தொடர்:3 நிறவெறிகோடு உலக குத்துச்சண்டை பட்டயம் – அ.பாக்கியம்
முயற்சியின் முதல் கரு முயலாமை குறுங்கதை – கார்கவி
அங்கே ஓங்கி உயர்ந்த பனையில் பலகாலமாக துளையிட்ட மரங்கொத்தி ஏதோ ஒரு பருவ நிலையில் குஞ்சுகளை பேணிக்காக்க இடம்பெயர்தலை கையாண்டது…..
பருவ மழை கொட்டி தீர்த்தது, காகமும் பறந்துகளும் மரத்தினை வட்டமிட்டு பறந்து சென்று, ஆங்காங்கே அமர்ந்து இறைகளை தின்று கக்கி எசறிவிட்டு சென்றது….
கார்காலம் முடிந்து பனிக்காலம் வந்தது, வெயில் காலம் பல் இழித்து பச்சை உயிர்களுக்கு உயிர் கொடுத்தது……
அயராது காற்றில் ஓங்கி பறந்த செத்தைகள் மறந்தை தாண்டி, மறப்பொந்தையும் அடைந்தன…
அளவான வெயில் விழும் தருணம், பதமான மழைநீரின் தேங்கல்,.. காற்று நுழைந்து வெளிவர ஏற்ற தகவமைப்பு,….
அன்று சுத்திய காகமோ, பருந்தோ அள்ளி எசறி தின்று மென்று துப்பி விட்டு போன எத்தனையோ எச்சத்தில் ஒன்று இன்று துளிர்த்து…..
அந்த ஐம்பதடி வளைநெழி பனையில் அயராது அழகால் கொத்தி எதர்ச்சையாக விட்டு சென்ற மரங்கொத்தியின் பல நாள் உழைப்பு துளையில்…
இன்று பல இயற்கை மாற்றத்தில் மரத்தினுள் உள்ளே ஓர் விதை துளிர்விட்டது….
இதுவே *இயற்கை எனும் முயற்சியின் முதல் கரு* ஆனது….
மனிதனின் மனம் அப்படித்தான்…
எங்கோ பணியாற்றி இரத்தத்தை சிந்தி பலன் கிடைக்கும். சமயத்தில் சந்தர்ப்ப சூழலால் அதை விட்டு விலகி வர வேண்டிய நிலை உருவாகிறது…
இருப்பினும் மனிதன் அதனை மனதில் கொள்ளாது முயற்சியை கையில் கொண்டால்…
மென்மேலும் எந்த இடர் வந்தாலும் பயம் இன்றி மேலே சென்று கொண்டே இருக்கலாம்…
வாழ்வில்… அடுத்த நிலைக்கு செல்லாத காரணம்…
முயற்சியின் முதல் கரு முயலாமை….
முயற்சி நல் வினை ஆக்கும்…..
நூல் மதிப்புரை – பெ.சசிக்குமார் / பா.அரவிந்தனின் விண்வெளி மனிதர்கள் – வே சங்கர்
நூலின் பெயர் : விண்வெளி மனிதர்கள்
ஆசிரியரின் பெயர் : பெ.சசிக்குமார் / பா.அரவிந்த்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 296
விலை : ரூ.270/-
புத்த்கம் வாங்க இங்கே க்ளிக் செய்க: thamizhbook.com
”விண்வெளி மனிதர்கள்” என்ற இந்த நூலை, இதில் விவரிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் இருந்தே எனது மதிப்புரையைத் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
”அப்பல்லோ – 11 திட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் என்ற மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். காலின்ஸ் கட்டுப்பாட்டுக்கூடத்தில் தங்கி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிவருவது எனவும், நிலவில் இறங்கும் விண்வெளி ஓடத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் பயணம் செய்வது எனவும் முடிவுசெய்யப்பட்டது.
அப்பல்லோ-11 திட்டம் துவங்குவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாக மனித குலத்திலிருந்து முதன்முதலில் நிலவில் காலடி வைக்கப்போகும் அந்த மனிதர் யார்? என்ற ஆர்வம் அமெரிக்கா முழுவதும் தொற்றிக்கொண்டது. நீல் ஆம்ஸ்ட்ராங்கைக் காட்டிலும் பஸ் ஆல்ட்ரின் அதிக கல்வித் தகுதி உடையவராக இருந்தார்.
ஒரு கட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் இடம் முதலில் நிலவில் யார் கால் வைப்பது என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று கேட்டார். ஆனால், அதைப் பற்றி இப்பொழுது கூற இயலாது நமது பயணத்தின்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் நிலவில் இறங்கியவுடன் அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இடம் கூறியிருந்தார்.
நிலவில் இறங்க முயற்சி செய்து கொண்டிருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் திட்டமிட்ட இடத்தில் பெரிய பள்ளங்கள் இருப்பதைக் கண்டார். அங்கே இறங்கினால் பின்னர் மேலே எழும்ப இயலாது என்ற காரணத்தால் பக்கவாட்டில் அவர் விண்கலத்தை நகர்த்திக்கொண்டே சென்றார். அவர் இவ்வாறு நகர்த்திக்கொண்டே சென்றதால் கீழே இறங்குவதற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைந்துகொண்டே வந்தது.
நிலவில் விண்கலத்தை நிலை நிறுத்திய பொழுது மேலும் 25 வினாடிகளுக்கு இயக்கக்கூடிய எரிபொருள் மட்டுமே இருந்தது. ஜூலை மாதம் 21 ஆம் தேதி 1969 ஆம் ஆண்டு, விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்திய பிறகு, நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடியை நிலவில் பதித்தார்.
நிலவில் இருந்து கிளம்பி கட்டுப்பாட்டுக் கூடத்திற்கு செல்லத் தயாராகும்போது ஆல்ட்ரின் தவறுதலாக கட்டுப்பாட்டுக் கருவியின் ஒரு பொத்தானை உடைத்துவிட்டார். அது இல்லாமல் அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அப்பல்லோ திட்டத்தைப் பற்றி காலின்ஸ் இடம் ஒரு முறை கேட்ட பொழுது, திட்டத்தின்படி நிலவில் இறங்கிய விண்கலத்திற்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அதைப்பற்றிக் கவலை இல்லாமல் நீங்கள் மட்டும் புவிக்கு திரும்பவேண்டும் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை என்று கூறியுள்ளார்”.
இந்தத் தகவல் ஒரு உதாரணம்தான். இதுபோன்ற நாம் கேள்விப்பட்டிராத, மயிருகூச்செரியும் தகவல்கள் இந்நூலில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.
அறிவியல் சம்பந்தமான நூல்கள் எதை வாசித்தாலும் அது பள்ளிக்கூடப் புத்தகங்களை நினைவுபடுத்தும் தன்மைகொண்டது என்ற எண்ணம் என்னுள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அந்த எண்ணத்தைத் தகர்த்தெறிந்த புத்தகம் என்று சொன்னால் அது இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளான பெ.சசிக்குமார் மற்றும் பா.அரவிந்த் ஆகியோர் எழுதி வெளிவந்திருக்கும் “விண்வெளி மனிதர்கள்” என்ற புத்தகம்தான்.
இதுதான் இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முதல் புத்தகம் என்று சொல்லப்பட்டாலும், நம்மால் சிறிதும் நம்பமுடியவில்லை. அத்தனை தகவல்களை நேர்த்தியாக திரட்டியும், கருத்துச் செறிவுடனும், எளிய நடையோடும் எழுதப்பட்டுள்ளது. முதல் வாசிப்பிலேயே இந்நூல் மீதான ஆச்சரியத்தையும் பிரம்மிப்பையும் ஒருசேர உணரமுடிகிறது.
அறிவியல் சம்பந்தமான நூல்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே கிடைக்கின்றன.. அதில் சில வார்த்தைகள் புரியும் பல வார்த்தைகள் கடைசிவரை புரியவே புரியாது. ஒருவேளை தப்பித்தவறி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அதற்கு ஆங்கிலமொழியே பரவாயில்லை என்ற எண்ணம் துளிர்த்துவிடும். அந்த அளவுக்கு அதில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் படுத்தி எடுத்துவிடும்.
ஆனால், இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எளிய மொழி நடையில். அதுவும் நேரடித் தமிழ்மொழியில், ஒரு கைதேர்ந்த கதை சொல்லி ஒரு நீள்கதையை சுவாரசியமாகச் சொல்லிச் செல்வதைபோல எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நாசாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆங்காங்கே இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு சாமானிய வாசகன் ஒரு திகில் கதையை எப்படி வாசித்துப் புரிந்துகொள்வானோ அதைப்போல, ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்திச் செல்வதாலேயே இந்நூல் அனைவரையும் கவர்ந்துவிடுகிறது. இந்நூலை பாரதிபுத்தகாலயம் மிகச்சரியாக அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதற்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
நம் வாழ்நாளில் காணமுடியாத பிரம்மாண்டம் என்று எதையெல்லாம் கற்பனை செய்துவைத்திருந்தோமோ அதையெல்லாம் கண்முன்னே கொண்டு நிறுத்தினால் எப்படியிருக்கும் அப்படி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்நூல்.
நாளேடுகளிலும், செய்தி ஊடகங்களிலும் அடிக்கடி கேள்விப்படும், மனிதர்களைக் கொண்டுசெல்லும் விண்கலம், அவற்றில் யார் யார் பயணித்தார்கள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பொதுஅறிவுச்செய்திகள் அடங்கிய ஒருகாலப்பெட்டகம் இந்நூல். பள்ளிக்கூட மாணவர்களும், அறிவியல் ஆசிரியர்களும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல் என்று சொன்னால் அது மிகையல்ல.
அறிவியலில் ஆர்வம் கொண்ட எல்லா சிறார்களுக்கும் வானத்தில் பறக்கும் வானூர்தி உட்பட விண்கலங்கள், விண்வெளி ஓடம் விண்வெளி நிலையம் போன்றவற்றின் மேல் ஒருவித ஈர்ப்பு இயல்பாகவே இருக்கும்.
இந்நூலை வாசிக்க வாசிக்க நம் ஆர்வம் கூடிக்கொண்டே செல்வதற்கு காரணம், விண்வெளி என்றால் என்ன?, ஏவூர்தி உருவான வரலாறு, விண்வெளி நிலையம் எவ்வாறு இருக்கும்? விண்வெளியில் ஏற்பட்ட விபத்துக்கள், பயணத்திற்கு முன்பான பயிற்சிகளின்போது இறந்தவர்கள், ஏவுவாகனத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட விண்கலங்கள் என்று ஏராளமான தகவல்கள்தான்.
இதுமட்டுமல்ல, விண்வெளி உடை பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தவையாக இருக்கின்றன. அதில் ஒன்று வாசகர்களின் பார்வைக்காக; “ அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட், தன் பயணத்திற்கு காலை 6 மணிக்குத் தயாரானார். சுமார் 4 மணி நேரம் காலதாமதம் ஆகியும் குறிப்பிட்டபடி ஏவு ஊர்தி கிளம்புவதாக இல்லை. நீண்ட நேரம் ஊர்தியில் அமர்ந்து இருந்ததாலும், பயணத்திட்டம் தள்ளிப்போன காரணத்தாலும் இயற்கை உபாதையால் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது.
அவர் இதை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உடனடியாக உபாதையை கழிக்க வேண்டும் என்று தெரியப்படுத்தினார். அவருக்கு உடுத்தப்பட்டிருந்த உடையில் இதற்கான வசதி செய்திருக்கப்படவில்லை. ஒருகட்டத்தில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நான் இந்த விண்வெளி உடையிலேயே உபாதையை கழிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு அதைப்போல் செய்தார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கு சிறுநீர் அங்குள்ள மின்சார பொருட்களில் படும்பொழுது அதன் செயல்பாடுகள் நின்றுவிடும் என்று பயந்தனர். ஆனால் விண்வெளி வீரரின் உடை ஒரு தகுந்த சீதோஷ்ண நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், சுமார் ஒரு மணி நேரத்தில் ஈரப்பதம் அனைத்தும் ஆவியாகி, உடை உலர்ந்துவிட்டது. அதன்பிறகு, விண்வெளி பயணத்திற்கு தயாரிக்கப்பட்ட உடைகளில் இயற்கை உபாதைகளை உறிஞ்சக்கூடிய நாப்கின்கள் வைக்கப்பட்டன”.
வளர்ந்த நாடுகள் விண்ணில் செலுத்தும் விண்கலங்கள், அவற்றில் பயணிக்கும் விண்வெளி மனிதர்களைப் பற்றி அறிமுகப்படுத்திவிட்டுச் செல்லும் இந்நூல் கொஞ்சம் கொஞ்சமாக விண்வெளியில் வாழ்வதால் ஏற்படும் சவால்களையும் தெளிவாக சொல்லிச்செல்கிறது.
விண்வெளியில் ஆழ்ந்த உறக்கத்திற்கு இடையூறாக பல சவால்கள் இருப்பதை இந்நூல் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. “ முதலாவதாக, இரவுபகல் வேறுபாடுகள். புவியில் 12 மணி நேரம் இரவு, 12 மணி நேரம் பகல் என்று சீராக உள்ளது. விண்வெளி மனிதர்கள் புவிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் புவியை ஒருமுறை சுற்றி வருகிறார்கள். இதில் ஒரு மணிநேரம் வெளிச்சத்திலும் அரைமணி நேரம் இருட்டிலும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அடுத்ததாக விண்வெளி நிலையத்தை இயக்கத்தில் வைத்துக்கொள்ள இயங்கும் கருவிகளில் இருந்து ஏற்படும் இரைச்சல்கள். அதுமட்டும் இல்லாமல் நாம் வீட்டில் உறங்குவதுபோல் விண்வெளி நிலையத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் உறங்குவதற்கான வசதிகளும் இல்லை” போன்ற தகவல்கள் வாசிக்கும் நமக்குப் புதிதிலும் புதிது…
ஒரு வரலாற்று ஆவணத்தைப் பாதுகாத்து வைப்பதற்கு எவ்வளவு பிரயத்தனப்பட வேண்டுமோ, அந்த அளவுக்கு இந்த நூலை பாதுகாத்து வாசிப்பது அவசியம் என்பதை இதைவாசிக்கும் வாசகர்களால் உணரமுடியும்.
விண்வெளி என்றால் என்ன? ஏன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவேண்டும்? விண்வெளிப்பயணத்தில் உள்ள பயன்கள் என்ன?, ராக்கெட் உருவான வரலாறு, ராக்கெட்டின் அமைப்பு, அதன் பாகங்கள், மற்றும் சுற்றுவட்டப் பாதைகளில் ஏற்படும் நிகழ்வுகள் ஆகியவை வாசிக்க வாசிக்க சுவாரசியத்தைக் கூட்டிக்கொண்டே செல்கிறது.
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போட்டியில் முதன்முதலில் எவற்றையெல்லாம் மற்றும் யார்யாரையெல்லாம் அனுப்பினார்கள், விண்வெளியில் முதலில் உணவுண்ட மனிதர் யார்? விண்வெளி மனிதருக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகள் என்னென்ன? விண்வெளியில் விலங்குகளில் செய்யப்படும் ஆராய்ச்சிகள், தாவரங்களில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள், நெருப்பு எரிதல் பற்றிய ஆராய்ச்சிகள், விண்வெளிப் பயணத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும்? போன்ற தகவல்கள் வாசிக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
முதல் விண்வெளி வீராங்கனை யார்? விண்வெளித்திட்டங்கள் எவ்வாறெல்லாம் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது மேலும் இதுவரை விண்ணிற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களின் பெயர்கள் ஆகியவை கோர்வையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
283 ஆம் பக்கத்தில் விண்வெளி சாதனையாளர்கள் என்ற பட்டியலை வெளியிட்டுயிருந்தது மிகச்சிறப்பு. போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதைச் சொல்லத்தேவையில்லை.
இந்நூலைப்பற்றி மதிப்புரை எழுத ஏராளமான விசயங்கள் இருக்கிறது. இம்மதிப்புரையின் நோக்கம் இந்நூலை வாசித்து ஒருவர் மற்றவருக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்பது மட்டுமல்ல, இன்றைய இளம்தலைமுறையினருக்கு அறிவியலின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுவும் ஆகும். இந்நூலை வாசிப்பதற்கு முன்பாக இளம்மனங்களில் இருந்துவந்த சந்தேகங்கள் ஒவ்வொன்றாக தீர்ந்துபோவதை உணரமுடியும். இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய புத்தகம் இந்த “விண்வெளி மனிதர்கள்” என்ற நூல்.
சருகாகி போகும் பிண மனிதர்கள்! சிறுகதை – குமரகுரு
நாளை நாளை என்று, எல்லாவற்றையும் நாளை செய்து கொள்ளலாம் என்றே நினைத்து கொண்டு வாழ முற்படுபவனின் முன்- இன்று பூக்க காத்திருந்த மொட்டு காற்றிலாடி கொண்டிருந்தது. அவனின் மூளைக்குள்ளிருந்து வரும் கட்டளையெல்லாம் நாளை செய்ய வேண்டியதைப் பற்றியதாகவே இருந்ததில் எந்த தவறும் இல்லை? ஆனால், அவன் எதையும் இன்று செய்வதில்லை என்பதுதான் குறை.
தலைகளற்ற மனிதர்கள் உலாவும் வீதியின் நடுவில் கிடந்த தலைகளிலிருந்த மூளைக்கு எதை எப்படி , செய்வதென்று தெரிவதில்லை. மூளை கட்டளையிட உடலின் பாகங்கள் அதை செய்வதெனவே இப்போதுவரை நிகழ்ந்தபடியிருப்பதால் தலையற்ற உடல்கள் கட்டளைக்கு ஏங்கி தள்ளாடியபடியிருந்தன.
அவனுக்குத் தலையிருக்கிறதா என்றால்- இருப்பது தலை மட்டும்தான். அதனுள் இருந்து கட்டளைகளிடும் மூளையை அவன் “நாளைப் பார்த்து கொள்ளலாம்” என்று சொல்லும்படி பழக்கி வைத்திருந்தான்.
இன்னொரு வகையான மனிதர்கள்-அவர்கள்தான் இவ்வுலகில் ஏராளம்- அவர்களிடம் உடல் உண்டு ஆனால், இன்னொருவனின் மூளையின் கட்டளைக்குப் பழகியவர்கள். அவர்களின் மூளைக்குள் இருப்பது இன்னொருவனின் மூளையின் ஜெராக்ஸ். அவர்கள் எப்போதும் சொந்தமாக சிந்திக்க முடியாதபடிக்கு பழக்கிவிட கற்றவனின் அத்தனை கட்டளைகளுக்கும் அடிபணியும் ஆற்றல் படைத்த மழுங்கிய மூளையை தலைக்குள் திணித்து வைத்துத் திரிபவர்களை நீங்கள் எப்போதும் சந்தித்து கொண்டே இருப்பீர்கள்?
பானங்களின் மயக்கத்தில் மூளையை இழந்தவர்களுள் இவனும் ஒருவன். அவன் இன்று செய்யும் இப்போது செய்யும் ஒரே வேலை “போதைக்குள் நுழைந்து திரும்பாமலிருப்பதற்கான வழியைக் கண்டடைதல்”. அந்த மயக்கத்தில் இருப்பவனுக்கு எப்போதும் எதுவுமே முக்கியமில்லை. அவன் நீர் பாய்ச்ச வேண்டிய செடிகள் வாடினாலும், அவனை நம்பியே இருந்த பெண் மக்கள் உதிர்ந்தாலும், அவன் கொட்டகையில் கட்ட வேண்டிய பசு தவிட்டுக்காக கதறினாலும்- அவன் இன்று இப்போது எப்போதும் இப்படியேத்தான் இருப்பான்.
தள்ளாடியபடி நடப்பது அவன்தானா என்றால், அவனில்லை. அவனுடைய உடலை வழிநடத்த முடியாமல் குழம்பி நிற்கும் மூளை எப்படியாவது அவனை நேராக நடத்த வேண்டுமென்று தன் கையிலிருக்கும் “தோல்பாவை பொம்மையின் கயிறுகளை” இறுகப் பிடித்திழுத்து நிறுத்தவே முனைகிறது. ஆனால், உடலால் மூளையின் கட்டளைப்படியும் மூளையால் உடலைக் கட்டுப்படுத்த முடியாமலும், வண்டியோட்டியில்லாத ‘கூண்டு வண்டியாக’ குலுங்கி கொண்டே செல்கிறான்.
அவன் உதடுகளிலிருந்து வெளிவரும் குழறிய வார்த்தைகளுக்கும் கூட யாரிடமும் அர்த்தமில்லை. அவன் நாளை எப்படி எங்கே எழுந்திருப்பானோ, அங்கேயிருந்து மீண்டும் அவன் கால்கள் பானத்தை நோக்கியே செல்லும்.
அவனைப் பெற்றாளொரு பெண் பார்த்து அவனுக்கு மணம் முடிக்க நினைத்தாள். எப்போதும் மிதந்தபடியிருப்பவனை எப்படி? எந்த பெண்? மணமுடிப்பாள்? அவன் விழாத தெரு முக்கில்லை. அவனைத் தெரியாத கண்கள் அவ்வூரிலேயே இல்லை. அப்படியிருக்க ஊருக்குள் யார் அவனைத் திரும்பி பார்ப்பார்? அவனின் நாளைக்குள் எப்போதும் அவனே இருப்பதில்லை.
அவனின் நண்பர்கள் அவனின் அழுகையை ரசிப்பதில்லை. அவன் அவனை நினைத்தேப் பல நாட்களாக அழுது கொண்டிருப்பதைக் கண்டுஅறுவறுப்புற்றவர்கள், மெல்ல மெல்ல அவனை விட்டு விலகிட, ஒரு கட்டத்தில் குடிப்பதற்கென கடன் வாங்கி கடன் வாங்கி கை நடுங்க கை நடுங்க நடந்து கடன்காரன்களைக் கண்டு மறைந்து வாழவும் துவங்கினான்.
அவனுக்கென ஞானம் இல்லை. அவனுக்கெனத் திறமை இல்லை. அவனுக்கென சொத்தில்லை. அவனுக்கென இருந்ததெல்லாம் அவன் தாயின் பரிவு மட்டுமே. பெற்றவளெப்போதும் பிள்ளையைத் தாங்குதல்தானே மரபு.
பெருங்கடல் ஸ்தம்பித்து நின்றதைப் போலவொரு குடிகாரனின் உலகம் போதைக்குள் நின்றுவிடுகிறது. அலைகள் திரும்ப திரும்ப அடிப்பதால் என்னவாகும்? அலையில் கால் நனைத்தல் சுகமென்று கடற்கரையிலேயேத் தங்கி எப்போதும் கடலில் கால் நனைத்துக் கொண்டேயிருக்க முடியாதல்லவா?
கடலின் அலைகளைவிட காலத்தின் அலைப் பெரிது!! சக்தி வாய்ந்தது!! காலம் அலையாக வந்து மனிதர்களைக் கொத்தாக வயதாளிகளாக்கியும் வயதாளியாக்காமலும் விழுங்கி விடுகிறது. குழந்தையாகப் பிறந்து பால்யத்தில் நுழைந்து வாலிபத்தை வீணடித்தே நடுத்தர வயதில் தடுமாறி வயோதிகத்தில் வீழ்ந்து போகும் எத்தனை மனிதர்கள் நம்மோடு இருக்கிறார்கள். எண்ணற்ற கதைகள் உண்டு அவர்களைப் பற்றி.
இப்படி பால்யத்தின் முனையிலிருந்து வாலிபத்துள் செல்லும் அத்தனைப் பிள்ளைகளுக்கும் போதைப் பழக்கிவிட்டால் நாடு அநாதையாகுவதைத் தவிர வழியில்லையே?
இவனின் சிவந்திருக்கும் கண்களும் மெலிந்து போன உடலும் அவனை மரணத்தின் பாதையில் தள்ளாட செய்வதை, அவனின் பரட்டைத் தலைக்குள் நுழைந்து கொண்டு வாழ்ந்து களிக்கிறானே ஒரு முதலாளி, அவனின் அத்தனைக் கட்டளைகளும் எளிதில் நிறைவேறி விடுகின்றன. அவன் போட வேண்டியதெல்லாம் ஒரே ஒரு உத்தரவு மட்டுமே. அவன் நேரில் வர வேண்டியதில்லை, எங்கேயிருந்து எப்படி அடிமைகளைப் பரப்பி விட்டு அடிமைத்தனத்துக்குள் உழற்றிவிட வேண்டுமென நன்கறிந்தவன் அவன்.
பண்டமாற்றை ஒழிக்க பணம் கொண்டு வந்து, மண்ணையெல்லாம் பொன்னாக்கி கொண்டிருந்தவர்களை ஏமாற்றி பணத்துக்கு வேலை செய்ய வைத்துத் தன் ஆசையையெல்லாம் நிறைவேற்றிய களிப்பில் எங்கேயோ ஓரிடத்தில் பல ஆயிரம் காசுகள் மதிப்புள்ள ஒரு மிடறு பானத்தை உறிஞ்சுகிறான்.அதில் வரும் போதையில் நம் நாயகனின் ரத்த வாடையிருப்பதில் உங்களுக்கேதும் ஆச்சரியமுண்டா நண்பரே?
ஆறை விட ஐந்தே பெரிது! கவிதை – செ.கார்த்திகைசெல்வன்
ஆம், நான் அரும்பாத
மலரே…
பால்மணங்கூட இன்னும்
என்னிலிருந்து
மறையவில்லையே
அதற்குள்
பாலியல் வண்புணர்வா?
தவழும் நிலையிலிருந்து
தற்பொழுதுதானே
தத்தித் தத்தி நடக்கும்
பரிணாமம் பெற்றேன்
அதற்குள் என்னைத்
தழுவ நினைத்தது
எவ்விதத்தில் நியாயம்?
எங்களின் புன்னகையில்
இறைவனல்லவா
தெரிந்திருக்க வேண்டும்
எப்படித் தெரிந்தோம்
உங்களின் பாலியல்
பசிக்கு இரையாக?
நல்லவர் தீயவர்
அறியாது யாவரிடமும்
அன்பைத்தானே
செலுத்துகின்றோம்
அதற்கு நன்றிக்கடனாய்
கொடுமையின் உச்சமா?
உங்களுக்கு மதத்தில்
மதமென்றால்
மழலை நாங்களென்ன
செய்தோம்?
மலரவிடாமல் இப்படி
நசுக்கி நாளும்
வதம் செய்கிறீர்களே!
ஐந்தறிவு
ஜீவிகளிடத்தில்கூட
இவ்வளவு வன்மம்
இல்லையே
ஆறறிவர் மனிதயினம்
என இனி எதைக்கொண்டு
நிரூபணம் செய்வீர்?
பத்துமாதம் சுமந்தவள்
பதறி அழுகிறாள்
கொஞ்சி விளையாடி
தோளில் சுமந்தவன்
மார்பிலடித்துக் கதறுகிறான்
இதற்கான ஆறுதல்
இங்கென்ன உண்டு?
மதா பிதா குரு தெய்வம்
என்றறிந்த உங்கள்
மனிதமனம் – மதா பிதா
குழந்தை குரு தெய்வம்
என்பதை மட்டும்
உணராதது ஏன்?
நூல் அறிமுகம்: மருத்துவர் ஷாலினியின் உயிர் மொழி – எஸ்.குமரவேல்
மதம், நிறம், இனம், மொழி வர்க்கம் பாலினம் சாதி மரபு நம்பிக்கைகள் நான் என்ற உணர்வு இப்படி நம் மனத் தெளிவை மறைத்துக் கொண்டே இருக்கும் மாயத் திறைகளை நீக்கி நிர்வாணப் பார்வையில் நோட்டமிட்டால் ஒழிய இந்த உயிர்மொழி நமக்கு கேட்காது.
இந்த நிர்வாணப் பார்வையை சுவீகரித்து இந்த உலகை மீண்டும் ஒரு முறை பாருங்கள் உயிர் பேசும் மொழி உங்களுக்கு தெள்ளத் தெளிவாக கேட்கும். 128 பக்கம் கொண்ட ஒட்டு மொத்த புத்தகத்தின் 27 தலைப்பிலான மேற்கணட புத்தகத்தின் சாராம்சம் இந்த கடைசி வரிகள்தான், அப்படி நாம் எந்த உயிர்மொழியை கேட்க போகிறோம் எவற்றயெல்லாம், நம் அன்றாட வாழ்வில் தவற விட்டிருக்கிறோம், மனித இனத்தின் இரு பாலினங்களுக்குள் கத்தியின்றி ரத்தமின்றி நடந்த, அனுகுண்டுகளும் துபாக்கி ஏவுகனைகளும் இல்லாமல் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் உறவுப் போரினை பற்றியும் அதன் ஆழத்தையும் அறிவியல் ரீதியாக நாம் சுவீகரிக்க பிரபல மனநல மருத்துவர் எழுத்தாளர் ஷாலினி அவர்களின் உயிர்மொழி புத்தகம் நிச்சயம் போரில் வெற்றி பெறுவதற்க்கான கையேடாக இருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் வேண்டாம்.
மனித இனத்தில் தாய், தந்தை சகோதரி, என இரத்த பந்தங்களில் இயல்பாக இருக்கும் பாசப்பிணைப்பு என்பது இயற்க்கையானது, அதையெல்லாம் கடந்து இரத்த பந்தம் இல்லாத ஒரு ஆணையும் பெண்ணையும் இணைக்கும் திருமண பந்த்த்தில் ஏற்ப்படும் உறவு சிக்கல்களை அதன் வலிமையை, பிரிவை, பிரிவதற்க்கான காரணங்களை, அன்பை பரிமாறிக்கொள்ளும் அடிப்படை சாராம்சங்களை, கலவிக் கோட்பாடுகளை, ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும், நடைபெறும், ஹார்மோங்களின் சித்து விளையாட்டுக்களை ஆதிக்காலம் தொட்டு இன்றுவரை மனித உடலில் ஏற்ப்பட்டு இருக்கும் மாற்றங்களை அறிவியல் பூர்வமாக நம்மிடயே உரையாடுகிறார் மரு.ஷாலினி.
புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் என்பதனாலயே பெண்ணுக்கு ஆதரவாகவோ ஆணுக்கு எதிராகவோ அல்லது பெண்ணுக்கு எதிராகவோ ஆணுக்கு ஆதரவாகவோ பேசவில்லை, முழுக்க முழுக்க அறிவியல் பார்வையில் பலதரபட்ட உதாரங்களை மையமாக கொண்டு புத்தகம் எழுதபட்டுள்ளது
சிக்கல் மிகுந்த ஆண் பெண் உறவு ஊசலாட்டத்தில் வருகின்ற ஏற்றதாழ்வுகளை மனித மனம் எவ்வாறெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதை நாம் உணருவதற்க்கு பக்கபலமாக அமைந்துள்ளது புத்தகம்.
புத்தகம் பேசுவது என்னவோ ஆண் பெண் உறவை பற்றிதான் என்றாலும் அதன் தொடக்கம் என்பது எங்கிருந்து என்பதுதான் இதில் முக்கியம் என கருதுகிறேன். ஆம் புத்தகம் ஆதி மனிதனின் வேட்டுவ காலம் தொடங்கி இன்றய நவீன தாராளமைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற இக்காலம் வரயிலான ஆண் பெண் இடையிலான உறவு குறித்து பேசுவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பாக இருக்கக் கூடும் என கருதுகிறேன். எழுத்தாளர் ஒருவர் மனநல மருத்துவர் என்பதனாலாயே தனக்கு கிடைத்த அனுபவங்களில் இருந்து கிடைத்த நிகழ்வுகளை மட்டும் பதிவிடாமல் பலதரபட்ட உலகம் முழுதும் நடந்த பல நிகழ்வுகளின் ஆதாரங்களை நமக்கு முன் வைக்கிறார்.
உதாரணத்திற்கு சிறுவயதிலிருந்து தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு மனித தாயிடம் வளர்ந்த ஒரு சிம்பன்சி தன்னை மனிதனாக கருதி மனித பெண்ணையே விரும்பியது, மனிதன் மட்டுமல்லாமல் யானை குரங்கு ஆகியவையும் ஏன் வயது மூப்பின் போது தன்னுடைய சக பிராணிகளை பாதுகாக்கிறது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.
உடைபடும் கற்பிதங்கள்
முன்பு சொன்னது போலவே புத்தகம் ஒரு சார்பில் இருந்து எழுதப்படவில்லை அதே சமயம் சமூகத்தில் நிலவும் எந்த கற்பிதங்களும் எடுபடவில்லை அறிவியல் என்று வந்துவிட்டாலே அபத்தங்கள் உடைபடுவது வழக்கம் தானே, உதாரணத்திற்கு திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை அது ஒரு ஜெனடிக் ஒப்பந்தம், பெண்கள் என்றாலே மோசம் என சொல்லும் ஆண்கள் தங்களின் தாய் என்று வரும்போது அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே என உருகுவதும், ஒருபோதும் மனிதனோ விலங்கோ எதுவாயினும் அந்த இனத்தின் ஆதார ஜீவன் தாய்தான் என சொல்லும் அதே வேளையில் அதிக தாய் பாசம் கொண்ட ஒரு ஆண் தன்னுடைய மரபணுவை அடுத்த தலைமுறைக்கு பரப்புவதில் தோற்றுப் போகிறான் என்ற தகவல் நமக்கு அதிர்ச்சியூட்டும், பிரசவம் பிள்ளைப்பேறு என எதை எதை கொண்டு மனித ஆண் சமூகம் பெண்களை வதைபடுத்தியதோ அதையே அவர்கள் தங்களின் அஸ்திரங்களாக தேர்ந்தெடுத்ததும் ஆண்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதும் என ஒன்றன் பின் ஒன்றாக வலைப்பின்னல் போன்று மனித வாழ்வின் பலம் பலவீனங்களையும் அதற்கான தீர்வுகளையும் புத்தகம் நமக்கு தருகிறது. ஒருவனுக்கு ஒருத்தி, கல்லானாலும் கணவன், உலகில் தாயின்றி உயர்ந்தது வேறு இல்லை, என நடைமுறையிலுள்ள புனிதப்படுத்தப்பட்ட அனைத்தையும் உடைக்கின்ற அதேவேளையில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் ஆழமாக புத்தகம் வலியுறுத்துகிறது.
ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் உங்களை கூர்மையாக விமர்சிக்கும், அந்த விமர்சனம் உங்களை கோபமூட்டும் அதேவேளையில் ஆசுவாசமாக தடவிக் கொடுக்கும்.
உயிர்மொழி – ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்வில் கைகளில் ஒன்று
புத்தகத்தின் பெயர் : உயிர் மொழி
ஆசிரியர் : மருத்துவர் ஷாலினி
பக்கங்கள் : 128
தோழமையுடன்
எஸ்.குமரவேல்