Prime Minister Modi has not been generous in his defeat Article by Brinda Karat in tamil translated by T.Chandraguru தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை தமிழில் தா. சந்திரகுரு




Prime Minister Modi has not been generous in his defeat Article by Brinda Karat in tamil translated by T.Chandraguru தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை தமிழில் தா. சந்திரகுருமூன்று வேளாண் சட்டங்களை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்ற பிரதமரின் அறிவிப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) தலைமையின் கீழ் நடைபெற்று வந்த விவசாயிகளின் ஓராண்டு கால, வரலாற்றுச் சிறப்புமிக்க, ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும். தன்னுடைய தோல்வியில் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை.

போராட்டத்தில் வீரமரணம் அடைந்த எழுநூறு விவசாயிகளுக்காக அவர் தன்னுடைய உரையில் ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவித்திருக்கவில்லை. விவசாயிகள் மீதான பொய் வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்பதற்கான எந்தவொரு உறுதியும் அவரது பேச்சில் காணப்படவில்லை. பயங்கரவாதிகள், துரோகிகள், குண்டர்கள், சீர்குலைப்பவர்கள், பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் என விவசாயிகளுக்கு எதிராக அவரது கட்சித் தலைவர்களால் இந்த ஓராண்டாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் கடுமையான வார்த்தைகளுக்கான மன்னிப்பும் இருக்கவில்லை. லக்கிம்பூர் கேரியில் நடந்த பயங்கரச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்தவர் இன்னும் ஒன்றிய அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகிறார். மோடி அதுகுறித்து கனத்த மௌனம் காத்து வருகிறார்.

சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் விவசாயிகளில் ‘சிலரை’ நம்ப வைக்கத் தவறியதற்கு வருந்துகிறேன் என்று கூறி தன்னுடைய பக்கமே கோல் அடித்து வைத்திருக்கிறார். இங்கே ஒரு கேள்வி நம்மிடையே எழுகின்றது: இந்தச் சட்டங்கள் உண்மையிலேயே நல்லவை என்றால், அவற்றை ‘சில’ விவசாயிகள் மட்டுமே எதிர்த்திருந்தால், அவர் ஏன் அவ்வாறான நல்ல சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்? விவசாயிகளின் போராட்டத்தின் மையப்பகுதிகளான உத்தரப்பிரதேசம், பஞ்சாபில் வரவிருக்கும் தேர்தல்களில் ஏற்படப் போகும் அரசியல் வீழ்ச்சி என்பதைத் தவிர, சட்டங்களை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள அரசியல் அறிவியலாளர் எவரின் உதவியும் நமக்குத் தேவைப்படப் போவதில்லை.

வாய்ப்பு கிடைத்து அந்த மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றால், அரசாங்கம் அந்தச் சட்டங்களை மீண்டும் விவசாயிகள் மீது திணிக்கும் என்பதாகவே சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்போது கூட, சட்டங்களுக்கு ஆதரவாக இருந்த பிரதமரின் அந்தக் குரல் உரத்து, மிகத்தெளிவாக விவசாயிகளின் காதுகளை எட்டியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் முக்கிய போட்டியாளராக அதிகாரத்திற்கு வருவதற்காக காத்திருக்கும் சமாஜ்வாதி கட்சி, ஏற்கனவே ‘அவர்களுடைய நோக்கங்கள் பெருந்தன்மையுடன் இருக்கவில்லை; தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சட்டங்களைக் கொண்டு வருவார்கள்’ என்ற முழக்கத்தை உருவாக்கியுள்ளது.
Prime Minister Modi has not been generous in his defeat Article by Brinda Karat in tamil translated by T.Chandraguru தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை தமிழில் தா. சந்திரகுருகுறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வமான உத்தரவாதம் வேண்டும் என்று தாங்கள் எழுப்பி வரும் மிக முக்கியமான பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை, தங்களுடைய போராட்டத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட தீர்க்கப்பட வேண்டிய மற்ற பிரச்சனைகளும் விவசாயிகளின் தலைவர்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அந்தத் தலைவர்களில் பலரும் பிரதமரின் அறிவிப்பு குறித்து தங்களுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கை அவர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது. எனவே சட்டங்களைத் திரும்பப் பெறுவது என்ற நடவடிக்கையின் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை தேர்தல் களத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று பாஜக நினைக்குமென்றால், விரும்பத்தகாத ஆச்சரியத்திற்கே அந்தக் கட்சி உள்ளாக நேரிடும்.

பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு மேலும் ஓர் இழிவான காரணமும் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடந்தப்பட்ட வகுப்புவாத கலவரங்கள் பாஜகவிற்கு தேர்தல் பலன்களை அளித்தன. இம்முறையும் தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் தொடங்கியதில் இருந்தே, வகுப்புவாத நச்சு முழக்கங்கள், சிறுபான்மையினரைக் குறிவைத்து ‘லவ் ஜிஹாத்’ பிரச்சாரங்கள், வன்முறையுடனான பசுவதை எதிர்ப்பு பிரச்சாரங்கள், தங்கள் விருப்பப்படி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதற்கான உரிமத்தை காவல்துறைக்கு வழங்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் வகுப்புவாத ஒற்றுமையை சீர்குலைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

ஆனாலும் அவர்களுடைய வகுப்புவாத பிரச்சாரத்திற்கான எதிர்வினை மந்தமாகவே உள்ளது. மத சமூகங்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளிடம் இருக்கின்ற ஒற்றுமையானது பாஜகவின் இயல்பான தேர்தல் வியூகத்திற்குத் தடையாக இருந்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் இப்போதைக்கு விவசாயிகளின் பிரச்சனையிலிருந்து விடுவித்துக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்துகின்ற தங்களுடைய திட்டங்களை முன்வைப்பதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற முடியும் என்று பாஜக நம்புகிறது. விவசாயிகள் கற்றுக் கொடுத்திருக்கும் பாடங்களை அரசாங்கம் கற்றுக்கொள்ளுமேயானால் அது இந்தியாவிற்கு மிகவும் நல்லது.

பாடம் 1: முரட்டுத்தனமான பெரும்பான்மை என்ற பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற நடைமுறைகளைத் தகர்ப்பது பெருத்த இழப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும். மசோதாக்களை நிலைக்குழுவிற்கு அரசு அனுப்பியிருந்தால், விவசாயிகளின் கருத்தைக் கேட்பதற்கான வாய்ப்பை அளித்திருந்தால், நியாயமான வாக்குப்பதிவு நடைமுறைகளை பாராளுமன்றத்தில் அனுமதித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நிச்சயம் அந்த மசோதாக்கள் சட்டங்களாக மாறியிருக்காது.

பாடம் 2: எதிர்க்குரல்களைப் புறக்கணிப்பதும், அவமதிப்பதும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இந்த அரசு ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய ஒட்டுமொத்த அதிகாரத்தை விவசாயிகளை இழிவுபடுத்துவதற்கே பயன்படுத்தியது. ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினருக்கான நீதிக்காக வாதிடுபவர்களை ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்ததைப் போல, விவசாயிகள் தலைவர்கள் மீதும் தேச விரோதிகள் என்று முத்திரையைக் குத்தியது. இந்த நிலையில் மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக மற்றும் அதன் அரசுகளுக்கு எதிரான வெகுஜனப் போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் இயல்பாக மாறியது. விவசாயிகளின் ஒன்றிணைந்த இயக்கங்களின் பலம் அரசாங்கத்தைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.
எந்த விளக்கமும் தேவைப்படாத பாடம் 3: இந்திய தொழிலாளர் வர்க்கங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களுடைய துணிச்சலின் மூலம் சர்வாதிகாரம் பலிக்காது, சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்க முடியும் என்பதைச் சாதித்துக் காட்டியுள்ளனர்.
Prime Minister Modi has not been generous in his defeat Article by Brinda Karat in tamil translated by T.Chandraguru தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை தமிழில் தா. சந்திரகுருவிவசாய இயக்கத்தின் வெற்றி பரந்த தாக்கங்களைக் கொண்டிருக்கின்றது. இந்த வெற்றி நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் மீது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

https://www.ndtv.com/opinion/opinion-three-lessons-for-modi-government-from-farmers-struggle-2617153
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *