2004 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் “சண்டக்கோழி” படம் சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் ஏவிஎம், பிரசாத் போன்ற ஸ்டுடியோக்களுக்குள் அத்தனை சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. செக்குரிட்டி தொரத்திவிடுவார் அல்லது ஆயிரத்து எட்டுக் கேள்விகள் கேட்பார். அத்தனைக்கும் பதில் தெரிந்திருக்கவேண்டும். ஒரு மார்க் மிஸ் ஆனாலும் உள்ளே செல்ல முடியாது. அல்லது டிப்டாப் ட்ரெஸ் அணிந்து யாரையும் கண்டு கொள்ளாமல் விருவிருவென நடந்தால், விஐபியென நினைத்து விட்டுவிடுவார்கள். சும்மாவே நம்ம ட்ரெஸப் பாத்து நாய் குரைக்குது இதுல எங்க போறது விஐபி கெத்துக்கு. இந்தக் கோடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கைப்பேசிக் காலம் வந்தது. ஸ்டுடியோவுக்குள் போகும்போதே ஏதோ முக்கியமான கால் பேசுவதுபோல் ஆக்ட் பண்ணியபடி உள்ளே சென்றால் நம்மை வழிமறிக்க மாட்டார்கள். இப்போது வரை நான் இந்தக் கொள்கையைத் தான் பின்பற்றுகிறேன். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை விஐபி என்றால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் மட்டும் தான். அது ஒரு பஞ்சாயத்துக் காட்சி ராஜ்கிரண் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் தான் இயக்குநர் லிங்குசாமி என்பது நான் ஏற்கனவே அறிந்ததுதான், ஆனால் அவர் வேலை செய்யும் விதத்தைப் பார்த்ததில் எனக்கு அவர்மேல் இருந்த மரியாதை மேலும் கூடியது. விசால் நாயகனாக நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆகி சக்கைப் போடு போட்டது. நண்பர் கவிஞர் ந. முத்துக்குமார் எழுதிய “தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு” பாடல் பெரிய ஹிட்.https://bookday.in/paadal-enbathu-punaipeyar-webseries-24-writter-by-lyricist-yegathasi/

இயக்குநர் லிங்குசாமி என்பவருக்குள் மிகச் சிறந்த கவிஞர் இருப்பார். மிகச் சிறந்த ரசிகர் இருப்பார். அவருக்கு திரைப்பட நண்பர்களுக்கு இணையான இலக்கிய நண்பர்கள் உண்டு. இவ்விரண்டுக்கும் இணையான சாமானிய மனிதர்களின் நட்பும் உண்டு. அத்தனை எளிமை. அத்தனை இனிமை. ஒரு நாள் அவரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. நான் எனது ஹைக்கூ நூலான “ஹைக்கூ தோப்பு” ஐ அவருக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்றேன். அவரை நான் சந்திக்கிறவரையிலும் எனக்குள் முதன் முதலில் நான் அவரை நேரில் பார்த்த “சண்டக்கோழி” படப்பிடிப்பும் அவரது பரபரப்பும் மட்டுமே வந்து வந்து போனது. அலுவலகம் கலையால் நெய்யப்பட்டிருந்தது. அவரது அழகிய மனம் போல் அலுவலகமும் இருந்தது. அடுத்தபடியாக அவரின் மூன்றாம் கை இயக்குநர் கவிஞர் பிருந்தாசாரதி அண்ணன் அலுவலகத்தை அலங்ரித்துக் கொண்டிருந்தார்.

எனது “ஆத்தா ஓஞ்சேல” பாடலை மனம் திறந்து பாராட்டினார் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உச்சபட்ச பாராட்டுக்குமேல் ஒன்றிருந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது எனக்கது. பின்பு எனது சில திரைப்பாடல்கள் மற்றும் சில ஹைக்கூ கவிதைகளை சிலாகித்தார். நான் எனது நூலை அவருக்களித்தேன். அவர் அவரது “லிங்கூ” எனும் அழகிய நூலை எனக்களித்தார். பல பேச்சுக்கள் ஓடின. இறுதியாக அழைத்த விசயம் சொன்னார், நான் தற்போது இயக்கும் படத்தை முடித்துவிட்டு “சண்டக்கோழி – 2” எடுக்கும் திட்டம் இருக்கு,. அதில் நீங்கள் ஒரு பாடல் எழுதவேண்டும் என்றார். என் மனம் அப்போதே என் காலில் கத்தியைக் கட்டி களம் இறங்கத் தயாராகியது.

ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. “சண்டகாகோழி – 2” தொடங்கியாச்சு வாருங்கள் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோ என்றார். அது ஓர் இரவு சந்திப்பு. வந்து சிறிது நேரம் காத்திருப்பின் பின் நண்பர் யுவன் சங்கர் ராஜா வந்து கீபோர்டில் விரல்கள் பாவ, மெட்டு ஈரத்தரையாய் இதம் வார்க்க, “கம்பத்துப் பொண்ணு கம்பத்துப் பொண்ணு” சொற் பூக்கள் உதிரத்தொடங்கின. சரியாக ஓர் இரண்டுமணி நேரத்தில் பாடல் ரெடியானது. அந்த வாரத்திலேயே குரல் பதிவு நடந்தது. யுவன் சங்கர் ராஜா கொஞ்சிக் கொஞ்சிப் பாடித் தந்தார். பாடலைக்கேட்ட அண்ணன் லிங்குசாமி அவர்கள் என்னைக் கட்டியணைத்து எனக்கு ந.முத்துக்குமார் கிடைச்சிட்டார் என நெகிழ்ந்தார். நான் சிறகடித்தேன். அவருக்கு “தாவணி போட்ட” தீபாவளியைப் போல் குறைவின்றி ஒரு பாடல் வேண்டும் என்பது இலக்கு. ந.முத்துக்குமார் இல்லாததால் நடந்தேறாமல் போய்விடுமோ என்கிற சந்தேகம் இருந்திருக்கிறது அவருக்கு. அது இப்போது அறவே இல்லை. “பாம்பாட்டம் ரெட்ட சடடா” வரியை கொண்டாடினார். படப்பிடிப்பில் பலமுறை கதாநாயகன் விசால் ரசித்தது “ஈசல் றெக்கை பிச்சு வந்து இதயத்த நெஞ்சுக்கிட்ட” வரியை என அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம். படத்தில் அந்தப் பாடலை மிக அழகாய் விஷுவல் செய்திருப்பார்கள். அந்த திருவிழா கூட்டத்தில் விசாலும் கீர்த்தி சுரேஷும் மான்கள் போல் ஓடி கொஞ்சுவது பார்ப்பவர்களையும் காதலிக்கச் சொல்லும்.https://bookday.in/paadal-enbathu-punaipeyar-webseries-24-writter-by-lyricist-yegathasi/

பல்லவி:
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்குற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

ஆலமரத்து எலடா
அவ கன்னக் குழியில விழடா
பாம்பாட்டம் ரெட்டச் சடடா – இப்போ
பாக்குது என்னத் தொடடா

அடடடட…
மஞ்ச செவப்புக் கண்ணாடி போல
என்ன நீ சாய்க்காத
அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத

போடி போ தாங்கல
ராத்திரிப் பூரா தூங்கல

கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

சரணம் – 1
தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
அம்மியா அரைக்கிற ஆளா நீ அசத்துற
மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்தப் பாச்சுற

சவ்வு மிட்டாயி வாட்சப் போல
என்னதான் கட்டிக்கிட்ட – அடி
குச்சி ஐஸு கறையப் போல
சட்டையில ஒட்டிகிட்ட

கடுங்காபி இதம் போல
மனச நீதான் ஆத்துற
கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

சரணம் – 2
ராட்டினம் போலத்தான் தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்கறேன் வார்த்தையே சிக்கல
கையில பேசுற கண்ணுல கேக்குற
காதுல கம்மலப் போல மனச நீயும் ஆட்டுற

பஞ்சு மிட்டாயி ரெண்டத் திருடி
கன்னத்தச் செஞ்சுக்கிட்ட – அடி
ஈசல் றெக்கையைப் பிச்சு வந்து
இதயத்த நெஞ்சுக்கிட்ட

ஆத்தாடி காத்துல
உன் பேரத்தான் கூவுறேன்…
கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

இந்தப் பாடலுக்கு சிங்கப்பூரில் கூடுதலான வரவேற்பும் கொண்டாட்டமுமாம், நான் இயக்கிய முதல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் சொன்னார். காரணம் “கம்பம்” என்பதற்கு கிராமம் என்பது அங்கே பொருளாம். அப்படியெனில் அந்தப் பாடல், “கிராமத்துப் பொண்ணு…
கிராமத்துப் பொண்ணு…” என்ற அர்த்தத்தில் தங்கள் மொழியில் முதல் வரி அமைந்தவண்ணம் வந்துள்ள பாடலென மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இந்தப் பாடலுக்காக 2018 ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் V4 அவார்ட் எனக்குக் கிடைத்தது. இந்த விருது நிகழ்விற்குத்தான் நான் முதன்முதலாக குடும்பத்தோடு சென்றிருந்தேன். விருதைப் பெற்று நான் பேசியது,

“பாட்டெழுத வாய்ப்பளித்த அண்ணன் லிங்குசாமி அவர்களுக்கும், விருதுக் குழுவினருக்கும் மற்றும் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்காமல் பாட்டெழுதும் சம்பளத்தில் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு, கதை கவிதை பாடலெனச் சுற்றித்திரியும் ஒரு பைத்தியத்தை இத்தனை ஆண்டுகளாக பொறுத்தருளும் என் குடும்பத்திற்கும் என் நன்றி”

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *