"I with in" by Kalki Subramaniam. Image Credit: Courtesy Kalki Subramaniam



பளிச்சென்று இருந்த வானத்தில் திடீரென்று கருகும்மென்று இருட்டு பரவியது. வானத்தில் சூரிய ஒளியின் தடயத்தையே காணோம். ! ஒரு பெரிய கரும்பறவை அதன் அடர்ந்த சிறகை விரித்து பூமியை அழுத்துவது போல் புழுக்கமான இருட்டு.! அண்ணாந்து பார்த்தால் மழைமேகம் இல்லை. கரும்பழுப்பு போர்வை போர்த்தியது போலிருந்தது. பக்கத்து நாடு எதிலிருந்தும் மழை மேகத்துக்கான ரசாயனம் தூவியது நம் நாட்டுக்கு திசை மாறி வந்து விட்டதா..? அப்படியான மேகத்திரட்சியும் தென்பட வில்லையே ..! இது எதன் தாக்கம் ? காற்று மண்டலமே அடைபட்டது போல மூச்சுத் திணறல் ஏற்படுகிறதே ..? மக்கள் எல்லோரும் வானத்தைப் பார்ப்பதும், மூச்சுவிடத் திணறி நெஞ்சைத் தடவியும் கொள்கிறார்களே….! நமக்கே இப்படி என்றால் சிறுபிள்ளைகள், வயசாளிகள் என்ன பாடு படுகிறார்களோ…? எந்தத் தொலைக் காட்சிகளும் இயங்கவில்லை. செயற்கைக்கோள் இணைப்புக் கிட்டவில்லை என்ற எழுத்துகள் கண்சிமிட்டின. வானிலை ஆய்வுத் துறையினருக்கு தொடர்புகொண்டால் வெகுநேரம் கழித்தே தொடர்பு கிடைத்தது. இஸ்ரோ செயற்கைக்கோள் தகவல்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். வானிலிருந்து பூமியை நோக்கி அழுத்திக்கொண்டு வரும் கரும்போர்வை உருவாகிய காரணிகள் எவை என்று தெரிய வில்லை. இந்தக் கரும்படலத்தை எப்படிக் கலைக்கலாம் என்று அண்டை நாடுகளிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் பழைய டிரான்சிஸ்டர் ரேடியோ ஒலிபரப்பு போல் விட்டு விட்டுக் கேட்டது. புழுக்கமும், மூச்சுத் திணறலும், ஊற்றெடுக்கும் வியர்வையும் உயிரினங்களைத் தவிக்க விட்டது. இதிலிருந்து மீட்சி இல்லையா…. இது நிஜமா, கொடுங்கனவா தெரிய வில்லை.

எழுந்து வெளியே வந்தால் வெயில் கோரப் பற்களைக் காட்டி இளித்துக் கொண்டிருந்தது. தெருவில் மனுச வாசத்தையே காணோம். மரம் பேருக்கேற்றபடி அசைவற்று நின்றது. இலைகளில் ஒளிச்சேர்க்கைக்கான சிலிர்ப்பு கூடத் தென்படவில்லை. கொரோனா பெருந்தொற்றைப் பற்றி வாசித்தபடி கண்ணயர்ந்த நிலையில் வந்த கனவற்ற நினைவு மயக்கம் தான் இது.! “ என்னங்க ,சேர்ல உட்கார்ந்து பேப்பர் பார்த்துகிட்டே இருந்தீங்க , திடீர்ன்னு வாசல் பக்கம் ஓடித் தெருவைப் பார்த்து நிற்கிறீங்க, என்ன யாரும் வர்றாங்களா “ மனைவி பதறிக் கேட்டாள். கொரோனா காலத்தில் யாரும் வீட்டுக்கு வந்து தொற்ற வைத்து விடக்கூடாது என்ற பயம் தீயாகப் பற்றுகிறது . ஊரு, உலகெங்கும். இந்தத் தீயை அணைப்பது எப்படி, இந்த கொரோனா பேயை ஒழிப்பது எப்படி?. எந்த மந்திரமும் , தந்திரமும் பலிக்கவில்லையே ! நாளுக்கு நாள் லட்சக் கணக்கானோர் கொரோனாவில் சிக்குவதும், ஆயிரக் கணக்கானோர் சாவதும் தொடர்கிறதே. கொரோனாவுக்கு முடிவு கட்டுவதில் மருத்துவ உலகமே திணறுதே. வல்லரசுகள் தடுமாறுதுகளே ! ஆனாலும் தொடக்கம் என்றிருந்தால் முடிவும் இருக்கும் இது தானே உலக இயங்கியல்.. நம்புவோம் ! பெருமூச்சு வெளிப்பட்டது.

மனைவி தொலைக்காட்சியில் பழைய படத்தைப் பார்த்தபடியே சோறு பரிமாறினாள். சோதனை மேல் சோதனை பாடல் ஒலித்தது .. சிரிப்பு வந்தது. உடனே தடுக்க முடியாதை பொறுத்திருந்து தான் வெல்லமுடியும். உலகம் சந்திக்கும் நூதனமான சோதனை. கடவுளின் துகளைக் கண்ட மனிதன் கொரோனாவுக்கும் முடிவு கண்டறிவான் நினைத்தபடி சோற்றை விழுங்கியாயிற்று, கைப்பேசியில் குறுந்தகவல் முணுமுணுத்தது . ஓய்வூதியம் கணக்கில் வரவானத் தகவல்.

..ம்ம்ம்.. நம்மபாடு எப்படியோ கழியுது. அன்றாடக் கூலிகள், தெரு வியாபாரிகள் ,அரவானிகள் இப்படி உதிரி உழைப்பாளிகள், அவர்களது குடும்பம், குழந்தைகளின் வயிற்றுப் பாடுகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்ற எண்ணம் பெருங்காற்றில் சிலிர்க்கும் இலைகள் போல மனம் விதிர்த்தது. திருநங்கை கீர்த்தனாவின் நினைவு வந்தது. அவளையும், அவளது சகபாடிகளையும் சந்தித்த நிகழ்வுகள் நினைவிலாடின.

Image result for tamil transgender on train
Image Source: Mojarto

**** அத்தியாயம் –2- ****

நெருஞ்சிக்குடி ரயில் நிலையம் . ராமேஸ்வரம் பயணிகள் ரயில் உள்ளே நுழைந்ததும் பரபரப்பும் படபடப்பும் இறக்கைகளை அடித்துக் கொண்டது. . திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அந்தப் பயணிகள் ரயிலில் கூட்டம் அதிகமில்லாத பெட்டியில் சில பயணிகளோடு ராஜகோபாலும் , நண்பர்களும் ஏறினர் அவர்களை முந்திக் கொண்டு திருநங்கையர் மூவர் ஏறினர்.

“இங்க பாருய்யா, டிக்கெட் எடுத்து போறவனை தள்ளி விட்டுட்டு வித்தவுட்கள் ஏறுறதை …!. ” ஒரு பயணி அங்கலாய்த்தார். ஒரு திருநங்கை திரும்பிப் பார்த்து முறைத்தாள், இன்னொருவர் “ உள்ளேப் போயி பேசிக்கலாம் , நகருங்கம்மா.” என்று கத்தி நெரிசலை நெகிழ்த்தினார். அரவானிகளை விலக்கி பயணிகள், முன்னேறி இடம்பிடிக்க ஓடினர். கிடைத்த இடத்தில் அமர்ந்தனர். சந்தோசத்தில் குலுங்கி வண்டி நகர்ந்தது .

திருநங்கைகள் இரு கைகளைத் தட்டி ஒலி எழுப்பி காசு கேட்டு வந்தனர். அவர்களது அதீதமான அலங்காரமும், நெளிவும், குழைவும் பயணிகளது கண்களை ஈர்த்தது. அவரவர் மனோநிலைக்கேற்ப திருநங்கையரைப் பார்த்தனர். நங்கையரும் பயணிகளின் தோற்றம் கண்டு உளப்பாங்கை மதிப்பிட்டு யாசகம் கேட்டனர். ஒருத்தி இளைஞர்களிடம் “ மாப்பு, மச்சான், உங்கக் கொழுந்திக்கு உதவுங்க “ என்று கன்னத்தை தடவினாள் . சில இளைஞர்கள் அருவருப்புடன் அவளது கையைத் தட்டிவிட்டு முறைத்தனர். ஒருவர் அவளது கையைத் தடவி கிறங்கலாகப் பார்வையை அவளது தலையிலிருந்து பாதம் வரை ஒழுகவிட்டு, பத்து ரூபாயை கையைத் தொட்டுக் கொடுத்தான் . “இன்னும் கல்யாணம் ஆகலையா மச்சான் “ என்று அவள் அவனது குமட்டில் இடித்தாள் . அவன் கன்னத்தை தடவிக் கொண்டான்.
இன்னொரு நாற்பது வயசு பயணி, தன்னிடம் கையேந்தி வந்தவளை, முறைத்து “ இருக்கிற உடம்பைப் பார்த்தால் உழைச்சு பத்து பேருக்கு சோறு போடலாம். எதாவது வேலையைப் பார்த்து பிழைக்கலாமில்ல. “ கடுப்பாகிப் போனவள் , “ இப்படி கையேந்தி பத்து பேருக்கு நா சோறு போடறேன். என் மகராசா , உங்களுக்கு கோடி புண்ணியம், ஒரு வேலை இருந்தாச் சொல்லுங்க. இன்னைக்கே நீங்க சொல்ற இடத்துக்கு சர்டிபிக்கேட்டோட வந்திர்றேன். “ அந்த நபர் முகத்தைத் திருப்பிக் கொண்டு, கழிவறைப் பக்கம் போனார்.

அந்த நங்கை தலையில் அடித்துக்கொண்டு, லாகவமாய் தலை அலங்காரத்தைச் சரி செய்து கொண்டு, கோணிய முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு எதிர் வரிசையில் உட்கார்ந்து இருப்பவர்களிடம் கையேந்தி, “ அய்யா , இந்த அரவானி வயித்துப் பாட்டுக்கு , எதாவது கொடுத்து உதவுங்கய்யா.” என்று கெஞ்சினாள். அவர்கள் ஐந்து பேரும் அறுபதைக் கடந்தவர்கள். ஓய்வூதிய சங்கத்துக்காரர்கள். இதுவரை நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் . அவர்களில் தலைவர் சின்னையா , “ ஏம்மா, நீ என்ன படிச்சிருக்க, ஏதாவது வேலை வாங்கிக் குடுத்தா செய்வியா..”

“ அய்யா , நான் எம்.காம். படிச்சிருக்கேன். கண்ணியமான வேலை எது குடுத்தாலும் செய்வேனுங்கய்யா “ இந்த பதிலில் ஐவரும் அதிர்ச்சியுற்றனர். துணைத்தலைவர் சுந்தர்ராஜன் , “எம்.காமா. ரொம்ப சந்தோசம்.! அதென்ன கண்ணியமான வேலை ?”

“ இப்படித்தான் ஒருத்தர் வேலை வாங்கித் தர்றேன்னு பிராத்தல் புரோக்கர்கிட்ட மாட்டி விட்டுட்டாரு. அங்கிருந்து தப்பிக்கிறது பெரும்பாடாகி விட்டது. அதான் ஏதாவது கிளார்க் வேலை மாதிரி கண்ணியமான வேலை கேட்கிறது. அரவானின்னு கீழ்த் தரமா பலரு நினைக்கிறாங்க. நீங்க அப்படி நினைக்கமாட்டீங்க , இருந்தாலும் நான் சொல்றதைத் தெளிவாச் சொல்லணுமில்ல.” செயலாளர் இராஜகோபால் ; “ அம்மா உங்கக் குழுவில் எத்தனைப் பேர் இருக்கீங்க. இதில் எத்தனை பேர் என்னென்ன படிச்சிருக்கீங்க. விவரம் சொல்லுங்க. நாங்க இன்னைக்கு எங்க ஓய்வூதியர் சங்கம் சார்பில் கலெக்டரைப் பார்க்கப் போறோம். அப்போ உங்க பிரச்சினைகள் பற்றி பேசி உங்களுக்கு உதவ முயற்சி செய்வோம்.”

“ ரொம்ப சந்தோசம் அய்யா . எங்க குழுவில் பதிமூணு பேர் இருக்கோம். நான் ஒருத்தி தான் காலலேஜ் படிப்பு. மத்தவங்க எல்லாம் பத்தாம் வகுப்புக்கு கீழே படிச்சவங்க. அவங்களுக்கு முப்பது வயசுக்கு மேலாகுது. எங்களுக்கு ஊருக்குள்ள தங்க வீடு யாரும் குடுக்க மாட்டேங்கிறாக. இங்க நெருஞ்சிக்குடி சந்தைப் பேட்டை பின்னால ஒரு குடிசையில் தங்கி இருக்கோம். ராத்திரி நேரத்தில் குடிகாரங்க தொல்லைத் தாங்க முடியலை அய்யா . தங்கறதுக்காவது எங்களுக்கு வீடு ஏற்பாடு செஞ்சு குடுங்கய்யா. உங்களுக்கு. புண்ணியம் சேரட்டும் “ என்றபடி வணங்கி குனிந்து அவர்களது கால்களைத் தொட முயன்றாள். அவர்கள் தங்களது கால்களைத் தூக்கி சீட்டில் வைத்துக் கொண்டனர். ராஜகோபால் ; “ இதுதான் கெட்ட பழக்கம். உங்க ஆளுகளைக் கூட்டிட்டு வா, பேசுவோம் ”.

“கோபிசுக்காதீங்கய்யா, எங்க பிரச்சினை தீரனும்கிற ஆவலாதியில இப்படி செஞ்சுட்டேன். “ என்று கும்பிட்டு தலைகுனிந்து கைபிசைந்து நின்றாள். கண்ணீர் வழிந்தது. சின்னையா சொன்னார் , “ இப்படி காலில விழுகிறது நல்ல பழக்கம் இல்லம்மா. நீங்க கண்ணியமா சுயமரியாதையோட பிழைக்ணும்னு நினைக்கிறீங்க. காலில் விழுறது உங்க நினைப்புக்கு எதிரானது. அதனாலச் சொன்னோம். நாங்க கோபப்படலை. உங்க ஆளுகளைக் கூட்டிட்டு வா பேசுவோம்.”

அவள் சிட்டாகப் பறந்தாள் . அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் மூவரும் வந்துவிட்டனர். வானவில் மூன்றாக உருமாறி நடந்து வந்தது. அந்த நிறக்கலவை அவர்களது உடல்வாகுக்குப் பொருந்தவில்லை என்றாலும், பார்த்ததும் மறுபடியும் பார்க்கத் தூண்டியது . நளினமாய் வணக்கம் செய்தனர். மூவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். குண்டாக வயது மூத்தவள் அர்த்தனா. ஒல்லியாக இருந்தவள் நர்த்தனா. மூன்றாமவள் எம்.காம்  படித்தவள் கீர்த்தனா. அவர்களது பெயர்கள் இவர்களது புருவத்தை உயர்த்தி புன்னகையை மலர்த்தியது. தற்போதுள்ள பயண நேரத்தில் விவரமாகக் கேட்க அவகாசமில்லை. சாவகாசமாக எல்லாவற்றையும் விசாரிப்போம் . ராஜகோபால்,” அம்மா இப்போ சிவகங்கை வரப்போகுது. எங்களோடு நீங்களும் இறங்குங்க. பேப்பர் தர்றோம். அதில உங்களுக்கு தங்க வீடும், பிழைப்புக்கு ஏதாவது வேலை வாய்ப்பையும் தந்து புறக்கணிக்கப்பட்ட இந்த திருநங்கைகளுக்கு உதவுங்க என்று மனு எழுதி அதில நீங்க மூணுபேர் உட்பட உங்க குழுவினர்கள் பெயர் எழுதி கையெழுத்துப் போட்டுக் குடுங்க. கீர்த்தனா, நீ எம்.காம் படிச்சதை சொல்லி எதாவது அரசுத்துறையில் வேலைவாய்ப்பு தந்து உதவுங்கன்னு ஒரு மனு தனியாக எழுது. நாங்க கலெக்டரைப் பார்க்கப் போகும்போது கூட்டிட்டுப் போறோம்.”

“சரிங்க அய்யா. நீங்க கம்யுனிஸ்ட் கட்சிகாரகளா “ அர்த்தனா தயங்கிய கரகரத்த குரலில் கேட்டாள். சின்னையா தனது ஸ்டாலின் மீசை விரிய கெக்கலியிட்டுச் சிரித்தார். மற்ற நால்வரும் புன்னகைத்தனர். செல்லையா, “ ஏம்மா எங்களைப் பார்த்தா கம்யுனிஸ்ட் மாதிரியா தெரியுது .! “

“ கோபிச்சுக்காதீங்க அய்யா. கம்யூனிஸ்ட்காரங்க தான் இந்த மாதிரி உதவியெல்லாம் செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால அப்படிச் சொன்னேன். தப்புங்குளா அய்யா.” ராமசாமி, ” கம்யுனிஸ்டுன்னே வச்சுக்கோ. நாங்க ஓய்வூதிய சங்க பொறுப்பாளர்கள். உங்கள் சிரமத்தைப் பார்த்துட்டோம். முயற்சி பண்ணிப் பார்ப்போம். பழம் கிடைச்சா சந்தோசம்.” ரயில் ஊர் வந்ததும் குதூகலமாகக் கூவி நின்றது.

Image result for tamil transgender on train
Image Source: The News Minute

*****அத்தியாயம் – 3 *****

மாவட்ட ஆட்சியரைச் சங்கத்தினர் சந்தித்தனர். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள் ,. மூத்தகுடிமக்கள் வந்திருக்கீறிர்கள் என்று எழுந்து நின்று வரவேற்றார். அவர்களது கோரிக்கை மனுவை வாசித்து, அதிலுள்ள விவரங்களைக் கவனமாக கேட்டறிந்தார். “ அம்மா ,எங்கள் ஓய்வூதியர்கள் வசிக்கும் கழனிக்குடி பகுதியில் சர்வே எண் குறித்த தவறான புரிதலில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்கி இந்த சர்வே எண்ணில் அடங்கிய மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய ஆணை வழங்க வேண்டும் , இந்த உதவியால் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களில் தம் பிள்ளைகளுக்கு உயர்கல்வி, திருமணம், தொழில் தொடங்குதல் முதலான நல்ல காரியங்கள் நடக்கும். அப்புறம் இரண்டாவது கோரிக்கையான அந்த பகுதி முதன்மைச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் அந்தப் பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்துகள் தடுக்கப்பட்டு உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்படும் “ துணைத்தலைவர் சுந்தர்ராஜன் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கினார்.

இந்த கோரிக்கைகள் இரண்டும் பொதுமக்கள் நலம் சார்ந்தது தான் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இவற்றை நிறைவேற்றித் தருகிறேன் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

செயலாளர் ராஜகோபால் “ அம்மா , இன்னொரு கோரிக்கை. எங்க ஊரில் எம்.காம், படித்த திருநங்கை ஒருவர் ரயிலில் பிச்சை எடுத்து பிழைக்கிறார். அவரைப் போல பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்காங்க. அவர்களுக்கு தங்க வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள். தங்க இடமில்லாமல் சந்தைப் பேட்டைக்குப் பின்புறம் ஒரு குடிசையில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இராத்திரி நேரங்களில் குடிகாரர்கள் தொல்லை கொடுக்கிறார்களாம்.. அவர்களுக்கு அம்மா கருணையோடு தங்கவீடு இடம் ஒதுக்கித் தரவேண்டும். எம்.காம். பட்டதாரிக்கு எதாவது வேலை ஏற்பாடு செய்து தரவேண்டும். அவர்களை இன்று ரயிலில் சந்தித்தோம். அவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள், அம்மா இசைவு தந்தால் அவர்களை வரச் சொல்கிறோம்..”

வாயில்லதவர்களுக்காக மூத்த குடிமக்கள் பேசுகிறீர்கள். வரச் சொல்லுங்கள். நீங்கள் நம்பிக்கையோடு போய் வாருங்கள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என்று ஆட்சியர் எழுந்து வழி அனுப்பினார். அவர்கள் நன்றி கூறி வெளியே வந்தார்கள் .

டபேதாரிடம் சொல்லி திருநங்கையரை மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி வைத்து அவர்கள் வருகைக்காக காத்திருந்தனர் . அரைமணி நேரம் கழித்து வந்தனர். அவர்கள் முகங்களில் நம்பிக்கை சுடர்ந்தது. சங்கத்தினரைப் பார்த்ததும் உங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டோம் என்று நன்றி பொங்க வணங்கினர். தலைவர் சின்னையா ; “, வாங்க வெளியே போய் விரிவாப் பேசுவோம் “ என்றார்.

பொருளாளர் செல்லையா,” மணி ஒன்றரை ஆயிருச்சு. வாங்க காண்டீனில் சாப்பிட்டுட்டுப் பேசுவோம் “ என்றார். கீர்த்தனா சொன்னாள் “ நாங்க மதிய நேரத்தில் சாப்பிடுவதில்லை. ஒரு டீ ,வடை, அல்லது பன்னோடு மதியத்தை ஓட்டிவிடுவோம். “ ஓய்வூதியர் வயிற்றில் தீயை ஊற்றியது போல் இருந்தது. அவர்களது இரக்கம் செறிந்த பார்வை தாங்காமல் நங்கைகள் குனிந்து கொண்டனர். அர்த்தனா, “ நாங்க மதிய நேரத்தில் யாசகம் கேட்டு பல இடங்களில் அலைந்து கொண்டிருப்போம். கிடைச்சக் காசை வச்சு சாப்பிட்டுடோமுனா, வீட்டில் வயசாகி உடம்புக்கு முடியாதவங்க மூணுபேர் இருக்காங்க, அவுங்களுக்கு ராத்திரி தின்ன குடுக்க முடியாமப் போனா என்ன செய்யிருது.? எல்லா நாளும் எங்கள் தேவைக்கான காசு கிடைக்கிறதில்ல. அதனால நாங்க பத்துபேரு கையேந்தி கிடைக்கிறதில பதிமூணு பேரு காலை, ராத்திரி ரெண்டுவேளை சாப்பிடனும். எங்களுக்கான மேக்கப்பு அயிட்டங்களையும் வாங்கணும். அதனால நாங்க யாரும் மதியம் திங்கிறதில்ல. “ அவள் சொன்னவிதம் சங்கத்தாரின் ஈரல்குலையை சுண்டி இழுத்தது. பசி அணைந்து போன உணர்வு..

துணைச்செயலாளர் ராமசாமி “உங்க நிலைமை பரிதாபமாக இருக்கிறது. நாங்க வயசான சக்கரை வியாதிகாரக. நாங்க சாப்பிடாம இருக்க முடியாது. ,நாங்க சாப்பாடு வாங்கித் தர்றோம், எங்களுக்காக சாப்பிடுங்க.” எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். மாவட்ட ஆட்சியர் திருநங்கையரின் கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிச்சயம் நிறைவேற்றித் தருவதாகச் சொன்னாராம். இவர்களது முன்னிலையில் இரு அலுவலர்களை அழைத்து நெருஞ்சிக்குடி பகுதியில் குடியிருப்பு இடங்கள் எங்கெங்கு இருக்கிறது என்ற விவரத்தைத் தருமாறு சொன்னாராம். கீர்த்தனாவுக்கு வருவாய்துறையில் எதாவது தற்காலிக வேலை தருவதாகச் சொன்னாராம். குடும்ப அட்டைக்கு முறையா தாலுகா ஆபீஸில் மனுக் குடுக்க சொன்னாங்க. இதை நங்கையர் சொல்லும்போது அவர்களது வாடிய முகங்கள் விரிந்து ஒளிர்ந்தது. சங்கத்தாருக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது.

நர்த்தனா சொன்னாள் , “அய்யா உத்தரவு குடுங்கள். நாம வந்த ரயில் ராமேஸ்வரத்திலிருந்து திரும்புவதற்குள் இந்த குறைப் பொழுதில் நாலு காசு பார்த்தாதான் ரவைக்கும், காலைக்கும் கஞ்சி குடிக்க முடியும் “ “சரி நீங்க போங்கம்மா. உங்களுக்கு என்ன பிரச்சினைன்னாலும் எங்களை வந்து பாருங்கள் என்று முகவரியைக் கூறி அனுப்பினர் .

மறுநாள் காலை பதினொருமணி வாக்கில் ஓய்வூதியர் சங்க அலுவலகத்துக்கு கீர்த்தனா வந்து வணங்கி நின்றாள். தலைவர் சின்னய்யா ,” என்னம்மா, நீ மட்டும் வந்திருக்கே. மத்தவங்கெல்லாம் வரலையா “ “ நாங்க நேத்து நடந்ததை எல்லாம் சொன்னோம். எங்க அக்காமாருக ரொம்ப சந்தோசப் பட்டாங்கய்யா. இன்னொரு நாள் நேர்ல வந்து நன்றி சொல்லனுமுன்னு இருக்காங்க. எல்லாரும் வந்தா வயித்துப்பாட்டுக்கு கஸ்டமாயிருமுன்னு, என்னை மட்டும் அனுப்பி உங்ககிட்ட கேட்டு ரேசன்கார்டுக்கு மனுக் குடுத்துட்டு வரச் சொன்னாங்கய்யா. “

ராஜகோபால்; “ சரி செய்வோம். நீ எந்த வயசில திருநங்கையா மாறின? உங்க வீட்டில உனக்கு ஒத்துழைப்புக் குடுத்தாகலா ? எம்.காம். வரை எப்படி படிச்ச? உன்னைப் பத்தி சொல்லு. நின்னுகிட்டே பேசாதே. அந்த சேர்ல சும்மா உட்கார்ந்து பேசு. பயப்படாதே .நாங்க உன்னை வேத்து ஆளா நினைக்கில “ அவள் தயங்கி உட்கார்ந்து சொல்லத் தொடங்கினாள்.

Image result for tamil transgender draw
Image Source: Pinterest

****** அத்தியாயம் -4  ******

கார்த்தி எட்டாம் வகுப்புக்கு படிக்கும் நாளில் அவனது உடலில் புது மாற்றத்தை உணர்ந்தான். மார்பு காம்புகள் சிலிர்த்து துடிப்பது போல் உணர்வு. அவற்றைப் பிடித்து அழுத்திக் கொண்டிருந்தால் சுகமாய் உடலெங்கும் இதமான கிளுகிளுப்பு உணர்வு பரவியது . அடிக்கடி குளியலறைக்கு போகத் தூண்டியது. பெண்களது உடைகளை உடுத்த வேண்டும். அவர்களைப் போல் கண்ணில் மையிட வேண்டும் . நீண்டகூந்தல் வளர்க்க வேண்டும் . பூ சூட வேண்டும் என்று ஏக்கம் அதிகரித்தது . ஆண்களைப் பார்த்தால் ஒரு வெறுப்புணர்வு தோன்றியது. சகப் பசங்களோடு விளையாடக் கூச்சமும் , பெண் பிள்ளைகளோடு விளையாட ஏக்கமும் தோன்றியது. காலையில் குளிக்கும்போது அக்கா அவிழ்த்துப் போட்ட அழுக்குத் துணிகளை அணிந்து கண்ணாடி பார்ப்பது. தன்னை மறந்திருப்பது. வெளியில் கதவு தட்டப்படும் போது அந்தத் துணிகளை அவிழ்த்து விட்டு அவசர அவசரமாகக் குளித்து வெளியேறுவது. என்னடா பொம்பிளைப் பிள்ளை மாதிரி இம்புட்டு நேரம் குளிக்கிற ? ஆம்பிளைப் பிள்ளை சட்டுபுட்டுன்னு குளிச்சிட்டு வர்றதில்லையான்னு அம்மா கேட்கும் போதெல்லாம் மௌனம் சாதிக்கிறது. ராத்திரிகளில் சொல்ல முடியாத கனவுகள்… இப்படியான இம்சைகள் வாட்டின.

சகவயசுப் பையன்களிடமிருந்து ஒதுங்க நூலகம் போனான். மனதும் உடலும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும்போது வாசிப்பின் பக்கம் மடைமாற்றினால் உணர்சிகளை வெல்லலாம். அறிவில் சிறந்தவனாக மாறலாம் என மு.வரதராசனாரின் அகல்விளக்கு நூலில் வாசித்தான். இந்த வாசிப்பு அவனுக்கு நல்லதொரு புகலிடமாக இருந்தது. வகுப்பிலும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கவனித்து எண்ண ஓட்டங்களைத் தவிர்க்கவும் கற்றான். தூங்கும் நேரம் தவிர்த்த மற்ற நேரம் வாசிப்பும், வாசித்ததை அசைபோடுவதுமாக இருந்தான். தூங்குமுன் வாசிப்பின் கண்ணயர்விலே தூங்கினான். இந்த பயிற்சி அவனைக் காத்தது. பெற்றோரிடமும், சுற்றியிருப்போரிடமும் நல்ல மதிப்பை உண்டாக்கியது. இதனால் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பெத்தவங்களும் , சொந்தங்களும் அவன் கல்லூரி படிப்புக்கு செல்ல, சூழலை மீறி உதவினர். உடல்மாற்றங்களை மறைக்க தளர்வான உடைகளையே உடுத்தினான்.

மூன்றாண்டு கல்லூரிப் படிப்புக்காலத்தைக் கடத்த பெரும்பாடு பட்டான். படிப்பில் முதல் வகுப்பில் எளிதாகத் தேறினான் . உடலுணர்வை வெல்லத்தான் சொல்லவியலா துயரடைந்தான். இந்த துயரிலிருந்து தப்பிக்க புத்தகங்களே உதவின. “ சென்னையில் போய் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன். நல்ல வேலை கிடைத்ததும் சொல்கிறேன். அதுவரை என்னை யாரும் தேடவேண்டாம். மாதா மாதம் என்னால் முடிந்த பணத்தை அனுப்பி வைக்கின்றேன்.” என்று சென்னைக்கு பஸ் ஏறிவிட்டான்.

சென்னையில் கண்ணில் பட்ட திருநங்கையிடம் தனது பிரச்சினைகளைச் சொல்லி உதவி கேட்டான். அவள் சார்ந்த குழுவினரிடம் அழைத்துப் போனாள். அவர்கள் அவனது பிரச்சினைகளை பரிவுடன் கேட்டு அரவணைத்தனர். பெண்ணுக்கான துணிமணிகளைக் கொடுத்து அணியச் செய்தனர். ஆணுடையைக் கழட்டவும் புதிதாக பிறந்தது போல் உடலெங்கும் புல்லரித்து புளகாங்கிதம் உணர்ந்தான். பத்து நாளுக்குள் அவர்களது பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொண்டன .
அவர்களோடு சேர்ந்து அலைந்து யாசகம் பெறுவது, பகிர்ந்துண்பது. கூத்தும்,பாட்டுமாய் நாள்கள் கடந்தன .அக்காமார்களிடம் திருநங்கையர் வாழ்க்கை முறை குறித்த சந்தேகங்களை எல்லாம் கேட்டான். அவர்களும் நிறைய சொன்னார்கள். மகாபாரதப் போரில் அரவானின் பலி. மகாவிஷ்ணு எடுத்த மோகினி அவதாரங்கள். பத்மாசுரனை வென்றது; சிவனையே மயக்கியது; இன்றும் வடமாநிலங்களில் அரவானிகளை தெய்வப் பிறவிகளாக மதித்து திருமண நிகழ்வுகளில், குழந்தை பிறந்த வீட்டு விசேசங்களில் அரவானிகளை அழைத்து ஆசிர்வாதங்களைப் பெறும் நடைமுறைகள் எல்லாம் சொன்னார்கள். இக்கதைகள் அவனது பிறப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கவைத்தது. “ இவ்வளவு பெருமை நமக்கிருந்தும் ஏன் நம்மை அலின்னும் , ஒன்பதுன்னும் கேலி செய்கிறார்கள் “ என்று கேட்டான். ஒரு அக்கா சொன்னது, “ நாம் ஆணுமல்லாம பெண்ணுமல்லாம இருக்கிறதால அலி என்கிறார்கள்.” அவன் கேட்டான் .” ஒன்பதுன்னு ஏனக்கா சொல்றாங்க ? “ ஒரு அக்கா சொன்னது; “ பூஜ்யமும் ஒன்னும் இணைந்த மாதிரி ஒன்பதாம் நம்பர் இருக்கில்லை அதனால்தான் அப்படிச் சொல்றாங்க.” இன்னொரு படிச்ச அக்கா சொன்னது. “ இது ஓரளவு சரிதான். கணக்கில ஒன்பதின்கிற நம்பரோடு எந்த நம்பரைக் கொண்டு பெருக்கினாலும் ஒன்பதின் வர்க்கம் தான் வரும். அதாவது , ரெண்டு ஒன்பது பதினெட்டு. இதன் கூட்டுத் தொகை ஒன்பது; மூணு ஒன்பது இருபத்தேழு, இதன் கூட்டுத்தொகை ஒன்பது. நாலு ஒன்பது முப்பத்தாறு இதன் கூட்டுத்தொகை ஒன்பது. இப்படி வரிசையா சொல்லலாம். ஆக ஒன்பதோட ஒரு நம்பரை பெருக்கும்போது புது நம்பர் வராது . ஒன்பது புது இனப் பெருக்கத்துக்கும் உதவாது என்று கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுவாங்க. இப்படிக் கூப்பிடறது தப்பில்லை. ஒன்பதுன்னோ அலின்னோ சொல்லும்போது , கேலியும், அருவருப்பும் வர்றமாதிரி சொல்லுற ஜனங்களின் மனநிலைதான் அருவருப்பானது, அதை நாம் கண்டு கொள்ளாமல் நம் வாழ்ற விதத்தை மாத்திகிட்டா காலப்போக்கில் சரியாயிரும்! .இந்த வக்கிரப்போக்கும் மறைஞ்சிரும் ! வடமாநிலங்களில் நம்மை ஓரளவு மதிக்கிறார்கள். நம்ம மாநிலத்தில் கூட மாற்றம் வந்துகிட்டிருக்கு. நம்மவங்க படிச்சு வேலைகள் தேட ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் பலர் மதிக்கிற வேலைகள் பார்த்தா நம்மலை கொச்சையா பார்க்கிற மனப்போக்கு குறைஞ்சுரும்! ! உணர்ச்ச்களை அடக்கி ஒரே சிந்தனையில் ஈடுபடும் திறமை சாதாரண ஆம்பிளை ,பொம்பிளைகளைவிட நமக்கு கூடுதலாக இருக்கு.! அதுனால நாம விஞ்ஞான ஆராய்ச்சியிலோ , இராணுவ பாதுகாப்பிலோ , உளவ அறிவதிலோ ஈடுபாட்டால் மத்தவங்களை விட நாமலே சாதனை படைப்போம்.! நம்மலில் மாலிக் கபூர்ங்கிற மாவீரன் இருந்தான்.”

இப்படி பேசிக்கொண்டிருந்த சமயத்தில்தான் கார்த்தி சொன்னான்; “இப்படி சூம்பிப்போன வாழைப்பூ மாதிரி தொங்க விட்டுகிட்டு ஏனக்கா இருக்கணும்? நான் உங்களை மாதிரி ஆப்பிரேசன் பண்ணிக்கிலாமில்ல… !” அவனைக் கட்டித்தழுவி அக்காமார்கள் கொஞ்சினார்கள். அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள உதவினர். அப்போது அவன் பட்ட ரண வேதனைகளுக்கு அவர்களது அன்பும், பெருமிதமான உணர்வுகளை ஏற்படுத்தும் புராணக் கதைகளும், சத்தான உணவும், பாசமிகு வார்த்தைகளும் அவனுக்கு அருமருந்தாக இருந்தது. அறுவைச் சிகிச்சையின் போதே அவனது கார்த்தி என்ற பெயரை கீர்த்தனா என்று மாற்றிக் கொண்டான். சட்டபூர்வமாக பதிந்தும் விட்டான்.

பாம்பாய் போன்ற வடமாநிலங்களுக்கு போனால் நல்ல மரியாதையும், செல்வாக்கோடும் வாழலாம். அதற்கு சிவந்த நிறமும், இந்தி, சமஸ்கிருத புராண பரிச்சயமும் தேவை. இது தனக்கு ஒத்து வராது.. உள்ளூரிலே எதாவது பிழைக்கலாம் என்று வேலைக்கு முயன்றாள். இதற்கு அஞ்சல்வழியில் எம்.காம் சேர்ந்து படிக்கலானாள் . அவர்கள் குழுவில் படிப்பறிவு இல்லாதவர்களே அதிகம். அவர்கள் வேலை பார்த்து பிழைப்பதை விட யாசித்து பிழைப்பதிலே திருப்தி அடைந்தனர். இந்தத் திருநங்கையர் குழுக் குழுவாக அந்தந்த பகுதியில் சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களுக்கிடையில் அகங்கார எண்ணங்களும், உயர்வு தாழ்வு பாகுபாடுகளும் உண்டு. இது அவ்வப்போது மோதல்களாக வெடிப்பதுமுண்டு. இப்படியான மோதலின் போது அவனை அரவணைத்த ஒரு குழுவினருக்கும் இன்னொரு குழுவினருக்கும் மனக்கசப்பும் வார்த்தை மோதல்களும் மூண்டது.. அகங்காரத் தீயை அணைக்க அவள் முயன்றாள். முடியவில்லை.
அவளை இனம் கண்டு ஆதரித்த குழுவினர் மற்றொரு குழுவின் ஆதிக்கப் போக்கு பிடிக்காமல் சென்னையை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தனர். சென்னையில் இருந்தால் கீர்த்தனா மேற்கொண்டு படிக்கவும் கௌரவமான ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடலாம் .அம்மா அப்பாவுக்கும் உதவலாம். ஆனால் அவளை ஆதரித்து அறுவை சிகிச்சை எல்லாம் செய்வித்து தான் தனி மனுசி இல்லை என்று உணர்த்தியக் குழுவின் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அந்தக் குழுவோடு இயங்க வேண்டிய கடமை என்று உணர்ந்தாள். அவளது குழு நெருஞ்சிக்குடிக்கு பயணம் ஆனது.
ஓய்வூதியர் சங்கத் துணைத்தலைவர் சுந்தர்ராஜன்; “ நெருஞ்சிக்குடி நல்ல ஊருதான் .இங்கு உங்காளுக யாருமில்லை. மதுரை , திருச்சிப் பக்கமிருந்து அவ்வப்போது ரயிலில் வந்து போவார்கள். உங்கள் குழு இங்கிருந்தால் அவர்கள் கூட இங்கே வர வாய்ப்பில்லை. உங்களுக்கு கலெக்டர் தங்க வீடும் , பிழைக்க வேலையும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதி கொடுத்துள்ளார். அதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நீங்க பயமில்லாமல் பிழையுங்க. பிரச்சினைனா வாங்க ,எங்கள் சங்கம் தேவையான உதவியைச் செய்யும்.” கீர்த்தனா வணங்கி விடைபெற்றாள்.



*** அத்தியாயம் – 5 ***

மூன்று மாதங்களாக திருநங்கையர் குழுவினர் சங்கத்துப் பக்கம் வரவில்லை. தியாகிக்கோட்டை சாலையில் திருநங்கையருக்கு வீடுகட்ட மூன்று செண்டு இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு குடிசை அமைத்து குடியேறினார்கள். இரண்டு செண்டு நிலத்தில் வீடுகட்டவும், அறை செண்டு இடத்தில் சின்ன காய்கனித் தோட்டமும் திட்டமிட்டு வேலை நடப்பதாக ஒரு முறை போனில் சொன்னார்கள். கீர்த்தனாவுக்கு சோலையூர் பகுதி வருவாய்த்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக தற்காலிக அடிப்படையில் பணி வழங்கப் பட்டுள்ளது. அர்த்தனா, நர்த்தனா முதலானோர் பத்தாம் வகுப்பு கூட நிறைவு செய்யவில்லை என்பதால் தற்போது வேலை ஏதும் வழங்கப்படவில்லை . வாய்ப்பு ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல். நங்கையர் ஓரளவு நிம்மதியாக வாழ்க்கையை அமர்த்திக் கொண்டார்கள். சங்கத்துக்கார்களும் அவரவர் வேலையில் சுழன்றனர். காலம் ஊர்ந்தது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை திருச்சியிலிருந்து நெருஞ்சிக்குடிக்கு ரயிலில் ராஜகோபால் மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். புதுக்கோட்டையைத் தாண்டியதும் ஒரு திருநங்கை பயணிகளிடம் யாசகம் கேட்டு வந்தாள். ராஜகோபாலைப் பார்த்ததும் அந்த திருநங்கை அய்யோ… கடவுளே என்றபடி ஓடினாள்.. கீர்த்தனாவின் சாயலில் இருக்கவே ராஜகோபால் கீர்த்தனா என்று அழைக்க வாயைத் திறந்தவர், பக்கத்தில் மனைவி இருக்கவும் கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்தார்.

மனைவி ,” என்னங்க யாரு அது ? நம்மலைப் பார்த்தது ஓடுறாங்க? “ வந்து சொல்றேன் என்று போனவர் ஐந்து நிமிசத்தில் கீர்த்தனாவுடன் வந்து அமர்ந்தார். கீர்த்தனா ராஜகோபாலின் மனைவியை வணங்கினாள் . “ அய்யா தப்பா நினைச்சுக்காதீங்க. வேற வழி இல்லாமல் தான் இந்தத் தொழிலுக்கு வரவேண்டியதாயிருச்சு “ என்று குரல் நெகிழக் கைகளைப் பிசைந்தாள். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்தார். மனைவியை சாடை செய்து அமர்த்திட்டு ராஜகோபால் கீர்த்தனாவைப் பார்த்தார் .

“ அய்யா, கலக்டரம்மா சொன்னபடி சோலையூர் ஆர்.ஐ ஆபிசில் பியுனா வேலைக்கு சேர்ந்துட்டேன். தினசரி வேலைக்குப் போய்கிட்டு தான் இருக்கேன். எங்க மூத்த அக்காமாருக இமிசை தாங்க முடியவில்லை. நான் தொடர்ந்து வேலைக்குப் போகுனமுன்னா மூணுலட்ச ரூபாயைக் குடுத்திட்டு விலகிப் போ என்கிறாங்க. நான் வாங்கிற சம்பளமோ மாசம் ஐயாயிரம் தான். மூணு லட்சத்துக்கு எங்கே போவேன். கொஞ்சம் பொறுங்க அக்கா, டிஎன்பி எஸ் சி பரீட்சை எழுதியிருக்கேன். நிச்சயமா பாஸ் பண்ணியிருவேன். வேலை வந்ததும் ஒருவருசத்தில மூணு லட்ச ரூபாய் தர்றது மட்டுமல்ல. வேண்டிய உதவி ஏல்லாம் செய்யிறேன் என்று அரவான் மீது சத்தியம் செஞ்சு சொல்லியும் அவுங்க கேட்கலைங்க அய்யா. அவுங்க செஞ்ச உதவியை மறந்துட்டு அவுங்களை உதறிட்டு வெளியே வரமுடியலை. இதைவிடக் கொடுமை என்னன்னா என்னைப் பெத்து வளர்த்த அப்பா செத்துப்போன தகவல் தெரிஞ்சும் இந்தக் கோலத்தில் போயி அம்மாவைப் பார்த்து அழுது ஆறுதல் சொல்ல முடியவில்லை. மகனுக்கான காரியங்களைச் செய்யமுடியலை ஒரு ஆபிசர் அந்தஸ்தில் நான் போனால் கூட என் கோலத்தை மறந்து என்னிடம் பேசவாவது செய்வாங்க. நான் இப்படிப் பராரியா போனால் எங்கம்மா உடலில் தொடுக்கிகிட்டு இருக்கிற உசுர்கூடப் போயிரும். நான் என்ன செய்ய ?, சொல்லுங்கய்யா ” என்று ராஜகோபால் காலடியில் உட்கார்ந்து கீர்த்தனா விம்மினாள். அவரின் மனைவி முந்தானையைச் சுருட்டி வாயைப் பொத்திக் கொண்டாள் . கண்ணோரம் கசிந்திருந்தது .ராஜகோபால் நெகிழ்ந்து பெருமூச்சு விட்டார்.

“கீர்த்தனா, உன் பிரச்சினையை சங்கத்துக்கு வந்து சொல்லியிருக்கலாம். பரவாயில்லை. கண்ணியமா வேலை செய்யணுமுன்னு ஆசைபட்டா மட்டும் போதாது. பிரச்சனைகளை எதிர்கொண்டு ஜெயிச்சு காட்டு. இந்த நிமிஷத்தோட இப்படி யாசகம் வாங்கிறதை நிறுத்து. நாங்க உங்க அக்காமாருகிட்ட வந்து பேசறோம். உனக்கு தொல்லை குடுக்காம நாங்க பார்த்துக்கிறோம். நாளை மறுநாள் செவ்வாய்கிழமை காலையில் நீ வேலைக்கு கிளம்புறதுக்குள்ளே வந்து பார்க்கிறோம் . கவலையை விடு. முகத்தைக் கழுவிட்டு வந்து உக்காரு. இந்தா இன்னைக்கு உனது செலவுக்கு இந்த நூறு ரூபாயை வச்சிக்கோ. “

ராஜகோபாலின் பேச்சு அவளுக்குத் தெம்பைக் கொடுத்தது. கீர்த்தனா எழுந்து அவரின் மனைவியை மீண்டும் வணங்கி ,” நான் உங்களை அம்மா , அப்பான்னு கூப்பிடலாமா .. “ என்று காலை தொடப் போனாள். மனைவி ராஜகோபாலை பெருமிதத்தோடு பார்த்தபடி “ “நல்லா . நீயும் எங்க மக மாதிரிதாம்மா. அதனால தானே இவர் உன்மேல இவ்வளவு அக்கறை எடுத்து உதவுறார் “ நெகிழ்வாய்ச் சொன்னார். மனைவியின் இந்த புரிதல் அவரது சங்கப்பணிக்கு கிரீஸ் போட்டது போலானது !. கீர்த்தனா ஒப்பனை கலையாமல் கண்ணைத் துடைத்து வந்து எதிரில் அமர்ந்தாள்.

செவ்வாய்கிழமை சங்க நிர்வாகிகள் ஐந்து பேரும் தியாகிக்கோட்டை சாலையில் கண்மாய்க் கரையோரம் இருந்த திருநங்கைகள் குடிசைக்குப் போனார்கள். அந்தப் பகுதியில் அங்கங்கே சில வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன. ரோட்டோர வேப்ப மரத்தின் கீழ் சிறு பாலத் திட்டில் மற்ற நிர்வாகிகளை உட்காரச் செய்துவிட்டு ராஜகோபால் மட்டும் அவர்களது குடிசைக்கு அருகே சென்று , கீர்த்தனா ,நர்த்தனா, அர்த்தனா சங்கத்துக்காரங்க வந்திருக்கோம் எல்லாரும் வெளியே வாங்கம்மா. என்று குரல் கொடுத்தார் . கீர்த்தனா முன்னதாகவே சொல்லி இருந்ததாலே பதிமூனுபேரும் வந்து வணங்கினார்கள். அவர்களை மரத்தடிக்கு அழைத்துப் போனார்.

எல்லாரும் அறிமுகம் செய்து கொண்டனர். அவர்கள் ஒப்பனையோடு தான் இருந்தனர். மூத்தவர்கள் மூவர் உடல் பெருத்து , கால வெப்பத்தில் சுட்ட கத்தரிக்காய்ப் போல் முகம் சுருங்கி இருந்தனர். சுருக்கத்தில் அப்பிய ரோஸ் பவுடர் திட்டு திட்டாய் மினுங்கின. ஒப்பனையை மீறி மூப்பின் தளர்வு வெளிப்பட்டது. மூத்த திருநங்கை சுப்புத்தாய் . “ அய்யாக்க மாருக்கு வணக்கம். நீங்க எங்களுக்கு கடவுளுக மாதிரி பெரிய உதவிகள் செஞ்சிருக்கீக. நாங்கதான் உங்க இடம் தேடிவந்து நன்றி தெரிவிக்கணும். எங்க சோத்துப்பாடு, நினைக்கிற மாதிரி நடந்துக்க முடியலை. எங்களை மனப்பூர்வமா மன்னிக்கணும். எங்களை உங்க பிள்ளைக மாதிரி நினைச்சு எங்களுக்கு உதவணும். அந்த அரவானும், பெருமாளும் உங்க சந்ததியைக் காப்பாத்தணும்.” என்று கூற பதிமூனுபேரும் அவர்களை நோக்கி குனிந்து வணங்கினர். முத்தம்மாள் என்பவள் சொன்னாள். “ புழுதித் தரை. நல்ல தரைன்னா நாங்க விழுந்து கும்பிட்டிருப்போம் “ என்ற படி குனிந்து சங்கத்துக்காரங்க கால்களைத் தொட முயன்றனர். அவர்கள் கால்களை மேலே இழுத்துக் கொண்டனர் ..

துணைத்தலைவர் சுந்தர்ராஜன் , “ தரையில் விழுகக் கூடாது; நீங்க. நிமிர்ந்திருக்கணும்னு தான், நீங்க கேட்காமலே உதவ வந்தோம். “
தலைவர் சின்னைய்யா, “ உங்களைப் பற்றியும், நீங்க கீர்த்தனாவுக்கு செஞ்ச உதவி, இப்போதைய உங்கநிலை பற்றியும் கீர்த்தனா சொல்லுச்சு. முதுமையில் உங்க இயலாமையும், உங்களுக்கு வயித்துப்பசி தீர உத்தரவாதப் படுத்தவாவது உங்களிடம் பணம் இருக்கவேண்டும் என்கிறதை நாங்க உங்களைப் பார்த்ததும் புரிந்து கொண்டோம். உங்களுக்கு உதவி வேண்டும்போது எங்க சங்கத்துக்கு வாங்க, நாங்க செய்யத் தயாரா இருக்கோம். இந்த சமயத்தில் இன்னொன்னும் சொல்றோம். இப்பதான் ஒரு கவுரவமா ஆபிசுக்கு வேலைக்கு நுழைஞ்சிருக்கிற கீர்த்தனாவை தெருவிலே தள்ளிவிட்டுறாதீங்க. அவள் படிப்புக்கும் திறமைக்கும் இருக்கவேண்டிய இடமே வேற. இந்த இயற்கை பண்ணின சதியில அவளது நிலை இப்படியாகி விட்டது. கீர்த்தனாவுக்கு மட்டுமல்ல உங்களைப் போன்ற எல்லா சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் ஆதரவாகவும், உங்க வாழ்க்கை நிலை மேம்படனும்னு நினைக்கிறோம். உங்களுக்கு பணத்தேவை ஏற்படும் போது உதவ உத்தரவாதம் தருகிறோம். கீர்த்தனா நினைத்திருந்தால் அவளது குடும்பத்தினரை சமாதானம் செய்துகொண்டு நிம்மதியாய் வீட்டிலே இருந்திருக்கலாம். இப்படி உங்களோடு தெருவில் அலைய வேண்டியதில்லை . ஆனால் இந்த வாழ்விலிருந்து உயர்ந்து உங்களையும், பெற்றவங்களையும் உடன்பிறந்தவர்களையும் பெருமை படுத்தனுமுன்னு தானே அவள் ஒரு முதுநிலை பட்டதாரி என்பதை மறந்து உங்களோடு திரிகிறாள். அதனால அவளை நிம்மதியா வேலைசெய்ய விடுங்க. அவளது நிலை உயரும் போது உங்கள் வாழ்வும் உயரும். “

சுப்புத்தாய்; “ அய்யா, நீங்க எங்க பிள்ள கீர்த்தனா மீது இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவளது விசுவாசத்தையும் , நன்றியையும் அவள் சென்னைக் குழுவினரோடு சேராமல் எங்களோடு வந்தபோதே தெரியும். சென்னைக்குழு எங்க பிள்ளைகளை வேறுவேறு வேலைகளுக்கு கட்டாயப்படுத்தவும், மறுத்து அவர்களைப் பிரிந்து இந்த ஊரில் வந்து லோள் படுகிறோம். எப்படி வேணுமானாலும் வாழலாம் என்கிறவங்க அவங்களோடத் தங்கிட்டாங்க. பிச்சை எடுத்தாலும் கவரதையாய் வாழணுமுன்னு வந்தவங்க நாங்க. எங்க அன்னாடப் பிழைப்போட சாகிறவரைக்கும் நோய் நொடியில்லாம, அழுந்தாமக் கிழுந்தாமச் சாகனும். அதுக்கான சேமிப்பு தான் இந்த மூணு லட்சம். எங்ககிட்ட வர்றவங்க இப்படி உழைச்சு வயசானவங்களை விட்டுட்டு ஓடியிட்டா நாங்க என்ன செய்யிறது. ? எங்களுக்கு உங்களை மாதிரி பென்சனா வருது? கவருமென்ட் நினைச்சா எங்களைப் போன்ற நங்கை, நம்பிகளுக்கு வாரியம் அமைச்சு சிறு தொழில் கற்றுக்கொடுத்தா எங்க உழைப்பில பொருள் உற்பத்தியும், வருமானமும் வரும் .. எங்களை மாதிரி நுட்பமா, கடுமையா எந்த ஆணும் பெண்ணும் உழைச்சிற முடியாது. எங்களுக்கு தொழில் கத்துக் குடுத்தா கவருமெண்டுக்கும் வருமானம். எங்களுக்கும் கவுரவமான பிழைப்பு.! ஆனா எங்களை உதிரியா அலைய வச்சிட்டது. “

ராஜகோபால்; “ அம்மாடி, பெரிய பொருளாதர மேதை மாதிரி இவ்வளவு விஷயத்தை வச்சிக்கிட்டு மூலையில் ஒதுங்கிக் கிடக்கிறீங்க. நீங்க ஜனங்களோட ஜனமா புழங்க ஆரம்பிச்சாதான் உங்க திறமை வெளியே தெரியும். கூட்டு முயற்ச்சியால வாரியம் அமைக்கலாம். நீங்க எங்களோட பழகுங்க. பழகப் பழக உங்களது திறமைகளை புறக்கணிக்க முடியாத நிலையில் மாற்றம் வரும். சரி, இப்போ கீர்த்தனா விசயத்துக்கு வருவோம். அவளை பிச்சை எடுக்க விடாம நிம்மதியா வேலைக்கு போக விடுங்க. நிச்சயமா அவளது திறமைக்கு தகுந்த வேலை கிடைக்கும். நீங்களும் பலனடைவீங்க.” முத்தம்மையும், சுப்புத்தாயும் கீர்த்தனாவுக்கு சிரமம் இல்லாமல் வேலைக்குப் போய் வர உறுதி கொடுத்தார்கள். அவர்களது வீட்டுக்கு தேவையான செங்கல் , சிமெண்ட் நண்பர்களிடம் நன்கொடையாகப் பெற்றுத் தருவதாக சங்கத்துக்காரங்க உறுதி கொடுத்தனர். அவர்கள் வணங்கி விடைபெற்றனர்.. இவர்கள் இருசக்கர வாகனங்களைக் கிளப்பினர். செல்லையா ; “ இவ்வளவு தூரம் வந்துட்டோம். அவர்கள் வீட்டை எப்படி வைத்து இருக்கிறார்கள் என்று பார்க்காம வந்துட்டோமே “

சுந்தர்ராஜன் ; “ குடிசையில் என்ன கட்டில் பீரோவா இருக்கப் போகுது ? இரண்டு பக்கம் நைலான்கயறு கொடிகட்டி சேலை, ரவிக்கை ,பஞ்சுவச்ச பிராக்கள் தொங்கும். இரண்டு மூணு சூட்கேஸகளில் புதுத் துணிமணிகள், காசுபணம் இருக்க போகுது “ சின்னய்யா; “ இங்க பாருய்யா, துணைத்தலைவர் அவுங்க குடிசைக்கு உள்ளே போய் நேர்ல பார்த்தது மாதிரி சொல்றாரு. ராஜகோபால் ; “ திருனங்கைன்னு குறைச்சு மதிக்கிறோம். அவுங்க கிட்டேயும் எவ்வளவு தீர்க்கமான சிந்தனை இருக்கு. இந்த சமுகம் அவுங்களை மதிக்கத் தவறியிருச்சு. இந்த சமுகத்திலிருந்து தானே அரசாங்கம் வருது..

செல்லையா ; “ சோறு போடற விவசாயிகளையே மதிக்கத் தவறியவர்கள், இவர்களை மதிக்கவா போறாங்க. அரசுகள் எல்லாம் யாராருக்கோ அடிமைகளாக இருக்குதுக. அவுங்களுக்கு சேவகம் செய்யுறதுதான் அதுக வேலை. அவங்களைத் தேர்ந்தெடுக்கிற நம்மலை என்ன சொல்றது.? “ பேசிக்கொண்டே அவரவர் வீடுகளுக்கு கலைந்தார்கள்.

Image result for tamil transgender draw

***** அத்தியாயம் – 6 – *****

கொடும் ராட்சாசப்பறவை தனது கருஞ்சிறகை விரித்து கொரோனா எனும் தொற்றை உலகெங்கும் வியாபிக்க வைத்துவிட்டது. வல்லரசு என்று குதித்த நாடுகள் திக்குமுக்காடி விழிக்கின்றன. சமூக விலங்குகளாக சேர்ந்து வாழப் பழகிய மனிதர்களை கொரோனா தொற்றிவிடாதிருக்க “ தனித்திரு, விலகியிரு, முகக்கவசம் அணிந்திரு “ என்று உலகமெங்கும் புதிய கோஷங்கள் முழங்கத் தொடங்கி விட்டன. கொரோனா பூதத்துக்கு அஞ்சி நாடுகள் தோறும் முகக்கவசம் அணிந்து பொதுவிலக்கம், ஊரடங்கு என்று வீட்டுக்குள் புது வாழ்க்கை முறையை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டனர்..

அங்கே சுற்றி, இங்கே சுற்றி அந்த கண்ணுணரா கொரோனா பூதம் கீர்த்தனா அலுவலகத்திற்கும் வந்துவிட்டது. இந்த பூதத்திற்கு எதிராக மருத்துவத்துறையினரும், வருவாய்துறையினரும், காவல்துறையினரும் கடும்போரை நடத்திக் கொண்டிருந்தனர் . கீர்த்தனா சோலையூர் வருவாய் ஆய்வாளரின் உதவியாளர் என்பதால் வருவாய் அலுவலர் வளர்மதியின் பொறுப்பில் விடப்பட்ட தொற்று பாதுகாப்பு பகுதியில் உள்ள பெண் நோயாளிகள் பகுதிக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டாள். தங்க வைக்கப்பட்டுள்ள பெண் நோயாளிகள் வெளியே தப்பிச் சென்றுவிடாமல் தடுக்க வேண்டும். உள்ளே நுழைபவர் ஒவ்வொருவரும் கிருமி நீக்கி திரவம் சானிடைசர் கொண்டு கைகளைத் துடைத்தும், முகக்கவசம் அணிந்தும் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அங்குள்ள மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஏவக்கூடிய பணிகளையும் செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு வீட்டார்கள் மூலம் வரும் உணவு மற்றும் துணிமணிகளை, மருந்துப் பொருள்களைக் கொண்டு போய் உரியவரிடம் கொடுக்க வேண்டும். இடைவிடாத வேலைகள் இருக்கும். பாவம், மருத்துவ பணியாளர்களும், வருவாய்த்துறையினரும் ஓய்வில்லாமல் தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். தும்மல், இருமல், தொடுவது மூலமாகத் தொற்றும் என்று முககவசம், கையுறை கொடுத்திருந்தனர். இது போதிய அளவுக்கு வழங்கப்படாததால் பயன்படுத்தியதையே திரும்பவும் பயன்படுத்த வேண்டியதாயிற்று. இது ஒருவகையான ஒவ்வாமைச் சோர்வை உணர்த்தியது. லண்டனில், ஸ்பெயினில் மருத்துவர்களது சோர்வைப் போக்கி உற்சாகப்படுத்த எல்லா மக்களையும் அந்நாடுகள் கைத்தட்டச் செய்தன என்று செய்தியில் கேட்டாள்.. இந்திய பிரதமரும் அவ்வாறே நாட்டு மக்களைக் கைதட்டச் செய்தார். நோய்த் தடுப்பகங்களில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான நோய்த் தடுப்புக் கவசங்கள், கிருமி நீக்கிதிரவம் போன்றவை வேண்டிய அளவுக்கு கொடுக்காமல் கைகளைத் தட்டுவது என்பது பணியாற்றுவோரை கேலி செய்வது போலிருந்தது. நொந்துபோன மருத்துவர்கள் வெளியே வந்து பாதுகாப்பு கவசங்கள் வேண்டி கோஷங்கள் முழக்கினர். கீர்த்தனாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். வருவாய்துறை அலுவலர் கீர்த்தனாவைக் கடிந்தார். “ மேடம் நானும் தொற்றாளிகளோடதான் புழங்குகிறேன். எனக்கு முதல்நாள் கொடுத்த முகக்கவசம், கையுறைக்கு பின் மாற்று உடுப்புகள் கொடுக்கப் படவில்லை. எனக்கு கொரோனா தொத்துனா எங்கிட்டிருந்து உங்களுக்கும் தொத்துமில்ல. அதனாலதான் அவுங்களோட கோசம் போட்டேன் மேடம் .” கீர்த்தனாவின் பதில் அலுவலரின் முகத்தை மலர்த்தியது.

“ சரி, நம்ம ரெவன்யு டிபார்ட்மென்ட் தான் இந்த வேலைகளைச் செய்யுது. நாமலே போராட்டதில நின்னா கடுமையான விளைவுகளை உருவாக்கும். ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும். இவர்களோட வேலைப் பார்த்துகிட்டே இங்க என்னென்ன நடக்குது. என்ன குறை, என்ன நிறைன்னு நாம கவனித்து அரசுக்கு அறிக்கை கொடுக்கணும், கவனம்.” அன்பொழுகக் கூறினார். இந்தக் கடுமையான வேலைக்கு இந்த அன்பான அணுகுமுறை தான் ஆறுதல்.. மறுநாளே எல்லாருக்கும் தேவையான அளவு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப் பட்டன. கீர்த்தனா அந்தக் கவச உடையில் தலைக்கவசமில்லா விண்வெளி வீராங்கனை போல் தோன்றினாள்.

காப்பகத்திற்கு வரும் செய்தித்தாளை எல்லோரும் பார்த்து கசங்கிய நிலையில் இவளுக்கு வாசிக்க கிடைக்கும். செய்தித்தாளை வாசிக்கும்போது இவளது மனமும் கசங்கியது. மேலைநாடுகளில் தொற்றைத் தடுக்க பதினைந்து நாள்கள் பொது அடைப்புன்னு அறிவித்ததும் நம்நாட்டு சூழல்களை, மக்கள் வாழ்நிலைகளைக் கருதாம நம் நாட்டு அரசுகளும் பொது அடைப்புன்னு அறிவிச்சுட்டாங்க. பொதுவா இராத்திரி வெளிக்கதவை அடைக்கும் முன்னே வெளியே மேயப்போன ஆடு, கோழிகள், குஞ்சுகள், நாய் எல்லாம் வந்து அதனதன் இடத்தில் அடஞ்சிருச்சான்னு பார்த்துதான் அம்மா கதவை மூடுவாள். ஆனா நம்ம அரசுகள் லட்சக்கணக்கான உதிரி உழைப்பாளிகள், ஊருவிட்டு ஊரு பிழைக்கப் போனவர்களை நினைச்சுப் பார்க்காம பொதடைப்பு, போக்குவரத்து நிறுத்தமுன்னு அறிவிச்சிட்டாங்க. ஆயிரக் கணக்கான ஜனங்க பிள்ளைகுட்டி, குருமான்களோடு கஞ்சி தண்ணி இல்லாம நடந்தே சாகுதுகளே … அரசுக்கு கொஞ்ச நஞ்சம் முன் யோசனை, இரக்கம் வேணாம்.? மக்களை உயிருள்ள மனுசராப் பார்க்காமா வோட்டுப் போடற பிராணிகளாப் பார்க்கிறாங்களோ ?

மகாராஸ்ட்ராவில் தண்டவாளத்தில் படுத்துக் கிடந்தவர்கள் ரயில் என்ஜினில் அடிபட்டுக் கொத்தாக செத்துபோனாங்களே அவுங்க நம்ம இந்திய ஜனங்கள் தானே. எல்லையில் ஒருவீரர் இறந்து போனால் துடிப்பதாக காட்டும் அரசு, நம்ம பொருளாதரத்தை மேம்படுத்த உழைக்கும் தொழிலாளிகள் செத்தா ஏன் துடிக்க மாட்டேங்கிது. இவர்களும் நாட்டுக்கு உழைப்பவர்கள் தானே…? ஓட்டுப் போட்டவர்கள் தானே ? கண்ணீர் பொங்கவே மேற்கொண்டு அவளாலே வாசிக்க முடியவில்லை. நாடு பூராவும் புலம்பெயர்ந்த உழைப்பாளிகள் கஞ்சிக்கில்லாமல் உழைக்க வந்த இடத்தில் சாவதற்கு பிறந்த மண்ணில் சாகலாம் என்று சொந்த ஊரு நோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்கள். உரிய பாதுகாப்பு இல்லாமல் வந்தவர்களால் நாடு முழுவதும் தொற்று பரவிவிட்டது. தேவையான அளவு மருத்துவ மனைகள் இல்லாமல் இப்படி காலேஜு, பள்ளி வளாகங்களில் தொற்று தடுப்பு மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் மாநிலத்திலே சிறந்த தனியார் மருத்துவ மனைகள் என்று பேரு வாங்கிய தனியார் மருத்துவ மனைகள் கதவை அடைத்துக் கொண்டன. நல்ல நோபல் ப்ரோபெசன்..! உலகை ஆதிக்கம் செலுத்திய அல்லோபதி மருத்துவ வியாபார சாம்ராஜ்யங்களும் கைகளைப் பிசைந்து நிற்கின்றன. ஏறக்குறைய ஆறுமாத காலமாகியும் ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்த கப சுர நீர் , சுக்குமல்லி கசாயம், நிலவேம்பு கசாயமுன்னு சித்த வைத்திய முறைகள் தான் இப்போது கைகண்ட மருந்து. இந்தத் தடுப்பகத்தில் கூட காலையில் மருத்துவர் முதற்கொண்டு நோயாளிகள் வரை எல்லோருக்கும் இளம்சூட்டில் கபசுர நீர். சிற்றுண்டி மிளகுப் பொங்கல், கீரைவடை; மதியம் காய்கனிப் புலவு, முட்டை, சீரகமிளகு கலந்த எழுமிச்சை ரசம்; மாலை நாலு மணிக்கு சுக்குமல்லி காபி; இரவில் சப்பாத்தி – காய்கனி குருமா என்று உணவு நடைமுறைகள். இதோடு சில மாத்திரைகள் என்ற ரீதியில் மருத்துவப் பராமரிப்பில் ஒரு வாரம் பத்து நாள்களில் பலர் குணமடைந்து போகிறார்கள். கொரோனா தொற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. அன்றாட வாழ்வியல் நீரோட்டங்களைத் தடம் புரட்டி போட்டுவிட்டது. அதனால் கட்டுக்கு அடங்காமல் புதுப்புது நோயாளிகள் வந்தபடி இருந்தனர். மருத்துவ பணியாளர்கள் ஒரு நாளைக்கு பனிரெண்டுமணி நேரம் வீதம் இரு சுழற்சியில் வேலை பார்த்தார்கள். அவர்களுக்கு ஊக்க ஊதியம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. நமது பிரதமர் இரவில் விளக்கை அணைத்து அகல்விளக்கோ, மெழுகுவத்தியோ ஏற்றுங்கள். நமது ஒன்றுபட்ட செய்கையால் நோயின் வேகம் கட்டுப்படும் என்று அறிவித்து விளக்கேற்ற வைத்தார்.. தனது கட்சி தொடங்கிய நாற்பதாவது ஆண்டைக் கொண்டாடத்தான பிரதமர் விளக்கேற்றச் சொன்னார் என்ற விவரத்தை மறுநாளே எதிர்கட்சிகள் அம்பலப்படுத்தி விட்டன. இதை வாசிக்கையில் கீர்த்தனாவுக்கு இத்தாலியின் நீரோ மன்னன் நினைவு வந்தது. எரிச்சல் பொங்கியது. காய்ச்சல் வருவது போல் கண்ணும் உடலும் காந்தியது. மருத்துவர்கள் மனதளவிலும் சோர்ந்து போனார்கள்.

இந்த சமயம் புதிய கலெக்டர் வந்தார். நோய்த் தடுப்பகத்தைப் பார்வையிட்டு திரும்பும் போது மருத்துவர்களிடம் கருத்துகள் கேட்பார். அவர் கீர்த்திகாவிடம் கனிவாகப் பேசுவார். அவர் அவளிடம் கேட்டபோது “ அய்யா நோய்த் தடுப்பகத்தில் எல்லாரும் சோர்ந்து போயிருக்கிறார்கள். அவர்களது சிந்தனையை மாற்ற டிவி பெட்டி ஒன்னு ஹாலில் வச்சு பழைய பாடல்களையோ , நகைச்சுவைக் காட்சிகளையோ கேட்கச் செய்தால் ,தங்கி இருப்பவர்களுக்கு சோர்வு குறையும். மனம் நோயை மறக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும் “ கலெக்டர் நல்ல யோசனை என்று வருவாய் அலுவலரிடம் சொன்னார். அந்த இடம் அரசு பொறியியல் கல்லூரி என்பதால் மறுநாளே விடுதியிலிருந்து டீவிபெட்டி வந்து எல்லாரையும் சிரிக்க வைத்தது. மருத்துவர்களும் , நோயாளிகளும் இவளைப் பெருமையாகப் பேசினர். இவளுக்கும் உற்சாகமாக இருந்தது. இந்த யோசனை, மாவட்டம் முழுதும் மற்ற நோய்த் தடுப்பகங்களிலும் செயல்படுத்தப் பட்டது. கலெக்டருக்கு நல்ல பேரு.

Image
உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)

***** அத்தியாயம் –7 – *****

அன்றைய செய்தித் தாளில் வந்த செய்தி பேரிடியாக தலையில் விழுந்தது.. டி என் பி எஸ் சி தேர்வு முடிவு இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இரு மையங்களில் தேர்ச்சி பெற்றோர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தர வரிசையில் அடுத்தடுத்து வருவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. பிற மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வாளர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இரு மையங்களில் நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய தர வரிசைப்படி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. கீர்த்தனா குருப் 2 வில் இரண்டு வகைத் தேர்வுகளையும், குருப் -4ல் ஒரு தேர்வும் எழுதி இருந்தாள். மூன்றிலும் தேர்ச்சி அடையும் விதத்தில் எழுதியிருந்தாள். நிச்சயம் மூன்றில் ஒன்றிலாவது தேர்ச்சி அடைந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்தாள். ஆனால் இப்படி மூன்று தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவே. என்ன செய்ய ..?

இவளுக்கு விதியில் நம்பிக்கை இல்லை. இவள் மனம் துயரில் கடையப்படும் போதெல்லாம் தனிமையில் சென்று பாரதியின் “ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் ஏறிவதுண்டோ … “ பாடலை நெக்குருகப் பாடி கண்ணீரில் கரைவாள். கொஞ்சம் மனம் சமநிலையை அடையும். பின் .”..தேடிச் சோறு நித்தம் தின்று…….கொடுங்கூற்றுக்கு இரையாகும் வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ… “என்ற பாடலை சந்தலயம் பிறழாமல் சொல்லுவாள். தனது துயரை எதிர்த்து கர்ஜிப்பது போலிருக்கும். இந்தப் பாடலை உச்சரித்து முடிந்த பின் பெருமழை பெய்து வெளுத்த வானம் போல் மனம் தெளிந்திருக்கும்.
இன்றும் கீர்த்தனா பாரதியையே தஞ்சம் புகுந்தாள். மனம் தெளிவடைந்தாள். தவறு செய்தவர்களை நீக்கி நிச்சயம் பிற மாவட்டத் தேர்வாளர்களின் முடிவுகள் அறிவிக்கப்படும். அதில் தேறிவிடுவாள். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதால் வேலை இல்லாதவர்களின் குடும்ப வாக்குகளுக்காகவது அரசு முயற்சிக்கும் . இவ்விஷயத்தில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். ஆனாலும் சும்மா இருக்காமல் ஐஎஎஸ் தேர்வுகள் எழுத முயற்சிப்போம் என்று முடிவெடுத்தாள்.

அவளது இருக்கையில் நூலகத்தில் பெற்ற ஐ ஏ எஸ் முதல்நிலைத் தேர்வுக்கான புத்தகம் இருந்தது. அன்று நோய்த்தடுப்பகத்தைப் பார்வையிடத் தியாகிக்கோட்டை சப்கலெக்டர் வந்திருந்தார். அவர் உள்ளே சென்று பார்வையிட்டு விட்டு திரும்பும் போது இவளது இடத்தில் இருந்த அப்புத்தகத்தை பார்த்தார். “ அது யார் புத்தகம் , நீ படிக்கிறாயா” இவள் தலையசைத்தாள். “ சர்விஸ் கமிசன் எழுதினியா “ “ எழுதியிருக்கிறேனுங்க மேடம். ரிசல்ட் தாமதமாகும் போலிருக்குங்க . அதனால சிவில் சர்விஸ் எழுதிப் பார்க்கலாமின்னு படிக்க ஆரம்பிச் சிருக்கேனுங்க மேடம்.” “ குட். நீ என்ன படிச்சிருக்கே , உன்கிட்ட ஆன்றாய்ட் செல் இருக்கா? “
“ நான் எம்.காம். பஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணியிருக்கேனுங்க மேடம். என்கிட்டே சாதா செல் தான் இருக்குங்க மேடம். “

“வெரி குட் ! போஸ்ட் கிராஜுவேட். சந்தோசம். நான் என்கிட்டே இருக்கிற செல்லைத் தர்றேன். அதுல நெட்டிலே ஐ.எ எஸ் க்கு படிக்க நிறைய விவரங்கள் கிடைக்கும். படி. சந்தேகம் வந்தா கேளு சொல்லித் தர்றேன். அதென்ன புத்தக புண்டல் ? உனக்கு புத்தகம் படிக்க நேரம் எப்படிக் கிடைக்குது ?” “ என்று முறுவலிட்டார். “ அது ஒருத்தர் அன்பளிப்பாகக் கொடுத்தார் மேடம் .” “ வேலை பார்க்கிற இடத்தில் அன்பளிப்பு எந்த முறையிலும் வாங்கக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா “ “ “மேடம் , சாரி மேடம். இது அந்த மாதிரியான அன்பளிப்பு இல்லை மேடம். இது ஒரு அன்புத் தொல்லை மேடம். இந்த ஊரைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் நேற்று அவர் மனைவிக்கு கொரோனானு சேர்க்க வந்திருந்தார். விரைவு சோதனையில் அந்தம்மாவுக்கு நெகடிவ் என்று கேட்டதும் பேராசிரியருக்கு மயக்கம் வந்துவிட்டது. கதறி அழுத அவரது மனைவிக்கு ஆறுதல் சொல்லி பேராசிரியருக்கு முதல் உதவி செய்து மயக்கம் தெளிவித்தோம். அவரது மனைவி சொன்னார் ;’ எண்ணத்தில் செயலில் எதிலும் பாசிடிவாகவே இருக்கனும்பார் . எனக்கு நெகடிவ்னு கேட்டதும் அவருக்கு மயக்கம் வந்துருச்சு. ‘ இதைக் கேட்ட எனக்கு சிரிப்பு வந்திருச்சு . மயக்கம் தெளிந்த பேராசிரியர் என்னை புதிராகப் பார்த்தார். நான் , சார் , உங்க மனைவிக்கு நெகடிவான நெகடிவ் இல்லை. பாசிடிவான நெகடிவ். அதனால சந்தோசமா உங்க மனைவியை வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க. கொரோனாவுக்கு டாட்டா சொல்லிட்டுப் போங்க.! என்றதும் ஓரளவு புரிந்தவராக என்னைப் பார்த்து சிரித்தார். ‘நான் பாசிடிவ் , நெகடிவ் என்று சொற்களின் நேரடி அர்த்தங்களை மட்டுமே நினைத்துப் பழகிவிட்டேன். இந்த இரண்டு சொற்களும் சூழலுக்கு ஏற்ப எதிரான அர்த்தத்தையும் தரும் என்கிறதை நினைக்கலை. பரவாயில்லை நீ தெளிவாத் தான் இருக்கே. நீ நிறைய புத்தகங்கள் படிப்பே போலிருக்கே. ரொம்ப சந்தோசமுன்னு மனைவியை அழைத்துப் போனார். அடுத்த அரைமணி நேரத்தில் வந்து இந்த புத்தகங்களைக் கட்டாயப்படுத்தி கொடுத்துட்டு, கொரொனா ஓய்ந்ததுக்கு அப்புறம் என்னை வந்து பாருன்னு போயிட்டார்.. இது ஒருவகையான அன்புத்தொல்லை. இந்த புத்தகங்களை படிக்கவும், பத்திரமா வைக்கவும் இடமில்லாமல் தவிக்கிறேன். பொதுநூலகத்துக்கு கொடுக்கலாமுன்னு இருக்கேனுங்க மேடம். “.

“ சந்தோசம். புத்திசாலியா நடந்துக்க. “ என்று சப்கலெக்டர் புன்னகைத்து வெளியேறினார். இவள் நன்றி மேடம் என்று வழி அனுப்பினாள். இவளது உடலில் புதுத்தெம்பு பரவியது. மனம் மிதந்தது.



கீர்த்தனா சந்தைப்பேட்டை பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் இருந்தபோது நாடோடிகளாகத் திரிந்த குறவர்களது பிள்ளைகளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. தனக்கு கீழ் நிலையில் உள்ளவருக்கு நாம் சொல்லிக் கொடுத்தோம். இன்று தனக்கு மேல்நிலையில் உள்ளவர்கள் உதவுகிறார்கள். இந்தக் கொரோனா பொது அடைப்பு, பொது விலக்கக் காலத்தில் குறவர்களும் பசிக்கு என்ன செய்கிறார்களோ ..? பாவம் சாதாரண நாள்களிலே வயிற்றுப் பாட்டுக்கு பெரிதும் அலைவார்கள். இந்த பொது அடைப்பில் அரசு சொல்லும் உதவி அவர்களுக்கும் எட்டுதா ? அவர்கள் நம்மலை மாதிரி இல்லை. கிடைப்பதை அளவாகவே உண்ணுவார்கள். உணவை வீணாக்காமல் பக்குவப் படுத்தி வைத்து தின்பார்கள். அவர்களில் யாரையும் தொந்தியும் , தொப்பையுமாய்ப் பார்த்ததில்லை. ஐம்பது வயசுக்கு மேற்பட்ட பெண்களில் சிலர் உடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தினால் சற்று வயிறு பெருத்து தோன்றுவர். காடு மேடு , வெயில் ,மழை என்று அலைந்து திரியும் அவர்களுக்கு சளி பிடித்து, இருமலோ , காய்ச்சலோ வந்து பார்த்ததில்லை. அவர்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்புத்திறன் நமக்கு இல்லை. கொரோனா நெருக்கடி தீர்ந்த பின் அவர்களைப் போய் பார்த்து வரணும்.

கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் கூடிய மக்கள் கூட்டத்தால் வடமாவட்டங்களில் கொரோனா பரவிவிட்டது. நாள்தோறும் வட மாவட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் , சென்னை மாநகரத்தில் ஆயிரக் கணக்கானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் பட்டியல் பெருகி வருகிறது. இந்த நேரத்தில் அரசு கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்து சென்னை மக்களை சென்னை நகரத்தை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்திருக்கலாம். அப்படி செய்யத் தவறி விட்டது.. வெளி மாவட்டங்களில் இருந்து வாழ்க்கைப் பாட்டுக்கு சென்னையில் குடியேறிய மக்கள் உயிர் பயத்தோடு கூட்டம் கூட்டமாக கிடைக்கும் வாகன வசதிகள் கொண்டு அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி விட்டனர். இப்போது கொரோனா தனது தொற்றுக்கரங்களை தமிழகம் முழுவதும் பரப்பிவிட்டது. தினம் ஐந்தாயிரம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்பட்டோர் பட்டியல் கூடிக் கொண்டே இருக்கிறது. மருத்துவ வசதிமிக்க மாநிலம் என்று பெயரை கேள்விக்குறியாக்கி நாட்டிலே நோய்த் தொற்றில் இரண்டாவது இடத்தைப் பிடிச்சிருச்சே.

இப்போது சென்னை மக்கள் நெருஞ்சிக்குடிக்கு வந்ததால் கூடுதலாக ஐந்து நோய்த் தடுப்பகங்கள் திறக்க வேண்டியதாயிற்று. தாசில்தார் , திருநங்கையரை பணிக்கு அமர்த்த விவரம் கீர்த்தனாவிடம் கேட்டார் . இவள் வீட்டு முகவரி மட்டும் கொடுத்து விருப்பமுள்ளவங்களை பயன்படுத்திக்கிங்க சார் என்றாள்.
கீர்த்தனா சுப்புதாயக்காவுக்கு போன் செய்து விவரத்தை சொன்னாள். அரசு நம்மகிட்ட கேட்கும்போது பொது வேலைகளுக்கு நாம பயன்பட்டோம்னா , இதை வைத்து நம்ம குழு பொருளாதார ரீதியா வளர அரசின் ஆதரவு கிடைக்கும். நீங்க முந்தி சொன்னமாதிரி திருநங்கையர் வாரியம் அமைக்கும் நோக்கத்துக்கும் உதவியாக இருக்கும். அதனால மறுக்காம நாலைந்து பேரை அனுப்பி வையுங்கக்கா “

“ ஏண்டி ,நீ படிச்சவ விநயமாப் பேசி எங்களையும் கொரோனாவில மாட்டி விடுறியா ..? உன்னைத்தான் நாங்க மஞ்சத்தண்ணி தெளிச்சு விட்டுட்டோம். இன்னும் ஏண்டி எங்களை வில்லங்கத்தில மாட்டிவிடுறே ”.

“ அக்கா ,நம்ம அரவான்பெருமாள் சத்தியமா மாட்டிவிடுற எண்ணம் இல்லக்கா .என்னை நம்பு .நம்மாளுக எதிர்கால நன்மைக்காகத்தான் அட்ரெஸ் மட்டும்தான் சொன்னேன்.. தாசில்தார் வந்து கேட்டா நம்மாளுகளை அனுப்புறதும் , அனுப்பாததும் உங்க இஷ்டம். “

“ ஏண்டி , அரசாங்கம் கொடுத்த இடத்தில குடியிருந்துகிட்டு அரசு தயவுக்கு தொன்னாந்துகிட்டு இருக்கிற நாம பொதுவேலைக்கு நம்மாளுகளை அனுப்ப முடியாதுன்னு சொல்லமுடியுமாடி..”

“ அதான்க்கா , முடிஞ்சவங்களை அனுப்பக்கா .”

“ நீ எப்படிடி இருக்க.? பார்த்து ஒரு மாசமாச்சு. அங்கே உனக்கு தங்க திங்க வசதியா இருக்கா ? பார்த்து சூதானமா இருடி. உலகமே கொரோனா நோயால சுருண்டு கிடக்கு. நோயை கீயை தொத்திகிட்டு வந்துறாதே. எங்கனால பார்க்கத் தெம்பும் ஐவேசுமில்ல. உங்கையில காசுபணமேதும் இருந்தா ஒரெட்டு வந்து குடுத்துட்டுப் போ “என்று ஆற்றாமை பொங்க போனைத் துண்டித்தாள்.

அர்த்தனா , நர்த்தனா , கன்னிகா ,நித்திகா, பிரீதிகா என ஐந்து பெரும் புதியதாக உருவாக்கப்பட்ட தொற்று தடுப்பகங்களில் பணி அமர்த்தப் பட்டனர். அவர்களும் கீர்த்தனாவைப் போல் அங்கேயே தங்க அனுமதிக்கப் பட்டனர். அவர்களது சோற்றுப் பிரச்சினை தீர்ந்தது. பொது அடைப்பில் , கடைகள் திறக்காத நிலையில் , பஸ் , ரயில் ஓடாத சூழலில் அவர்கள் யாசகத்துக்கு போகமுடியாது. அரசு கொடுக்கிற உதவியும் கிடைக்காட்டா கையிலிருப்பதைத் தான் செலவழிக்கணும் . இருப்புக்காசை எடுக்கணுமுன்னா சுப்புத்தாய் அக்காவுக்கு உயிர் போகுமே. என்று இவள் நினைக்கையில் எதிரே ஒரு கர்ப்பிணி தென்பாட்டாள். கீர்த்தனாவுக்கு அவளது அம்மா , அக்கா நினைவு வந்தது. அப்பா செத்ததுக்கு கூட போக முடியவில்லை. அம்மாவுக்கு இப்போது ஐம்பது வயசு இருக்கலாம். நோய் நொடியோடு என்னென்ன சிரமமெல்லாம் படறாளோ ? கல்யாணமான அக்கா உதவுறாளோ , அவளுக்கு எத்தனை பிள்ளைகளோ , அவ வாழ்க்கைப்பாடு எப்படியோ என்று சிந்தனை துவைத்து முறுக்கிப் பிழிந்தது. கண்ணீர் கசிந்தது. பொது இடத்தில் அழக்கூடாது என்று மெல்லிய குரலில் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ …. முணுமுணுத்தாள்.

Image result for tamil transgender draw

***** -அத்தியாயம் –8–*****

1917 இல் முதலாம் உலகப்போர் சமயம், சென்னையில் ஜெர்மனியின் எம்ப்டன் கப்பல் குண்டு போடப் போவதாக வந்த செய்தியில் கொத்து கொத்தாக சென்னையிலிருந்து நடந்தே தென் மாவட்டங்களுக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும் சென்றார்கள். என்று படித்திருக்கிறாள். இப்போது நேரில் பார்க்கிறாள். சென்னையிலிருந்தும் மட்டுமல்ல மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பிழைக்கப் போன மக்கள் கொரோனா தாக்க உயிர் பயத்தில் கூட்டம் கூட்டமாக தமிழகம் திரும்பத் தொடங்கினர்.

வெளி மாநிலத்திலிருந்து மக்கள் வர வர கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நோயை ஓட ஓட மூன்று நாளில் விரட்டுவோம் என்ற ஆட்சியாளர்கள் மூன்று மாதமாகியும் நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் கடவுள் தான் காக்க வேண்டும் என்றும் கொரோனா நோயோடு வாழப் பழகிக் கொள்வோம் என்றும் புலம்ப ஆரம்பித்தனர். மக்களும் அரசின் ஆரம்பகால சூரத்தன அறிக்கைகளில் மெத்தனமாக இருந்தனர். பிறகு உலகு தழுவிய நோய்த் தாக்கத்தைப் பார்த்ததும் உயிர்பயம் தொற்றிக்கொண்டது. கடவுளிடம் முறையிட கோயில்களுக்கும் செல்ல முடியவில்லை.சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று கடவுளும் ஒதுங்கிக் கொண்டார். ஆலயங்கள் எல்லாம் கதவடைப்பில் கொரோனா சாதி, மதம், இனம், மொழி , வயசு , பதவி , அந்தஸ்து எதையும் பார்ப்பதில்லை என்பதை உலகம் உணரத் தொடங்கியது. உலகம் முடிவுக்கு வந்திருமோன்னு அச்சப்பட்டவர்களும் உண்டு. இதனால் பொது அடைப்பில் தளர்வு அறிவிக்கபட்ட போதெல்லாம் தனிநபர் இடைவெளி , முகக்கவசம் எல்லாம் புறக்கணித்து கடைகளில் குவிந்தனர். காய், கனி, கறி, முட்டை, மீன், கோழி, அரிசி பருப்பு என்று தின்பண்டங்களை வாங்கிக் குவித்தனர். ஒவ்வொரு பொது அடைப்புக்கு முதல் நாள் இரவு எல்லாம் பண்டிகை நாள்களாக மாறின. ஊரடங்கு, சுகாதாரக் கட்டுபாடுகளை மக்கள் துறந்தனர். இரவுநேரத்தில் கறிக்கடை, மீன், கோழிக் கடைகளில் குவிந்தனர். தொற்று கண்ணுணராத் தீயாகப் பரவியது.

நோய்த் தடுப்பகங்களின் எண்ணிக்கை கூடக் கூட பராமரிப்பின் தரம் குறைந்தது. நோய்த்தடுப்பு மருந்து கண்டறியப் படாத நிலையில் வெற்று சிகிச்சையில் என்ன பலன் கிடைக்கும் ? மருத்துவப் பணியாளர்களிடம் சோர்வும் வளர்ந்தது. தனியார் மருத்துவமனைகள் செயல்பட அனுமதிக்கப் பட்டன. அவர்களது பணம் கறக்கும் முறைகளையே கையாண்டனர் . இப்படியான நிலையில் எளிய மக்கள் தம் விதியை நொந்து அரசு நோய்த் தடுப்பகத்தில் சரணடைந்தனர். பலர் சித்த , ஹோமியோ மருந்துகளை நாடினர். எதைத் தின்றாவது நோயை விரட்டினால் போதும் என்ற எண்ணம் எல்லா மட்டங்களிலும் பரவியது. பலர் காய்ச்சல் இருமல் வந்தால் மருத்துவமனைக்குப் போனால் கொரோனா தடுப்பகத்தில் பதினைத்து நாள்களுக்கு வைத்து விடுவர் என்று பயந்து வீட்டிலே இருந்து தெரிந்த மருந்துக் கடைகளில் பராசெட்டமால் மாத்திரைகளையும் ,இருமல் சிரபையும் வாங்கி சாப்பிட்டார்கள் . இவர்களில் சிலர் நலமடைந்ததும் உண்டு. சிலருக்கு நோய் முற்றி கொரோனாவாக மாறி வீட்டில் உள்ளவர்களுக்கும் தொற்றச் செய்ததுமுண்டு.

கீர்த்தனாவின் சகபாடி பிரித்திகா திடீரென்று போன் செய்து அழுதாள். அவள் பணியாற்றும் அண்ணா நகர் நோய்த் தடுப்பகத்தில் காவல் பணியில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், அவள் கழிவறைக்குப் போகும் போது பின்னாலே போய் பலவந்தப்படுத்தி இருக்கிறார். அவள் திமிறி கூச்சல் இட்டிருக்கிறாள். அவளது வாயைப் பொத்திக் கடிக்க முயற்ச்சித்திருக்கிறார். அவள் அவரை கீழே தள்ள , அவர் எழுந்து முகத்தில் அடிக்க உதடு கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது, யாரிடமாவது சொன்னேன்னா உன்னை பெட்ரோல் ஊத்தி எரிச்சு கொரோனா தற்கொலைன்னு கதையை முடிச்சிருவேன் என்று மிரட்டினான். கீர்த்தனா , பிரித்திகாவின் ரத்தம் வழிந்து வீங்கிய முகப்படத்தை எஸ்பி க்கு வீடியோவில் அனுப்பச் சொன்னாள்.. இவளும் அந்த செய்தியின் நகலை கலெக்டருக்கு அனுப்பி எஸ்பியிடம் பேசுமாறு கெஞ்சினாள். கலெக்டரும் எஸ்பியிடம் பேசி நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கிறார் எஸ்பி பாண்டியன் கண்டிப்பானவர். அவர் மண்டல போலிஸ் டி ஐ ஜி யிடம் பேசி அந்த காமாந்தகாரனை ராத்திரியோடு ராத்திரியாக கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி விட்டார். இந்த கொரோனா கொடுங்காலத்திலும் இப்படி நடக்கிறது. ஆனால் இந்த சம்பவம் தம்மால் எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை திருநங்கயருக்கு ஏற்படுத்தியது. காவல்துறையினருக்கு நங்கையரிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற எண்ணம் உருவானது.

தடுப்பு மருந்து கண்டு முடிக்க இயலவில்லை. இனி கொரோனாவோடு தான் வாழ வேண்டும் என்ற நிலைக்கு வந்த அரசுகள் ஊரடங்கை தளர்த்தியது. கடைகளும், பஸ்களும் இயங்கத் தொடங்கின. திருநங்கையர் சுப்புத்தாய், முத்தம்மை தவிர மீதமுள்ள ஐவர் கடைகளில், பேருந்துகளில் முகக்கவசங்களோடு சென்று யாசகம் பெறத் தொடங்கினர். வாழ்வின் அன்றாட நடைமுறைகள் அச்சத்தோடு நகர்ந்தன. ஒருவார கால அலைச்சல்களில் கண்ணம்மாவுக்கும் ,மீனாவுக்கும் கொரோனா அறிகுறிகள் தெரிய நோய்த் தடுப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இதில் ஐம்பது வயதான கண்ணம்மா இறந்து போனாள். கண்ணம்மா இறந்த அதிர்ச்சியில் மரண பீதியில் மீனாவும் இறந்து போனாள். கொரோனா நோய் தாக்கத்தில் இறந்தவர்களை புதைப்பதற்க்கு பல இடங்களில் ஊர் மக்கள் சுடுகாடுகளுக்கு உடலைக் கொண்டு செல்வதை மறித்து கலவரம் செய்தார்கள். சென்னையில் ஒரு பிரபல மருத்துவரின் உடலுக்கு சுடுகாடு கிட்டாமல் மூன்று நான்கு சுடுகாடுகளுக்கு அலைந்து கடைசியில் போலிஸ் தலையிட்டு வானத்தில் எச்சரிக்கையாகச் சுட்டு கலவரக்காரர்களை விரட்டினர். பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் அவலம் ஆதரவற்ற அபலைகளான கண்ணம்மா, மீனா உடல்களையும் அடக்கம் செய்வதில் பிரச்சின வந்துறக் கூடாது என்று கீர்த்தனா கலங்கினாள். உடனே கோட்டாச்சியரிடம் போனில் முறையிட்டாள். கோட்டாச்சியரின் உத்தரவுப்படி தாசில்தார் இந்த இரு திருநங்கையரின் பிணங்களையும் மின்மயானத்தில் தகனம் செய்வித்தார். ஆனால் நோய்த் தடுப்பகத்தில் பணியாற்றும் கீர்த்தனா உட்பட ஆறு திருனங்கையரும் துக்கத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அக்காமார்களின் உடலை அடக்கம் செய்வதில் கிடைத்த ஆறுதல், துக்கத்தில் பங்கேற்கத் தடையில் பறிபோனது. கீர்த்தனாவுக்கு மனம் பிசைந்தது. இவள் சென்னையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது இவளைத் தனது மகளைப் போல் கண்ணம்மா பராமரித்தாள். சொந்தத் தாயை பிரிந்து வந்த கார்த்தி என்ற கீர்த்தனாவுக்கு, சுப்புத்தாய் கண்ணம்மாள், போன்றவர்கள் தாய்மைப் பாசத்தை ஈடுசெய்தார்கள். மீனா இவளைச் சொந்தத் தங்கை போல பாவித்தாள் . தவிர்க்க முடியாத இறப்பை ஏற்றுதான் ஆகவேண்டும். இறந்தவர்களின் அளப்பரிய பணிகளை நினைவில் கொண்டு நாம் வாழ்ந்தாக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நம் நினைவைப் பதித்துச் செல்லவேண்டும். துன்பம் வரும் போதெல்லாம் இவளுக்கு பாரதி தான் புகலிடம்.

Image
உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)

***** அத்தியாயம்—9 –*****

கொரோனா தடுப்பு மருந்துகள் பற்றி உலக சுகாதார நிறுவனமே ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையான மருந்தின் நம்பகத்தையும் , பொருந்தாத்தன்மை குறித்தும் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. இத்தொற்று நவம்பர் மாதத்தில் உச்சம் தொட்டு படிப்படியாய் குறையும் என்ற தகவலும் சொல்லப்பட்டது . இதனிடையே சீனா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து விட்டோம். இனி நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்ய வேண்டும் என்று கூறின. இந்தத் தருணத்தில் சித்த மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டோம். எங்கள் மருந்துக்கு அனுமதி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அல்லோபதியின் அடிமைகளான அரசுகள் காதுகளை அடை.த்துக் கொண்ட.ன . இப்படியான சூழலில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்ட பல மருத்துவர்கள் உயிரிழந்த செய்திகளும் உலுக்கின. கீர்த்தனாவின் தடுப்பகத்திலும் நாற்பது வயது மருத்துவர் ஒருவர் இறந்து விட்டார். இறப்புக்கு பணியழுத்தமும், ஓய்வின்மையும் காரணம் என்றார்கள். நோயாளிகளோடு சிரித்த முகத்தோடு பேசி பலரது நோய்மையை சிரிப்பால் குறைத்தார். இன்று அவரது சிரித்த முகமே நெஞ்சில் நிற்கிறது. பாவம் , அவர் என்னென்ன கனவுகளை சுமந்து நின்றாரோ , அவரது இழப்பை அவரது குடும்பம் எவ்வாறு தாங்குமோ …

கீர்த்தனா, நலமடைந்து திரும்பும் நோயாளிகளிடம் தெம்பூட்டி பேசி அனுப்புவாள். புதியதாக வரும் நோயாளிகள் சிறைக்குள் வருவது போல் அச்சப்படுவர். நோய் தீர்ந்து வீடு திரும்புவோமா நம்பிக்கை இழந்து குமைவர். அவர்களிடம் ஆறுதலாகப் பேசி இங்கிருந்து சிகிச்சைக்கு ஒத்துழைத்து நோயிலிருந்து தேறிச் சென்றவர்கள் பற்றி சொல்லுவாள். இவளது அன்பொழுகும் பேச்சும், அர்ப்பணிப்பும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இப்படி நோயாளிகளோடு ஊடாடிய கீர்த்தனா மீதும் பாசம் கொண்டு கொரோனா தொற்றியது.

அதே தடுப்பகத்தில் அனுமதிக்கப் பட்டாள். நோய்மை குறித்து அச்சம் ஏதுமில்லாமல் எல்லை தாண்டி நோயாளிகளிடம் நெருங்கி விட்டோமோ என்று சுயவிமர்சனம் உறுத்தியது. செய்யும் பணியில் அதீத ஈடுபாடு காட்டும்போது இது மாதிரி பாதிப்பு சகஜம் தான். இப்போது நோயை பயன்படுத்தி வாசிப்பில் கவனம் செலுத்தலானாள். மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொண்டாள். ஒரு வாரத்தில் குணம் அடைந்தாள். எச்சரிக்கை நிமித்தம் கூடுதலாக ஒரு வாரம் இருந்தாள். பதினைந்தாம் நாள் நோய்த் தடுப்பகத்திலிருந்து விடுவிக்கப் பட்டாள்.

கீர்த்தனா அடுத்து எங்கே போவது , என்ன செய்வது கேள்விகள் பிழிந்து தொங்க விட்டன. வேம்பும் , மஞ்சள்கொன்றையும் , புங்கன் மரங்களும் சூரிய கால்கள் உள்ளே நுழையமுடியா குளிர்ந்த வளாகம் ; ஆதரவற்ற தான் பலருக்கு ஆறுதல் கூறி , மக்களோடு சகஜமாகப் பழகும் பணி ; நேரா நேரம் அலைச்சல்களில்லாத சத்தான சாப்பாடு ; பல உயர் அதிகாரிகளோடு பழகி தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் உதவும் வாய்ப்பு ; இதை எல்லாம் விட்டு வெளியே போவது சரியா..? துணிந்து தாசில்தாரிடம் இக்காப்பகத்திலே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கும் படி கேட்டாள். தாசில்தார் ,” நீ நல்லா வேலைப்பார்க்கிற , இப்போதான் நோயிலிருந்து குணமாகிருக்கே ;எதற்கும் மருத்துவர் ஆலோசனையைக் கேட்போம்” என்றார்.

“நோயிலிருந்து குணமடைந்த அறிகுறிகள் தெரிந்தாலும் இன்னும் ஒரு பதினைந்து நாள் ஓய்வெடுத்து உடல்நிலை பார்த்த பிறகு இதுமாதிரி மக்கள் தொடர்பு பணிக்கு வருவது தான் ,நல்லது. பாதுகாப்பானதும் கூட.” என்று மருத்துவர் சொன்னதைத் தாசில்தார் ஏற்றுகொண்டார். “ நீ ரெஸ்ட் எடுத்துட்டு பதினைந்து நாள் கழித்து , அதாவது ஜூன் முப்பது அன்னக்கி என்னை வந்து பாரு “ என்றார். அவரது கனிந்த சிரிப்பு போய் வா மகளே என்று உணர்த்தியது..
கீர்த்தனா , சுப்புத்தாய் அக்காவுக்கு போன் செய்து தான் கொரோனா விலிருந்து குணமடைந்து விட்டேன். வீட்டுக்குப் போகச் சொல்லிட்டார்கள். வீட்டுக்குப் புறப்பட்டு வருகிறேன். வீட்டுக்கு என்னென்ன, சாமான்கள் வாங்கி வரணும் என்று கேட்டாள்.

“ குணமானது ரொம்ப சந்தோசம் தாயி. நீ ஒன்னும் வாங்கிட்டு வரவேணாம். நாங்க சமாளிச்சுக்கிறோம். நீ கொஞ்ச நாளைக்கு அங்கிட்டே இருந்து கொரோனா தொத்து அடங்கினப் பிறகு வந்தா போதும். இப்போ அவசரப்பட்டு வந்துறாதே தாயி , உனக்கு புண்ணியம் கிடைக்கட்டும். மணி மணியா ரெண்டு உசிரைத் தூக்கிக் குடுத்த நொம்பலம் இன்னும் தீரல தாயி. நீ மகராசியா இருப்பே .. அவசரப்பட்டு வந்திறாதே.! “ போனைத் துண்டித்து விட்டாள்.

கீர்த்தனாவுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. வேப்ப மரத்து நிழலில் உட்கார்ந்தாள். ஒரு நொடிப்பொழுதில் அனாதையாக்கி விட்டது. .இந்த கொரோனா கால அந்தகாரத்தில் எங்கே போவது. எல்லா வழிகளும். வெளிகளும் மூடிக் கிடக்கின்றனவே …! நெடுந்தூர பஸ் ,ரயில் போக்குவரத்துகளும் நிறுத்தப் பட்டுள்ளன. இந்த மாவட்ட எல்லையைத் தாண்டி எந்த பஸ்சும் போகாதே .எந்தப் போக்கிடமும் இல்லை. சொந்த அம்மாவோ , அக்காவோ நம்மை இப்படி அம்போன்னு நடுவாந்திரத்தில் விடுவார்களா.. அந்த ரத்தபந்தம் இப்படி புறக்கணிக்குமா..? நல்ல வாலிபம் அரும்பி வந்த நேரத்தில் அவர்களை உதறி வந்த நான் இன்று உடல் கெட்டு ,கோலம் மாறி அவர்களிடம் போக முடியுமா…? நான் நினைத்த நல்லநிலைக்கு வராமல் அவர்களிடம் போவதில் அர்த்தம் இல்லையே… நான் வேடிக்கை மனிதனாகி விட்டேனோ ஐயோ பாரதி…?

காக்கைகள் கருப்பு வில்லாய் வலசையிலிருந்து தம் இருப்பிடம் நோக்கி பறந்தன. தனக்கு ஏது இருப்பிடம் ? கண்ணீர் ததும்பியது . தீக்குள் விரலை வைத்ததும் எடுத்தது போல் அந்த தீண்டும் இன்பம் உடலெங்கும் பரவிய பரவசத்தில் என்னை மறந்து தப்பு செய்து விட்டேனோ …? கார்த்தியாகவே இருந்திருக்கலாமோ…சே . மனமொப்பி செய்ததற்கு வருந்துவது கூடாது. குதித்த வெள்ளத்திலிருந்து நீந்தி மீளவேண்டும்.

எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாளோ தெரியவில்லை. கொசு கடிக்க, கண் விழித்தாள். இமை மயிர்க்கால்களில் கோர்த்து நின்ற துளிகள் உதிர்ந்து உப்புக் கரித்தன. சுற்றிலும் இருட்டு கவிந்திருந்தது. வாழ்க்கையும் இருண்டு விட்டதா….தூரத்தில் சிறு வெளிச்சம். இருட்டு கூட சிறிய வெளிச்சம் தானே பாரதி, பாரதி..!.நல்லா சொன்னியே பாரதி என்று நொந்த சிரிப்பில் வாய் விரிந்தது . உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு ஊரடங்கிய ஆளரவமில்லா சாலையில் மெல்ல நடந்தாள்.



***** — அத்தியாயம் –10 –*****

இந்த நேரத்தில் எங்கே போவது..? ரயில்வே ஸ்டேசன் , பஸ் நிலையங்களில் கூட மனுசப் புழக்கம் இல்லையே,,, அங்கும் தங்க இயலாதே … நல்ல நாளிலே தனியே சேலை கட்டியவர் வாசம் பட்டாலே ரெண்டுகால் வெறிநாய்கள் காமக் கண்கள் மின்னி நாக்கொழுகித் திரியுமே . இந்த ஊரடங்கு காலத்தில் , கடைகன்னிகள் திறக்காத பொழுதில் எந்த ஜந்துகள் எப்படித் திரிகிறதோ…? ஓய்வூதியர் சங்கச் செயலர் ராஜகோபால் வீட்டிற்குப் போனால் வரந்தாவிலாவது தங்க இடம் கொடுப்பார்கள். தான் அவர்களை அப்பா , அம்மாவென்று சொல்லவும் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொண்டார்களே. இந்த கொரோனா ராத்திரியில் அவர்களுக்கு தொல்லை கொடுப்பதா… ஊரு உலகில் உள்ளோருக்குள்ள நோயின் தொற்று பயம் அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்…? அவர்கள் என்னைப் பெற்றவர்கள் இல்லையே ..? இங்கே எங்காவது அடைத்த கடைகளின் மறைவில் ராப்பொழுதைக் கடத்திட்டு காலையில் அவர் வீட்டுக்குப் போவோம். ஏதாவது உதவி கிடைக்கலாம்.

நடந்தவள் ரயில்வே கேட் எதிர்பட்டதும் நின்றாள். இடமும் வலமும் மேற்கும் கிழக்குமாக இணையாத இரு இணைகோடுகளாய் தண்டவாளம் நீண்டு கிடந்தது . தலை வால் காணப்படாத இரு பாம்புகளின் நீண்ட உடல்களாக இருளில் மினுமினுத்தன . இது முடிவு தெரியாத தன் பயணத்தின் வெளிப்பாடோ…? ஒ, இந்த தண்டவாளதிற்காவது இரு திசைகள் இருக்கின்றன. தன் பயணம் திக்கு தெரியாமல் பாதைகள் புலனாகாத புதிராக இருக்கிறதே . இந்தத் திறந்த வெளி இருட்டை பார்த்ததும் சின்ன ஆசை அரும்பியது. தனக்கு விவரம் தெரிந்த நொடியிலிருந்து திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க முடிந்ததில்லை. இப்போதும் கூட பொதுக்கழிவறைக்கு இவள் போனால் இவள் எப்படி கழிக்கிறாள் என்று நூறு கண்கள் நோட்டம் விடுகின்றன. இதோ இப்போது சாலையிலிருந்து சற்று தள்ளி யார் கண்ணுக்கும் படாத இந்தத் திறந்த வெளியில் இருள் சூழ உட்கார்ந்தாள். சிறுகுமிழ்களிட்டு ஓடிய நீர்பரப்பில் நாலாம்பிறை நிலவும் மௌனத்தில் உரையாடும் நட்சசத்திரங்களும் ஒளிர்ந்தன. அண்ணாந்தாள் . இதெல்லாம் இவளுக்கு காணக் கிடைக்கா காட்சிகள். என்னைப் போன்ற நிலவைச் சுற்றி நட்சத்திரங்கள் கேலிவதை செய்கின்றனவா…? இல்லை. உன்னைச் சுற்றி நாங்கள் ஆதரவாக இருக்கின்றோம் எனச் சொல்லுகின்றனவா…? கொஞ்சம் தள்ளி இருந்த சிறு பாலக்கட்டையில் உட்கார்ந்து வானம் பார்த்திருந்தாள். தன் நிலையும் வானம் பார்த்த பூமி தானா..? மானாவாரி மனுசியா …? எங்கும் போகாமல் இந்த இரவு முழுவதும் வானத்தோடு உறவாடுவோமே…! இது போல் இன்னொரு இரவு கிடைக்குமா ..? இந்த இரவோடு இந்த வழி வரும் சரக்கு ரயிலில் வாழ்வை முடித்துக் கொள்வோமா..? சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டாள். தூரத்தில் மங்கலாக வெளிச்சக் கோடுகள் தெரிந்தன. முன்னிரவிலேயே முடங்கிய தெருக்களை ஒளிப் பற்களால் கேலி செய்கிறதோ ,,, . ..

சற்று தூரத்தில் ஓருருவம் அசைந்தது. கண்களைக் கூர்மைப்படுத்தி பார்த்தாள். ஓர் ஆணுருவம் தண்டவாளத்தில் படுத்தது. இவள் அண்ணே என்று குரல் கொடுத்தாள். அவ்வுருவம் திடுக்கிட்டு எழுந்து ஓட முயன்றது. அண்ணே , ஓடாதீங்க . நானும் உங்களைப் போலத்தான். நில்லுங்கண்ணே . அண்ணே என்ற சொல் அவனை நின்று திரும்பிப் பார்க்கத் தூண்டியது. அவனை நோக்கி இவள் நடந்தாள். அவன் இவளது கால்களை உற்றுப் பார்த்தான். மனுசி தான். பெருமூச்சு விட்டு தளர்வாய் நின்றான்.

“ எதுக்கண்ணே . சாக நினைக்கிறீங்க. நானும் உங்களைப் போல தான். சாகுறதுக்கு முன்னால நம்ம துயரத்தையாவது பகிர்ந்துக்குவோமே. “
சொந்தம் , சுற்றம் எல்லாம் தன்னை விரட்டிவிட்ட நிலையில் வாழ்வின் கடைசி நொடியில் நம்மிடம் ஆறுதலா பேச ஒரு மனசு கிடைச்சதே என்று பற்றிய அவளது ஆறுதல் கரத்தை நெகிழ்த்தி பேச ஆரம்பித்தான்.

அவன் ஒரு ஆட்டோ ஓட்டி . அவனோடு இரண்டு ஆட்டோ ஓட்டிகள் சேர்ந்து. சென்னை சூளைமேட்டில் ஒரு சிறுவீடு வாடகைக்கு எடுத்து தங்கி கூலிக்கு ஆட்டோ ஒட்டிவந்தனர். ஒருநாள் முழுதும் கிடைக்கும் சவாரி பணத்தில் ஆட்டோவுக்கு வாடகை போக எஞ்சியதில் அவன் திங்க ,தங்க , உடுக்க செலவு செய்தது போக கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு மிச்ச சொச்சத்தை நெருஞ்சிக்குடி அருகில் கிரிராம் நகரில் தங்கியிருக்கும் அம்மாவுக்கு அனுப்பி வைப்பான். அம்மா அந்தப் பகுதியில் மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவிக் கிடைக்கும் சோற்றை சாப்பிடுவாள். பெறும் கூலியில் , கட்டிக்கொடுத்த மகளுக்கு நோம்பு நொடிகளுக்கு கொடுபாள். மீதியுள்ளதை அன்பு மகனுக்கு சேர்த்து வைத்து வந்தாள். அருமை தங்கை கல்யாணத்தை கடனைக் கிடனை வாங்கி முடித்து வைத்த மகனுக்கு ஒரு குடும்பம் அமைச்சுக் குடுத்து ஒரு பேரப்பிள்ளையை பார்த்திட்டு தான் கண்ணை மூடனுமுன்னு அம்மா உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்கிறாள் . இப்படியான பாச வைராக்கியக் கயற்றின் மேல் நடந்து தாயும் , மகனும் வாழ்ந்து வரும்போது தான், கொரோனா ஊரு உலகத்தை தாக்கியது போல இவர்களையும் முடக்கிப் போட்டது.

அவனும் , அவனது சக ஓட்டுனர்களும் அனுதினம் காலை சவ்வாரி கோயம்பேட்டிலிருந்து காய்கனிகளைக் கொண்டு வந்து சேர்த்த பின் தான் குளித்து , உண்டு, பள்ளிக்கூட சவ்வாரிகள் போவார்கள் . இது தொடர்ந்து நடந்து வந்தது. வயசு முப்பதை நெருங்குது. சேர்ந்திருக்கிற காசோடு கொஞ்சம் கடனை வாங்கி தனக்கேத்த அப்பாவி சப்பாவி குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணைப் பார்த்து முடிச்சோமுன்னா நாமலும் ஒரு மனுசனா தலை நிமிரலாம் என்ற வாழ்க்கைத்திட்டம் .இதற்காக தனது சேமிப்பை வங்கியில் சேர்த்து வந்தான். இதைச் சுற்றி அவனது ஓட்டமும் , கனவும் தொடர்ந்தது. இப்படி ஓட்டத்தில் கொரோனா தடுப்புச்சுவர் எழுப்பியது. கோயம்பேட்டுக்கு வந்த வியாபாரி கள் மூலம் அவனையும் கொரோனா தொற்றியது.

பதினைந்து நாள் தொற்றுத் தடுப்பகத்தில் சிகிச்சை பெற்றான். சிறு பிராயத்தில் பலதானிய உணவு முறையில் வளர்ந்தவன். நோய் எதிர்ப்பு சக்தியினால் தடுப்பு மருந்து கண்டறியப்படா நோயிலிருந்து பத்து நாளிலே மீண்டான் . எனினும் நோய்க்கிருமியின் இருப்பு பதினைந்து நாள் என்ற மதிப்பீட்டில் பதினாறாவது நாள் விடுதலை ஆனான். அவனது சகபாடிகள் மருத்துவ பாதுகாப்பில் இருந்தனர்.

Image
உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)

அவன் குடியிருந்த தெரு கொரோனா அடைப்புத் தகரங்களால் மூடப்பட்டு இருந்தது. அவன் தனது நோய்விடுவிப்பு சான்றைக் காட்டியும் அக்கம் பக்கத்தினர் தெருவுக்குள் விடவில்லை. உணவகமில்லை , பொது போக்குவரத்தும் இல்லை. இங்கே தனியாக இருந்து அவதிபடுவதற்கு அம்மாவிடம் போவது ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் என்று ஊருக்கு கிளம்பினான். சென்னையைச் சுற்றி நான்கு மாவட்டங்கள் போக்குவரத்து தடைபட்டு விட்டன. சரி மெல்ல செங்கல்பட்டு வரை நடப்போம். அங்கிருந்து கிடைக்கும் வாகனத்தில் ஊர்ப் போய்ச் சேருவோம் என்று நடந்தான். செங்கல்பட்டை ஐந்துமணியில் அடைந்தான். அங்கிருந்தும் எந்த வாகனப் போக்குவரத்துமில்லை. ஆனாலும் தெற்கு நோக்கி நூற்றுக் கணக்கானோர் நடந்தபடி இருந்தனர். வடமாநிலத்தவர்கள் வடக்கு நோக்கி ஐந்நூறுக்கு மேற்பட்டவர் பிள்ளைகுட்டிகள் , வயசானவர்கள் என சகல தரப்பினரும் மூட்டை முடிச்சுகளோடு நடந்து வந்து கொண்டு இருந்தனர். வீங்கிய கால்களுடன் , ஊன்றிய கம்புகளுடன் அவர்கள் நடந்து வருவதைப் பார்த்தால் மூன்று நாள்களாக நடந்து வருகிறார்கள் போலிருக்கிறது அவர்களுக்கு ஏற்றது நமக்கு என்று நடந்தான். சில இடங்களில் கூடுதல் விலைக்கு சோற்றுப் பொட்டலமும் , தண்ணீர் பாட்டிலும் கிடைத்தது. சில இடங்களில் அன்ன தானம் கிடைத்தது.

அவனது ஊர் நெருஞ்சிக்குடிப் பகுதியில் ஆண்டு தோறும் தை மாதத்தில் பழநிக்கு பாத யாத்திரையாக இருநூறு கிலோமீட்டர் நடப்பார்கள். . அதுமாதிரி நினைத்து அவன் நடக்கத் தொடங்கினான். ஆனால் வெயிலும் , தண்ணீர் தாகமும் வாட்டியது. முகக்கவசத்தோடு நடப்பது மூச்சு விட சிரமமாக இருக்கிறது . அதைக் கழற்றிய பின்னும் அவனது நடைவேகம் குறைந்து கொண்டே வந்தது. கிடைக்கும் மரநிழலில் வெயிலைக் கழித்து நடையைத் தொடர்ந்தான். இவனை ஒத்த சக நடையாளர்களின் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டே நடந்தது வலியை மறக்கச்செய்தது .சிலர் செல்லில் சினிமாப் பாடல்களைப் பாடச்செய்து கேட்டுக் கொண்டே நடந்தார்கள். முதல் நாள் நடையில் திண்டிவனம் வந்து விட்டான். ஊருக்குள் நுழைய முடியாதபடி தடுப்புகள் வைத்து இருந்தார்கள். காவலர்கள் யாருமில்லை. வெட்டவெளியில் மரத்தடியில் படுத்தார்கள்.

விடிவதற்குமுன் எழுந்து நடையைத் தொடர்ந்தார்கள். கால்செருப்பு அழுத்தி கொப்பளம் வெடித்து புண் வந்து பலர் நடக்க முடியாத படி தவித்தார்கள். சிலர் நடக்க இயலாமல் மரத்தடியில் சுருண்டு கிடந்தார்கள். அவனுக்கும் கால் வீங்கியது. மெல்ல மெல்ல ஊர்ந்து கம்பூன்றி நடந்தான். விழுப்புரம் வர மணி பத்தாகி விட்டது. ஊருக்குள் நுழைவதற்கு காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்திருந்தனர். அதில் பணியாற்றிய காவலர்களுக்கு கொரோனா தாக்கியதால் சோதனைச்சாவடியில் எவருமில்லை..கொரோனா நோய் சோதனைக்குப் பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப் படுவர் என்று ஒரு அறிவிப்பு மட்டும் தொங்கியது. பெரும்பாலான ஊர்களில் இதுதான் நிலை என்றார்கள். அங்கு ஊர் எல்லையில் தயிர்சாதப் பொட்டலம் இரண்டும் தண்ணி பாக்கட்கள் இரண்டும் வாங்கினான் . ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு ஒன்றை மதியத்திற்கு வைத்துக்கொண்டு நடந்தான். அந்த ஒரு பொட்டலத்தைச் சுமப்பதே பெரும் சுமையாக உணர்ந்தான். கால்கள் கொப்பளித்து வெடித்தது. வாங்கி வைத்திருந்த பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை விழுங்கி சாலையோர மரநிழலில் படுத்தான். மாலை நாலு மணிக்குதான் எழுந்தான். தூக்கம் புதுத்தெம்பைக் கொடுத்தது. வைத்திருந்த பொட்டலத்தைத் தின்றுவிட்டு நடையைத் தொடர்ந்தான்.

புதியதாக விழுப்புரம் பகுதியிலிருந்து வந்தவர்கள் செல்லில் கொரோனாச் செய்திகள் கேட்டதைப் பகிர்ந்தனர். கொரோனாவிலிருந்து உலகுக்கு விடிவில்லையா ..? உலகை அழிக்க அணுகுண்டைக் கண்டு பிடித்த நாடுகள் ஒரு வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையே.? … எந்தக் கடவுளுக்கும் கண்ணில்லையே … பாவம் , அந்தக் கடவுளே லாக் டவுனில் மாட்டிகிட்டாரே .. கால்வலி பொறுக்க மாட்டாத ஒருத்தன் ; “ இனிமேல் ஒட்டுக் கேட்டு வாங்கடா மாப்பிளைகா அன்னக்கி வச்சிகிறேன்டி “ இன்னொருத்தன் கடகடவென்று சிரித்து , “ இதெல்லாம் பிரசவ வைராக்கியம் மாதிரிடி மாப்பிள்ளை. , ஒரு குவாட்டரும் பிரியாணிப் பொட்டலமும் , இருநூறு ஒவாயும் பார்த்தவுடனே மட்டை ஆயிருவே. எதில போடணும் தலைவான்னு தொன்னாந்து நிப்பே.. உனக்கெல்லாம் எதுக்குடி இந்த சவடாலு ..? “ “ மாப்பு , அதெல்லாம் மாறிபோச்சுடி . இந்த வட்டம் பாருடி . இந்தக் கொரோனாவில குவாட்டரையே மறந்து மாசக் கணக்காச்சு. இனிமே எந்தப் பருப்பும் நம்மகிட்ட வேகாதடி “ இப்படி பலரும் பலவாறு பேசி கால்வலியை மறந்து நடந்தனர்.

நாலாம் நாள் காலையில் நெருஞ்சிக்குடியை அடைந்தான். கிரிராம்நகர் வீட்டில் அம்மா இல்லை. பக்கத்து வீட்டில் விசாரித்ததில் மருமகனுக்கு கொரோனா வந்து நெருஞ்சிக்குடி ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். கைப்பிள்ளைக்கார மகளுக்கு அம்மா துணையாகப் போயிருக்கிறாள் என்றார்கள். பக்கத்தில் தான் வசந்தநகர். அங்குள்ள தங்கை வீட்டுக்குப் போனான். நனைந்த பனைமரம் போல் கருத்து , முகம் வாடி ,வீங்கிய கால்கட்டோடு நடந்தே வந்திருக்கிற மகனைப் பார்த்து அழுதாள். கொரோனாவிலிருந்து குணமானதற்கு சந்தோசப்பட்டாள். வெளி வாசலிலே உட்காரவைத்து பால் கொடுத்தாள். “ வெந்நீ வச்சுத் தர்றேன் குளிச்சிட்டு சாபிட்டுட்டு நீ நம்ம வீட்டுக்குப் போயிரு.. இங்க தங்கச்சி பச்சப்பிள்ளைக்காரி , உன்னோட அலைச்சலில் கிருமி மறைஞ்சு கிறஞ்சு இருந்து தங்கச்சியையோ , பிள்ளையையோ பாதிச்சிறக் கூடாது தம்பி “ என்றாள். தங்கை அவனைப் பார்த்ததும் ,” நீ ஏன்ணா இங்க வந்தே ? நானே புருஷனை ஆஸ்பத்திரில விட்டுட்டு உசுரைப் பிடிச்சுகிட்டு இருக்கேன். நீ வெளியே போ . எல்லாம் சரியானதுக்கு பிறகு வா ..” என்று அம்மாவை உள்ளே தள்ளி கதவை மூடிக்கொண்டாள். அம்மா கதறி அழும் சத்தம் கேட்டது. “இவ்வளவு தொல்லை ,துயரத்தைத் தாங்கி நொம்பலப்பட்டு வந்தது இந்த அவமானம் படத்தானா . இதுக்கு சென்னையிலே கொரோனாவில செத்து தொலைஞ்சு இருக்கலாம். “ புலம்பியபடி மெல்ல அம்மா வீட்டுக்குப் போய் கதவைத் திறக்கும்போது அக்கம் பக்கத்தவர் எல்லாம் கூடி , “ தம்பி , நீ கொரோனாவில பாதிக்கப்பட்டதாகக் கேள்விப் பட்டோம். உனக்கு புண்ணியமா இருக்கட்டும். நீ வெளியே போ. முதல்ல நோய்த் தடுப்பகதுக்குப் போ “ என்று விரட்டினர் . அவன் கொரோனா நோயிலிருந்து குணமடைந்த சான்றைக் காட்டினான். “ குணமாயி வந்தவன் வர்ற வழியில் யாரிடமிருந்தாவது தொத்திக் கொண்டு வந்திருந்தா ..என்ன செய்வது ? அதனால நீ இங்கிருந்து போறீயா .. போலீசைக் கூப்பிடவா “ என்று ஒரு கனத்த மூங்கிக்கம்பு கொண்டு அவனைக் கீழே தள்ளினர்.



இவ்வளவு அவமானத்துக்கு பிறகும் வாழனுமா …? கேள்வி அவன் முன் ராட்ச உருவம் கொண்டு ஆடியது. அடக்கி பக்கத்திலுள்ள நோய்த் தடுப்பகத்திற்குப் போனான் . தன் நோய் விடுவிப்பு சான்றைக் காட்டி சென்னையிலிருந்து வந்துள்ளேன். என்னை மீண்டும் சோதிச்சு சொல்லுங்க. என்னை வீட்டுக்குள் விடமாட்டேங்கிறாங்க என்று கெஞ்சியிருக்கிறான். உங்கள் உடல்சூடெல்லாம் சரியாத்தான் இருக்கு. பயமில்லை . ஏதாவது அறிகுறி தெரிஞ்சா வாங்க என்று அனுப்பி விட்டார்கள். மனம் நொந்து வரிசையில் நின்று டாஸ்மாக்கில் பிராந்தி குடிச்சிட்டு மரத்தடியில் படுத்து விட்டான் . இருட்டவும் கொசுக்கடி தாங்காமல் எழுந்தான். தன்னைத் துரத்தி இப்படி நடுரோட்டில் விட்டபின் ஏன் வாழனும். இந்தப் பக்கம் வரும் கூட்ஸ்ரயில் முன் விழுந்து சாவோம். நம்மால தானே இவன் செத்தான் என்று துரத்தியவர்கள் மனதையும் உலுக்க இப்படி சாகிறதுதான் சரியான வழி. அவன் சாக வந்த காரணத்தைச் சொல்லி முடித்தான்..
இவளும் தனது துயரக் கதையையும் இன்றையத் திக்கற்ற நிலையையும் வறண்ட குரலில் சொன்னாள்.

அவன் , “ தங்கச்சி, நம்ம ரெண்டுபேரு கதையும் ஒண்ணுதான். நம்ம ரெண்டுபேரையும் சுத்தியிருக்கிறவங்க அவமானப்படுத்தி விரட்டிட்டாங்க . நாம செத்தா , நம் சாவிற்கு சம்பந்தப்பட்டவங்க காரணமுன்னு அவுங்க மனசாட்சி உறுத்த உணர்ந்து வருந்துவாங்க. இனி யாரையும் இப்படி தெருவுக்கு விரட்டமாட்டங்க இல்ல.”
கீர்த்தனா சிரித்தாள். “ நாம ரயில்ல அடிபட்டு சாகறது ஒரே நாள் செய்தியோடு மறந்து போயிருவாங்க. நம் விதி முடிஞ்சிருச்சு செத்துட்டோமுன்னு சமாதானப் படுவாங்க. அவுங்களுக்கு மனசாட்சி இருந்தா நம்மலைப் புறக்கனிப்பாங்களா ? அதுமில்லாமல் நாம ரெண்டுபேரும் ஒரே இடத்தில் செத்தா…நம்மலைப் பத்தி பல கதைகளைக் கட்டிவிட்டு வாயை மென்று சுகம் காண்பாங்க.”

தூரத்தில் ஒற்றைக்கண் ராட்சன் போல ஒற்றை ஒளி உமிழ்ந்து இருட்டைக் கிழித்துக்கொண்டு நற நறத்த ஓசையோடு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில்வேகேட் மூடுவதற்கான மணி அலறத் தொடங்கியது.

“ தங்கச்சி , சீக்கிரம் சொல்லு தங்கச்சி. அதோ ரயில் கிட்ட நெருங்கப் போகுது. “ அவன் பரபரத்தான். “ “ சாகிறது சுலபம் . வாழ்றது தான் பெருமை. “ என்று அவனது உடலை இறுகப் பற்றிக்கொண்டாள் . .” நாம் சாக வேண்டாம் . இந்த ரயிலை மறிப்போம். டிரைவர் , கார்டு இறங்கி வருவாங்க .நாம் சமாதானம் செய்து நம்மளை அப்புறப்படுத்த முயற்சிப்பாங்க. நாம மறுத்து தண்டவாளத்தில் படுத்துக் கொள்வோம். போலிஸ் வரட்டும். பக்கத்தில் உள்ள கொரோனா தடுப்பகத்துக்கு இந்நேரம் பார்வையிட சப் கலெக்டர் இந்த வழியாத் தான் வருவாங்க .ரயில் மறிக்கப்பட்டது தெரிஞ்சு , அவுங்களும் பேச்சுவார்த்தைக்கு வருவாங்க . நம்ம பிரச்சினையைச் சொல்லுவோம் முடிவு கிடைக்கும். இது நம்மலைப் போல புறக்கணிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்களுக்கு உதவும்.”

நீண்ட கூட்ஸ்வண்டியின் பாதிப் பெட்டிகள் கேட்டைக் கடந்த நிலையில் இரு ஆண் பெண் உருவங்களைப் பார்த்ததும் ஓட்டுனர் அவசர பிரேக்கைப் போட்டார். காலிப் பெட்டிகள் நிறைய இருந்ததால் கூட்ஸ் வண்டி தொடர் குண்டுகள் வெடித்தது போல் பெரும் சத்தத்தோடு குலுங்கி நின்றது. ரயில்வே கேட்டின் இரு பக்கங்களில் வாகனத்தில் வந்தவர்களும் , அருகிலிருந்த வீட்டுக்காரர்களும் அதிர்ந்து ஓடிவந்தனர். தூரத்தில் அவசர ஒலி எழுப்பியபடி வரும் சப் கலெக்டரின் காரோலியும் கேட்டது.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *