல் மாதிரி பேசுறவுங்க பேர் எழுதுறேன்னு வந்து நின்னுடுவான்” என்றான் சீனிச்சாமி.

“அவன் பேர் எழுதினா நீ பயந்துடுவியா மாப்ள?” என்று ஏற்றிவிட்டான் சக்தி.

“அவன் கெடக்கான் கபடிக்கா! இவனுக்குலாம் நான் பயப்படமாட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் போர்டில் சீனிச்சாமி பெயர் எழுதப்பட்டது.

“லேய்! நான் பேசலடா குமரேசா… சத்திகிட்ட லப்பர்தான்டா கேட்டேன்” என்ற சீனியின் வாதத்தைக் காதில் வாங்காதவனாய் நின்றான் குமரேசன்.

“ஓவராப் பண்ணுதான்டா இன்னிக்கு காளியம்மன் கோயில்ல இவனுக்கு முட்ட வச்சுற வேண்டிதான்” என சீனி முணுமுணுத்துக் கொண்டிருக்கையில் ஒவ்வொருவராக மூக்கை மூட ஆரம்பித்தனர். கடைசியாக கடைசி பெஞ்சிற்கும் வாடை வரவும் மூக்கைப் பொத்திக் கொண்டு, “போட்டாய்ங்கடா பாம்… லேய் லீடரு, பேசுறவய்ங்கள அப்புறமா கண்டுபிடி.. மொதல்ல இங்க வந்து எவன் பாம் போட்டான்னு கண்டுபிடி! க்ளாஸ்ல ஒரே தீவிரவாதியா இருக்குறாய்ங்க…” எனக் கமெண்ட் அடிக்கவும் மொத்த வகுப்பே சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

கடுப்பான குமரேசனோ சீனியின் பெயரோடு மிக மிக ஆட்டம் என்றெழுத, அதையும் பார்த்து அனைவரும் மேலும் சிரித்தனர். பொறுமையிழந்த குமரேசனோ, விறுவிறுவென ஸ்டாப் ரூம் நோக்கி நடந்தான் நடந்ததைக் கூறி நடராஜன் சாரை அழைத்து வரும் நோக்கில். “போகுற வேகத்துல கண்டு பிடிச்சு கூட்பிட்டு வந்திடுவான் போலடா சீனி” என்றான் சக்தி.

சீனியோ எழுந்து நின்று “யார் தலை சுடுதோ அவன்தான் போட்டிருப்பான்” என்றான். யாராவது சோதிக்கும் நோக்கில் தலையை தொட்டுவிட்டால் அன்றைய தினம் முழுதும் அவர்கள் கதி அதோகதிதான். ஆனால் சீனி கேட்டு முடிக்கவும் குமரேசனுடன் வகுப்பினுள் நுழைந்த தமிழய்யாவோ கலைந்திருந்த தலையைக் கோதும் நோக்கில் தலையை தடவியவாறே வருவதைக் கண்டதும், மீண்டும் வகுப்பு முழுதும் சிரிப்பலை நிரம்பியது.

வகுப்பினுள் நுழைந்த தமிழய்யாவிற்கு சிரித்தவாறே வணக்கம் வைக்க எழுந்த நேரத்தில் “ஐயா! லீடர் கரெக்டா கண்டுபிடிச்சு கூட்டியாந்துட்டான்” எனக் கமெண்ட் அடித்தான் சீனி. மீண்டும் சிரித்தவாறே அனைவரும் அமர்ந்தனர்.

“என்ன அகல்யா! புது ட்ரெஸ்? இன்னிக்கு பிறந்தநாளா? அப்போ சரியான செய்தியோடதான் வந்திருக்கேன்? பிறந்தநாள் கொண்டாடிடலாமா?” எனப் புதிர் போட்டார். அகல்யாவோ எதுவும் புரியாமல், “என்ன செய்தி?” என்பது போல் முழித்தாள்.

“நீ எனக்கு தெரியாம ஒரு வேலை பாத்திருக்க..! அது என்னனு நீ சொல்றியா? இல்ல நானே சொல்லட்டுமா? என்றார் சூசகமாக.

“நான் எதும் தப்பு செய்யல ஐயா” என்றாள் அதே முழியோடு. இன்னும் கொஞ்சம்விட்டால் பிறந்தநாள் அதுவுமாக அழுதேவிடுவாள் போலிருந்தது.

“சரி, நீ சொல்ல மாட்ட போல! அப்போ நானே சொல்லிடறேன்” எனக் கூறியவாறே, தன் கையோடு எடுத்து வந்த சிறுவர் மலர் வார இதழை விரித்து வாசிக்கத் தொடங்கினார்.“நிலவே…!

வானின் திலகம் நீ
முகிலின் தோழி நீ
புவியின் காதலி நீ
பெண்களின் ஏக்கம் நீ
ஆண்களின் தேடல் நீ
இரவின் தேவதை நீ
பகலின் தேடல் நீ
இருளில் நம்பிக்கை நீ
வெளிச்சத்தின் பொறாமை நீ
தனிமையிலும் துணிச்சல் நீ
கற்பின் இலக்கணம் நீ
களங்கமில்லாத அழகு நீ
அழகின் உவமை நீ
உவமைக்கு உருவம் நீ

பரந்து விரிந்த கரும்கானகத்தே
அலைந்து திரியும் வெண்பாவையே – உனை
உறைந்து காணுமென்
கண்கள் வியக்க
விண்ணைத் தாண்டி வருவாயா?

அகல்யா
XI – முதல் பிரிவு
நா.ம.மே.நி.பள்ளி,
ஏழாயிரம் பண்ணை.” என வாசித்து முடிக்கையில் வகுப்பு மொத்தமும் கரவொலியால் நிறைந்தது. அகல்யாவோ குழம்பிய முகத்தோடு கஷ்டப்பட்டுப் புன்னகைத்தாள். தான் எழுதிய கவிதை, வார இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது பெருமையாகதான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவளது கவிதையின் மதிப்பே அப்போது தான் அவளுக்கே தெரிந்தது. ஆனால் அதை அவள் அனுப்பாமல் எப்படி பிரசுரமானது என்பது தான் அவள் குழப்பம்.

“நீ கவிதையெல்லாம் எழுதுவன்னு இப்போதான் தெரியும். ரொம்ப நல்லா இருந்தது. வாழ்த்துகள். சரி பிறந்த நாளுக்கு சாக்லேட் எதுவும் இல்லையா?” என்றார் தமிழய்யா.

“எடுத்துட்டு வந்திருக்கேன் ஐயா” என்றபடி ப்ளாஸ்டிக் டப்பாவிலிருந்த கேராமில்க் சாக்லேட்டுகளை நீட்டியவள், தொடர்ந்து வகுப்பிலிருந்த அனைவருக்கும் வழங்கினாள். ஒவ்வொருவரும் டப்பாவினுள் கையைவிட்டு சாக்லேட்டை எடுத்தவாறே அகல்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறினர்.

சக்திக்கோ அகல்யா கடைசி பெஞ்சை நெருங்க நெருங்க வியர்த்துக் கொட்டியது. இதயம் படபடத்தது, அதன் சத்தம் ஸ்டெத்தஸ்கோப் இல்லாமலே அவன் காது வரை ஒலித்தது. வயிற்றில் ஏதோ உருள்வதைப் போலிருந்தது. மிகமுக்கியமாக அந்த அசௌகரியங்களெல்லாம் அவனுக்குப் பிடித்திருந்தது. இறுதியாக கடைசி பெஞ்சிற்கும் வந்து சாக்லேட்டை நீட்டியவளிடம், சீனிச்சாமி, “வெறும் சாக்லேட் தானா? பூக்கேக் இல்லையா” என்றவாறு சாக்லேட்டைக் கையில் அள்ளவும், அவன் தலையில் அருண் ஓங்கி அடித்துவிட்டு, தன் பங்கிற்கு அகல்யாவை வாழ்த்தினான்.

அவர்களைக் கடந்து புன்னகையுடன் கடைசியாக சக்தியிடம் சாக்லேட் டப்பாவை நீட்டினாள். சக்தியோ கஷ்டப்பட்டு தன் படபடப்பை தனக்குள் மறைத்துக் கொண்டு தன் வாழ்த்தைக் கூறியவாறு டப்பாவினுள் கை விட்டான். அவன் கையில் சிக்கியது ஊதா நிற கேராமில்க் சாக்லேட். கேராமில்க் என்றால் இப்போதிருக்கும் 50,100ரூ சாக்லேட் அல்ல. 90களில் சாக்லேட்டுகளுக்கான அதிகபட்ச விலையான 50 பைசாவில் அநேகரால் விரும்பி சுவைக்கப்பட்ட சாக்லேட். ஊதா மற்றும் தங்க நிறம் என இரண்டு நிறங்களில் விற்கப்பட்டன. சாப்பிட்டபின் அந்த தங்க நிற சாக்லேட் கவரை மோதிம் போல் மடித்து விரலில் அணிந்து கொள்வது வாடிக்கை. ஆனால் அன்று சக்தியிடம் சிக்கியது ஊதா நிறம்.

அகல்யா அங்கிருந்து நகன்றபின், புத்துணர்ச்சியுடன் சிர்த்தவாறே சாக்லேட்டைப் பிரித்து வாயில் போட்டான். அந்த சாக்லேட் கவரை மடித்து யாருக்கும் தெரியாமல் தன் பர்ஸில் வைத்துக் கொண்டான். சக்தியின் புத்துணர்ச்சிக்கு அகல்யாவிடமிருந்து பெற்ற சாக்லேட் மட்டும் காரணமல்ல. சாக்லேட்டை கையிலெடுக்கும் நொடிப் பொழுதில் தன் கையிலிருந்த கசங்கிய தாளை டப்பாவினுள் போட்டிருந்தான்.தன் இடத்தில் சென்றமர்ந்து டப்பாவைக் கவனித்த அகல்யா, அதிலிருந்த கசங்கிய தாளை எடுத்து பிரித்தாள். அவள் முகத்தில் அவளனுமதியில்லாமலே ஒரு கணம் புன்னகை மலர்ந்தது. அந்தக் கசங்கிய தாள், அகல்யாவின் தாள்தான். தமிழய்யா வார இதழில் வந்திருப்பதாக வாசித்த கவிதையை என்றோ ஒருநாள் கிருக்கிப் பின் அதைக் கசக்கி கீழே எறிந்தது நியாபகம் வந்தது. அவளது கவிதைக்குக் கீழே “கசங்கியும் கசக்காத கவிதையின் கவிஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றெழுதியிருந்தது. சுற்றுமுற்றுப் பார்த்தாள். தன் கவிதைக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தது யாராக இருக்கும் என்ற ஆவலில். அதுவும் இது போன்றதொரு பிறந்தநாள் பரிசை அவள் எதிர்பார்திருக்கவுமில்லை.

தமிழய்யாவோ, தொடர்ந்து அகல்யாவின் கவிதை பற்றியும், இது போன்ற திறமைகளை வெளிக்கொணர வேண்டியும் பேசிக் கொண்டிருந்தார். அவை எதுவுமே அகல்யாவின் காதில் விழவில்லை, சிந்தனை இன்னும் அந்த நல்விரும்பியைத் தான் தேடிக் கொண்டிருந்தது.

“இன்னும் இது மாதிரி யாருக்காவது ஏதாவது திறமை இருந்தா தயங்காமல் என் கிட்ட வந்து சொல்லலாம். கண்டிப்பா என்னால் முடிந்த உதவியை செய்வேன். யாருக்காது இப்படி ஏதாவது திறமை இருக்கா?” என்றார் தமிழய்யா

சற்றும் தாமதிக்காமல் “ஐயா, நம்ம லீடர் யார் பாம் போட்டாலும் கரெக்டா கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துடுறான். அவன் திறமைய எப்புடியாது வெளிக் கொண்டு வரணும்யா!” என்றான் சீனி.

மொத்த வகுப்பும் கலகலவென சிரிக்க, குமரேசன் முகமோ கடுகடுவென இருக்க, அதற்குள் மணியும் அடித்தது. இரண்டாவது பீரியட் PET பீரியட் என்பதால் எல்லோரும் கிளம்பி மைதானத்திற்கு சென்றனர்.

PET பீரியட் முடிந்து வகுப்பினுள் நுழைந்த சக்தியின் டெஸ்க்கில் “நன்றி” என்று எழுதப்பட்ட காகிதத்தோடு ஒரு கட்டி ரஸ்னாவும் வைக்கப்பட்டிருந்தது. கட்டி ரஸ்னாவைப் பார்த்ததும் சக்தியின் கண்கள் அகல்யாவை நோக்கின. அகல்யாவின் கண்களோ ஏற்கனவே சக்தியைத்தான் நோக்கிக் கொண்டிருந்தன
.
.
.
.
.
.
.
.
“கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”

 

-துளிரும்
ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

தொடரும்தொடர் 1: 

புதிய சிறுகதை தொடர்: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்தொடர் 2: 

சிறுகதை தொடர் 2: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்