தன் மொழியை நடையை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும்,  தான் உணர்வு பூர்வமாக எழுதவரும் விஷயங்கள் அவனுக்குள் அப்படியே இறங்க வேண்டும் என்பதில் சில திட்டவட்டமான  கருத்துக்கள் பூமணியிடம் இருக்கின்றன.

பொன்னரிசி

பூமணி

அம்மாவின் சாவுக்காக ரெண்டு மகன்களும் முற்றத்தில் காத்திருந்தார்கள்.  அவர்களது பார்வை அடிக்கடி வாசலை விசாரித்தது.  வீட்டுக்குள்ளிருந்த மருமக்கள் மாறிமாறி வெளியே வந்து மூச்சு வாங்கிக் கொண்டு போனார்கள்.  அவர்கள் முகத்தில் அம்மா போய்விட்டதற்கான அறிகுறியில்லை.  காலம் தாழ்ந்து கொண்டிருந்த உதட்டுப் பிதுக்கம்.

அப்பா ஈஸிச்சேருக்குள் ஒதுக்குப் புறமாக நொறுங்கிக் கிடந்தார்.  அவர் உள்ளங்கையில் சாய்த்த நெற்றியை இன்னும் எடுக்கவில்லை.  

நிலைமையை உத்தேசித்து எல்லாரும் அவசரமாகச் சாப்பாட்டை முடித்திருந்தார்கள். ஏதாவது ஆகிய பின் சாப்பிட முடியாது. அப்பா மட்டும் பிடிவாதமாக மறுத்துவிட்டார். 

அம்மாவை நடு ஹாலில் கிடத்தியிருந்தார்கள். காலும் கையும் போட்டதுபோட்டவாக்கில் அசைவற்றுப் படுத்திருந்தாள். இருபுறமும் உட்கார்ந்திருந்த மருமக்கள் கையைப் பிடித்து வளையல்களை விலக்கிக் கொண்டு நாடி பார்த்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் அம்மாவை மூத்த மகன் ஆட்டோவுக்குள் திணித்துக் கொண்டு வந்து இறக்கிப் போட்டான். அம்மா திடமாக இருப்பதாக நேற்றுத்தான் சொல்லியனுப்பியிருந்தார்கள். அதுக்குள் என்ன வந்து விட்டது. அப்பா தட்டுத் தடுமாறி எழுந்துபோய் பேசிப் பார்த்தார். பயனில்லை. அப்பா ஒடிந்து உட்கார்ந்து விட்டார்.

அம்மா மூத்தவனுடன் இருந்தாள். அப்பா ரெண்டாவது மகனுடன் இருந்தார். ரெண்டு மகன்களுக்கும் சென்னையில் வேலை. கடைசி மகன் கடலூரில் வேலை பார்த்தான். பெண்கள் கிடையாது. அம்மாவைக் கவனிக்க மூத்தவனுக்கு மற்றவர்கள் பணம் கொடுத்து வந்தார்கள். அப்பா கதை அப்படியில்லை. பென்ஷன் வருவதால் உடன்வைத்துக் கொள்ள எல்லாரும் தயாராக இருந்தார்கள். அவர் ரெண்டாவது மகனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

எப்போதாவது அம்மாவை அப்பாவின் கண்ணில் காட்டுவார்கள். ரெண்டு பேரும் விருந்தாளிகளைப் போன்று குசலம் விசாரித்துப் பெருமூச்சு விடுவதுடன் சரி, சாவகாசமாகப் பேச முடியாது. மனசுக்குள் அமுங்கிக் கிடக்கும் விஷயங்களைத் தோண்டியெடுத்து பேச்சை ஆரம்பிக்கும் முன் அம்மாவை அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள்.  இந்தக் கதை அஞ்சு வருசமாக நடக்கிறது.



கடலூர் தம்பிக்கு தந்தி குடுத்துடலாமா என்று பேசிக் கொண்டார்கள், பொறுத்துப் பார்க்கலாம், வரவழச்சு காத்திருக்கிறாப்புல ஆயிடக்கூடாது என்று தீர்மானித்தார்கள்.

வந்து தங்கினால் சோறு போடணும் அந்தக் கவலைதான், தம்பியாவது மண்ணாங்கட்டியாவது. 

பந்தல்,  நாற்காலி, பூ விவகாரங்கள், ஆபீசுக்கு சொல்லியனுப்புதல் விவாதிக்கப்பட்டது.

ஏண்டா அவசரம், அவள் மெதுவாகச் சாகட்டுமே. கஷ்டமாக இருந்தால் கழுத்தைப் பிடித்துக் கொன்றுவிடுங்கள். பிறகு எல்லா ஏற்பாடுகளையும் வேகமாகச் செய்யலாம்.

வாங்களேன் என்றபடி மூத்த மருமகள் ஓடி வந்தாள். இளைய மருமகள் எதிர்வீட்டு மாமியை அழைத்து வந்தாள். அம்மாவைத் தொட்டுச் சோதித்த மாமி குத்திட்டிருந்த இமைகளை மூடிவிட்டுப் போனாள்.

அப்பா வந்து அம்மா மொகத்தப் பார்த்துக்கங்க அழைத்தார்கள்.

நான் பார்க்கவில்லையென்றால் அம்மாவுக்கு வருத்தமா இல்லை உங்களுக்காக “நான் வரலை” என்றார்.

வீட்டுக்குள்ளும் வெளியிலுமாகத் தூங்கிவிட்டார்கள்.  அப்பா ஈஸிச்சேரைவிட்டு இடம் பெயரவில்லை. வெளிவாசல் திறந்தே இருந்தது, அம்மாவின் நகைகளுக்குக் காவலாக வாசலுக்குக் குறுக்கே மூத்த மகன் படுத்திருந்தான். அப்பா மகனைத் தாண்டிக் கொண்டு உள்ளே போனார். அவள் முகத்தை விரக்தியுடன் பார்த்துவிட்டுச் சுவரில் முட்டி முட்டி உள்ளுக்குள் உரக்க அழுதார்.  

காலையில் தப்பட்டைக்காரர்கள் வந்து விட்டார்கள். லாரி வந்து பந்தல் விரித்து நாற்காலிகளை இறக்கி விட்டுப் போனது. கடலூரிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த கடைசி மகன் அம்மாவிடம் “நீ சொன்னபடி செய்யாமப் போயிட்டயே!” என்று முறையிட்டான். “ஏண்டா, அதெல்லாம் சொல்லி அழற” மூத்தவன் கடிந்தான்.

மூணு பெண்களைப் பெற்றவன் அழத்தான் செய்வான். உங்களுக்கென்ன? இவன் என்ன கேட்டானோ அவன் என்ன சொன்னாளோ? 

பூவும் மாலையும் வந்தது, பாடை கட்டினார்கள்.  பிண வண்டி வந்துவிட்டது.  மூத்த மகன் டிரைவருக்கருகில் உட்கார்ந்து தீச்சட்டி வெளியே புகையும்படி பிடித்துக் கொண்டான்.  அப்பாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுபோய் டாக்ஸியில் அமர்த்தினான் இளைய மகன்.  

பிணத்தை இறக்கி சிதையில் வைத்தார்கள்.  

முள் செடிகளுக்கிடையில் கல்லறைகள் ஒளிந்திருந்தன. சிதையருகில் வாடிக் கிடந்த மாலைகளை ரெண்டு வெள்ளாடுகள் அக்கறையாக மேய்ந்து கொண்டிருந்தன.

அப்பா நிற்கத் திராணியில்லாமல் ஒரு கல்லறைத் திண்டில் உட்கார்ந்து காக்காயை வெறித்திருந்தார்.  “மாலையை மெல்லக் கழட்டு. அதுக்கப்பறம் நகைகளை ஜாக்கிரதையா கழட்டணும்” மூத்த மகன் சொன்னான்.

“கம்மல் மூக்குத்திய மெல்ல எடு.  கீழே விழுந்தா தேடி எடுக்க முடியாது கொப்பு இருக்குமே?”

“தாலிக் கொடி இருக்குதே”  எல்லாம் மூத்தவன்தான்.

“தாலி இருக்கட்டும்” வெட்டியான் சொன்னான்.

“அத எப்ப எடுக்கிறது?”

“பொறு நைனா நான் சொல்றென்”

அப்பா சிதையை நோக்கினார்.

நான் வந்து அவள் முகத்தைப் பார்க்கும்வரை தாலி கிடக்கட்டும், அதுவும் உங்களுக்குத்தான்.



அவர் சிதைக்கு வந்தார்.  வெட்டியான் எடுத்துக் கொடுக்க கயிற்றுத் தாலி கட்டி, அலுமினிய மெட்டி போட்டு, குங்குமம் வைத்தார். கண்களில் நீர் ஊறியமாதிரி இருந்தது. தங்கத் தாலியையும், வெள்ளி மெட்டியையும் கழற்றி மகனிடம் கொடுத்தார்.

வெட்டியான் கூவத்திலிருந்து கலயத்தில் தண்ணீர் மொண்டு வந்தான்.  மூத்த மகனுக்கு கோவம்.

“ஏம்ப்பா ஒனக்குக் கூவத்துத் தண்ணிதானா கெடச்சுது?”

அம்மாவுக்கு நல்ல தண்ணீரில் குடம் உடைக்கணுமென்ற அக்கறையா உனக்கு.  வேஷ்டியில் வழிந்தால் நாறும்.  வீட்டுக்காரி முணுமுப்பாள்

மூணு முறை வலம் வந்தான்.  

சிதையோரம் கையில் கம்புடன் உட்கார்ந்திருந்த கிழவனும் வெட்டியானும் கத்தினார்கள்

“அரிசியிடு, அரிசியிடு”.

“பொன்னரிசி, வெள்ளியரிசியிடு”

பலர் பிணத்தின் மீது காசு வைத்துவிட்டு அரிசியெடுத்துப் போட்டார்கள்.

கிழவன் எருக்களை எடுத்து பிணத்தின் மீது அடுக்கினான். வெட்டியான் மண்வெட்டியால் மண்ணை அள்ளி எருக்களை மூடினான்.

அப்பா, கற்பூரம் கொளுத்தி சிதையில் கொள்ளி வைத்தார்.  

“ஞாயித்துக்கெழம காலையில எட்டு மணிக்குப் பாலு”   வெட்டியான் உரக்கக் குரல் கொடுத்தான்.

எல்லாரும் தனியிடத்துக்குப் போனார்கள்.  அப்பா போகவில்லை.  கல்லறையில் சாய்ந்தபடி சிதையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வெட்டியானுக்குக் கணக்கை முடித்த ரெண்டாவது மகன், செலவுச் சீட்டை அடிக்கடி சரிபார்த்துக் கொண்டான். சட்டைப் பையிலிருக்கும் நகைப் பொட்டலத்தைத் தொட்டுப் பார்த்தான்.

தப்பட்டைக்காரன், வெட்டியான் எல்லாருக்கும் பைசல் செய்தார்கள்.

“எரிஞ்சு முடியிறவரைக்கும் யாராவது கூட இருக்க மாட்டாங்களா சார்.  அவன் எரிக்கறானா காவாயிலே தூக்கிக் கடாசுறானான்னு தெரியாது” பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் முணுமுணுத்தார்.

சிதை நெருப்புக்கு விரண்டு கல்லறைச்செடிகளைப் பிறாண்டிக் கொண்டிருந்த வெள்ளாடுகளின் வாலாட்டல் துல்லியமாகத் தெரிந்தது.

கல்லறையை இறுகப் பற்றியிருந்த அப்பாவை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனார்கள்.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *