கார்கவியின் கவிதைகள்

Karkavi Poems கார்கவியின் கவிதைகள்
வெண்புறா
**************
மாதம்
நான்கு முறை
ஓயாது நீருற்று
புரட்டுகிறார்
இல்லத்தை
மூத்த பெண்மணி

வாசலில்
கோலமிட
கோவத்தில் நீரை
சலிப்புகளுடன்
அள்ளி விசுறுகிறாள்
புதுப்பெண்மணி…

வெளியே கிளம்பும்
வேளையில்
நந்தி போல்
முன் நின்று வழியனுப்பும்
அம்மை….

எல்லாம் கண்பட
பிள்ளைகளை சகமாக
விளையாட வைத்து
மூடிய கதவை
திறக்க நேரம் பார்த்து
இழுத்துப் போர்த்திய

வெண்பட்டினை
வண்ணம் படாது
வலம் வருகிறாள்
எதிர்வீட்டு வெண்புறா…
மிச்சம்
கொட்டிக்கொண்டே
பூசாரியின்
பட்டு சாத்தலையும்
தீபாரதனையையும்
ஏற்கிறது
முக்கூட்டில் அமர்ந்த
முதன்மை கடவுள்….

அவள(தி)ல்காரம்
**********************
அவள்
தூரமாய் நின்று
முனு முனுத்துக் கொண்டுதான்
இருக்கிறாள்…
தேன் தடவிய இதழாயினும்
சொற்கள் கொஞ்சம்
காதலின் நீலநிறம் தான்
இருப்பினும்
பார்த்து இரசித்துக்கொண்டுதான்
இருக்கிறேன்…
சொற்கள் வேறென்ன வண்ணம் பெறும் என்று..
இதற்கு பெயர்
என்ன வென்று சொல்லிவிட முடியும்..
” எனது குதிரைத்திறன் கொண்ட சொற்களின் மொத்த வாட் அவளான பொழுது
அவள் முறைத்து செல்லும் போது காதோரம் தொங்கல் தனை உரசி செல்லும் பட்டாம்பூச்சி மட்டும் தான் நான்…”

வெயிட்டிங் லிஸ்ட்
**********************
நன்றாக படித்தவனும்
நாலு டிகிரி முடித்தவளும்
கொட்டிய முடி கொண்டவனும்
கூந்தலுக்கு தினம் ஒருமணி நேரம் ஒதுக்குபவளும்
கூட்டாஞ்சோறு உண்டவளும்
உச்சிவெயில் குடும்பத்தை
வியர்வையாய் சிந்தியவனும்
விலை போகாத காய்கறிகள் போல
நெடுங்காலமாக
உறங்கிக் கொண்டிருக்கின்றனர்
வண்ண உடையில்
அடித்த பவுடர்,
சீவிய தலைமுடியின் வகுடு மாறாமல்
அழிந்து கொண்டே வரும்
புகைப்படங்களின் வரிசையில்
வெற்றிலை குதப்பிய
வாயில் அந்த நூறு பொய்களை முனுமுனுக்கும்
தரகர்களின்
அக்குல் அணைப்பு
பைக்குள்ளே
மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும்
அந்த வெயிட்டிங் லிஸ்ட் வெள்ளந்திகள்…..!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.