எஸ்.பிரேமலதா கவிதைகண்ணீர் தேசத்திற்கு
குடிபெயர்ந்து விட்டேன் நான்…

நானாக விரும்பிச் செல்லவுமில்லை
யாராலும் துரத்தியடிக்கப் படவுமில்லை…

இறுக அடைக்கப்பட்ட கதவுகளின்
இடுக்குகளின் வழி
கசிந்து வெளியேறும் காற்றினைப் போல்…
தானாய் நிகழ்ந்தேறியது அது…

வீங்கிய கண்களும்,
வரிவரியான கோடுகள் பதிந்த கன்னங்களுமாய்…
வலம் வந்த அத்தேசத்து மக்கள்,
எப்போதும்
அமைதியாய் அழுது கொண்டேயிருந்தனர்…
அனிச்சையான சுவாசத்தைப் போல…

எதற்கு அழுகிறீர்கள்
எனக்கேட்ட போது,
பல வருடங்களாய் பழகிவிட்டது என்றனர்…
அமைதியாய் அழுவதற்கான
காரணம் கேட்டபோது,
விம்மல்களும், கேவல்களும்
தடைசெய்யப்பட்டவை என்றனர்…

டாப்ஸி டர்வி நிலத்தில் கால் பதித்தது போல்,
எல்லாமே வித்தியாசமாய் இருந்தது
அத்தேசத்தில்…

அதன் தேசியக்கொடி கூட…
ஒழுங்கற்ற நீள்வட்ட வடிவத்தில்,
மங்கிய வெள்ளை நிறத்தில்,
நட்ட நடுவில் கருப்பு வட்டத்துடன்.

செவ்வக வடிவம் தான்
ஓரங்கள் தேய்ந்து உருமாறிவிட்டது என்றனர்…
மூவர்ணக் கொடிதான்
வண்ணங்கள் வெளுத்துக் கிடக்கிறது என்றனர்…
கருப்பு வட்டம் கூட
துக்கத்தை அப்பிக்கிடக்கும் நீலச்சக்கரம் தான் என்றனர்…உற்றுப் பார்த்த போது,
கருப்பு வட்டத்தில் இருந்து கூட
கண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது…

புதிதாக வந்ததால்,
உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரிகிறது என்றனர்…

எப்படியாவது தப்பித்து விடுவோமென
எழுந்து ஓட எத்தனிக்கையில் தான் புலப்பட்டது…
கால்கள் நிலத்திற்கு பதிலாக
நீரின் மீது தத்தளித்துக் கொண்டிருந்தன…

அழுத கண்ணீரெல்லாம்
வேறெங்கு பாயுமென
அலட்சியமாய் பதில்சொல்லி நகர்ந்தனர்…

எவராவது காப்பாற்றி விடுவாரென
நான் உரத்துக் கூவிக் கொண்டிருந்த போது,
தங்களில் பலர்
ஹெலிகாப்டரில் தான் வந்திறங்கியதாக
பலத்த சிரிப்புடன் பகடி செய்தனர்…

திடீரென எல்லோரும்
வரிசையில் நின்று கண்ணீர் உகுத்தனர்…
கை கூப்பி, மண்டியிட்டு கதறினர்…

வரிசைகளில் காத்துக் கிடந்து மரணித்த,
தம் மக்களுக்கான அஞ்சலி என்றனர்…ஒருகவளம் சோற்றுக்கு
பிச்சையெடுக்க கையேந்திய வரிசை…
செல்லாக் காசுகளை மாற்ற
பரிதவித்து நீண்ட வரிசை…
மூட்டை, முடிச்சுகளோடு ஊர்திரும்பிய
புலம்பெயர் தொழிலாளர்களின் முடிவுறா வரிசை…
பெருந்தொற்றின் தொடர்தாண்டவத்தில்,
உயிர்பிழைக்க தவம்கிடந்த வரிசை…
செத்த பிறகும்
அழுகிய பிணங்களாய் காத்துக்கிடந்த வரிசை…
வரிசைகளின் வரிசை நீண்டுகொண்டே யிருந்தது…

உயிர் பறிக்க உயர்ந்த வாளின் முன்
யாசித்துப் பிழைக்கவும்,
எஞ்சியிருக்கும் உயிரை பற்றிக் கொள்ளவும்,
மண்டியிட்டு மன்றாடி ஜீவித்திருப்பதே
மிஞ்சியிருக்கும் ஒரே உத்தி என்றனர்…

இப்படியாவது
உயிர் பிழைத்திருக்க வேண்டுமா…
எனும் எனது கேள்விக்கு
ஒத்தகுரலில் பதில் வந்தது…

காலச் சக்கரம் சுழன்று மேலேறும்
நாளுக்காய் காத்திருக்கிறோம்…
எங்கள் கண்ணீர்
நெருப்பை அடைகாத்துக் கொண்டிருக்கிறது…

….. எஸ்.பிரேமலதா 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)