கவிதை: களத்து மேட்டு கனவு ~ ப்ரியா பாஸ்கரன்களத்து மேட்டு கனவு
மழ வந்தா வெதைக்க நெல் இல்ல
நெல்லு இருந்தா மழ வரல
மாசம் மும்மாரி பொழிய
மாரியம்மன வேண்டிக்கிட்டேன்…
நஞ்ச நிலத்துல நெல் மணியும்
கொல்லையில மல்லாட்டயும் வெதச்சிடலாம்…
நல்லா வெளஞ்சா தவுசு அண்ணங்கிட்ட
போன போகத்து வெத நெல்லுக்கு
வாங்கின கடன அடச்சிபுடலாம்…
தாலிய அடகுவைக்காம
புள்ளைக்கு காலேசு காச
வர பங்குனில கட்டிப்புடலாம்…
வளந்த பொண்ண காலா காலத்துல
கட்டிக் கொடுத்து கர சேத்துப்புடலாம்…
ஆடி காத்து ஓயாம அடிச்சி
ஐப்பசி மழ வுடாது பேயரதுக்கு முன்ன
ஒழுவுற வூட்ட ஓடு மாத்தி
குடியிருக்கக் குந்தகம் வராமா பார்த்துக்கிடலாம்…
சொக்கப்பனே கலப்பப் புடிச்சு
ஏரு உழுவர மனசும்
களப் பறிச்சி நாத்து நடும் உசிரும்
மகிழ காணி பூமியெல்லாம்
பூவா பூக்கோணும்
பேங்குல கடன வாங்காம
வெவசாயம் பண்ணோணும்.. …
முப்போகமும் நல்லா வெளஞ்சி
நல்ல வெலைக்கு விக்க நாதிவோணும்…
தரகு வெலையில நெல்ல
பணமுதலைங்ககிட்ட
விக்காம இருக்கோணும்…
வெளஞ்ச நெல்லுக்கு
வெல நிர்ணயம் செய்ய
வெதச்சவனுக்கு வழிவோணும்…
ஆத்தா இத எல்லாம் மீறி
எந்நிலத்து வருமானத்த
கார்பரேட்டு கம்பெனிகிட்ட இருந்து
காப்பத்தவோணும்…
வேகாத வெயில்ல
விளைஞ்ச உணவுக்கு
குளிர்பொட்டி அறையில வில நிர்ணயம்
பண்ணாம இருக்கோணும்…
எங்குலசாமியே
உடம்புல பலத்தயும்
நெஞ்சுல உரத்தயும்
கையில உழப்பயும்
கண்ணுல நம்பிக்கையும்
நெனப்புல உன்னையும்
வைச்சி வெதைக்கும்
இப்போகம் நிறவா வெளஞ்சி
களத்து மேட்டுல சேத்துக்
காசாக்கி கனவெலாம்
நனவாகக் கைகூடவோணும்…!
~ ப்ரியா பாஸ்கரன்
வட அமெரிக்கா.