கவிதை : இப்படி ஒரு ஞாயிறு - இரா. கலையரசி kavithai : ippadi oru gnaaieru - era.kalaiyarasi

கவிதை : இப்படி ஒரு ஞாயிறு – இரா. கலையரசி

இப்படி ஒரு ஞாயிறு. சாளரத்தின் விளிம்புகளை மெல்ல திறந்தபபடி எட்டி பார்க்கிறது காற்று. என் மேல் படரலாமா வேண்டாமா என்று?! சிட்டுக் குருவிகள் ஆசையாய் வந்து மழலை மொழி பேசுகிறது. தென்றலை தழுவியப்படி சாளரத்தை திறக்கிறேன். பட்டும் படாமலும், மஞ்சள் நிற…
Selfie Shortstory By Era. Kalaiyarasi. செல்பி குட்டி கதைக - இரா. கலையரசி

செல்பி குட்டி கதை – இரா. கலையரசி




சும்மா இருப்பா “பேயி பிசாசு” னுகிட்டு. அதுவும் செல்போன்ல வருதாம் போவியா?

சங்கரை பேசி மறித்தான் சுரேஷ். டேய்! நான் எடுக்கிற செல்பியில பாரு! பின்னாடி ஒரு உருவம் தெரியுது.

இவனும் எடுத்தான். ஒரு மங்கிய உருவம் தெரிந்தது. வெவ்வேறு இடங்களில் எடுத்தான். அங்கும் அப்படியே தெரிந்தது.

அவன் எடுத்த அதே நொடியில் அவனை உரசி சென்ற வண்டி தலைகீழாக கவிழ்ந்தது.

“பயம் பேயை விட கொடூரமானது”. இருவரும் நடுங்கினர். மணி இரவு பனிரெண்டு. செல்போன் ஒலித்தது..

போனை எடுக்கவில்லை. மேசையில் இருந்தது. கீழே விழுந்தது. மீண்டும் அழைக்கிறது. நடுங்கிய கரங்கள் காதில் சொருக கனத்த குரல் ஒலித்தது.

சாரி! சார்.”.சாப்ட்வேர் ப்ராப்ளம். சரி செஞ்சுட்டோம். இனி செல்பியில் ப்ளர் இமேஜ் வராது”. ஏது?ப்ளர் இமேஜா?? போன உயிர் திரும்பியது சங்கருக்கு.

Kalaiyarasiyin Kavithaigal இரா. கலையரசியின் கவிதைகள்

இரா. கலையரசியின் கவிதைகள்

மீன் கூடை
**************
கடல் கை விட்ட பிறகு
கண்ணீரில் மூழ்கிய மீன்கள்…
வலைகளின் வஞ்சனைகளில் சிக்கி
உயிரை இழந்து கரையைத் தொட்டன
கதம்ப மீன்கள்.

உப்புக் காற்றில் ஊர் கூடி
செத்த உடம்பை ஏலமிட
ரத்தம் ஊறிய செதிள்கள்
துடிதுடித்து இறந்து
நெய்தலில் காத்து கிடக்கின்றன.

ரகம் வாரியாகப் பிரிக்கப்பட்டவை
பெருமுதலாளிகள் பிடித்துச் செல்ல
மிச்சம் மீதி வந்து சேர்ந்தன
மிச்சம் இல்லாத வாழ்க்கைப் பாட்டில்
மீதியைக் கழித்துக் கொண்டிருக்கும்
கிழவி கஞ்சம்மாளிடம்.

முந்திக்கு பத்தாத சேலை
முகத்தின் சுருக்கங்களை மூடிட
கால்கள் களைத்துப் பின்ன
கூனாகி சாய்ந்த முதுகு
கழுத்தை நிமிர விடாமல் பிடித்தது.

கழித்து விடப்பட்ட மீன்கள்
கிழவியிள் கூடைக்கு மாறுதல்
கேட்காமலே மாறி இருந்தன.
இறந்த பிறகு நாறும் மனிதனே
மூக்கைப் பிடித்துக் கொள்கிறான்.

தட்டுத் தாடுமாறி வண்டியில்
தவழாத குறையாய் ஏற
மூக்கை அடைத்து கொண்டோர்
வாயையும் விட்டு வைக்கவில்லை.
கிழவியைத் தடுத்த தடித்த வார்த்தை
இரக்கமின்றி இறங்கச் சொன்னது.

வாயைப் பிளந்து கண்கள் திறந்து
வியந்து பார்த்தன
இறந்த மீன்கள்
கஞ்சம்மாளின் தேய்ந்த செருப்பு
சாலையில் காதல் பரப்பி
வர மறுத்து வம்பு செய்கிறது.

தலையில் அமர்ந்தபடி கண்களை
மூடி இறந்திருந்த மீன்கள்
வழியில் கண்ணில் பட்ட
மச்ச அவதாரத்தில் இருந்த
கடவுளைப் பார்த்து எதையோ
கேட்க நினைத்தது போலும்.?

சாவு
******
கண்கள் வழிந்த கண்ணீரின்
ஈரம் கிடைமட்டமாக சரிய
வானத்தை பார்த்த கண்கள்
மெல்ல தானே மூடிக் கொண்டது.
அழுகுரல்கள் அங்குமிங்கும் சிதறி

அசைவற்ற உடலை பயமுறுத்த
நீண்ட கால்களின் விரல்களை
தொட்டு பார்த்தது பட்டாம்பூச்சி.

தட்டுமுட்டு சாமான்களை ஒதுக்கி
குளியலைத் தொடங்கி விட்டனர்.
அழுத்து சலித்து வாழ்ந்த உடல்
துவண்டு விழுகவே விரும்பியது.

சாவுக்கு காத்திருந்த மனிதர்கள்
அழகாக அலங்கரித்தனர்.
பட்டு சேலை ஒன்று படர
பார்த்து பார்த்து கட்டினர்.

சவப்பெட்டிக்குள் கிடத்தபட்ட உடல்
சத்தமின்றி அமைதியாய் இருக்க
மாலைகளின் இடுக்குகளில்
முகத்தை எட்டி பார்த்தனர் சிலர்.

தாரை தப்பட்டைகள் வரிசைகட்ட
ஆளுக்கொரு மாலை அணிவித்து
பெருமை சேர்த்தனர் உடலுக்கு.

வீடு,வாசல் எல்லாம் பிரிச்சு
உயிலும் எழுதி முடிச்சாச்சு
சண்டை சச்சரவு இல்லாமல்
வராத கண்ணீர வழிச்சு
வழிச்சு போட்டாங்க புள்ளைங்க!

பூக்கார முனியம்மா நெஞ்சுல
அடித்து அழுது மாஞ்சிட்டா!
வடக்குதெரு வண்ணமயிலு
வழக்கமான சேலையில வந்திருந்தா!
பக்கத்து அக்கத்து வீட்டுக்காரங்க
வாயில துணிய வச்சு
அழுவோமா? வேண்டாமா?னு
யோசிச்சுகிட்டே இருக்காங்க.

பூக்கள் மட்டும் வாசமா இருக்க
மணத்த முகர தான் முடியல.
அழுத கண்ண தொடச்சுகிட்டு
அலாக்கா தூக்கிட்டாங்க என்னைய!
வீடு, வாசல் ஊரக் கடந்து
சுடுகாட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.

நல்லா தோண்டுன குழி காத்திருக்க
மண்ணக் கட்டிக்கிட இறங்கினேன்
பிடி மண்ண பூத்தூவலா தூவ
முகத்த தொட்டு பார்த்த ஆசையில
அப்படியே மேல தங்கிருச்சு.

முழுசா மூடின குழிமேட்டுல
மனுச பொழப்பு அவ்வளனுதான்னு
சொல்லிகிட்டே போன சத்தம்
கொஞ்சம் கொஞ்சமா
என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.

Red Ink book by SaKa Muthukannan Bookreview by Era Kalaiyarasi நூல் அறிமுகம்: சக. முத்துக்கண்ணனின் ரெட்இங்க் - இரா. கலையரசி

நூல் விமர்சனம்: சக. முத்துக்கண்ணனின் ரெட்இங்க் – இரா. கலையரசி

நூல் அறிமுகம்: ரெட்இங்க்
ஆசிரியர்: சக. முத்துக்கண்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் அக்டோபர் 2021
விலை: ரூபாய் 95
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

சாரல் மழைக்கு காத்திருந்த மண்ணாய் புத்தகத்தின் வாசம் இதயம் தொட காத்திருக்கிறது. பட்டும் படாமலும் விட்டு விட்டு பெய்த மழை நாளில் கூடலூர் மண்டபத்தில் எட்டிப் பார்த்தது , “ரெட் இங்க்”.

குமரவேல் , பன்னீர் சார் போன்றவர்களின் பெயர்களை அரங்கில் உச்சரித்துக் கொண்டே இருந்தனர்.

குமரவேல் கதாபாத்திரத்தை முதலில் தேடினேன். “வாத்தியார்கள் தினத்தில்” கண்டுபிடித்தேன். ஏழு பேரில் ஒருவர் விடுபட எடுக்காத அலைபேசிகள் ஆயிரம் கதைகள் சொல்லும்.

“ஆசிரியர்களுக்கு டீ இலவசம்’.குமரவேல் ஒரு நாள் குடித்தால் பேருவகை கொள்வேன்.பால்பன் வெட்டும் பால்யநண்பன்.”கொத்து கரண்டி” யுடன் ஒரு செல்பியை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி இருந்தான்.”கலைந்து போன மேகங்களாய் சிதைந்து போயின கனவுகள்”.

அவனே சொல்லட்டும் கதையில் “அவனது கால்கள் வெள்ளரிபிஞ்சு போல இருந்தது.” ஆசிரியரின் மனமும் அப்படி தான் என்பதை நிரூபிக்கிறார். கிறுக்கு பெரியம்மா எறிந்த பாட்டில் கதையை சொல்லி விட்டானா?சார்.

கலர் கோழிக்குஞ்சுவிற்கு புத்தகம் போடும் மாணவர்கள் பழைய நினைவுகளை அள்ளி வருகின்றனர். பள்ளியில் களேபரம் நடக்க கணக்கு டீச்சர் கோழிக்குஞ்சு வாங்கி வருவது ???

“ட்ராப் அவுட் “கார்த்திக் பள்ளிக்கூடத்துக்கு வருவது ரமா டீச்சரின் அன்பை பறைசாற்றுகிறது.”நைட்டு இவ்வளவு நடந்து இருக்கு. அவன் ஏன் சார் ஸ்கூலுக்கு ஓடி வரனும்”அன்பில் நனைந்த உயிர் அன்றோ? இவர்கள்.

நீலபந்து ராசா ,மாணவர்களை ஏன்?பெயில் ஆக்ககூடாது என கேட்போருக்கான சரியான பதில். இன்று பள்ளி பாதுகாக்கும் இடமாகவே இருக்கிறது.

மெர்லின், அகமது,ராதாக்கா ஓவியர் குமரப்”பரு”வ நினைவுகள். அது சரி மெர்லின் படம் எப்புடி ஓவியர் கிட்ட?

ஜெயந்தி டீச்சர்(மாணவி) புருவத்த ட்ரிம் பண்ண ராசாத்தி டீச்சர் அரட்ட மனம் மாறி போய் நொந்து கொள்வது பாவம். வயது வரும் பெண் குழந்தைகளை வீடு சென்று விட இவ்வளவு தயங்குகிறார்களா?என்ன? பெண் ஆசிரியர்கள். இந்த லீடர் வச்சி படிக்க வக்கிறது அத்தனை ஏற்புடையதா?

பன்னீர் சார் “சில்லிப்புல “வந்துட்டாரு. ஜீவிதா போன்ற மாணவிகள் பன்னீர் சாரை தாயுமானவர்களாகவே கண்டெடுக்கிறார்கள்.பன்னீர் சார்.! நீங்க “செம”. போங்க.

போஸ் அண்ணண் கொரோனாவில் எங்கேயோ இறந்து போக “தோள் உயர்த்தி ஆத்தும் டீ” நம் கண் முன் வந்துக் கொண்டே இருக்கிறது.தாச்சிக்கு தந்த ஐந்து ரூபாய் அவள் இருந்த திட்டை நியாபக படுத்துகிறது. ஈரத்தை தேக்கும் இதய அணை ஆங்காங்கு உடைந்து அழுகிறது.

வெள்ளை பூக்கள் சிரித்தபடி ஆசிரியரை வழி அனுப்புகின்றன.அனைத்து கதைகளும் கண்களை ஈரமாக்கி நனைத்து விடுவதை தவிர்க்க இயலவில்லை.

எழுத்தாளனின் இதயம் பேசுகையில் உணர்வுகள் பஞ்சு பொதியாய் மனம் வருடுவது இயல்பே.இப்பணியை செவ்வனே செய்துள்ளது. “ரெட் இங்க்”

வாழ்த்துகள் தோழர்.

Dujak Dujak Oru Appavin Diary Book By Theni Sundar BookReview By Era. Kalaiyarasi நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி - இரா.கலையரசி

நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி – இரா.கலையரசி

நூல்: டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி 
ஆசிரியர்: தேனி சுந்தர்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 100
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

மழலை மொழி பேசும் முத்துக்கள்.முன்னுரையில் “அய் சூப்பரு”னு தொடங்கிய ஐயா மாடசாமியின் எழுத்துகளை அடி ஒற்றி, ஒத்தி எடுத்தாற் போல விரிகிறது மழலை பிரவாகம்.

தோட்டத்துல ஒளிந்து இருக்கும் கொரானாவை கண்டுபிடிக்க முடியல புகழால்.வெளி ஆட்களை பார்த்தால் வெட்கி மறையும் குட்டியா இவ்வளவு பேசுகிறாள்?

திண்டுக்கல் மீட்டிங் போய் தாமதமா
வரும் அப்பா, டார்வினை தூங்க வைத்து விடுகிறார். நம்ம அப்பாவும் நினைவுக்கு வந்து போறாரு.

விஜய் ஸ்டிக்கர சுவத்துல ஒட்டவா? விஜய்யே வாத்தியாரு தான். இதுல கூட பாரு மாஸ்டருன்னு தான் எழுதி இருக்கு.

இதுக்கு பதில் இருக்கா??

ஏ !அழகான அம்மாவே
பார்கக மாட்டியா?

ஏ !மீசைக்கார அப்பாவே என்னைய
பார்க்க மாட்டியா?

செமல்ல.

வட்டமா உக்காந்து இருக்கோமுன்னு சொல்ல தெரியாமல்
அப்பா இங்க!
அண்ணன் இங்க!
அம்மா இங்க!
நானு இங்க.!

வட்டம் வரவில்லை என்றால் என்ன?
வார்த்தை வட்டம் அடிக்கிறதே!

அப்பா அண்ணணுக்கு
புண்ணு வந்திருச்சு.
அண்ணனை பார்த்துக்க சொன்னேன்ல.
ஆமாம்பா
அண்ணன் சைக்கிள்ல இருந்து
விழும் போது பார்த்துக்கு தான்பா
இருந்தேன்.

ஹா.ஹா.ஹா.

என்னா ஒரு வில்லத்தனம்.

அப்பா ஒரு எறும்பு கதை சொல்ல போறேன்.

இங்க உக்காந்து சொல்லவா?

அங்க உக்காந்து சொல்லவா?

அங்க. சொல்லவா?

கடைசி வரை சொல்லாத கதை அழகு.

புகழ், டார்வின் கீர்த்தி என எல்லாருமே
கதாசிரியர்கள்.மழலை நம் வகுப்பறையில் நிறைந்து இருக்கிறது.

முன் பருவ மழலை வகுப்புகளில் ஏராளம் உலவுகிறது.திருத்த. முயற்சிக்காதீர்கள்
என்பதை திட்டவட்டமாக கூறி இருப்பது அழகு.

மழை சாரலாய் மனதை சாளரத்தில்
சாய்த்துக் கொள்ள செய்கிறது மழலை மொழி.

மிக துல்லியமாக ஆய்வு நடத்திய ஆய்வாளர் சுந்தருக்கு வாழ்த்துகள்.

இதோ இன்று மாணவர்களிடம் அறிமுகம் செய்தேன்.

அவர்கள் மொழி அல்லவா. ?

பல நூல்களுக்கான முன்னுரை.
டுஜக் டுஜக்.

நம் அனைவரின் மனதில் பசக் பசக்..

பேரன்பும் வாழ்த்துகளும் சுந்தர்.

Karattan Kavithai By Era. Kalaiyarasi இரா. கலையரசியின் கரட்டான் கவிதை

கரட்டான் கவிதை – இரா. கலையரசி

வேலியில் தவழ்ந்து வந்த
வயதான கரட்டான் ஒன்று
கண்களை சுருக்கிக் கொண்டது.
தடித்த கண்கள் கோலிகுண்டாக
வறண்டு வாடிய நாக்கை நீட்டியது.

தொண்டைகுழி விட்டு விட்டு துடிக்க
மீனின் செதிலாய் தோல் சொரசொரக்க
நகர மறுத்து உடம்பு நிற்கிறது.
பொடைத்த கண்கள்” வாங்கிய
அடியில் வீங்கி பருத்து இருக்கிறது.

பழத்தைக் கொரித்த அணில் ஒன்று
பயத்தில் பதுங்கி நிற்க,
கீச்சு குரலில் ரகசியம் பேசியது.
“பேயி பேயி”னு ஓட எத்தனிக்க
விழ இருந்த அணிலை
முதிர்ந்த கைகள் தாங்கின.

அம்மா நினைவுக்கு வந்துசேர
ஆசையாய் பார்த்தது குட்டிஅணில்.
பழுத்த பழத்தினை பார்த்த மகிழ்வாய்
முரட்டு கரட்டானை தொட்டு பார்க்க
“மெல்லிய அணிலின்” கைகள் படர
அணிலை அணைத்தபடி
தரைக்கு உயிரை தந்தது.

Azhagu Childrens Story By Era. Kalaiyarasi. அழகு குழந்தைகள் கதை - இரா கலையரசி

அழகு குழந்தைகள் கதை – இரா. கலையரசி




கழுத்தை ஆட்டி ஆட்டி “நான் நல்லா ஆடறேனா பா”னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா.

“ம்.ம்.நல்லா இருக்கு”னு சொன்ன அப்பா மயிலை பார்த்து, “அப்பா, நீங்க அழகா இல்ல. அம்மா எவ்வளோ அழகா இருக்காங்க. அம்மா தோகை நீளமா விசிறி போல இருக்கு. எனக்கு வேர்த்தா விசிறி விடுவாங்க. நீங்க நல்லாவே இல்லப்பா.எனக்கு அம்மாவைத்தான் புடிக்கும்” னு சொல்லி ஓடியது குந்த்ரா.

அருகே வேய்ந்திருந்த மின் வேலியை நெருங்க அதில் அழகான கொடி படர்ந்து இருந்தது.

பல வண்ண நிறங்களில் பூக்கள் பூத்துக் கண்களைக் களவாடியது. குந்த்ரா மெல்ல வேலியை நெருங்கி விட்டது.

“அழகு பூ பாரு அழகு னா யாரு? வந்து என்னைப் பாரு”.

பாடிக்கிட்டே அலகை வேலியிடம் கொண்டு போக, பாய்ந்து வந்தது அப்பா மயில்.

இலேசாக மின்சாரம் அப்பா உடலில் உரசியது”.க்யாவ் ‘என கத்தியவாறு விழுந்தது அப்பா மயில்.

குந்த்ரா பயந்து ஓடி பார்த்தது. காயத்துடன் இருந்த அப்பா அழகாகத் தெரிந்தார்.

அழகு அன்பிலா? தோற்றத்திலா? குட்டீஸ். சொல்லுங்க பார்ப்போம்.

Aindhu Latcham Short Story By Era Kalaiyarasi ஐந்து லட்சம் குறுங்கதை - இரா.கலையரசி

ஐந்து லட்சம் குறுங்கதை – இரா. கலையரசி




“பயங்கரமா இருக்கும். நீ எப்படி அங்கேயே இருக்கமுடியும் சொல்லு. எனக்கு என்னமோ சரியா படல பார்த்துக்க”னு சொன்ன சம்பத் திகிலோட தான் இருந்தான்.

“சரி எல்லாத்தையும் எடுத்து வச்சுக்க. அவங்க கிட்ட பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டியா?”

“ஆமாம் பேசிட்டேன். ஐந்து லட்சம் ரூபாய் நிச்சயமா தருவாங்க”.

அந்த ஒரு நாள் இரவு பத்தி யோசிக்க, யோசிக்க பயம் பிடரியை பதம் பார்த்தது. அந்த வீட்ல ஒரு நாள் இருக்க இரவின் இருளுக்கு துணையாக இரண்டு பெட்டி மட்டுமே இருந்தது.

“சரக் சரக்” கால் சத்தம் அடுத்த அறையில் கேட்டது. முன்னும் பின்னும் அசைந்த திரைசீலையில் பெண் ஒருத்தி நடக்க ஆந்தைகள் அலறின.

அரண்மனை முழுசா ஆட்கள் பேசும் சத்தம். ஆனால் ஆட்கள் இல்லை. ஏதாவது எபக்ட்ஸ்னு நினைத்தவனுக்கு பல அறையில் இருந்து வரிசையாக வந்தபடி இருந்தனர்.

மயங்கி விழுந்தவரை தாங்கின கைகள்.

“யோவ் எந்திரியா ..நாங்க தான் தெரியாமல் மாட்டிகிட்டோம். உனக்கு அறிவில்ல?” என்றது ஒரு குரல்.

“அஞ்சு லட்சம் லாம் இல்ல. ஆள் புடிக்றாங்க கிட்னி திருட. இது தெரியாமல் வந்து மாட்டிகிட்டியேடா” னு ஒப்பு வச்சு அழுகறாங்க.

Mookaiya ShortStory By Era Kalaiyarasi மூக்கையா சிறுகதை - இரா. கலையரசி

மூக்கையா சிறுகதை – இரா. கலையரசி




அழகு பரப்பிய வாசல் செத்தையும் சிறகுமாக இருந்தது.வீட்டு பொம்பளை இல்லாதது அத்தன வித்தியாசமா இருக்கு. பொழுது விடிஞ்சு கொள்ள நேரம் ஆகிருச்சு.மூக்கையா பெறண்டு படுக்க முடியாமல் பொலம்பிக்கு இருந்தாரு.

“அமரு அமரு சுடு தண்ணீ வெளாவி வை. ஒடம்புல ஒண்ணும் எசக்கு இல்ல.நீ வந்தயின்னா நல்லா எதமா பதமா வெளாவுவ. என்னா அமரு. ஒண்ணும் பேசாமல் இருக்றவ.சடவா இருக்கியோ?” மெல்ல பொண்டாட்டி படுத்து இருந்த அறைக்கு போனாரு.

கவுத்து கட்டில் கவுந்து கெடக்கு.ராவி பாக்குறாரு மூக்கையா.அமரு இல்ல., அவள் உடுத்துன சேல கொடியில் நெளிஞ்சு கெடக்கு. நெனவு தப்புது பெறகு வர்ரதுமா மூக்கையாவுக்கு இருக்கு.

“இதே பொழப்பு கெழவனுக்கு. எந்நேரமும் பொலம்பல். மவராசி போய் சேர்ந்துட்டா.நம்மள நாற விட்டுடட்டா.” மூத்த மருமகள் பரமு ஒரு தூக்குவாளிய எடுத்து டொக்குன்னு வச்சா.

“அமரு களத்துக்கு போய் இருக்காளா, காங்கல?”

ம்க்கும் பொண்டாட்டி சாக குடுத்தவருக்கு நெனப்பு போகுதா பாரு.

“ஏய்! மாமோய், அய்த்த செத்து மூணு மாசம் ஆகிருச்சு.இன்னும் நெனப்பு மாறாம இருந்து எங்க உசுர. வாங்கிக்கு இருக்க.நல்லா இழுக்குனு ஒரு மொற மொறச்சா. இதுகளுக்கு கஞ்சி ஊத்தறதே பெருசு.இதுல ஆடு மாடு கோழிக வேற. அதேன் மாசத்துக்கு ஒரு மகன் கஞ்சி ஊத்தனுமுன்னு பேசி முடிச்சு சோறு கொண்டாந்து வச்சா அமரு அமருனு உசுர எடுக்கறது”.

வாளிய வச்சுட்டுப் போனா மருமகள். அமருங்கற அமராவதிய நெனச்ச. மூக்கையா பழைய. நெனப்புக்குள்ள போயிட்டாரு.

பொசு பொசுனு மழ பேஞ்சிக்கு இருந்தது. வரப்புல .வரப்ப வெட்டி தண்ணீ பாய்ச்சிக்கு இருந்த மூக்கையா என்னைக்கும் இல்லாத திருநாளா வழுக்கி விழுகப் பார்த்தாரு.

அவரு சருக பூங்காத்தா வீசுன புது மலர் கெணக்கா ஒத்த கை வந்து புடிச்சு இழுத்து மேல கொண்டுவந்து விட்டுச்சு. கருமேகத்த எறக்கி விட்டாப்ல மேல வந்து விழுந்துச்சு அவள் முடி.செந்துர்க்கம் நெத்தியில பளிச்சுனு மின்ன செவத்த மொகம் விரிஞ்சு கெடக்கு.அழுத்தமான அந்த கை மூக்கையாவ புடிச்சு இழுத்து மேல தூக்கி விட்டுச்சு.

அசந்து போய் பார்த்தாரு மூக்கையா.

‘இந்த ஊர்ல இம்புட்டு அழகான புள்ளையா?’ தெணறிப் போனாரு..

“மழ அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கு.இங்கன என்னயா செஞ்சுக்கு இருக்க?”

“வெரசா மேல ஏறுயா”னு சொன்ன சொல்லுக்கு அமரு கைய புடிச்சுக்குட்டு எழுந்து வந்தாரு.வெட்கம் தாங்க முடியல மூக்கையாக்கு.

“என்னாய்யா இந்த கொழையு கொழையுற?”

வெத்தல செவப்பா செவந்து போனாரு மூக்கையா.

ஆம்பளைங்க வெட்கம் படடுறது ஒரு அழகு தான். இந்த ஆம்பள என்னாய்யா இந்த வெட்கம் படறாரு.அந்த வெக்கத்த ரசிக்க தான் செஞ்சா அமரு.

நனைஞ்சு தொவைஞ்சு போன ரெண்டு பேரும் அந்த மரத்துக்கு கீழ போயி நின்னுகிட்டாங்க.

அவங்க மேல விழுந்த மழைத்துளிங்க கண்ணாளத்துக்கு அச்சத தூவுனாப்ல இருக்குது.

அவருக்கு.முன்னுக்கு நிக்கற அமர அம்புட்டு கவனமா பார்க்க ஆச பட்டாலும் வெக்கம் புடுங்கி தின்ருச்சு.

‘ஆருடா இது இம்புட்டு சொனங்கு சொனங்கறாப்ல’னு பார்த்துகிட்டே இருந்தா அமரு.

மழயில நனஞ்ச பெறகும் முடி நல்லா அடர்த்தியா இருக்கு.நல்லா நீண்டு முட்ட காத்து கெடக்கு மூக்கு. செஞ்சி வச்சாப்ல மேலு.பார்க்க அம்புட்டு அழகா இருக்காரு.மழ நிக்கவும் இடி விழுகவும் சரியா இருந்துச்சு.தைரியமான அமரு பயந்து மூக்கையாவ புடிச்சுகிட்டா.

அங்க சேர்ந்தவங்கதான் வீட்டாளுக சம்மதத்தோட செறப்பா நடந்துச்சு கண்ணாளம் கையும் காலும் தான் அவக சொத்து

நல்ல உழைப்பாளி.சம்சாரிக பொழப்பு அத்தன லேசு பட்டது இல்ல.வயக்காடு வாசல்னு எம்புட்டு கஸ்டம் இருக்கு வாழ்க்கையில.

அமருக்கு அப்டி தான்.மொத பிரசவம் சிரமமா போயிருச்சு. வகுத்த வலிவந்த அன்னைக்கு அமரு துடிச்சு போனா.

மருத்துவச்சி அன்னைக்குனு பார்த்து அசலூர் போயிட்டா. ஊருல இருந்த பொம்பளைங்க ஒண்ணு சேர்ந்து பிரசவம் பார்க்க ஆரம்பிச்சாங்க. ஆனால் முடியல.ரெண்டு உசுருல ஒண்ண தான் காப்பாத்த முடியுமுன்னு சொன்னாங்க.

“வெலகுங்க நான் பார்த்துக்க”றேனு சொல்லி உள்ள போய் அமரு கைய தொட்டதும் புள்ள அப்புடியே தலைய திருப்பிருச்சு.

மெது மெதுவா இறங்கி புள்ள வெளிய வர ஊரு சனங்க மெச்சு போனாங்க. சாகக் கெடந்த உசுர பொழச்சு குடுத்த சாமிடா..

அடுத்து புள்ள குட்டி வேணாணு சொன்ன மூக்கையாவ. “நீ இருக்கும் போது, எனக்கு என்னயா”னு சொல்லி நம்ம புள்ள தான் நம்மள காப்பாத்தும்னு சொல்லி வரிசையா நாலு ஆம்பள புள்ளைய பெத்தாங்க வருசத்தோட சேர்ந்து புள்ளைங்களும் வளர்ந்தாங்க. மூத்தவனும் எளையவனும் நல்லா படிச்சாங்க. அங்குட்டு இங்குட்டுனு கடன உடன வாங்கி படிக்க வச்சாங்க.

புள்ளைங்க ஒண்ணும் அத்தன பாசமா இல்ல. எப்பவும் கொற பேசிக்கு தான் இருப்பாங்க

‘நீங்க. என்ன. பொழப்பு பொழச்சீங்க. படிப்பு இல்ல.பெருசா வசதி பண்ணி தரல. ஒரு சோறு கொழம்பு.இத தவிர வேற என்ன செஞ்சு தந்திருக்கீங்க’

இத எல்லாம் கேட்டு விக்கித்துப் போனாரு.

ஏதோ அமரு இருக்கிற தெகிரியத்துல தான் வாழ்ந்துக்கு இருக்காரு. ஒருக்கா அப்டி தான் வயக்காட்டுல பாம்பு கடிச்சு மயங்கி விழுந்துட்டாரு..ஊரே சேர்ந்து தூக்கிக்கு வந்தாக.

நாலு புள்ளைக இருந்தும் அவனுக பெ.ருசா கண்டுக்கல. விசுக்குனு போச்சு அமருக்கு..

பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிக்கு போக வெரசா வண்டிய எடுத்து மாடுகள வெறட்டுனா.சொன்ன சொல்லுக்கு படிஞ்ச மாடுக அமரு காட்டுன ரோட்டுல ஓடுச்சு.

அன்னைக்கே தெரிஞ்சிருச்சு இவனுக பார்க்க மாட்டானுகனு.மனசு விட்டு போனா. ரெண்டு மகனுக அவங்களா கண்ணாளம் பண்ணிகிட்டாங்க கண்ணாளத்துக்கு கூப்புட கூடஇல்ல. வயசும் வாலிபமும் மாறி கெழடு தட்டி போனாங்க ரெண்டு பேரும். நல்லா நெலம் புலம் வச்சு இருந்தாங்க. படிக்க கொள்ளனு கொஞ்சத்த வித்துபுட்டாங்க.

அரச மர நிழலுல உக்காந்துக்கு இருந்த அமரு மனசுல ஆயிரம் கேள்விங்க இருந்துச்சு. அப்புடியே சாய்ஞ்சவதான் எந்திரிக்கவே இல்ல.சேதிய கேட்டு மயங்குன மூக்கையாவ நெனவுக்குக் கொண்டு வர தவிச்சு போனாங்க.

இந்தா எல்லாம் முடிஞ்சு போச்சு.அன்னையில இருந்து நெனவு தப்பி போனாரு. மருமகள் கொண்டாந்த தூக்குவாளிய எடுத்தாந்து அமரு வா சாப்பிவோமுன்னு கட்டில பார்த்து பேசிக்கு இருந்தாரு அவரு பார்வைக்கு அமரு அங்கன உக்காந்துக்கு இருக்கா மாதிரி தெரியுது.கண்ணு நெறைய கண்ணீர் நெறம்பி வழியுது. வயக்காட்டு மழையில. நனைஞ்ச மூக்கையாவ புடிச்ச கை இப்பவும் விழுக போனவர புடிச்சுது.

இந்தா அமரு வந்துட்டா…மெல்ல சிரிச்ச மூக்கையாவ பார்த்து மாமா வாங்க போவோமுன்னு கூப்புட்டா. பொஞ்சாதி இல்லாத ஆம்பளைங்க வாழ்க்கையில மிச்சம் ஏதுமில்ல போல. இந்தா மழையும் சேர்ந்து வந்திருச்சு. அமரு கைய புடிச்சுக்கு கெள ம்பிட்டாரு மூக்கையா.மழையில பேசிகிட்டே நடந்து போறாங்க மூக்கையாவும் அமரும்.