கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 2 – நா.வே.அருள்



தரகு

******

ஒரு ஜதை மாடு வாங்கவோ விற்கவோ
ஒரு விவசாயி
தரகனைத்தான் அழைத்துப் போவான்.

தரகன்
நம்மைப்போலவே இருப்பான்.
நம்முடனே வாழ்வான்.

காலையில் ஒரு தேநீருடன் நாலு இட்லி
வடகறி என்று உள்ளூர் ஓட்டலில் வாங்கித்தந்ததற்காக
ஒரு நாள் முழுதும் உடனிருப்பான் தரகன்.

துண்டுக்குள் இரண்டு தரகர்கள்
விரல் பிடித்து விலை பேசுவார்கள்
கமிசன் பணம் கைவிரல் தாண்டி போனதேயில்லை

இப்போது தரகர்கள்
கண்ணுக்குப் புலப்படாத இடத்திலிருந்து
கட்டளை பிறப்பிக்கிறார்கள்.
ஒரு கொள்ளைக் கூட்டத்துத் தலைவனைப் பார்த்து
மிரள்வது போல மிரள வேண்டியிருக்கிறது.

ஒரு கட்டளையில்
பசியின் குறைந்தபட்ச உத்தரவாதம்
நீக்கப்படுகிறது.
மறு கட்டளையில்
வயல் வெளிகள் முழுவதும்
பணத்தாள்கள் நடப்படுகின்றன.
மூன்றாம் கட்டளையில்
வயல்வெளிகளே சொந்தமில்லாமல் போய்விடுகின்றன.

அதிகாலையில்
மரஇலையில் குளிர்காய்ந்த ஒரு இலைப் புழுவை
மதிய வெயிலில் தார்ச்சாலையில் போட்டதைப்போல
கொதிநடனமிடும் குலசாமிதான் விவசாயி.

பழைய தரகர்களுக்கு
பச்சை மிளகாயும் பழஞ்சோறும் போதும்
புதியவர்களுக்கோ
அட்ச ரேகைகளும் தீர்க்க ரேகைகளும்
அழகான எலும்புத் துண்டுகள்

 

கவிதை நா.வே.அருள்
ஓவியம் கார்த்திகேயன்