பொழுது எப்போதும் போலவே மெதுவாக விடியத்  தொடங்கி இருந்தது.தெரு,மக்கள்கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. ஆனாலும்அங்கும் இங்கும் சில தலைகள் தென்பட தொடங்கியன.இன்னும் சிறிது நேரத்தில் மக்களின் அன்றாட அலுவல்கள், சத்தங்கள், கூக்குரல்கள் எல்லாமே தயாராகி விடும் போல் தெரிகிறது.ஆனால் அதற்கு அவகாசம் தராத சிலர் அடுத்த தெருவை நோக்கி ஓடினார்கள்.என்ன ஏது விசாரித்தவர்களும் கூடவே ஓடி ஒரு கூட்டமாகினர்.

விசாரித்த மட்டில் அடுத்த தெரு ராமசாமி தூக்கில் தொங்கியவிசயம் தெருவெங்கும் பரவி இருந்தது. பழகியவர்கள் நண்பர்கள் எனதலையிலடித்துக் கொண்டு அடுத்த
தெருவுக்கு ஓடினார்கள். பெருங்கூட்டமொன்று ராமசாமி வீட்டின் முன் திரண்டு இருந்தது. எதனால் இந்த துயரம்? எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி மேலோங்கி இருந்தது. ராமசாமியின் குணம் பலரையும் ஈர்த்து,அவருக்கு மதிப்பையும் மரியாதையையும் அந்ததெரு வாசிகளிடம் பெற்று தந்தது.

அந்த தெரு வாசிகள் மட்டுமல்ல இந்த தெருவாசிகளும் அவரை கொண்டாடினர். ஓடி ஓடி அடுத்தவருக்கு உதவும் அவருடைய மனப்பான்மையை அனைவரும் போற்றினர். கூட்டத்தினரில் சில பெண்கள் வாய் விட்டு கதறி அழுதனர்.நல்லவர்களான அப்பாவிகள்  வாழ்க்கை அத்தனை இனிமையாக அமைந்து விடுவதில்லை.

ராமசாமி அதற்கு மிகப் பெரிய எடுத்துகாட்டாக விளங்கியவர்.சராசரி மனுசியாக அமைந்து விட்ட மனைவி,அவளைப் போலவே வளர்ந்த விட்ட குழந்தைகள், எந்த பரிவோ பாசமோ குடும்பத்தினரிடமிருந்து கிட்டாத நிலையில, வாழ்ந்து தொலைக்க வேண்டிய நிர்பந்தம் ராமசாமியை இந்த முடிவை எடுக்க தூண்டி இருக்குமோ? அரசு போக்கு வரத்து துறையில் ஓட்டுநராகப் பணி செய்தவர், சென்றவருடம் ஓய்வு பெற்றப் பின்னர்தான் இந்த வீட்டையுமகட்டினார்.

அவரின் நல்ல குணங்கள் நிறைய நண்பர்களை கொண்டு வந்தது. நெருங்கிப் பழகிய நண்பர்களிடம் கூட அவர் குடும்ப விவகாரங்களை பகிர்ந்து கொண்டதில்லை
மனதிற்குள் பூட்டி வைத்து, அவ்வப்போது பெருமூச்சுகளாக மட்டும்
வெளிப்படுத்துவார். முப்பது வருடங்களுக்கு முன்னால் ராமசாமி கோவை பல்லடம் தடத்தில் ஓட்டுநராக பணி செய்தப் போதே அவரின் விதி எழுதப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கோவை பேருந்து நிலையம்….. ராமசாமி பேருந்தில் அமர்ந்து இளையராஜாவின் பாடலில் மூழ்கி இருந்தான்.நடத்துநர் பேருந்தை எடுக்க இன்னும் நேரம் இருப்பதை உணர்ந்து, தேனீர் சாப்பிட போயிருந்தான்.பல்லடம் செல்லும் முதல் பேருந்து, பயணிகள் எவரும் தென்படவில்லை. காலை ஏழு முப்
பது பேருந்தில் செல்லும் அளவுக்கு எவருக்கும் அவசர காரியம் எதுவும்
இல்லை என்று தெரிந்தது..

” ஏனுங்கண்ணா டிக்கட் யாரையும் காணுங்க….வெறும் பஸ்ஸ எப்புடிங்க எடுக்றது ?” நடத்துநர் செல்வராஜ் சத்தமாய் கேட்டப் படி
பேருந்தில் ஏறினான். ” ஆமாப்பா டைமும் ஆச்சி….’கட்’ டிக்கட் வந்தா ஏத்திக்கோ
‘துரு’ டிக்கட்டு எதையும் காணோம்.”ராமசாமி பாட்டை ரசித்தப் படியே
பதில் சொன்னான்.” ‘கட்’ டிக்கட்டுக்கே வழிய காணோம்.’ துரு’ டிக்கட்டுக்கு எங்க
போறது” செல்வராஜ் சலித்துக் கொண்டான்.

‘ இன்னிக்கி பேட்டா அம்போ’ இருவருமே இளம் வயதுகாரர்கள் அரட்டைக்கும் சிரிப்புக்கும் பஞ்சமிருக்க வில்லை.சற்று தொலைவு வந்ததும் ஓரிருவர் பேருந்தில் ஏறினர்.பேருந்தை சற்று வேகமாக இயக்கினான் ராமசாமி. வேகத்திற்கு பொருத்தமான பாடலாக ‘ வளையோசை கலகலகலவென’ ஒலிக்கத் தொடங்கியது.

ராமசாமி குஷியானான்.’ சாந்தி கியர்’ நிறுத்தத்தை பேருந்து அடைந்தப் போது கூட்டம் சிறிது நின்று கொண்டிருந்தது.பேருந்து நின்றதும் மள மள வென்றுகூட்டம் ஏறிவந்தது.நடத்துநர் செல்வராஜ் அனைவருக்கும் டிக்கட்டை கொடுத்ததும், போகலாம் என்பதை விசில் மூலம் தெரியப்படுத்தினான் ஆனால் பேருந்து அனைத்திக் கொண்டு நின்றது.செல்வராஜ் வெளியில் எட்டிப் பார்த்தான்.

ஒரு பெண் பேருந்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்.இதைப் பார்த்து விட்டராமசாமி பேருந்தை நிறுத்தி இருந்தான்.” ஏனுங்க எங்க போவோணும்” செல்வராஜ் டிக்கட் கற்றையை பையிலிருந்து எடுத்தவன், அந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டான். ஓட்டுநரின் பக்கவாட்டு சீட்டில் அவசரமாய் அமர்ந்த அந்தப் பெண், மூச்
சிரைக்க,” இருகூர் பிரிவு” என்றாள்.

” அவசரமில்லை ஆறுதலாவே சொல்லலாம்..அவரு எங்க போயிருவாரு?”ராமசாமி சிரித்தப்படியே சொன்னான்.அந்தப் பெண்ணின் முகத்தில் சிறிது நாணம் எட்டிப்பார்த்தது. செல்வராஜ் ராமசாமியை முறைத்தப் படியே அந்தப் பெண்ணுக்கு டிக்கட்டை கொடுத்தான். ‘ பேசாம வண்டியை உருட்டுறதை விட்டுட்டு தேவை இல்லாம பேச்சி என்னத்துக்கு?’ மனதிற்குள் வந்து போன பொறாமை செல்வராஜை கருக வைத்தது.”ஏனுங்க ரொம்ப நன்றிங்க இந்த பஸ்ஸ விட்டிருந்தா அவ்வளவு தான்….ஆஸ்பிட்டல் போக லேட்டாகி டீன்னிட்ட மெமோ வாங்கிஇருப்பேன்.

” நல்ல வேளை நீங்க ஓடி வர்றதை பாத்தேன்… இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி? நம்ம டூட்டி அது” ராமசாமி தன் பெருந்தன்
மையை வெளிப்படுத்தினான்.” எல்லாம் அப்புடி இருக்கிறதில்லைங்க பஸ் ஏற ஏற விட்டுட்டு போறவங்கள பார்த்திருக்கேன் “. ” அது ….சில நேரம் நேரத்தை அட்ஜஸ்ட் பண்ண செய்யிற துண்டு ” ராமசாமி தன் ஓட்டுநர் இனத்தை விட்டுக் கொடுக்காமல்
பேசினான்.

” ரெண்டொரு நிமிசத்திலே என்னங்க லேட்டாகப் போகுது பஸ் என்ன நடந்தாப் போகுது?” அந்தப் பெண் சளைக்க வில்லை. ராமசாமி அந்தப் பதிலைக்கேட்டு வாய் விட்டே சிரித்து விட்டான். செல்வராஜ் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. பயணிகள் நமது வாடிக்கையாளர்கள் போல வாடிக்கையாளர்களிடம் இவன்
இப்படியா அனாவசியமாக வழிவது? செல்வராஜ் மனதிற்குள் புதிது புதிதாகக் சட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்!ஒரு கணம் ராமசாமி தான் அந்தப் பெண்வசமாகிப் போனதை உணருகிறான்.

அடுத்து வந்த நாட்கள், மாதங்களில் இருவரும் தோழமை உணர்வோடு பழக ஆரம்பித்தனர். எப்போது ‘ சாந்தி கியர்’ நிறுத்தம் வருமென்று அவனும் எப்போது இந்தப் பேருந்து வருமென்று அவளும் காத்திருக்க ஆரம்பித்தன ர். ‘ மூக்கும் முழியுமாக’ இல்லாவிட்டாலும். ‘ நாக்கும் மொழியுமாக’ அவள் இருந்தாள். இதை ராமசாமி வெகுவாக ரசித்தான்.

நாட்கள் நகர்ந்தன. ராமசாமியை அந்தப் பெண் ஒரு நாள் வெளியில் சந்தித்துப் பேசஅழைத் திருந்தாள். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ராமசாமி, ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு கோவை ரேஸ்கோர்ஸில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் புவனா என்ற பேர் கொண்ட அவள் நகரப் பேருந்தை விட்டிறங்கி ராமசாமியை நோக்கி
வந்து கொண்டிருந்தாள். இந்தத் தனிமை சந்திப்பு அவனை என்னவோ செய்தது. ஒருவகையான நடுக்கத்தை தந்தது.

வாழ்க்கையில் முதன் முறை ஒரு பெண்ணை தனிமையில் சந்திப்பது என்பது அவ்வளவு சாதாரணமானதா? புவனாவும் இதே மனநிலைமையில்தான் இருந்தாள். ஆனாலும் முகத்தில் சற்று சந்தோஷத்தின் வெளிச்சம் பரவிக் கிடந்தது.மாநிறமாக, அழகி என்றுசொல்ல முடியாவிட்டாலும் பார்க்கும்படி இருந்தாள்.

” ஸாரிங்க ரொம்பக் காக்கவச்சிடேனுங்களா?”என்ற புவனா அனை நெருங்கி வந்து கொண்டிருந்தாள்.” அப்புடி எல்லாம் இல்லே கொஞ்ச முன்னாடிதான் நானும் வந்தேங்க” அவன் சற்று கலவர முகத்தோடுதான் பேசினான். யாராவது பார்த்து விட்டால்…….! பேச ஆரம்பித்தார்கள்….

புவனா தன் குடும்ப விபரங்களைச் சொன்னாள். தான் குடும்பத்தில் ஒரே பெண் என்றும் அப்பா அம்மா விவசாயம் பார்ப்பதாகவும் நர்ஸிங் முடித்து இருகூரிலுள்ள ஒரு மருத்துவ மனையில் பணி புரிவதாகவும் எடுத்துச் சொன்னாள்.எல்லாம் சொல்லி முடித்து விட்டு இறுதியாக அவள், ” நான் உங்கள மன பூர்வமா விரும்புறேனுங்க அது எப்புடி ஏன் னெல்லாம் என்னாலே சொல்லத் தெரியலிங்க…..என்ன கைவிட்டுறாதிங்க….” என்றாள் நாத்தழுதழுக்க.

அவன் இதை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை. அவளுடைய பேச்சு, தோரணை, பழகும் விதம் எல்லாமே நல்லதொரு தோழமையின் அடையாளமாகவே நினைத்தவனுக்கு இது தர்ம சங்கடத்தை தந்தது.

தான் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்துவன் என்றும், அப்பா
அம்மா ஒரு தங்கை என்று குடும்ப விபரத்தை சொல்ல ஆரம்பித்தான், நகரப்பள்ளியில் எட்டாம் வரை படித்துஅதற்குமேல் படிக்க வசதி இல்லாததால் ஓட்டுநர் ஆனதையும் சொன்னான்.சிறிது அமைதியாக. இருதந்தவன், ” ரொம்ப சாதாரணமா விரும்புறதா சொல்லிட்டிங்க….நான்யாரு? எதுக்காக கோவைக்கு மாத்தலாகி வந்தேன்? இதெல்லாம்
தெரியுமா ? கிராமத்து தடத்துலே நான் ஓட்ற பஸ்லே யாருமே ஏற மாட்டாங்க தீட்டு ஒட்டிக்குமாம்.

பிரவேட் பஸ்ஸிலாதான் நெருக்கியடிச்சி ஏறுவாங்க…அதிகாரிங்களுக்கும் இது தெரிஞ்சதாலே உடனே எனக்கு மாத்தல் கெடச்சது. இங்க நகரமானதாலே பிரச்சனை இல்லே. இப்ப சொல்லுங்க….என்ன விரும்புவீங்க?” என்றான். புவனா ஒரு விநாடியேனும்தாமதிக்காமல், ” இப்புடி எல்லாம் சொல்லிஎன்ன ஏமாத்த முடியாதுங்க…நீங்கஎவரா இருந்தா எனக்கென்னங்க நான் விரும்னது விரும்புனதுதா  “புவனாவின் தீர்க்கமான வார்த்தையைக் கேட்டு அவன் மலைத்துப் போய் விட்டான்.

சில மாதங்கள் உருண்டோடி விட்டன. புவனாவின் பிடிவாதம் நிற்க வில்லை. தான் ஒரு ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லியும் இந்தப் பெண் தன்மீது கொண்ட காதலை அவன் தன் கிராமத்து கொடுமைகளுக்கு ஒரு மருந்தாய் நினைத்தான்.

மனம் லேசானது. எல்லா நிகழ்வுகளையும் செல்வராஜிடம் அவன் பகிர்ந்து கொண்டான். இவர்கள் காதல் விவகாரமும் ஜாதி விபரங்களும் புவனாவின் ஜாதிகார்களுக்கு தெரிந்து விட்டால் என்ன ஆகுமோ? என்று செல்வராஜ் பயந்தான். திருச்செங்கோடு கோகுல் ராஜ் சம்பவத்தை எல்லாம் நினைத்து
பயந்தான்.

” அண்ணா கொஞ்சம் ஜாக்கிரதாய் இருக்கோணும்.அவிய நெம்ப மோச மானவிங்க” செல்வராஜ் உண்மையான கவலையுடதும் அக்கறையுடனும் பேசினான்.” இல்லே செல்வம் நடக்கறது நடக்கட்டும். எத்தனை நாளைக்குத்தான் குட்ட குட்ட குனியிறது? “ராமசாமி ஒரு முடிவுக்கு வந்தவன் போல் பேசினான்.

அடுத்த சில வாரங்களில் போக்குவரத்து நண்பர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் புடை சூழ, ராமசாமிக்கும் புவனாவுக்கும் திருமணம் இனிதே நடந்து, ஓட்டல் ஒன்றில் விருந்து உபசாரமும் நடந்தேறியது. கொஞ்ச நாள் வரை புவனாவின் பெற்றோர் மற்றும உறவினர்களின் சல சலப்பு தொடர்ந்தது. சட்டபூர்வமான நடவடிக்கைக்குப் பின்னர் அதுவும் முடிவுக்கு வந்தது. புவனாவும் ராமசாமியும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஆனந்தமாக தொடர்ந்தனர். காலங்கள் ஓடின…..ஆணொன்றும் பெண்ணொன்றும்
அவர்களின் வாரிசாக வந்து ராமசாமி புவனா தம்பதியரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். குழந்தைகள் வளர வளர அவர்களின் தேவைகள், படிப்பு செலவுகள், என்று அதிகரித்தன.

இருவர் வேலை செய்தும் செலவுகள் கட்டுக்குள் வரவில்லை.
புவனா வளர்ந்த விதம், புவனாவை ஒரு மேல் தட்டு வாழ்க்கைக்கு நெட்டி தள்ளியது.ஆனால் நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. இதுதான் நிதர்சனம் என்றறிந்தும் அவள் அதை உதாசீனம் செய்தாள். குடும்பத்தில் அமைதி குலைந்தது.
ராமசாமிக்கு தன் பெற்றோர் மட்டும் தங்கையை காப்பாற்றும் கடமையும் இருந்தது. அதை எடுத்து சொன்னால் புவனா காதிலேயே வாங்குவதில்லை.

இருவரிடையே ஒரு முரண் கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது. ராமசாமி பொறுமையாக நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார்.தன் காதல் மனைவியின் பேச்சில் நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் அது அவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
அவர் பணியில் சேர்ந்த சிறிது காலத்தில் ஒரு வீட்டு மனை வாங்கி இருந்தார்.திருமணத்திற்குப் பிறகு அதை புவனா பேருக்கு மாற்றி தன் அன்பை வெளிக்காட்டி இருந்தார். அப்போதெல்லாம் அன்பை கொட்டிய புவனா வா இது? என்று
எண்ணியவர், கலங்கிப் போனார். பணி ஓய்வுக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது.

ஓய்வுக்கு பிறகு வரும் பணத்தில் அந்த மனையில் வீடு கட்டி விட வேண்டும்என்பதில் தீவிரமாக இருந்தார். வாடகை வீட்டு வாழ்க்கையில் எத்தனை இன்னல்கள், ஏச்சுகள், பேச்சுகள் வாடகை ஏற்றத்தில் குடும்ப பட்ஜெட் டில் துண்டு விழுந்த கதைகள் எத்தனை! இதற்கெல்லாம் ஒரே தீர்வு அது சொந்த வீடாககத்தான் இருக்க முடியும்.

ராமசாமிஅதில் மும்முரமாக இறங்கினார். கிடைத்த ஓய்வு பணத்தில் அளவான வீடாக கட்டி முடித்து விட்டார். புவனா சந்தோஷபடுவதை விடுத்து அதில் குற்றங்குறை காணுவதிலேயே கண்ணாக இருந்தாள். காதலும் மோகமும் கண்காணாத சீமைக்கு பறந்தோடி வெகுநாட்கள் ஆகியதை புவனா வார்த்தையால் உணர்த்தினாள், ஒரு காலத்தில் வார்த்தைகளால் இவரை வசியப் படுத்தியவள்.” கெடச்ச பணத்திற்கு அளவான வீடாத்தானே கட்ட முடியும்? புள்ளைகளுக்கு இன்னும் ஒரு வருஷம் காலேஜ் வேறு இருக்கு….இதெல்லாம் யோசிக்க மாட்டே? நீயும் லோன் போட்டு பெரிசா கட்டினா அப்புறம் புள்ளங்க படிப்பு? “ராமசாமி பொறுமை இழந்து சத்தமிட்டார்.

புவனாவும் பதிலுக்கு கத்தினாள்.கடுமையான வாக்குவாதம் தொடர்ந்தது.கடைசியில்
கோபம் கண்ணை மறைக்க, “ஒங்க ஜாதி புத்தியை எனக்கிட்டே காட்டாதிங்க” புவனாவின் வாயிலிருந்து நெருப்பாய் கொட்டிது வார்த்தை! ராமசாமியின் தலையில் இடிவிழுந்தாற் போலிருந்தது.

ஜாதி வெறியில் நொந்து போனமனதிற்கு யாருடைய காதல் மருந்தாய் இனித்ததோ அதே காதல் மனைவியிடமிருந்து இந்த அமில வார்த்தைகள்! ராமசாமி உடைந்து போனார்! மரபணுவில் ஊறிப்போன இந்த உணர்வுகள் அழிய இன்னும் எத்தனை யுகங்கள் ஆகுமோ? சீலிங் பேனில் தூக்கில் தொங்கிய ராமசாமியின் உடலை கூராய்வுகாக இறக்கிக் கொண்டிருந்தார்கள். தெருவே அழத்தொடங்கி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *