இது மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ்நாவல் என வகைப்படுத்துகிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். கொலும்பன், சித்திரை, மயிலன் ஆகிய மூவர் பார்வையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் பண்பாடு
பேசப்பட்டிருக்கிறது. பாணர்கூட்டம் ஒன்று பறம்புமலைநோக்கித் தமது பயணத்தைத் தொடங்குகிறது. ஏழிமலை சிற்றரசன் நண்ணனின் அவைப் புலவர் பரணர் அவர்களுக்கு
வழிகாட்டுகிறார். வேள்பாரியிடம் சென்று பாடிப் பரிசில்பெற்று வந்தால் காலமெல்லாம் வாழமுடியும் என்கிறார். அவர்கள் பயணிக்கத் தொடங்குகின்றனர். பெரும்பாணன் தலைமையேற்று வழிநடத்துகிறார். அவர்கள் நோக்கம் இரண்டு. ஒன்று வேள்பாரியைச் சந்தித்துப் பாட்டும் கூத்தும் ஆடிப் பரிசில் பெறுவது: இரண்டு காணாமல் போன கொலும்ப்பனின் மகனும் சித்திரையின் சகோதரனுமாகிய மயிலனைத் தேடிக்கண்டுபிடிப்பது. மயிலன் வெகுகாலத்துக்கு முன்பே அவர்களிடமிருந்து காணாமல் போய்விட்டான். அவனை நினைத்தே அவன் அம்மா
உடல்நைந்துபோனாள். பயணிக்கிறார்கள். போகுமிடமெல்லாம் அவர்களுக்கு உபசரிப்புக் கிடைக்கிறது.

உழவர்களும் வணிகர்களும் ஏன் பரத்தையரும் கூட அவர்களுக்கு உணவளித்து வழியனுப்புகின்றனர். ‘விருந்தோம்பல்’ என்ற பழைய பண்பாடு மக்கள் மனமெங்கும் ஆழ்ந்து கிடப்பதால் அவர்களுக்கு நடைவழிப்பயணம் எளிதாகிறது. (விருந்தோம்பல் எனும் தமிழர் பண்பாட்டை நுட்பமாகக் கலைநயம் குன்றாமல் விதந்தோதுகிறது நாவல்.) பறம்புமலை சென்றடைந்தபோது பெரும்புலவர் கபிலர் அவர்களை வரவேற்கிறார். மன்னனைப்பாடிப் பரிசுபெற வந்த்திருப்பதாகச் சொல்கின்றனர். அவரும் அதற்கு ஏற்பாடு செய்கிறார். அவர்களைக் கவனிக்க சாமி என்பவனை நியமிக்கிறார். அவன் வேறொருவனிடம் அந்தக்கடமையை ஒப்படைத்துவிட்டு ஒளிந்துகொள்கிறான். மன்ன்னைச் சந்தித்து அவனது கொடைத்தன்மையைப் பாராட்டி நிகழ்ச்சி
நடத்துகிறார்கள். பாணர்கள் பாட கூத்தர்கள் ஆடுகிறார்கள். மனம் மகிழ்ந்த வேள்பாரி “என்னவேண்டும்?” என்று கேட்கிறான். கூத்தர் கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. “உங்கள் நாடு வேண்டும்.”

நிலம் பூத்து மலர்ந்த நாள் – Vamsibooks

ஏதோ சதிநடக்கிறது எனப் பாரிக்குப் புரிகிறது. மூவேந்தர்களையும் வென்று வெற்றிக்கொடியை நாட்டியபின் அவனைக் கொல்வதற்கான சதிவலை பின்னப்படுவதை ஏற்கனவே அறிந்திருந்தான் என்பதால் இந்தக் குரலும் அந்த சதிப்பின்னலின் ஒரு கண்ணி எனப் புரிந்து எழுந்து வாள்வீசுகிறான். திமுதிமுவெனக் கூட்டம் முண்டியடிக்கிறது. பாரியின் தலை மண்ணில் உருள்பிறது. அதோடு மயிலனின் தந்தை கொலும்ப்பனும் வெட்டிச்சாய்க்கபடுகிறான். அந்தக்கூட்டத்தின் ஊடே
சாமி ஓடுகிறான். அவன் மயிலன் போலத்தெரிகிறதே என பெரும்பாணன் நினைக்கிறார். பாரி இறந்தபின் அவன் மகளிர் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிடுனிறார் கபிலர். இந்த சதிக்குக்காரணம் அந்தப் பாணர்கள் இல்லையெனப் புரிந்த பறம்புவீரர்கள் அவர்களை விடுவிக்கின்றனர். பரிசில் கிடைக்காமல் தோல்வியோடு திரும்பும் பாணர்கள் சிறிதுகாலம்
அதியமான் அஞ்சியின் நிலப்பகுதியான தகடூரில் இடையர்களோடு தங்குகின்றனர்.
அவ்வையார் மன்னனை வழிநடத்தும் ராஜரிஷியாய்த் திகழ்கிறார்.

மயிலனின் தங்கை சித்திரை அவ்வையோடு பழக்கம் ஏற்பட்டு, அறிவுபெறுகிறாள். அங்கு மகீரன்
என்ற சேரநாட்டு வீரன் வருகிறான். சித்திரை அவனைக் காதலிக்கிறாள். பெரும்பாணனும் பெற்றதாயும் எவ்வளவுசொல்லியும் கேளாமல் களவொழுக்கம் செய்து அவனோடு சென்று விடுகிறாள். மகீரன் பயணிக்கும் பாதை பாலைநிலமாக இருக்கிறது. களவாடிவாழும் மறவர்கள் மகீரனைக்கண்டு அஞ்சுகிறார்கள். எந்தக் கொலைக்கும் கொள்ளைக்கும் அஞ்சாத அவர்கள் இவனைக்கண்டு ஏன் பயப்படவேண்டும்? அந்தக்கூட்டத்தில் இவனும் ஒருவனோ என்று நினைக்கிறாள் சித்திரை. அவளை அங்கேயே விட்டுவிட்டு மகீரன் போய்விடுகிறான். வெகுநாட்கள் வரை அவன் திரும்பி வரவேயில்லை. ஏற்கனவே சித்திரையைக் காதலித்த சொந்த அத்தை மகனாகிய சந்தன் அவளைக் கண்டுபிடித்துத் தன்னோடு அழைக்கிறான். மகீரன் ஓர் ஒற்றன்
என்றும் அவனை மறந்துவிடவேண்டும் என்றும் சொல்கிறான். அவள் அதை நிராகரித்துவிட்டு அவ்வையிடமும் விடைபெற்று வேறெங்கோ சென்றுவிடுகிறாள்.

ஏழிமலைக் காட்டை ஆண்ட நண்ணன் தனது தோப்பில் ஒரு மாம்பழம் திருடிவிட்டாள் என்பதற்காக சிறுமி ஒருத்தியைப்பிடித்து விசாரித்து மரணதண்டனை தருகிறான். அவள் கொல்லப்படுகிறாள். அவைப்புலவராகிய பரணர் தடுத்தும் இந்தக்கொலைபாதகம் நடக்கிறது. பரணரிடம் அரசியல்படித்து மன்னனின் ஆலோசகனாக மயிலன் இருந்தான். அவன் அறிவுறுத்தலினாலேயே அரசன் அந்தப் பெண்ணைக் கொல்கிறான். அதனால் கோபமுண்ட பரணர் அந்தநாட்டைவிட்டே போய்விடுகிறார். சேர அரசன் நண்ணன்மீது படையெடுத்தபோது மயிலன் ஓடி ஒளிந்துவிடுகிறான். அப்புறந்தான் மயிலன் அங்கிருந்து தப்பி மகீரனின் உதவியால் சேர அரசனின் ஒற்றனாகி பல்வேறு வியூகங்கள் வகுத்து பாணர்கூட்டத்தோடு தனது ஒற்றர்களை
நுழைத்து, வேள்பாரியைக் கொலைசெய்கிறான். பாரி வீழ்ச்சியடைந்தபின் கபிலர் சேரநாட்டில் தங்கியிருக்கிறார். சேர அரசன் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தான். ஆனாலும் பெரும்புலவர் என்பதால் சுதந்திரமாக வாழ அனுமதிக்கிறான்.

KV Jayashree got Sahitya akademi award for Nilam Poothu Malarndha naal

அவரைச் சந்திக்கிறான் மயிலன். “சாமி என்ற பெயரைவைத்துக்கொண்டு நீதானே பாரியைக் கொன்றாய்?” என்கிறார் கபிலர். “குற்றம் செய்தநான் வெளியிலிருக்க நீங்கள் உள்ளே இருக்கிறீர்கள்” என்று நினைக்கிறான் மயிலன். அவர் கேள்விக்குப் பதில்சொல்லும்பிதமாக “நீங்கள்தான் கொன்றீர்கள்” என்கிறான் மயிலன். அதிர்ச்சியடைந்து எப்படி என்கிறார் கபிலர். “பாரியைப் போரிட்டுக்கொல்லமுடியாது: ஆடிப்பாடிவந்து இரந்துகேட்டால் நாட்டையும் தருவான்” என்று நீங்கள்தானே பாடினீர்கள். அதனால் தான் பாணர் கூட்டத்தில் சேர்ந்து பறம்புநாட்டைக் கேட்டனர் மூவேந்தர்கள். ஆக நீங்கள்தான் பாரியைக் கொல்ல வழிசொன்னீர்கள்.” அதிர்ந்து போன கபிலர் பாலாற்றங்கரைநோக்கி நடந்து வடக்கிருந்து உயிர்நீத்தார். எழுத்தாளர் சு. வெங்கடேசன் “வீரயுக நாயகன் வேள்பாரி” எழுதிமுடித்தபோது அவரிடம் நான் கேட்டேன். “இந்தப்போரில் பாரி வென்றுவிட்டானே: பின் எப்போது அவன் கொல்லப்பட்டான்?” அதற்கு அவர் சொன்னார்: “அது ஒரு
பெருங்கதை. மூவேந்தர்கள் சூழ்ச்சிசெய்து கொன்றுவிட்டனர். இப்போது புரிகிறது: பாரி சூழ்ச்சி செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை அடிக்கருவாகக் கொண்டிருக்கிறது நிலம்பூத்து மலர்ந்த நாள்..

இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நிலத்தின் அரசியல் பண்பாடுசார்ந்த வரலாற்று நாவல் என்று சொல்லலாம். மூவேந்தருக்கும் அடங்காத குறுநில மன்னர்களின் மனிதநேசம் மக்களை அரவணைத்துநின்றதால் பெரிய வேந்தர்கள் அவர்களை நேரடியாகப் போரிட்டு வீழ்த்தமுடியாமல் இருந்தார்கள். குறுநில மன்னர்கள் பெரும்பாலும் அறிவாற்றல் மிக்க புலவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே யாருக்கும் அடிபணியாத வீரத்தோடும் மக்களுக்கு நல்வாழ்வுகிடைக்கச்செய்யவேண்டும் என்ற ஈரத்தோடும்
ஆட்சிசெய்தனர். அதனால்தான் இன்றளவும் தமிழ்மக்களால் அவர்கள் புகழ்ந்து பேசப்படுகின்றனர்.

“நிலம்பூத்த மலர்ந்தநாள்!” பூத்த என்பதற்கும் மலர்ந்த என்பதற்கும் சின்ன வேறுபாடுதான் இருக்கிறது. அரும்பிப் போதாகி இதழ்விரியப் போகும் (விடிந்தும் விடியாத பொழுதுபோல) அந்தத் தோற்றம்தான் ‘பூத்த’ என்பது. முற்றிலும் இதழ்விரிந்துவிட்டால் அது ‘மலர்ந்த’ என்ற எல்லையை அடைகிறது. இது ஒரு படிமச்சொல்போல் தெரிகிறது. ‘நிலம்பூத்து மலர்ந்த’ அந்தநாளில்தான்
பாரி கொல்லப்படுகிறான் என்பதாய் இருக்கலாம். ‘மலர்ந்த’ என்றால் ‘பொலிந்த’ என்றும் பொருள்படும் என்கிறார் நாஞ்சில்நாடன்.

இலக்கியரசனை குன்றாத நல்ல மொழியாக்கம். சுவைத்துச்சுவைத்து வாசிக்கமுடிகிறது.

நிலம் பூத்து மலர்ந்த நாள்!
மலையாள நாவல்.

ஆசிரியர்: மனோஜ் கரூர்.

தமிழாக்கம்: கேவி. ஜெயஶ்ரீ

வெளியீடு:  வம்சி 

புக்ஸ்விலை: ரூ. 285

………………தேனிசீருடையான்.

One thought on “புத்தக அறிமுகம்: “நிலம் பூத்து மலர்ந்த நாள்” – தேனிசீருடையான்”
  1. படிக்கத் தூண்டும் படியான எழுத்துநடை..வேள் பாரியை படிக்கத் தொடங்கியவுடன் புத்தகத்தை கீழே வைக்க மனம் வராது.அதுபோல் இப்புத்தகமும் இருக்கிறது.ஊரடங்கில் புத்தகம் வாயிலாக உலகை சுற்றுகிறோம்.கால இயந்திரத்தில் பின்னோக்கி பயணித்து கபிலருடனும் மாமன்னர்களுடனும் உடனிருந்து கதைத்தது போன்ற உணர்வு.

    புத்தகத்தை படித்து உள்வாங்கி அதனை சுவைபட அறிமுகம் செய்துள்ளீர்கள் தோழர்.அற்புதமான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றியும் ப்ரியமும் தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *