Nigerian Poet Gabriel Okara Single Poem Translated in Tamil by Poet Thanges. Book Day is Branch of Bharathi Puthakalayam.



நான் ரசித்த கவிஞர்கள்

Gabriel Okara – கேப்ரியல் ஒகரா என்பவர் நைசீரிய நாட்டைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். நைசீரியாவில் புமுண்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இளமைக் காலத்தில் புத்தகங்களைப் பைண்டு செய்யும் பணியைச் செய்தார். பின்னர் வானொலிக்காக நாடகங்களை எழுதினார். இவர் 1964 இல் தி வாய்ஸ் என்னும் புதினத்தை எழுதி வெளியிட்டார்.

பிறந்த தேதி: 24 ஏப்ரல், 1921
பிறந்த இடம்: Niger Delta, நைஜீரியா
இறந்த தேதி: 25 மார்ச், 2019
இறந்த இடம்: Federal Medical Centre, Yenagoa, ஏனாகோவா, நைஜீரியா
கல்வி: Northwestern University, Government College Umuahia, Yaba College of Technology Secondary School

அவருடைய கவிதைத் தொகுதி THE CALL OF RIVER NUN ( நதியின் அழைப்பு ) 1953 ஆம் ஆண்டு நைஜீரிய கலை இலக்கிய விழாவில் சிறந்த கலை இலக்கிய விருதுபெற்ற கவிதை நூலாகும். இவரின் மிகச்சிறந்த கவிதைகள் BLACK ORPHEUS ( இருளின் கருமை ) என்ற ஆகச்சிறந்த பத்திரிகையில்தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டன. 1960களில் இவர் மிகச்சிறந்த எழுத்தாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். காமன் வெல்த் கவிதை விருதும் இவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

‘’ அன்றாடங்களின் இயல்பிலிருந்து அற்புதமான சில மகிழ்ச்சியான தருணங்களில் பயணித்து விட்டு மீண்டும் நிகழ்வின் இயல்புக்குள் நுழைந்து முழுமையடைகின்றன. இவருடைய கவிதைகள்’’ என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இவருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் ஆப்பிரிக்கச் சிந்தனை நாட்டுப்புறப்பாடல்களின் தெறிப்பு மற்றும் கிராமத்து உருவகங்கள் ஏராளமாகப் பொதிந்துகிடக்கின்றன. இவருடைய முதல் நாவல் ‘’ THE VOICE ( குரல் ) மொழியின் ஆகச்சிறந்த பரிசோதனை முயற்சியாகும்.

இவருடைய பிற்கால படைப்புகளாக ‘’ THE FISHERMAN!S INVOCATION (மீனவனின் வழிபாட்டு பாடல்கள்) என்ற கவிதைத் தொகுதியும் LITTLE SNAKE AND LITTLE FROG (சிறிய பாம்பும் சிறிய தவளையும் ) 1981 மற்றும் AN ADVENTURE OF JUJU ISLAND 1992 (ஜூஜூ தீவில் சாகசங்கள் ) என்ற குழந்தைகளுக்கான இரண்டு தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

கீழே மொழி பெயர்க்கப்பட்டுள்ள இவரின் சிறந்த கவிதையான ‘’ ONCE UPON A TIME ( ஒரு காலத்தில் ) என்பது தற்போது +1 மாணவர்களுக்கு ஆங்கிலப்பாடப்புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மாற்றுச்சிந்தனைகளையும் கவிதைகளையும் நமது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை எல்லாம் நமது முன்னாள் முதன்மைக் கல்விச்செயலாளர் ஐயா.திரு. உதயச்சந்திரன் அவர்களையே சாரும். இனி கவிதையைப்பார்க்கலாம். கவிதையின் சூழல் – இழந்த காலத்தைப்பற்றி ஆதங்கத்துடன் தந்தை.தன் மகனிடம் பேசுவதாக அமைந்துள்ளது.



ONCE UPON A TIME (ஒரு காலத்தில்)

கண்கள் பனிக்க வாய்விட்டுச் சிரித்தார்கள்
இப்பொழுதோ அவர்களின் பற்களால் மட்டுமே
சிரிக்கிறார்கள் அதே நேரத்தில்
பனிக்கட்டிகள் போல உறைந்திருக்கும்
அவர்களின் கண்கள்
என் நிழலுக்கும் பின்னால்
எதையோ தேடியவண்ணமிருக்கின்றன.

அது உண்மையிலேயே
ஒரு அற்புதமான காலம் தான்
ஒருவர் மற்றவருடன் ஆத்மார்த்தமாக
கை குலுக்கிக் கொண்டார்கள்
ஆனால் அந்தக்காலம் காணாமல் போய்விட்டது மகனே
இப்பொழுதோ ஜீவனற்று கை குலுக்குகிறார்கள்
அதே நேரம் அவர்களது இடது கை
என்னுடைய வெற்றுப் பையில்
எதையோ தேடியலைந்த வண்ணமேயிருக்கிறது.
ஒருவரை முதல் முறை வீட்டில் சந்திக்கும்போது
இது உங்கள் வீடு போல
அடிக்கடி வந்து போங்க என்று
அன்பொழுகச் சொல்கிறார்கள்
அடுத்த முறை நான் அங்கே சென்றால்
அதற்கும் அடுத்த முறை நான் அங்கே சென்றால்
ஒரு வேளை
மூன்றாவது முறையும் நான் அங்கே சென்று விட்டால்
என் முகத்திற்கு நேரே கதவுகள்
அறைந்து சாத்தப்படுகின்றன.

நான் நிறைய கற்றுக் கொண்டு விட்டேன் மகனே
உடைகளைப்போல நிறைய முகங்களை அணிவதற்கும்
நான் அவர்களிடம் கற்றுக் கொண்டேன் மகனே
எத்தனை எத்தனை முகங்கள்
வீட்டு முகம் , அலுவலக முகம்
வீதி முகம் , விருந்தளிப்பவர் முகம்
முகங்கள் முகங்கள் பல்வகை முகங்கள்
எனக்கு அத்தனையும் சிரித்தபடியே இருக்கும்படி
பார்த்துக் கொள்கிறேன்
சுவரோவியத்தில் வரைந்து வைத்த

மாறாத புன்னகை போலவே
நான் உதடுகளால் மட்டுமே சிரிக்க
கற்றுக் கொண்டு விட்டேன் மகனே
எந்திரம் போல சாரமற்று கைகுலுக்கவும்
கற்றுக் கொண்டு விட்டேன்
போய் வருகிறேன் என்று போலியாக
உரைக்கவும் கற்றுக் கொண்டேன் மகனே
( உள்ளூர வெறுப்பை உமிழ்ந்தாலும்கூட )
மகிழ்ச்சியற்ற போதும் உங்களைச் சந்திப்பதில்
மகிழ்கிறேன் என்று ஒருவரிடம் உரைக்கிறேன்
அயர்ந்து போகச் செய்யும்
ஒரு சாரமற்ற உரையாடலுக்குப் பின்பும்
உங்களோடு உரையாடியது அற்புதம் என்கிறேன்
வாய் நிறைய
ஆனால் நீ என்னை நம்ப வேண்டும் மகனே !
நான் உன்னைப்போல மாறிவிட விரும்புகிறேன்
ஆம் உன்னைப்போல நானிருந்த காலத்தில்
எவ்விதம் இருந்தேனோ அப்படியே
இவர்களிடம் நான் கற்றுக் கொண்டதையெல்லாம்
மறந்து விடவே விரும்புகிறேன்
ஆனால் நான் கற்றுக் கொள்ள விரும்புவது
உன்னிடமே
ஆம் முதலில் எவ்விதம் சிரிப்பதென்பதை
என் சிரிப்பை கண்ணாடியில் பார்க்கும்போது
விஷப்பாம்பின் பற்கள் தான் அங்கே மின்னிடுகின்றன

ஒரு காலத்தில் நானும் உன்னைப்போலவே
வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டிருந்தேனே மகனே
அதை நீ எனக்கு மீண்டும் கற்றுத் தருவாயா ?
ஆத்மார்த்தமாக சிரிக்க
ஆம் ஆனந்தமாக புன்னகைக்க….

— கவிஞர் கேப்ரியல் ஒகரா

ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு – தங்கேஸ்



Once Upon a Time

Once upon a time, son,
they used to laugh with their hearts
and laugh with their eyes:
but now they only laugh with their teeth,
while their ice-block-cold eyes
search behind my shadow.

There was a time indeed
they used to shake hands with their hearts:
but that’s gone, son.
Now they shake hands without hearts
while their left hands search
my empty pockets.

‘Feel at home!’ ‘Come again’:
they say, and when I come
again and feel
at home, once, twice,
there will be no thrice-
for then I find doors shut on me.

So I have learned many things, son.
I have learned to wear many faces
like dresses – homeface,
officeface, streetface, hostface,
cocktailface, with all their conforming smiles
like a fixed portrait smile.

And I have learned too
to laugh with only my teeth
and shake hands without my heart.
I have also learned to say,’Goodbye’,
when I mean ‘Good-riddance’:
to say ‘Glad to meet you’,
without being glad; and to say ‘It’s been
nice talking to you’, after being bored.

But believe me, son.
I want to be what I used to be
when I was like you. I want
to unlearn all these muting things.
Most of all, I want to relearn
how to laugh, for my laugh in the mirror
shows only my teeth like a snake’s bare fangs!

So show me, son,
how to laugh; show me how
I used to laugh and smile
once upon a time when I was like you.

Gabriel Okara



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *