நா.வே.அருளின் இரண்டு கவிதைகள்

Poet Na. Ve. Arul Two Poetries (தவம், மூச்சு) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.தவம்
********

அப்படியான ஓர் எழுதுகோலுக்காகத்தான் தவமிருக்கிறேன்.
கடை கடையாய் ஏறி இறங்கியாச்சு
எந்த எழுதுகோலும் போதுமானதாயில்லை
அது ரொம்பவும் குட்டையாக இருக்கிறது
மேலும் மொண்ணையாக …
சொல் புத்திக் கேட்டுக்கொண்டும்
சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும்…
இறைந்து கிடக்கும் மண்டையோடுகளைப் புறக்கணித்து
அவற்றின்மேல் அமரும் வண்ணத்துப் பூச்சிகளுக்குக்
கூண்டுகள் தயாரித்துக்கொண்டும்…
அபலைகளின் இதயத்தை அலட்சியம் செய்தும்
காலில் தட்டுப்படும் சடலத்தைக் கண்டு கொள்ளாமலும்…
எந்த எழுதுகோலும் போதுமானதாயில்லை.

காலத்தை மீட்கும் கனவுகளுடன்
புடம் போட்டெடுத்த ஒரு புதிய எழுதுகோல்!
கிடத்தினால் …
தேசத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை
தொடுகின்ற நீளம்
ஒரு நதியைப்போல வளைந்து வளைந்து ஓடி
மரங்களின் சருகுகளைப் படகுகளாக்கி
மண்ணில் புரண்டு கடலில் கலக்க வேண்டும்
கடலை மையாய்ப் புசிக்க வேண்டும்

எழுதுகோல்
உழவனின் தோளில் கலப்பையாய்
பாட்டாளி கையில் ஸ்பேனராய்
தொட்டுத் தொட்டு எழுத இதயமே மைக்கூடாய்
காதலர்களின் கண்களாய்
கடைசி வரைக்கும் கழன்று விழாத
ஆறாம் விரலாய்…

இஸ்லாம் கூறும் ஜனநாயகம் ! - Sri Lanka Muslim

மூச்சு
********

ஜனநாயகத்தின் கூரை மீதேறிக் கத்தும்
கவிஞனுக்கு
புகைக் கூண்டில்
சடலத்தின் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது.

ஜனநாயகத்திற்கோ
தனது முகத்தைப் பார்த்துக்கொள்ள
பொருத்தமானதாக
ஒரு நிலைக் கண்ணாடி கிடைத்தபாடில்லை

நாற்காலிகளின் சர்க்கஸ் கூடாரத்தில்
கவிஞன் மிகப் பெரிய கோமாளியாக்கப் பட்டிருக்கிறான்.
அவன் மூக்கின் நுனியில் செருகப்பட்டிருக்கும் பூசணிக்காய்
தலையில் பல கூம்புகள் கொண்ட குல்லாய்
முகம் முழுதும் கறுப்பு வண்ணம்
வன்முறைகள் ஏவப்படும் வனவிலங்குகளின் ரணங்களை
மேலும் காயப்படுத்தும் கைத்தட்டல்கள்

எழுத பேனா எடுக்கையில்
தாளின் கோடுகள்
சிறைக் கம்பிகளாக மாறிவிடுகின்றன.

வட்ட வடிவிலிருக்கும் நாடாளுமன்றம்
மிகக் கனத்தத்
தூக்குக் கயிறாகக் காட்சியளிக்கிறது!

வழக்குத் தொடுக்கமுடியாத
வார்த்தைகளாகத் தேடி
கவிதை எழுத ஆரம்பித்தால்
நல்ல கிளிக் கவிஞனாகலாம்.

கல்லறையை உறுதி செய்துவிட்டு
எழுத வந்த கவிஞன்தான்
மக்களுக்கான
பொழுதுபோக்கு எலும்புக்கூடு

இப்படியான நெருக்கடிகளில்
எழுத நேர்ந்த கவிதைகளில்தான்
ஜனநாயகம் தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது.

–நா.வே.அருள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.