Thu. Pa. Parameshwari Poems 6. து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள் 6




1
நானாகிய நீ…..
எங்கும் நீ…
எதிலும் நீ…
எப்போதும் நீ….
எப்பவும் நீ…
எப்படியும் நீ…
நீ..
நீ…
நீ..
யார் நீ???..
என்னில் நீ…
என் எண்ணில் நீ..
என்னை நீங்கா நீ..
யாவையுமாய் நீ….
யாவுமாய் நீ….
அன்பே.
நானே நீ…

2
எழில்மிகு இயற்கை
கார்மேகம்
தூறல்
சாரல்
மழை
வெள்ளம்
காற்று
புயல்
இடி
மின்னல்
இதில் எதுவாக நீ…
இவையெல்லாமுமாக நீ..
உன் அனைத்து பரிணாமங்களையும் கண்டுண்ணும் களப்பிறை நான்..
எப்போதும் விண்மீனாய்
சுற்றி சுற்றி வரும்
உன்‌ ரசிகன் நான்..
என் கண்மணியே..

3
பறத்தலின் நிமித்தம் சிறகானேன்
அடர்ந்த இருட்டறை
ஆழ்நித்திரை நிமித்தம்
கண்மூடிக் கிடக்கிறேன்..
யுகங்கள்‌ பல கடந்தன..
ஏதும் தெரியாது…
எதுவும் அறியாது..
நினைவற்று
ஒரு தவநிலைப் போல
நெடுங்காலப் பயணம்
அவ்வப்போது ஒலித்தன
ஒருசில சலசலப்புகள்..
அனைத்திற்கும் செவிமடுக்காதொரு புறக்கணிப்பு
நானே அறியாது
தானே தெரியாது
நீள் நித்திரையின்
திடீர் விசனத்தில்
லிங்கத்தின் அரூபம்
வந்து மறைந்தது….
சட்டென அதிர்வொன்றெழ..
அதிர்வின் அணைப்பில்
மெல்ல மெல்ல நகர்ந்தேன்..
பனிப்பாறையின் வழுவழுப்பில்
உடல் தானே துளிர்த்தது
பூ பூவாய் மலர்ந்து நகர்ந்தது..
எங்கும் சுகந்தம் வீசக் கண்டேன்
எட்டி உதைக்கவும் முட்டி மோதவும்
உடல் இசைந்தது.
நகரந்தேன்
நுகர்ந்தேன்
இசைந்தேன்
அசைந்தேன்
இறுதியில்
வந்தேன்
விழுந்தேன்
உயிர்த்தேன்..
வெளிச்சத்தின் வெளியில்
ஆனந்தம் பெருக்கு..
கண்ணீர் கதறலாய்
ஓங்கியெழுந்தது..
மெய் லேசானது பரவசத்தில்
சிறகடித்துப் பறந்தது மனம்
மீண்டும் பிறப்பெடுத்தேன்..
உனக்காக…..
பறத்தலின்‌ நிமித்தம் சிறகானேன்..

4
என்னடா வாழ்க்கை இது..
இருள் கவ்விய அடர்‌வெளியில்
அங்கேயொரு…
மெல்லிய பஞ்சின் ஒரே சீராய் சிறுபுள்ளி போல்
‌சுடர் விட்ட தீப ஒளிக்குள்
மஞ்சள் மையமிட..
செக்கச் சிவந்த கூர்மை இதழை
சன்னமாய்‌த் தூண்டி விட..
அடர் ஒளியெங்கும் பரவ..
தீப ஜோதியின் தீபாராதனை..
தெறிக்கும் சுடர் ஜோதியில்
வெண்நிற‌ ஆடையுடுத்தி
மின்னினாள் தேவதையொருத்தி
மதியொலி‌ ஓசை கண்களைப் பறிக்க..
கருநிற கூந்தல் கார்மேகமாய்
தோளில் தவழ..
ஒளி‌பொருந்திய‌ மத்தியில்
சிவப்பு வண்ண வட்டம்
தீபத்தை மிஞ்ச..
கரிய கோட்டின் மேல் நாவல்பழமிரண்டு
விண்மீனாய் மின்ன..
செர்ரி பழங்கள் இருபுறமும்
இனிப்பைக் கூட்ட…
தாமரை இதழிரண்டு
தேனூறி நிற்க..
சலங்கை கட்டிய வாழைத்தண்டுகள்
மெல்லிசை ஒலிக்க..
அன்னநடையிட்டு
ஒய்யார இடையில்..
வானவில்லாய்
எனை‌நோக்கி வந்தாள்..
சட்டென‌ கண் விழித்தேன்..
சுற்று முற்றும் பார்த்தேன்…
வர்ணம் பூசிய வாழ்க்கை..
கண்முன்‌ விரிந்தது…
சற்றே பித்துக்குளியானேன்.
ஏக்கப் பெருமூச்சிட…
மீண்டும் புகுந்தேன்..
அதே…
கறுப்பு வெள்ளைச் சட்டகம்
என்னடா வாழ்க்கை ‌இது…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *