ச.முகிலன் -கரையேறும் கவிதைகள் | S.Mugilan - Karaiyerum Kavithaikal

தயாரிப்புப் பணியில் இருக்கும் போதே இந்நூலை இரண்டு முறை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. இருந்த போதும் இன்று மூன்றாம் முறை கவிஞர் ச.முகிலனின் கவிதைகளை முழுவதுமாக படிக்க நேர்ந்தது. நிறைவான ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்த திருப்தி தந்தது.

சிந்தையில் உதிக்கும் நல் எண்ணங்களை எல்லாம் கவிதை சித்திரமாகவே வடித்துள்ளார். கற்பனை சிற்பங்களாகவே தொடுத்துள்ளார்.

எளிதில் ஈர்க்கும் கவிதைகள் ஏராளமாகவே தென்படுகிறது இக்கவிதை தொகுப்பில்.

“மனிதம் இன்னும்
உயிர்ப்புடன் தான் இருக்கிறது
சிட்டுக்குருவியின் ஒலியை இன்னுங்கூட மறவாமல்
அழைப்பு மணியில் வைத்திருக்கிறோமே.

” கனியின் ருசியை
சிலாகிப்பவர் அறிவதில்லை
வேரின் தியாகத்தை.

நானும் சக பயணியாக அவரோடு பயணிக்கும் உறவென்றாலும் கூட படைப்பாளனாக அவரைப் பார்க்கையில் சமூக அக்கறை கொண்ட கவிஞராகவே ச.முகிலன் மிளிர்கிறார்.

“கைம்பெண்ணிற்கு
காட்டப்படும் கரிசனம்
பலியாட்டிற்கு நீட்டப்படும்
குலைக்கு ஒப்பானது.

இயல்பான வரிகளால் நம்மை ஈர்த்துப் போகிறார். ஆறுதலை அழகாக சுருக்கிச் சொல்கிறார்.

“பட்ட காலிலேயே
படுவது கூட ஆறுதல் தான்
மற்றொரு கால் தப்பிப்பதால்.

முகவரி தொலைத்து அலையும் தென்றலுக்கு கவிஞர் ச.முகிலன் கவிதையின் மூலம் வழிகாட்டுகிறார். தன் கற்பனையைக் காட்டி அரவணைக்கிறார்.

மழையில் நனையா ஒருவன் குடையோடு உரையாடும் வரிகள் வாசிப்பவர்களை நனையச் செய்கிறது கவிமழையில்.

பிழைகள் தான் கற்றலுக்கு காரணமாகிறது என்பதை உணர்த்துகிறது கவிஞர்
ச.முகிலனின் வரிகள்.

“வரிவரியாய் எழுதுவதில்
பிழை நீ செய்தாலும்
திருத்திட நான் முயல்வதில்லை முயன்று தவறிக் கற்றலே
முயக்கத்தில் அழகு என்பதால்.

மலராத தாமரையை மலர்ந்ததாய் சொல்லி மனிதியின் அழகை
கவியால் மணக்க வைக்கிறார்.

“ஊர் குளத்தில் தாமரை
மலர்ந்து இருப்பதாக பேச்சு
வந்து பார்த்தால்
இளஞ்சிவப்பு ஆடையோடு நீ அங்கே குளித்துக் கொண்டிருக்கிறாய்.

பெருமையென எண்ணும்
ஆணவப்படுகொலையை, மனிதமின்றி திரியும் மானுட மிருகங்களை, கவிதைத் தீ வைத்து கொளுத்துகிறார் கவிஞர்.

சொந்த ஊருக்கும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும், அன்றாடம் பாடுபடும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் தன் வரிகள் வழியே ஆறுதல் சொல்கிறார். நகல்களை நன்றாக வளர்க்க
அறிவுரை தருகிறார்.

கவிதைத் தொகுப்பில் காதலையும், நட்பையும் காட்டிய விதம் மிகவும் அழகு.
இயற்கை சார்ந்த கவிதைகள் இன்னும் கூடுதல் பொலிவு.

உணர்வுப்பூர்வமான வரிகளை வாசித்த, சமூகத்தில் தொடரும் பிற்போக்குத்தனமான பிழைகளை விமர்சித்த தொகுப்பாகவே கரையேறும் கவிதைகள் வந்திருக்கிறது.

கட்டாயம் படிக்க வேண்டிய நூலாகவே நான் கருதுகிறேன். என்னைத் தொடரும் கவி உறவுகளுக்கும் இதை வழி மொழிகிறேன்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : கரையேறும் கவிதைகள்

ஆசிரியர்  : ச.முகிலன்

வெளியீடு : ஏலே பதிப்பகம்

விலை ரூ.150

 

 

எழுதியவர் 

 

க.மணிமாறன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *