Purdah (பர்தா) மாஜிதா

 

அடிப்படைவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் எல்லா மதங்களும்
இங்கு மனித மன உணர்வுகளுக்கும்
தனிமனித உரிமைகளுக்கும் எதிரானவையே.. அடிப்படை வாதத்தின்  அடக்குமுறை, அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்கும். அவர்களின் நலன் பேணும்.
அடிப்படைவாதம், பல்வேறு தளங்களில், முன்னோர்களின் வழி என்றும் தொன்று தொட்டு வரும் பழக்கம் என்றும் அதுவே நமது பண்பாடு என்றும்
பெரு ஊடகங்கள் வழியாக காலத்திற்கு ஏற்ற முறையில் மனித மனங்களுக்குள் கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உலக ஆண்களின் அத்தனை பயங்கரவாதமும் பெண் உடல் மீது இங்கு நிகழ்த்தப்பட்டு வருகிறது தொடர்ந்து.
வடிவங்களும், வழிமுறைகளும், செயல்முறைகளும் வேறு வேறாக.  நாடு பிடிக்கும் போர் என்றாலும் சரி, சொந்த நாட்டின் மீது நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாதம் என்றாலும் சரி,
அதில் முதல் பலியாவது
பெண்களும், அவர்களின் உடல்களும்.
எவரின் உணர்வுகளுக்குமே செவிசாய்க்காத  பயங்கரவாதம், எதேச்சதிகாரம், பாசிச எண்ணம்,
மத அடிப்படைவாதத்தையும் உள்வாங்கி, பெண்களின் மன உணர்வுகளை,  உரிமைகளைப் பற்றி  பேசிடும் நாக்குகளை வெட்டி எறியத் தயங்காது. எல்லோரையும் விட அவர்களுக்கு பெண் உடல் என்பது மலிவாகப் போய்விடும்.
ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் குடும்ப கௌரவம், குலப் பெருமை, வீராப்பு, திமிர், புனிதம் இப்படியான அத்தனையிலும்  பெண் உடல் மட்டுமே பொருத்திப் பார்க்கப்பட்டு வருகிறது. ஆணவப் படுகொலையில் பெண் உடல் குடும்பத்தின் கௌரவமாகவும்; கோவில் கர்ப்பகிரகத்தில் பெண் உடல் தீட்டாகவும்; நவீன வியாபார சந்தையில் பெண் உடல் பணம் ஈட்டும் கருவியாகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிலம் தனியுடைமையாக்கப்பட்ட காலம் தொடங்கி, பெண் உடல் தனி மனிதர்களின் உரிமைப் பொருளாக மாற்றப்பட்டு, போற்றிப் பேணி காக்கப்படுகிறது.  பல ஆயிரம் ஆண்டுகளின் போராட்டங்களின் தொடர்ச்சி இன்றளவும் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது – பெண் மன உணர்வுகளை அங்கீகரிக்க வேண்டி.. அவளது உரிமைகள் மீட்டெடுக்க வேண்டி..
ஆனாலும் கூட
மத நிறுவனங்களும், சாதிய கட்டமைப்பும், குடும்ப நிறுவனமும், தலைமை தாங்கும் அரசுகளின் இயந்திர பற்சக்கரங்களும்
கருணை ஏதும் இல்லாமல் பெண் உணர்வுகளையும் உரிமைகளையும் வெட்டியும் சிதைத்தும் விழுங்கி வருவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
மத அடிப்படைவாதிகள், தங்கள் தலைமையில் இருக்கும் நாடுகளில்
பெண் என்பவள் எந்த உடை அணிய வேண்டும்? எப்படி அணிய வேண்டும்?
வீட்டில் இருக்கும் பொழுது எந்த உடை உடுத்த வேண்டும்? பொதுவெளியில் வரும்பொழுது அணிவதற்கான உடை எது? இப்படியான பல வரைமுறைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுக்கு வசதியான  முறையில்  எழுதி, திருத்தி, மாற்றி, பெண்களின் தனிமனித உரிமைகளின் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி, தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தி வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இலங்கை மாவடியூர் கிராமத்தில், இஸ்லாம் மத அடிப்படைவாதிகளால்,
மார்க்கத்தில் நம்பிக்கை கொண்ட பெண்கள் மீது, ஈரானும், இலங்கையும் செய்து கொண்டு பொருளாதார ஒப்பந்தத்தின் வழியாக.. அதை வாய்ப்பாக பயன்படுத்தி பர்தா என்கிற ஆடை அணியும் கலாச்சாரம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது.
தங்களின் மன உணர்வுகள் நசுக்கப்படுகிறது,  உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை பெண்கள் உணராமல் இருப்பதற்கு துணையாக, வசதியாக, இடையில்  சொருகிய இறை நெறியை துணைக்கு அழைத்து, தங்களின் மேலாதிக்கத்தை பெண்களின் மீது நிறுவுகிறார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்பதுதான் பர்தா நாவலின் விவாதக்களம்.
ஆண்களின் மேலாதிக்கத்தை, பெண்கள் வழியாகவே பெண்களின் மீது திணிக்கும் பெருங்கொடுமை எல்லா காலத்திலும் சிறப்பாகவே நடந்தேறி வருகிறது குடும்ப நிறுவனங்களில். அப்படியான ஒரு குடும்பம்தான் இந்த நாவலில் வரும் மாவடியூர் கிராமத்தின் பீவி- ஹாயாத்து லெப்பை குடும்பம்.   இறை மார்க்கத்தின்  நெறிமுறைகளுக்குள் ஒன்றுதான் பர்தா. அதை இஸ்லாமிய பெண்கள் அணிய வேண்டியது கட்டாயம் என்பதை சொல்லி தன் மகள் சுரையா மீது  தன் கணவன் வழியாக பிறப்பிக்கப்பட்ட அடிப்படை வாதிகளின் கட்டளைகளை நிறைவேற்ற முனைகிறார் பீவி.. நாவல் இங்கிருந்து தொடங்குகிறது.
பீவி ஆடையைக் கட்டாயப்படுத்த  முற்படும்பொழுது சிறு பிள்ளையாக இருக்கும் சுரையா எதிர் கேள்வி கேட்க.. தகுந்த, ஏற்றுக்கொள்ளும்படியான பதில் சொல்ல முடியாத இடத்தில் பீவி திணறுவதுதான் எழுதி வைக்காத, இல்லாத கட்டளைகளைத் தாங்கி நிற்கும் இஸ்லாம் நெறிமுறைகள் வெளிச்சத்திற்கு வரும் நேரமாக தெரிகிறது நாவலுக்குள்.
மதராஸ கல்வி நிறுவனங்கள் மனித மனங்களை கட்டமைக்கும் பாங்கினை, அதிகாரத்தின் துணைகொண்டு மிரட்டி கட்டளையின் வழியாக எப்படி செய்து முடிக்கிறது என்பதை நாவலுக்குள் பதிவாக்கியிருக்கிறார் ஆசிரியர். அடிப்படைவாதிகள் தலைமை ஏற்கும் எல்லா இறை வழி பேசும் பள்ளிகளும் உலக நாடுகளெங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை சுரையா தன் மகளை குர்ஆன் ஓத அனுப்ப முயற்சிக்கும் தருவாயில் நம்மை உணர வைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
மதரஸா கல்வி நிறுவனங்கள் மட்டும் கிடையாது மத அடிப்படை வாதத்தின் துணை கொண்டு இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
நிற வேறுபாடுகள், இன வேறுபாடுகள் நிறைந்திருக்கும் உலக நாடுகள் பலவற்றில் சிறுபான்மையினராகப் போய் வாழ்வினை மேற்கொள்ளும் பல குடும்பங்கள் பொது வெளியில் எப்படியெல்லாம் வன்மம் கொண்டு நோக்கப்படுகிறார்கள் என்பதையும், அவைகளையும் தைரியமாக நேர் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதையும் காதலர்கள் பூங்கா ஒன்றில் பர்தா அணிந்து வரும் பர்கானா மீது நடைபெறும் இனவாத வன்மம் கொண்ட பெண் ஒருவரின் தாக்குதலை, நாவலுக்குள் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.  வெள்ளை நிறவெறி போலீஸ்  கருப்பினத்தவர் ஜார்ஜ் ப்ளாய்ட்டை தன் பூட்ஸ் காலால் அழுத்திக் கொன்றது நிச்சயம் நமக்கு ஞாபகத்திற்கு வரும் மேற்சொன்ன சம்பவத்தை நாம் வாசிக்கும் போது.
எளிய கிராமம் ஒன்றில்
உரிமைகள் மறுக்கப்பட்ட, விரிந்து நோக்கும் மனம் ஒன்று, பெருநகரங்களுக்குள் செல்லும் பொழுது எப்படி இன்னும் விசால பார்வையாய் மாறுகிறது என்பதை
சுரையா கதாபாத்திரத்தின் வழியாக அழகாகவும் ஆவேசத்தோடும் கொடுத்திருக்கிறார் நாவலுக்குள்.  அதே நேரத்தில் அடிப்படை வாதத்திற்குள் தன்னை நிறுத்திக் கொண்ட மனிதன், சிந்திக்க மறுக்கும் மனிதன், எவ்வளவு பெரிய நகருக்குள் சென்று, ஆகப் பெரிய சாகசங்களை நிகழ்த்தினாலும் அவனுக்குள் நிறைந்து கிடக்கும் வன்மத்தை மாற்ற இயலாததையும் நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்..
முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் பாடசாலைகளில் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் என்று ஹயாத்து லெப்பை வலியுறுத்தி பேசிய பொழுது,
அவரை நேர் எதிர் கொண்டு முதலில் “உங்க பொண்டாட்டி பீவியை பர்தா போடச் சொல்லுங்க” என்று தைரியமாக எதிர் பேச்சு பேசிய ஆமினா டீச்சர் எனக்கு என்னவோ ரொம்ப பிடித்த மாதிரி தெரிகிறார்.
“ஈரான் பர்தா முறை இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. மக்களே விழிப்பாக இருங்கள் ஈரான் பர்தா எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளை சமூகத்தில் உருவாக்கி நிற்கும்” என்கிற
மசூதியின் சுவற்றில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டியை  மாவடியூரின்
இளைஞன், சந்தேகங்களை எதிர் கேள்வி கேட்டு தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் இளம் வாலிபன் ஹசன் ஒட்டி இருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
நாவல் முழுக்க பர்தா அணிவது குறித்து
விவாதங்களும் நியாயப்படுத்துதல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. விருப்பத்திற்கு எதிராக கருப்பு நிற பர்தாவை அணிந்து கொண்டாலும் அது தனக்கு எப்படியெல்லாம் வசதியாக இருக்கிறது என்று சுரையாவின் பெண் நண்பர்கள் பேசுவதும் நாவலுக்குள் வருகிறது.
மாஜிதா

இறை மார்க்க நம்பிக்கை வைத்திருக்கும் பெண்களிடையே பர்தா அணிவதா..? வேண்டாமா? என்கிற மன ஊசலாட்டம்  நாவல் முழுக்க அங்கும் இங்கும் எங்கும் ஆடிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் இறை மார்க்கத்திற்கு எதிராக நடந்து கொள்கிறோமோ என்கிற அச்சம். இன்னொரு புறம் அதை கட்டாயப்படுத்தி அணியச் சொல்லும் ஆணாதிக்க மனோபாவம் மீதான வெறுப்பு. இவைகளுக்கு இடையில் பெண்களின் மன அதிர்வுகள் எவருக்கும் கேட்கப்படாமலேயே  அவர்களின் உரிமைகள் அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக அடிப்படைவாத ஆண்களால் பிடுங்கி எடுக்கப்படுகின்றன.

முஸ்லிம் திருமண வீட்டில்  மாப்பிள்ளை அழைப்பின் போது குலவை இடுதல் ஒரு பண்பாட்டு நிகழ்வு. திருமண வீடுகளில் ஹாஜாரா இல்லாமல் குலவை நிகழ்வு என்பது இருக்காது.
அப்படியான ஒரு திருமண நாளில்
தான் குலவை இடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து “குலவை இடுவது ஹராம்.. உன்னை யார் பர்தா போடாமல் இங்கு வரச் சொன்னது” என்று மிரட்டிய தன் மகன் ஈசாவுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசாமல் கலங்கி ஒடுங்கி நிற்கிறார் ஹாஜாரா.  இதற்கு நியாயம் கேட்பதற்காக தன்னுடைய தம்பி ஹயாத் லெப்பையிடம் செல்கிறார். ஹாஜாரா கேட்கும் கேள்விகளுக்கு ஏதும் பதில் சொல்ல முடியாத இடத்தில் ஹயாத்து லெப்பையும் அவரது மனைவி பீவியும்,
இறை மார்க்கத்திற்கு இடையில் இவர்கள் சொருகி வைத்திருக்கும் ஆணாதிக்கப் பண்பாடும்.
இப்படி பர்தா அணிவதற்கு எதிரான உரையாடல்கள் இறை மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலராலும் பேசப்பட்டு நாவல் முழுக்க நிறைந்து காணப்படுகின்றன எல்லா அத்தியாயங்களிலும்.
உடை என்பது எப்பொழுதுமே தன் உரிமை சார்ந்த விஷயம்; அதில் எவர் ஒருவரும் தலையிடக்கூடாது; தலையிடுவதை நான் விரும்ப மாட்டேன்
என்ற நிலையினை தன்னுடைய பள்ளிப் பருவம் தொடங்கி, தன்னுடைய 3 மகள்களோடும் கணவனோடும் சொந்த கிராமம் வந்திருக்கும் சுரையா,  இது நாள் வரையிலும் தன் நிலையில் சிறிதும் மாறாமல் தொடர்ந்து வந்திருக்கிறார்.
பர்தா அணிவது குறித்து  தொடர்ந்து குடும்ப உறவுகளோடும், உடன் பயின்ற தோழிகளோடும், சக நண்பர்களோடும், தான் பயின்ற கல்லூரி உள்ளிட்ட பொதுவெளியிலும் விவாதங்களை நடத்திக் கொண்டிருந்தவர்  சுரையா. ஆனால்  டீசர்ட் அணிந்து இருக்கும் தன்னுடைய மூத்த மகளுக்கு கருப்பு வண்ண பர்தாவை தன்னுடைய அம்மா பீவி அன்புப் பரிசாக கொடுக்கும் பொழுது அதை ஆசையோடு வாங்கி அணிந்து கொள்ளும் மகள் முன் வெறும் பார்வையாளராக இருக்கிறார். அவ்வாறு அவர் இருப்பது மகளின் உடை அணியும்  உரிமையில் தான் தலையிடக்கூடாது என்பதாலா அல்லது பர்தாவை மத அடிப்படை வாதத்தின் குறியீடாகப் பார்க்காமல் மகள் விரும்பி அணிந்திடும்  உடை, அவளின் உரிமை என மட்டுமே பார்ப்பதாலா.. இந்த சந்தேகம் நாவலின் கடைசியில் வருகிறது.
எப்படி இருந்தாலும்
பர்தா அணிவது குறித்து பொதுவெளியில் விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் நாவல் ஆசிரியர் மாஜிதா.
கருத்தாழமிக்க அட்டை படத்தை வடிவமைத்து அழகிய முறையில் வெளியிட்டு இருக்கிறார்கள்
எதிர் வெளியிட்டனர்.
பர்தா
மாஜிதா
எதிர் வெளியீடு
136 பக்கங்கள்
விலை ரூ.200/-
இருவருக்கும்
அன்பும் வாழ்த்துகளும்.
கருப்பு அன்பரசன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *