Pookalin Sethi Poem By Navakavi நவகவியின் பூக்களின் சேதி கவிதை




“புன்னகை பூக்கின்றீர்கள்
பூக்களே யார் நீங்கள்?”
“மாண்ட பின் மீண்டும் பிறந்த
மழலைகள் ஐயா நாங்கள் ”

“மாண்டவர் வான் போவாராம்
மண்ணில் ஏன் மீண்டும் பிறந்தீர்?”
“அம்மாவின் பக்கம் இருக்கும்
ஆசையால் தங்கி விட்டோம்”

” இவ்விடம் இருக்கும் சேதி
எவ்விதம் அறிவாள் அம்மா?”
“தென்றலில் வாசம் | அனுப்பி
தெரிவிப்போம் அம்மாவுக்கு ”

“ஆயிரம் வகைவா சங்கள்
அறிந்திடல் இயலுமோ சொல்?”
“அவரவர் குழந்தை வாசம்
அம்மாக்கள் அறிவார் ஐயா”

“அன்னையைக் கண்டால்இன்று
அழுவீரோ அம்மா என்று?”
“தேனையே கண்ணீராக்கி
சிந்துவோம் வழியில் நின்று !”

“அல்லியே வெள்ளைக்கார
அம்மாவா உனது அம்மா?”
“இல்லை; என் ஆசை அம்மா
இதயத்தால் வெள்ளை அம்மா!”

“செண்பகப் பூவே உன் தாய்
சிவப்பையா நீயும் பெற்றாய்? ”
“செந்தணல் சிதைத் தீ பட்டு
செந்நிறம் பெற்றேன் ஐயா!”

“புஷ்பங்காள்!நீர் இப்போது
புகல்கின்ற சேதி யாது?
“மலருக்கும் மழலை யர்க்கும்
மரணமே வரக்கூடாது!”

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *