இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘ஓய்ந்திருக்கலாகாது’ என்னும் நூல் பதின்மூன்று கல்விச் சிறுகதைகளை கொண்டுள்ளன.

ஒவ்வொரு கல்விச் சிறுகதையும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டவையாகும்.

வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைத் தொகுப்பு என்பதால் வெவ்வேறு காலம்,நிலப்பரப்பு மற்றும் அதனுடைய வட்டார மொழியின் சுவையையும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஓடி விளையாடு பாப்பா நீ ...

உயர்நிலைப் பள்ளியில் சேர தகுதியான மதிப்பெண் பெற்றிருந்த போதிலும் சமூக ஏற்றத் தாழ்வுகளால் புறக்கணிக்கப்படும் தங்கராசு,எளக்காரம் கதையில் காட்டப்படுகின்ற சாதியின் கோர முகம்,வழித் தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கின்ற கப்பல்களுக்கு உதவுகின்ற கலங்கரை விளக்கம் போல சமூகத்தில் வாழ்கின்ற அடித்தட்டு மக்களுக்கும் கல்வி என்னும் கலங்கரை விளக்கின் வெளிச்சம் பாய வேண்டும் என துடிக்கின்ற மிலிட்டரி மாமா,பள்ளித் தளம் கதையில் புறக்கணிக்கப்படுகின்ற பழங்குடி மக்களின் கல்வி,வீட்டின் வறுமையால் கல்வி மறுக்கப்பட்டு குழந்தை தொழிலாளியாகி போன சின்னச்சாமி இப்படி ஒவ்வொரு கதையும் வாசிக்கின்ற நம்மிடையே ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி செல்கின்றது.

ஒவ்வொரு கதை வாசிக்கும் போது அக்கதை ஏற்படுத்தி தந்த அழுத்தங்களால் நமக்குள் பல கேள்விகள் தோன்றும்.அதற்கான பதில்களாக சரியானவற்றை தேர்ந்தெடுத்து நாம் குழந்தைகளிடம் செயல்படுத்த வேண்டும்!

கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் உத்வேகம் நமக்குள் பிறக்கும்!

பெரும்பாலான கதைகள் எழுதப்பட்ட காலங்கள் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.இருப்பினும் பல கதைகள் இன்றைய கல்விச் சூழலுக்கும் பொருந்திப் போவதை பார்க்கும்பொழுது கல்வியில் மிகப்பெரிய எழுச்சியை கொண்டு வர வேண்டும் என உணர்த்துகிறது!

ஓய்ந்திருக்கலாகாது! ❣️

தொகுப்பு : அரசி – ஆதிவள்ளியப்பன்.
பக்கங்கள் : 144
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்.
விலை  :120/-

– ரேகா ஜெயகுமார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *