சித்திரைக்கு வெயிலை தாரை வார்த்துக் கொடுத்து இருந்தது பூமி. மலைகளும் கூட செத்த தளர்ந்து தான் போச்சு. மழை பேயாமல் வெள்ளாமை எதுவும் வரல. மானம் பார்த்த பூமி ஒத்த சொட்டு தண்ணீய கூட காங்கல. மரம், செடி,”கொடி மனுசன்னு எல்லாரும் காஞ்சு போயி கிடந்தாங்க.
அக்கம் பக்கத்து ஊர்ல லேசா எட்டிப் பார்க்கிற மேகம், கரிசனூத்து பக்கம் வாரதே இல்லை. மக்கள் வாடி வதங்கிப் போனாங்க. வச்சு இருந்த தெவசமும் தீர்ந்து போக, ஊருக்குள்ள களவு கூடிருச்சு. பெத்தணன் வீடும் அதுல ஒண்ணு. ஒத்த ஏக்கர மொத்த குடும்பமும் நம்பி இருக்குது. மழைய நம்பி சோளத்த போட்டாரு பெத்தணன். கிணத்து தண்ணீர் காணாமல் போயி பல நாள் ஆகிருச்சு. ஊத்து பூராவும் அத்து போச்சு.புள்ள குட்டிங்க எல்லாம் துவண்டு போய் கிடக்குக.
ஊர் பஞ்சாயத்து கூடுச்சு. நம்ம ஊர்ல இப்ப இருக்கிற நிலவரம் எல்லாருக்கும் தெரியும். எப்பவும் மழை வாராட்டி, நம்ம ஊரு அம்மனுக்கு நேர்ந்துகிட்டு வீட்டுக்கு ஒருத்தரு பூகுழி இறங்கனும். அதுக்கு சிட்டையில பேர் எழுதி குடுங்க. கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும். அதுக்கு வேண்டிய வசூல சரியா குடுத்திரனும் என்றார்.
இந்தக் காலத்துல கழுதைக்கு கல்யாணமானு எழுந்துச்சு இளந்தாரி இளங்கோ குரல். அட! சும்மா இருப்பா? வில்லங்கமா பேசிகிட்டு. எங்க? நீயி வானத்த பொளந்து மழைய கொண்டாந்துரு பார்ப்போம். மழையக் கொண்டார வேண்டியது தான் இப்ப முக்கியம். உங்கள் அறிவு ஆர்ப்பாட்டங்கள கொண்டு போயி வேற இடத்துல வச்சுக்கங்கனு கோவிச்சாரு கருத்தணன்.
எதையும் உங்களுக்கு புரிய வைக்க முடியாதுயா?னு சொன்ன இளங்கோவ இந்தாப்பா! நீ கிளம்பு ன்னு ஊர் சனங்க சத்தம் போட்டாங்க. பூக்குழி இறங்க பேர் தர ஆரம்பிச்சாங்க. கல்யாண ஏற்பாடும் தயாராகிட்டு இருந்துச்சு. மாரி கண்ண திறக்கனும்னு வானத்த பார்த்து கும்பிட்டுகிட்டாங்க சனங்க. பொழுது மசங்க, இருட்ட விளாவி புழுக்கத்த நிரவுச்சு இரவு. நட்சத்திரம் எல்லாம் ஒண்ணுகூடி என்னமோ பேசிகிட்டு இருந்தாங்க.
பெத்தணன் வீடு இருட்டுக்கு சவால் விட்டு இருண்டு கிடந்துச்சு. கருக்கல் அரிசிய பொங்கி போட்டு புள்ளைங்கள தூங்க வச்சு இருந்தாள் பொன்னம்மாள். வெக்கைய வெறட்ட முடியாமல் புழுங்கி அவிஞ்சு கிடக்குது ஊர் சனங்க. பின்சாமம் நெருங்கிருச்சு. சின்ன சூரி கத்திய எடுத்துகிட்டு, உடம்புல எண்ணெய தேய்ச்சு ஒண்ணுமில்லாத வீட்டுக்குள்ள திருட வந்துட்டான் திருடன்.
பசியும், அலுப்பும் ஒண்ணா சேர்ந்துகிட்டு தூக்கத்த கொண்டாடியது. மெதுவா ஊர்ந்து வந்தவன், அரிசி, கம்பு, சோளம்னு ஏதாவது இருக்கானு பொறுமையா தேடுனான். ஒண்ணும் கிடைக்காத விரக்தியில வெளிய ஓட, அங்ஙன இருந்த பெத்தணன் கால் இடரி கீழே விழுந்தான்.
அப்புடியே எந்திரிச்ச பெத்தணன் கழுத்த புடிச்சு திருக நெம்ப முடியாமல் வழுகிக்கு போக பார்த்தான் திருடன். சூரி கத்திய எடுக்க, அவன் கைய வளைச்சு தட்டி விட்டாரு பெத்தணன். முகத்த விலக்கி பார்க்க, அதிர்ந்து போனாரு பெத்தணன். ஊருக்கே புத்தி சொல்லுற இளங்கோ திருடனா வந்திருக்கான். ஏலேய்! என்னடா பய நீயி? உன்னய எம்புட்டு பெருசா நினச்சுக்கு இருக்கேன். இப்புடி செஞ்சுபுட்டியேடா நீ? என அலுத்துக் கொண்டார். அவன் திருடியதை ஏற்க முடியவில்லை பெத்தணணுக்கு.
மாமா! மன்னிச்சிரு. வகுத்துக்கு ஒண்ணும் அகப்படல. என் மகள் பசியில வறண்டு கிடக்கு. விட்டால் செத்துப் போயிரும்னு அழ ஆரம்பித்தான். மனசு அடித்துக் கொண்டது பெத்தணணுக்கு. வீட்டு கொல்லைக்கு கூட்டிகிட்டு போனாரு. அவரு குடும்பத்துக்கு வச்சு இருந்த கருக்கல் அரிசிய எடுத்து துண்டுல கட்டிக் குடுத்தாரு.
அவர் காலை கட்டிகிட்டு அழுதான் இளங்கோ! எந்திரிடா! என்னடா மனுச பய பொழப்பு! போடா!னு அனுப்புனாரு. வறண்டு போன கண்ணுல கண்ணீர்
எட்டி பார்த்துச்சு இளங்கோவுக்கு. இளங்கோ நகர, வானம் இருட்டு கட்டியது. மேகங்கள் ஒன்று கூடி பேசி நல்ல முடிவை எட்டின.”நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை”னு பேசுச்சு போல!
வச்ச சோதனையில மனுச பயலுக செயிச்சுடாய்ங்கன்னு மேகங்க சந்தோசமாகி மாரிய இறக்கி விட்டாங்க. பூமி தொட ஓடி வந்தாள் மாரி! அந்த பின்சாமத்துல இறங்குன மழை வெளுத்து வாங்க ஆரம்பிச்சிருச்சு. ஆத்தாவ நினச்ச உடனே கண்ண தொறந்துட்டா. சனங்க பூக்குழிக்கு தயாரானாங்க. கழுதைகளுக்கு கண்ணாளமும் நடத்துனாங்க. இந்தா மழை ஆரம்பிச்சிருச்சு. கனிஞ்ச மனசு கொண்ட பெத்தணன் போன்றவங்கள பார்க்கறதுக்காகவே வர்ரா மாரி!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments