கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 3 – நா.வே.அருள்பக்க விளைவு

******************

அமைதியைப் பற்றிய பிரசங்கத்தை
வன்முறையாளன்தான் முதலில் தொடங்குகிறான்.
எவ்வளவுதான் மணமூட்டினாலும்
அவனது வார்த்தைகளின் ரத்தநெடி
காட்டிக் கொடுத்துவிடுகிறது.

என்னதான் அலங்கார வளைவுகளுடன் அமைக்கப்பட்டாலும்
ஒவ்வொரு ஜன்னலிலும்
இயலாதவர்களின் கைவிரல்களினாலான
சிறைக் கம்பிகள்.

அவன் நாவில் குயில்கள்
இசைத்துக் கொண்டிருந்தாலும்
இதயத்தில் கழுகுகள்
நாகங்களைக் குறிபார்க்கின்றன.

யானைகளைப் பிடிப்பதற்காகத் தோண்டப்பட்ட
யானைப் பள்ளங்களைப் போல
சொற்களைப் பின்தொடரும் செயல் விலங்குகளை
பிரித்தெடுத்துப்  பிடிப்பதற்கு
அவனிடம் இருப்பவை
ஏராளமான பாசாங்கின் பள்ளத்தாக்குகள்.

இவ்வளவு அதிகமான குளிரிலும்
உறையாத போராட்டத்தின் குருதி
அவனது ரத்த நாளங்களில் சாக்கடையைப் போல
பாய்கிறது.

விவசாயிகளின் மூதாதையர்களைச் சபிக்கிறான்
ஒரு நீச்சல் குளத்தைவிடவா முக்கியம்
மிளகாய்த் தோட்டத்திற்கான நீர்ப் பாசனம்?

நண்பனின் விமான இறக்கைகளில்
ஒரு சோளக் காட்டுப் பொம்மையைப் போலத்
தொங்கிக் கொண்டிருக்கிற விவசாயியை
தனது நாக்குத் தூரிகையால்
ஒரு கேலிச் சித்திரமாகத் தீட்டிவிடுகிறான்.

கவிதை –  நா வே அருள்

ஓவியம் – கார்த்திகேயன்