மாதொருபாகன் புத்தகம் உள்ளிட்ட ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கிய பேராசிரியர் பெருமாள்முருகன் (Perumalmurugan) அவர்களின் 2022 டிசம்பரில் முதல் பதிப்பாகவும், 2023 பிப்ரவரியில் இரண்டாம் பதிப்பாகவும் காலச்சுவடு பதிப்பகத்தில் வந்த புத்தகம் தான் ‘மயிர்தான் பிரச்சினையா?’ கல்வி சார்ந்த கட்டுரைகள் கொண்ட நூல்.
இதில் 2009 முதல் 2022 வரை கல்வியில் நிகழ்ந்த முரண்பாடுகளை குறிப்பாக மாணவர்களை கல்வி வியாபாரப் பண்டமாக, சூதாட்டக் கருவியாக வைத்து விளையாடிய விளையாட்டு பொம்மைகளாக குழந்தைகள் ஆட்டுவிக்கப்பட்ட கொடுமையான வரலாற்றைத்தான் நமக்கு கட்டுரைகளாக வழங்கியிருக்கிறார். இதில் ஊடகங்களின் பங்கு மிகுந்து இருப்பதையும் சுட்டிக்காட்டி நம்மை ஊடகங்களை எவ்வாறு மூன்றாவது கண் கொண்டு பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருப்பார்.
அது குழந்தைகளின் முதல் மதிப்பெண்ணாகட்டும், மாநில அளவில் இடம் பிடிப்பதாக இருக்கட்டும், “தம் குழந்தைகளின் புகைப்படங்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களில் வராதா” என்று பெற்றோர்கள் ஏங்குவதாக இருக்கட்டும். இன்னும் இது போன்ற பல மாய்மாலத் தோற்றத்தை திட்டமிட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்கி தனது கல்வித்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான மூலதனக் கருவிகள் தான் குழந்தைகள்.
அதேபோன்று பெற்றோரின் பணம் காய்க்கும் மரங்கள் தான் குழந்தைகள் என்று பொதுப்புத்தியாய் கட்டமைக்கும் நிலையில் தான் இன்றைய கல்வி நிலை இருக்கிறது என்று 2009லேயே நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதி தனியார் கல்வி நிறுவன தொழிற்சாலையில் நடைபெற்ற அவலங்களை புட்டு புட்டு வைத்திருப்பார் 2009லேயே.
இன்று 9,10,11,12 நான்கு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்று வைக்கப்பட்டதற்கு காரணமே மேற்கண்ட நாமக்கல் கோழிப்பண்ணை கல்வி நிறுவனங்களே.
இன்று எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்று ஒன்றிய அரசு புகுத்தியதால் கோழிப்பண்ணை கல்வி நிறுவனங்கள் அடுத்த அடியை அதாவது ‘கோச்சிங் செண்டர்’ என்னும் தொழிற்பண்ணைக்குள் நுழைந்துள்ளார்கள். மாணவர்களுக்கு புதுவிதமான நெருக்கடி. எப்படியிருந்தாலும் குழந்தைகளுக்குத்தான் மனஉளைச்சல். சாமானிய பெற்றோருக்கு பண உளைச்சல். விடிவு அனைவருக்கும் கல்லூரிக்கல்வி வரை பணமில்லாக் கல்வி என்னும் நிலை வரும்போதுதான்.
*’மயிர்தான் பிரச்சினையா?’அடடா இது மிக முக்கியமான கட்டுரை. எல்லாமேதான். ஆனால் இதற்கு நாம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டும்.
“பறவைகள் தம் இனத்தின் சோடியை கவர்வதற்கு பல இறகு விரிக்கும் தந்திரங்களைச் செய்கிறது. மயில் தோகை விரிக்கிறது, இன்னும் பல பறவைகள் கேரள கதகளி நடனம் போல கழுத்தை அந்தத் திருப்பு திருப்பி இணையைக் கவரும். அதுபோன்று சிங்கம் தன் பிடரியை சிலிர்க்கும். பறவை, விலங்குகளுக்கே தமது மயிர்களை கூச்செரியும்போது நாம் மனிதர்கள் தானே நமக்கும் முடி மீது கவனம் இருக்காதா?” என்பது போன்று மிகவும் எதார்த்தமான உரையாடல்களுடன் இக்கட்டுரையை எழுதியிருப்பார். இதில் கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா கலைஞர்கள் வரை தமது முடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அலங்கார சலூன்களில் விளம்பரங்கள் இப்படி போகும் கட்டுரை 1970, 80 வாக்கில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தலை முடியை அலங்காரம் செய்த கலைகளை திரைப்படமாக இன்றும் இருக்கிறதே. அப்படி இருக்கும்போது “கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் கையில் கத்தரிக்கோல் இருப்பது சரியா?” உச்சித் தலையில் கொண்டை, பின் மண்டை கொண்டை, நீண்டு முதுகில் தொங்கும் கொண்டை என உயர் சாதி முதல் ஒடுக்கப்பட்ட மக்கள் வரை முடியப்பட்ட கொண்டை முடி மறந்துவிட்டதா? மாணவனின் தலை உச்சியில் முடி தூக்கி நின்றால் அது ஆசிரியருக்கு சவாலாகத் தெரிகிறது. ‘உலத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்கிற திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி இன்றைய உலக வழமைக்குள் அன்றாடம் நடக்கும் நடப்புக்குள் ஆசிரியர்கள் தம்மை புகுத்தி மாற்றத்தை ஏற்று “மயிரை மாணவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் கற்பித்தலில் நாம் கவனம் செலுத்துவோம்” என்று ஆசிரியர்களைக் கேட்டு கட்டுரையை முடித்திருப்பார்.
நான் கூறியது அவருடைய ஒன்றிரண்டு துண்டுகள் தான். இதுபோன்று 25 நறுக்குத் தெறித்த கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஆகச்சிறந்த எழுத்தாளருக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
உச்சரிக்கப்படுகிற வார்த்தைகள் தனித்திருப்பவை.அர்த்தங்களை ஒரே தன்மையில் சொற்கள் உருவாக்குவதில்லை. வாத்திச்சி என்று அழைக்கப்படுவதை விட டீச்சர் என்று சொல்வதற்குள் ஏதோ ஒரு பாந்தம் ஒட்டிக் கிடக்கவே செய்கிறது. ஊருக்கு வெளியே அல்ல, வெளியேவிற்கும் வெகு தொலை தூரத்தில் பதுங்கி கிடக்கிற குடிசைத் தொகுப்புகளுக்கு என்ன பெயர் இருந்தால் என்ன?. எத்தனை காலத்திற்கு இந்த அகதிப்பட்டத்தை சுமந்தலைவது. அகதி எனும் சொல்லை விட ஏதிலி என்றுரைப்பதில் ஒரு உளவியல் சிகிச்சை நிகழவே செய்கிறது. அந்த சொல்லை உச்சரிக்கும் போது நான் அகதி இல்லை என தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.
வாழத் தகுதியற்ற இந்த தொண்டுக்குடிசைக் கூட்டத்திற்கு முகாம் என்ற பெயரிடப் பட்டதும், அதன் மீது நிகழ்த்தப் படுகிற ஒதுக்குதலையும் எப்போது மாற்றியமைப்பது எனும் ஏக்கம் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது. இங்கே பாராமுகமும் கழிவிரக்கமும் கலந்து கிடக்கிறது. அய்யோ பாவம் என்பதோ அல்லது அவுக ஊருக்குப் போய்ச் சேர வேண்டியதுதானே எனும் குரலையோ நித்தமும் கேட்கும் படியான துயர வாழ்வை விட்டு விலகுவதற்கான துடிப்புடனே கடக்கிறது நாட்கள். போர் நிலத்தில்தான் முடிந்து போயிருக்கிறது. முள்ளி வாய்க்கால் பெருங்கொடுமைக்குப் பிறகான காலத்தில் உச்சரிக்கப்படும் வெளிப்படைத் தன்மையிலான வார்த்தைகள் அர்த்தப்பூர்வமானவை. இப்போதாவது பேச முடிந்ததே நம்மால்.. இனி இவை முகாம்கள் இல்லை. மறுவாழ்வு மையங்கள் என்று அரசதிகாரம் அறிவித்த போது ஏதோ நடந்துவிடும் போலவே எனும் பெரும் விருப்பம் யாவர் மனதிலும் துளிர்விடத் துவங்கியிருக்கிறது. எத்தனை மரணங்கள்,எவ்வளவு இழப்புகள், அவமரியாதைகளைச் சகிக்க முடியாது தற்கொலையில் மடிந்து போன ஜீவன்கள் கணக்கில் அடங்குமா?… வாழத்தகுதியற்ற இந்த நிலத்திலேயே கிடக்க எங்களுக்கு மட்டும் ஆசையா?. சொந்த நிலத்தின் மீதான ஏக்கமற்ற குடிகள் உண்டா? இப்படி எண்ணிலடங்கா கேள்விகள் விடைகளற்று தொடர்கின்றன…
விடைகாண முடியா கேள்விகளைச் சுமந்தபடி இங்கேயே விழுந்து கிடப்போமா? அல்லது ஊருக்கே போய்விடலாமா எனும் இந்த இருவேறு மனநிலைகளை எழுதிய தன்வரலாற்றுப் பதிவு போரின் மறுபக்கம். பத்திநாதனின் முகாம் நாட்களின் டைரிக்குறிப்புகளைப் போல தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் சொல்ல முயற்சிப்பது பத்திநாதன்களின் கதையை. அரசியல் மாற்றங்களுக்குப் பிறகான மீள்குடியேற்றங்கள் கசப்பானவைதான். ஆனாலும் ஏதோ மூச்சுவிட முடிகிறது எனும் உணர்விற்கே அலைகுடிகள் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த தனித்த மனநிலைகளைக் குறித்தும்கூட பத்திநாதனால் எழுத முடியும். போரின் மறுபக்கம் பத்திநாதனின் முதல்நூல். ஒருவிதத்தில் தமிழக வாழ் அலைகுடிகளைப் பற்றி எழுதப்பட்ட தனித்த புத்தகமும்தான். தன் வரலாறுகளின் சொற்கள் எப்போதுமே காத்திரமாகவே வெளிப்படும். தொண்ணூறுகளுக்குப் பிறகு கவனம் பெறத் துவங்கிய தன்வரலாற்று ஆவணங்களை விளிம்பு நிலையாளர்களே எழுதி வருகின்றார்கள். பெண்களுக்கு மட்டுமேயான தனித்த மன உணர்வின் சொற்கள் வலிமையானவை என்பதை இலக்கியப்புலம் உணரத்துவங்கியது அப்போதுதான். மூன்றாம் பாலினப் பிரதிகளும், ஒடுக்கப்பட்டோரின் தன்வரலாற்று நூல்களும் கவனம் பெறத்துவங்கின. அதன் தொடர்ச்சியில் வந்துநிற்பதே பத்திநாதனின் போரின் மறுபக்கம் என்கிற தன்வரலாற்று நூல். விளிம்பிற்கும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் வாழ்க்கைப்பாடுகள் இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறதா எனும் கேள்வியில் துளிர்த்ததே இந்த தொகுப்பாவணம். அகதி முகாம்களுக்குள் உறைந்திருக்கும் கொடுஞ்சித்திரத்தை எந்த எழுத்தாளனாலும் எழுதிக்கடக்க முடியாது என்பதே காலம் நமக்கு உணர்த்தியிருக்கும் நிஜம். துயரத்தின் கொதி சொற்களைத் தீராத தன் அலைச்சலின் ஊடாக காட்சிப்படுத்தியிருக்கிறார் பத்தி..
உண்மையை உரைக்க எந்த மெனக்கெடல்களுக்கும் அவசியமில்லை. கத்தி போன்ற மிகக் கூரான சொற்களால் கட்டித்தரப்பட்டிருக்கிறது போரின் மறுபக்கம். புத்தகத்தின் முதல் பக்கத்தில் துவங்கிய போரின் துயரக் காட்சிகளும் அது துரத்தும் வாழ்க்கையையும் எந்த விதமான பூச்சுகளுமின்றி கருப்பு, வெள்ளையில் வடித்திருக்கிறார் எழுத்தாளர்.
தெருவில் விழுந்து கிடக்கிற என் பந்ததினை எடுப்பதற்காகக் காத்து நிற்கிறேன். எவ்வளவு நேரம் இப்படி இந்த மரநிழலில் குடியிருக்கிறேன். வாகனம் தொலையட்டும் என காத்திருக்கிறேன்.ஏன் காத்திருக்கிறேன். ட்ரக் வண்டி ஊர்ந்து தெருவை அடைத்து நிற்கிறது.என்னுடைய பந்தை ஒட்டி செல்கிறது. தெருவில் செல்வது சாதாரண மக்களுடைய வாகனம் அல்ல. அது போராளிகளின் ரக்கு ஜுப்பு பீரங்கி வண்டிகள். சில சமயங்களில் தெருவில் ராணுவ வண்டிகளும் வரும். நடு இரவில் போர். எல்லோரும் அமைதியான ஆழ்ந்த உறக்கத்தில் துயிலும் போது குண்டுகள் வெடிக்கும் சத்தம் காதைப் பிளக்கிறது. தெருதான்,ஆனால் யாராவது போவது வருவது தெரிந்தால் ஆமிக்காரன் சுடுவான். அந்த ஊர் இரவின் துக்கத்தில் உறைந்து போய்விட்டது. இனி மீளவே முடியாத பெருந்துயர் ராட்சஷப் போர்வையாக ஊரை வளைத்து நிற்கிறது.
போர்க்கருவிகளுக்கு நடுவினில் நித்தமும் விழுந்து கிடக்க எவருக்குத்தான் மனமிருக்கும். தப்பிப்பிழைப்பதைத் தவிர வேறு எந்த வாய்ப்புகளையும் போரின் கொடூர உக்கிரம் அவர்களுக்கு வழங்கவேயில்லை. எண்பதுகளின் இறுதியில் துவங்கிய அலைகுடி முத்திரை இதுநாள் வரையிலும் அழிந்த பாடில்லையே ஏன்?. இலங்கையிலிருந்து குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளோடு வந்திறங்கிய ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? வந்திறங்கிய யாவரும் விருப்பத்துடனா கரை ஒதுங்கினர்?. இல்லையே?. தன்னுடைய நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேறிட நிர்ப்பந்தித்தது எது?
பாசிமோட்டையில் ஒரு தெருவில் போரின் ஆரம்பத்தில் ஒருவர் போராளிக்குழு ஒன்றிலிருந்தார். அவர் உக்கிரமாக நடந்த பெருஞ்சண்டை ஒன்றில் மரணித்தார். அதன்பிறகு என்னுடைய மூன்றாவது சீனியண்ணாவுடன் சேர்த்து நாலுபேர் வரிசையாக இறந்து போனார்கள். எங்கள் தெருவில் மட்டுமே இப்படி என்றால், அடுத்தடுத்த தெருக்களில்,ஊரில் நடந்தது ரொம்ப மோசம். இந்த யுத்தத்தின் உக்கிரம் எல்லா பெற்றோரையும் யோசனையில் ஆழ்த்தியது. பலரும் தப்பி பிழைத்து தேசாந்திரியாகப் போனார்கள். காசுள்ளவர்கள் போன இடம் வேறு நிலம். எதுவும் அற்ற அன்றாடங் காய்ச்சிகளுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த புகலிடமும் கண்களுக்குத் தெரியவில்லை…
இப்படி இந்திய நிலத்தைப் புகலிடமாக்கிய பலருக்கும் எல்லாம் மூன்று மாதத்தில் சரியாகிவிடும். நாம் மறுபடியும் ஊருக்கே சென்றுவிடலாம் எனும் பெரும் நம்பிக்கை இருந்திருக்கிறது. பத்திநாதன் அப்படி நினைத்துக் கொண்டே தமிழ் நிலத்தில் அலைந்தவர். சூழல் கனிந்து நிலைமை சரியாகிவிடும் என நான் உறுதியாக நம்பினேன் என நூலில் குறிப்பொன்றையும் தருகிறார். மிகுந்த நம்பிக்கையுடன் துயரங்களைக் கடந்து மண்டபம் வந்திறங்கிய ஈழத்தமிழர்கள் எப்படியெல்லாம் இங்கே உழல வேண்டியிருந்தது என்பதைத் தன்னையும்,,தன் வாழ்வையும் படைபாக்குவதன் வழியே பொதுவெளிகளில் புதிய அர்த்தத்தையும் அகதிகள் வாழ்நிலையின் மீது தனித்த கவனத்தையும் ஏற்படுத்த முயற்சித்தார் பத்தி. அவர்களுக்கு வேறு எங்கு செல்வதைக் காட்டிலும் இங்குக் குடியேறுவதில் ஒரு சின்ன நம்பிக்கை இருக்கவே செய்தது. தொப்புள் கொடி உறவு, மொழியால் பண்பாட்டால் ஒரே படித்தான மனுசக் கூட்டமிது என்பதால் ஏற்பட்ட நம்பிக்கையிது. வந்திறங்கியதற்குப் பிறகான நிஜம் உயிரை வதைத்தது தனிதௌதது. அதையே தன்வரலாறாக்கி போரின் மறுபக்கத்தை நமக்குக் காட்டித்தருகிறார் பத்திநாதன்.
துயரங்களின் கதையை வாசித்துக் கடக்க முடியாது நமக்கு. முகாமில் வந்திறங்கிய பிறகும் கூட அவர்களுடைய அவர்களுடைய மனதை அறுக்கும் அச்சத்தின் துடி அகலேவேயில்லை. சுதந்திரமான காற்றைச் சுவாசிக்க அவர்களை அனுமதித்தது,அவர்கள் நடந்து போய் திரும்புகிற ஒற்றையடிப்பாதை மட்டுமே. அதைத் தவிர இந்த நிலத்திலும் கூட அவர்களுடைய கால்களைப் பயம் கவ்விப் பிடித்திருந்தது. கன்னிவெடிகளின் புதை மேட்டிலிருந்து திரும்பிய பிறகும் கூட அச்சம் அவர்களுடைய நெஞ்சாக்கூட்டில் இருந்து விலகவேயில்லை. அகதிமுகாம் எனும் வதைக் கொட்டடிக்கு வந்து சேர்ந்திருப்பவர்கள் யார் தெரியுமா? வாழ வழிதேடி வந்தவர்கள் இல்லை இவர்கள். போர் சிதைத்த நிலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள். மரணத்தின் வாயிலில் நித்தமும் பகடையாட்டம் ஆடிக்கிடந்தவர்கள். ஒருவிதத்தில் இவர்கள் யாவரும் போர் விட்டு வைத்திருக்கும் மிச்சமானவர்கள்…
எப்படியாவது வாழ்ந்து விடுவது என்றான பிறகு கப்பலில் இடுபாடுகளுக்கும் நெரிச்சலுக்கும் இடையில் மூச்சுத்தினறி செத்துப் போனவர்கள். நடுக்கடலில் தலைகுப்புற கவிழ்ந்து ஐலசமாதியானவர்கள். ஆமிக்காரன் கண்களுக்கு அகப்பட்டு நாயாக குருவியாக சுட்டுத்தள்ளப்பட்டவர்கள். கடல் அலைகளின் ஆக்ரோசத்திற்கு கடலிலேயே பலியானவர்கள் தவிர மீதமிருப்பவர்களே உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள். இந்த மிச்சமிருப்பவர்களின் வாழ்நிலை என்னவாக இருக்கிறது முகாம்களில் என்பதையே பத்திநாதன் போரின் மறுபக்கமாக்கி தந்திருக்கிறார்…
பத்தி மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற உச்சம்பட்டி முகாமிற்குள் இருந்து கொண்டு ஏன் இப்படியாகிவிட்டது என்னுடைய வாழ்நாள் எனும் கேள்வியை விதவிதமாக கேட்கிறார். வழிநெடுக நகரும் தற்குறிப்புகளாக நகர்கின்றன சொற்கள். அவை யாவும் அன்பிற்காக ஏங்கி நிற்கின்றன. தாயை விட்டு தந்தையை விட்டு வந்தாகிவிட்டது. உற்றாரும்,உறவினர்களும் அங்கு உயிருடன் தான் இருக்கிறார்களா? அல்லது நம்மைப் போல வேறு வெகு தொலைதூரம் சென்றுவிட்டனரா?. இந்த பதிலறியத் துடித்தலையும் மனதுடன் நித்தமும் வளர்ந்து கொண்டேயிருக்கும் கேள்விகளைச் சுமந்து அலைய வேண்டியிருக்கிறது. போர் பரிசாக அளித்த ஒற்றைக்கேள்வி நான் ஏன் அகதியாகத் துயருகிறேன். இந்தக் கேள்வியை நாவல் வழிநெடுக கேட்டுக்கொண்டேயிருக்கிறது. கிடைக்கும் பதில்களும் கூட அலுப்பூட்டக்கூடியவையாகவே இருக்கிறது. எதனால் ஏற்பட்டது எனக்கு இந்த நிலைமை. இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தினாலா. அல்லது பனிரெண்டு பிள்ளைகளில் கடைசிப்பிள்ளையாகப் பிறந்து தொலைத்தேனே அதனாலா?. அம்மா அருகினில் இருந்த போதிலும் அன்பு காட்டாததாலா. அப்பா அருகிருந்து அறிவூட்டாதனாலா. அண்ணணுடன் அகதியாக வேற்று நிலம் வந்திறங்கியதால் வந்த தீவினையா?. எது என்னை இக்கதிக்கு ஆளாக்கியது எனும் கேள்வியைத் தீவிரமாகக் கேட்டு எழுப்பிய ஒருவித டைரிக்குறிப்பு பத்திநாதன் எழுதியிருக்கும் போரின் மறுபக்கம்…
இனப்பிரச்சினை குறித்து மிக தீவிரமாகப் பேசிக்கொண்டு இருப்பவர்களில் எத்தனை பேருக்கு அகதிகள் முகாமின் துயரம் தெரியும். வாழவே தகுதியற்ற அகதி முகாம்களின் சூழல் குறித்து என்றைக்காவது இவர்கள் அக்கறையுடன் பேசியிருக்கிறார்களா?. அல்லது ஒருமுறை வந்து அகதிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுடன் பேசிடாவது செய்திருக்கிறார்களா?. மண்டபம் முகாம் வந்திறங்கிய நொடியிலிருந்து அகதிகளின் உடல்கள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதில்லை. அவர்களுடைய மச்சங்கள்,காயங்கள்,தழும்புகள் ஏன் கைரேகை உள்பட யாவற்றையும் பதிவுசெய்து விடுவார்கள். அதன்பிறகு அவர்களைச்சுற்றி கண்ணுக்குப் புலனாகாத கண்காணிப்பு வளையம் சூழ்ந்திருக்கும். அகதி அந்தஸ்து அளிக்கப்பட்ட பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உதவித் தொகை வழங்கப்படும். உதவித்தொகை வழங்கும் நாளில் குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் முகாமில்தான் இருக்க வேண்டும். ஒருவர் இல்லையென்றாலும் மொத்த குடும்பத்திற்கும் உதவித்தொகை நிறுத்தப்படும். இப்படி வரைமுறைகளற்ற கட்டுப்பாடுகள் இந்த அரசாங்கத்தினால் நித்தமும் கொடுங்கத்தியாக முகாமின் மீது வீழ்ந்து கொண்டேருக்கும். உதவித் தொகை நாளில் வெளியேறிப் போனவர்களின் வாழ்க்கையில் நிகழும் வன்மத்தை வார்த்தைகளால் எழுதிட முடியாது..
வெளியேறிச் சென்றவர்கள் வேறு எங்கும் தப்பிப் போக முடியாது. இந்த முகாம் உள்ளிழுக்கும் தந்திரத்தை உடன் வைத்திருக்கும் குரூர மாயம் கொண்டது. வெளியேறிய பிறகு மொத்த உடலும் மனமும் கியூபிராஞ்ச் எனும் இரக்கமற்றவர்களின் கையுறைக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். நொடிக்கு நொடி பதட்டமும் அச்சமும் சூழவே நகரும் நாட்கள். நகரும் நிழலையும் பணம் தரும் உபகரணமாக்கிடும் அதிகார வர்க்கம் ரட்டும் தப்பி போனவர்களைக் குறித்துக் கவலைப்படாது. முகாமின் ஆர்.ஐ யின் பாக்கெட்டிற்குள் அவர்கள் உதவித்தொகைப் பணமாக சுருட்டப்பட்டிருப்பார்கள். பிணந்தின்னிகள் எல்லா இடங்களும் விஷப்புகையென ஊடுருவிக் கிடப்பதை நாவலின் பல இடங்கள் நமக்குக் காட்சியாக்கிக் காட்டுகிறது. அகதிகளின் பிரதிமைகள் ஆர்.ஐ யின் கைப்பைக்குள் காசாக சுருண்டிருக்க,அவர்கள் வெளியேறி வெகுதூரம் சென்று விட்டனர். கால் போன பாதையில் பயணித்து கைக்குக் கிடைத்த வேலையைச் செய்து கொண்டு பொழுதை நகற்றிடும் ஈழ அகதிகளின் வாழ்க்கை சாட்சியத்தையே பத்திநாதான் போரின் மறுபக்கமாகத் தந்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் துவக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். 2009ல் தற்காலிகமான சூழலின் உபவிளைவாக மீள் குடியேற்றம் நிகழ்கிறது. எழுத்தாளர் பத்திநாதன் இங்கு இல்லை. அவருடைய சொந்த நிலத்தில் அகதியெனும் துயர்மிகு அடையாளத்தை அழித்துவிட்டு இலங்கைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். யாராவது முன்வந்து இந்த ஏதிலிகளின் வாழ்க்கையில் சிறு மாற்றத்தையாவது நிகழ்த்திவிட மாட்டார்களா? எனும் ஏக்கம் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது. .
அகதிகளுக்கு என இருக்கிற எந்த சர்வதேச சட்டத்தை இந்திய அரசு ஏற்பதில்லை. நடைமுறைப்படுத்துவதுமில்லை. முகாம் காரன் தன்னை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கியூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் காட்சிப்படுத்தவேண்டும். அப்போது எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வெளியே செல்ல முடியாது. அது மட்டுமல்ல அரசியல் பிரமுகர்கள் அந்த சாலையில் பயணம் செய்கிற போது நிச்சயம் முகாமை விட்டு வெளியேறக்கூடாது. ஒருவித மன அவஸ்தையில் அந்த நிலை கடத்தி நகற்றுவதில் ஏற்படும் உளச்சிக்கல்களை நாவல் நுட்பமாக வரைகிறது. தமிழகத்தில் மட்டும் 102 முகாம்கள் இருக்கின்றன. எல்லா முகாம்களையும் நகரத்தை விட்டு மிக வெளியேவிற்குள்ளும் வெளியேவிற்குள்தான் அமைத்திருக்கிறார்கள். இங்கே கொத்தனார் உண்டு, சித்தாட்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. ஆனால் ஒரு பொறியாளர் இல்லை. கங்காணிகள் உண்டு. ஆனால் சூப்பர்வைசியர்களோ, மேலாளர்களே அறவே இல்லை. 90 ஆம் ஆண்டு வீடென நம்பி வாய்த்த. இடமும் கூட இன்று கூரைகளோ தட்டோடட இத்து புத்துப் போய் கிடக்கின்றன. மொழியால் இனரால் கலாச்சாரத்தால் ஒன்றினையும் புள்ளிகளே ஈழ அகதிகளை இங்கே இருத்தி வைத்திருக்கும் ஒரே நம்பிக்கை. நாவலை வாசித்து முடித்த பிறகு விதவிதமாக மனதில் எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிப் பாருங்கள். நம்முள் சூழ்ந்திருக்கும் குறௌற உணர்ச்சியாவது குறையட்டும்.
(பத்திநாதனின் போரின் மறுபக்கம் எனும் தன் வரலாற்று நாவலைக் குறித்து எழுதப்பட்ட வாச்சியம்)…..
தொ. பரமசிவன் அவர்களது அறியப்படாத தமிழகம் படிக்கும் பொழுது தமிழகத்தில் உள்ள பல பழக்கவழக்கங்கள் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த புத்தகத்தை படிக்கும் பொழுது தமிழகம் பற்றி அறிந்துகொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது என்றால், சமயங்களின் அரசியல் என்ற இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது அதிர்ச்சியில் உறையும் நிலை ஏற்படும்.
இந்த நூல் மொத்தம் 151 பக்கங்கள் உள்ளது இதில் 61 பக்கங்கள் சமயங்கள் பற்றிய சங்க காலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள சமூக சமய கோட்பாடுகளை பற்றிய கட்டுரையும், மீதமுள்ள பக்கங்கள் முழுவதும் சுந்தர் காளி அவர்களது ஆழமான கேள்வியும் தொ. பரமசிவனின் அவர்களது எளிமையான, பதில்களையும் பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும் அதுபோல வைணவத்திலும் சைவத்திலும் முறையே உள்ள பாசுரங்கள் திருமுறைகள் பக்தி பரவசத்துடன் கேட்பவர்களுக்கு சிலிர்ப்பு ஏற்படும் ஆனால் மறுபுறம் சில பாடலில் உள்ள உள்ளர்த்தங்கள் அந்த காலகட்டத்தில் நடந்த அரசியலையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சமணத்தில் இருந்தும் பௌத்தத்திலும் உள்ள சில சடங்குகளையும், அவர்களது சமண பள்ளிகளையும் பௌத்த மடங்களையும் அபகரித்து அதிலுள்ள குறைகளை நிகர் செய்து பிற்காலத்தில் திமிங்கலம் போல சைவமும் வைணவமும் வளர்ந்து உள்ளது என்பது பல ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
அப்பருக்கும் திருஞானசம்பந்தருக்கும் உள்ள உறவு பற்றி கதைகளும் திரைப்படத்திலும் பார்த்து உள்ளவர்களுக்கு நாம் நம்புவது எல்லாம் உண்மை இல்லை என்பது போல பார்ப்பனரான திருஞானசம்பந்தர் வேதமும் வேள்வியும் முக்கியம் என்று முன்வைக்கிறார் ஆனால் அப்பர் வேறு எதுவும் தேவையில்லை சிவனை மட்டுமே முன்னிறுத்துகிறார். மாணிக்கவாசகர் சோழ நாட்டிற்குள் அனுமதிக்கப்படாமல் பாண்டியநாட்டு திருத்தலங்களை அதிகம் பாடியுள்ளார் நால்வரும் ஒரே மேடையில் இன்று இருந்தாலும் அன்று அவ்வாறு இல்லை. ஒரு நிறுவனம் ஆக்கப்பட்ட சமயம் ஜனநாயகத்துடன் இருக்க முடிவதில்லை.
எத்தனை சமயங்கள் வந்தாலும் இங்கு பக்தி வளமுடன் இருப்பதற்கு ஒரே முக்கிய காரணம் நாட்டார் வழிபாடு வேர்களாக தாங்கி நிற்கிறது என்பதை நிலை நிறுத்துகிறார்.
சங்க இலக்கியத்தில் சிற்றின்ப காதலானது நான்காம் நூற்றாண்டிற்குப் பிறகு இறைவன்மீது பேரின்ப காதலாக உருவெடுத்திருக்கிறது. இஸ்லாமிய படையெடுப்புக்குப் பின் நாயக்கர் படையெடுப்பு என்று தமிழர்களின் அதிகாரம் பறி போகிவிட்டது.
குமரகுருபரருக்கு மீனாட்சியே முத்துமாலையை பரிசாக கொடுத்தாள் என்ற கதைக்கு பின்னால் நாயக்கர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கவில்லை அதனால் இப்படி கூறியிருக்கிறார் என்பது விளக்கியுள்ளார்.
இதைப்போல பல ஆச்சரியங்கள் இந்த புத்தகத்தில் புதைந்துள்ளது அதிக சமயப்பற்று உள்ளவர்கள் மனதிடம் இருப்பவர்கள் மட்டும் இந்த நூலைப் படிக்கலாம்.
பெருமகிழ்வின் பேரவை! நாவல். அருந்ததி ராய். தமிழில் ஜி. குப்புசாமி. காலச்சுவடு பதிப்பகம். விலை ரூ. 550
புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் எழுதியுள்ள இரண்டாவது நாவல். பெருமகிழ்வின் பேரவை. “சின்ன விஷயங்களின் கடவுள்” இவருடைய முதல் நாவல்.. அந்த நாவலுக்கு இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றான “புக்கர்” பரிசு 2002ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அருந்ததி ராய், கேரளத்தைச் சேர்ந்த மேரி ரோஸ் என்ற தாய்க்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட மேலாளர் ரஜித் ராய் என்ற தந்தைக்கும் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் மேகாலயா தலைநகர் ஷில்லாங் நகரில் பிறந்தார். கேரள மாநிலம் ‘ஆய்மணம்” என்ற சிற்றூரில் வளர்ந்த இவர் கோட்டயத்திலும், நீலகிரியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். டில்லிப் பல்கலைக் கழகத்தில் கட்டிடக்கலை பயின்றுகொண்டிருந்த போது சக மாணவர் ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். நான்கு வருடங்கள் அவருடன் வாழ்ந்த அருந்ததி ராய் பிறகு அவரிடமிருந்து விலகி பிரதீப் கிஷன் என்ற திரைப்பட இயக்குனரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்கள் எடுத்தனர். அருந்ததி ராய் கதை வசனம் எழுதிக் கணவனுக்கு உதவி செய்தார்.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே தீவிர சிந்தனையாளராக விளங்கினார் அருந்ததி ராய். பள்ளி ஆசிரியர்கள் அவரை ஊக்கப்படுத்தினர். இந்தியாவில் நிலவும் பெண்ணடிமைத்தனம், சிறார் உழைப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறை ஆகியவற்றுக்கு எதிராகச் சிந்திக்கவும் எழுதவும் செய்தார். மேத்தா பட்கர் தொடங்கிய “நர்மதா பச்சாவோ அந்தோலன்” என்ற அமைப்பில் சேர்ந்து இயற்கைச் சீரழிவுக்கு எதிரான கருத்தியல் யுத்தத்தையும் களப் போராட்ட்த்தையும் நிகழ்த்தினார். அதன்மூலம் இந்திய அளவிலும் உலக அளவிலும் கவனம் பெற்றார்.
காஷ்மீர் பிரச்சினையை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள நாவல் “பெருமகிழ்வின் பேரவை.” மொழி பெயர்ப்பு எழுத்தாளர் ஜி. குப்புசாமி தமிழாக்கம் செய்துள்ளார். மொழிபெயர்ப்பு பற்றிக் கீழ்க்கண்டவாறு அவர் கூறுவது முக்கியமானது.
“சின்ன விஷயங்களின் கடவுள் நாவல், மொழிபெயர்ப்பு அனுபவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது பெருமகிழ்வின் பேரவை மொழியாக்கச் செயல். முதல் நாவல், (சின்ன விஷயங்களின் கடவுள்) எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்த அருந்ததி ராயின் குரலை மொழிபெயர்க்க வைத்தது என்றால் இரண்டாவது நாவலின் குரல்கள் பழைய தில்லியிலிருந்தும் அதன் கைவிடப்பட்ட மயானத்திலிருந்தும் குஜராத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் ஆந்திர வனப்பகுதியிலிருந்தும் எனப் பல்வேறு திசைகளிலிருந்து என்னைச் சூழ்ந்து அலைக்கழிய வைத்தன. மூச்சைத் திணறடித்து, உடம்பெங்கும் ஊமை வலிகளையும் குற்ற உணர்வுகளையும் புகுத்தின. அன்னியக் குரல்களாக அதுவரை இருந்தவை, நாவலை மொழிபெயர்த்து முடித்தபோது அந்தரங்க ஓலங்களாக மாறியிருந்தன.” மேலும் அவர் சொல்கிறார். “இந்நாவலின் தலைப்பான ministry of utmost happiness என்பதைத் தமிழாக்கம் செய்வதில் கொஞ்சம் சிக்கல் இருந்தது. Ministry என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் ‘அமைச்சகம்.’ கிறித்துவ மறைமொழியில் “ஊழியம்.” ஆனால், இந்நாவலைப் பொருத்தவரை இவ்விரண்டு சொற்களும் பொருந்தாமல் இருப்பதை நாவலை முழுமையாய்ப் படித்து முடித்ததும் அறிந்து கொள்ளலாம்.”
மினிஸ்ட்ரி என்பதை எப்படித் தமிழாக்குவது என்பதை, ஜார்ஜ் ஆர்வல் எழுதிய ”1984” என்ற புகழ்பெற்ற நாவலிலிருந்து தான் புரிந்துகொண்டதாகக் கூறுகிறார் ஜி, குப்புசாமி. ஏனென்றால் மினிஸ்ட்ரி என்பது மகிழ்ச்சி தாண்டவமாடும் அதிகார அமைப்பு. ஆனால் இந்நாவலின் பாத்திரங்கள் வெளி உலகினரின் நிராகரிப்புக்கு உள்ளாகி விலகிவந்து அந்த மயானத்தில் தமக்கான தனியுலகை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். அதனால் அது ஒன்றும் உண்மையான பொருளில் “பெருமகிழ்வு” (utmost happiness) அல்ல. கம்யூன் போல ஒன்று சேர்ந்து வாழ்கின்றனர். ஆகவே அது ஒரு பேரவையாகவே இருக்க முடியும் என்று பல ஆளுமைகளுடன் விவாதித்துத் தெளிவடைந்து அந்தப் பெயரை வைத்ததாகக் கூறுகிறார்.
இதை ஒரு வரலாற்று நாவல் என்றே சொல்லவேண்டும். இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான இந்திய அரசியல் வரலாற்றையும் அதனால் சிதிலமடைந்த சாமான்யர்களின் வாழ்க்கையையும் உணர்ச்சிகரமாய்ச் சித்தரிக்கிறது.
“க்வாஃப்கா” என்ற அத்தியாயம் ஹிஜ்ராக்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியும் விவரிக்கிறது. க்வாப்கா என்றால் பேரவை. ஹிஜ்ராக்களும் போக்கிடம் இல்லாதவர்களும் சேர்ந்து வாழும் இடம். டில்லி நகரின் கைவிடப்பட்ட மயானமே அது. ஹிஜ்ரா என்பது ஆணுமில்லாத பெண்ணுமில்லாத உடம்புக்காரர்கள். ஆண்டவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். (தென் இந்தியாவில் பிரம்மாவின் தும்மல் துளிகள் என பரிகசிக்கப் படுகிறார்கள்.) அஃப்தாப் என்ற ஆண்மகன் ஐந்து வயதிருக்கும் போதே ஆணல்ல என அறியப்படுகிறான். ”அஞ்சும்” என்ற பெண்பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டு அதிகாரம் மிக்க தலைவியாய் க்வாப்காவை ஆட்சி செய்கிறாள். சதாம் உசைன் என்ற ஓர் அனாதை அங்கு வந்து சேரும்போது க்வாப்காவுக்குப் புது உத்வேகம் உண்டாகிறது.
சதாம் உசைன் பசுப் பண்பாட்டுவாதிகளால் பாதிக்கப்பட்டவன். அவன் தந்தை பசுவைக் கொன்றார் எனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு போலிசாரால் கொல்லப்படுகிறார். அந்தக் காவல் அதிகாரியையும் பசுக்குண்டர்களையும் கொன்றொழிக்க வேண்டுமெனச் சபதம் ஏற்கிறான். (ஆனால் அது கடைசிவரை நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.)
நகைச்சுவை ததும்பி வழியும் இன்னோர் அத்தியாயம் “டாக்டர் ஆசாத் பார்த்தியா.” அப்படியென்றால் “சுதந்திர இந்தியன்.” அவன் அரசு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து பின்வாங்கிக் கொண்ட ஒரு சோஷலிஸ்ட். பனிரெண்டு ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தும் தெம்போடு இருக்கிறான். எப்படியென்றால் உண்ணாவிரதத்தின் போது 48 மணிக்கொரு முறை சைவ உணவு சாப்பிடுகிறான். இந்த வர்ணனையில் நையாண்டிக் குரல் அலைபாய்ந்து ஓடுகிறது. ஒருவேளை இந்தப் பாத்திரம் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா அசாரேயைப் பிரதிபலிக்கக் கூடும். ஆசாத் பார்த்தியா 12 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருக்கிறான். அன்னா அசாரே 2011 ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 9 வரை ஐந்து நாட்கள் மட்டும் ஊழலைக் கண்காணித்து அரசு அமைப்பை முறைப்படுத்தும் அதிகாரம் படைத்த லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார். ஆசாத் பார்த்தியாவின் 12 வருட உண்ணாவிரதப் போராட்டமும் அன்னா அசாரேயின் 5 நாள் போராட்டமும் ஒன்றா என்ற கேள்வி எழக்கூடும். ஒப்புமை நோக்கில் ஒத்துப் போகவில்லை என்று தோன்றக்கூடும். உண்மைதான். அங்கதச் சுவையுடன் கூடிய புனைவு தளத்தில் அதை அதிக அழுத்தப் பிரதிபலிப்பாகவே கொள்ளவேண்டும் எனத் தோன்றுகிறது.. ஆசாத் பார்த்தியாவின் பணக்காரச் சித்தரிப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான அபிமானமும் அன்னா அசாரேயைப் பிரதியெடுத்துத் தருகிறது.
இந்த நாவலை நகர்த்திச் செல்லும் மிக முக்கியப் பாத்திரங்கள் நாகா, திலோத்திமா, அம்ரிக்சிங் ஆகியோர். நாகா ஒரு பத்திரிகையாளன். திலோத்திமா கேரள மண்ணையும் குடும்பத்தையும் துறந்து டில்லியிலும் கஷ்மீரிலும் நாகாவுக்குத் துணையாக வாழ்கிறாள். அம்ரிக் சிங் கொடுங்கோன்மை நிறைந்த ராணுவ அதிகாரி. அவனின் சந்தேகப் பார்வைக்குள் பிடிபட்ட யாரும் உயிருடன் இருந்ததில்லை. அவனால் கொன்றொழிக்கப்பட்ட கஷ்மீர் இளைஞர்கள் ஏராளம். அவனின் சுவாரஸ்யமான பேச்சுமொழி விஷம் தடவிய இனிப்புப் பண்டம். சில நேரங்களில் வக்ரமாகவும் வார்த்தையாடுகிறான். “நான் ஓர் ஆண்குறி; தீவிரவாதிகள் அனைவரையும் புணர்ந்துகொண்டே இருப்பேன்” என்கிறான். “உயிருடன் இருக்கும் கஷ்மீரிகள் கொல்லப்படுவதற்குத்தான் வாழ்கிறார்கள் என்ற பயங்கரவாத சொல்லாடல் அவன் மூலமாக உருவாக்கப் படுகிறது.
இன்னொரு முக்கியப் பாத்திரம் மூசா. திலோ விசாரணைக்காக அம்ரிக் சிங்கால் அழைத்துச் செல்லப்பட்ட போது அவளைக் காப்பாற்றுகிறான். அவன் ஒரு சமயல்காரன். ராணுவ வீரர்களுக்குச் சமைத்துப் போடுகிறான். அம்ரிக் சிங்கின் அடாவடித்தனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தீவிரவாதிகளுக்காக உளவு பார்ப்பவனாக மாறுகிறான். திலோ அவனோடு உறவுகொண்டு அவனுக்கு ஆறுதல் அளிக்கிறாள். ஒருவேளை அவன் கொல்லப்படக்கூடும் என அவளுக்குத் தோன்றுகிறது..
ஆனால் நிலமை வேறு மாதிரி ஆகிறது. சாதாரண மக்கள் தைரியமடைந்து வீதிகளில் இறங்கி ராணுவத்துக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறார்கள். விளைவு, அம்ரிக்சிங் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடித் தற்கொலை செய்துகொள்கிறான். அவன் குடும்பமே துடிதுடித்து மாண்டு போகிறது.
காஷ்மீர் மட்டுமல்ல; ராணுவக் கொடூரம் இந்தியாவின் வேறு பகுதிகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பதை மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய இயக்கவாதியான ரேவதி போலிசாரின் தேடுதல் வேட்டையில் பிடிபடும்போது சித்திரவதை செய்யப்படும் காட்சி புலப்படுத்துகிறது. ரேவதியின் வாழ்வு கண்களில் நீரை வரவழைக்கிறது. காஷ்மீர் தவிர்த்த மற்ற இடங்களிலும் அரசு பயங்கரவாதம் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
நாவலை வாசித்து முடிக்கும்போது காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என நினைக்கத் தோன்றுகிறது. நமது நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒரு கூட்டத்தில் பேசும்போது சொல்கிறார். ”காஷ்மீரில் ஒன்பது நபருக்கு ஒரு காவலர் என்ற அளவுக்கு ராணுவக் கட்டுப்பாடு நிலவுகிறது. நான் காஷ்மீருக்குப் போயிருந்த போது எனது சக நாடாளுமன்ற உறுப்பினராகிய ஃப்ரூக் அப்துல்லாவைச் சந்திக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அங்கு சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.”
மூஸா சொல்கிறான். “ஒருநாள் கஷ்மீரும் இந்தியாவை இதேபோல சுய அழிப்புச் செய்துகொள்ள வைக்கும். உங்களுடைய ரவைக் குண்டுகளால் எங்களை, எங்கள் ஒவ்வொருவரையும் குருடாக்கி வந்திருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று பார்ப்பதற்கு உங்களிடம் கண்கள் இருக்கின்றன. நீங்கள் எங்களை அழித்துக்கொண்டிருக்கவில்லை. எங்களைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை நீங்களேதான் அழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
மேற்கண்ட வாக்கியங்கள் காஷ்மீர் நிலத்தின் இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அந்த மக்களுக்கு நமது ஒருமைப்பாட்டையும் நட்புணர்வையும் காட்ட வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் ஒன்றிய அரசின் காஷ்மீர் மக்களுக்கு எதிரான ராணுவக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும்படியான நிர்ப்பந்தத்தைத் தரவேண்டும் எனக் கோருகிறது நாவல். காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக நீடிக்கச் செய்வதில் ஒவ்வோர் இந்தியனின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. .
வாழ்க்கை வாழ்வதற்குத்தானே அன்றி சாவதற்கு அல்ல; சாதல் அங்கக வளர்ச்சியின் முதிர்நிலை. சாவதற்க்காக வாழ்வது கொடுங்கோன்மையின் உச்சம். ராணுவக் கொடுங்கோன்மை என்ற நீரடிப் பிரவாகம் மேலெழுந்து வந்து பூமியை விழுங்குவதற்குள் அணையிட்டு நிறுத்தவேண்டும்.
நாவலை வாசித்து முடிக்கும்போது எழும் கேள்வி அரசு பயங்கரவாதமும் மக்கள் படும் அவதிகளும் மட்டுமே படைப்பாக்கப்பட்டிருக்கிறதே; அரசு அதிகாரத்துக்கு எதிராக முற்போக்கு அரசியல், சமூகவியல் சிந்தனையாளர்கள் முன்னெடுப்பு ஏதும் செய்யவில்லையா? ஒருமைப்பாட்டின் வழியே பெரும்பகுதி மக்கள் கனிவுகொண்டு இயங்கிக்கொண்டு இருக்கிறார்களே; அதன் வீச்சு நாவலில் பதியமாக வேண்டாமா?
சில பல விமர்சனங்களைத் தாண்டி நாவல் விஸ்தாரமான தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. வாசிக்க வேண்டும்; வாசித்ததை உள்வாங்கி புதிய சிந்தனை ஓட்டத்தின் வழியே புரட்சிகரச் செயல்பாட்டை மறு நிர்மாணம் செய்யவேண்டும்.
"பால்யகால சகி" வைக்கம் முகமது பஷீர் தமிழில் : குளச்சல் மு.யூசுப் பக்கங்கள்: 80 ₹. 100 காலச்சுவடு பதிப்பகம். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1944) எழுதப்பட்ட குறுநாவல். இன்று படிக்கும்போது அதே உயிர்ப்புடன் இருப்பதே இந்நூலின் வெற்றியாக கருதுகிறேன்.…
தேனிசீருடையான் நூல்: பதினெட்டாவது அட்சக்கோடு நாவல். ஆசிரியர்: அசோக மித்திரன். வெளியீடு: காலச்சுவடு (கிளாசிக்கல் நாவல் வரிசையில்) விலை: ரூ. 250 இந்த பூமியின் புறவெளியைக் கணக்கீடு செய்யும் கற்பனைக் கோடுகள் அட்சரேகையும் தீர்க்க ரேகையும் ஆகும். பூமியின் கிழக்கிலிருந்து மேற்காகக்…
தமிழக வரலாறு பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி நாடறிந்த அறிஞர். அவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் படிப்பதைவிட எப்போதும் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதைக் கவனித்தார். அதனால் அவர்…
நூல்: புத்தம் வீடு ஆசிரியர்: ஹெப்ஸிபா ஜேசுதாசன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் காலச்சுவடு பதிப்பில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் படைப்பூக்கத்தில் வெளிவந்திருக்கிற 'புத்தம் வீடு' புதினம் வாசித்தாயிற்று. முதலில் எழுத்தாளர் பெயரைக் கேட்டவுடனே ஏதோ மொழிபெயர்ப்பு நாவலாக இடுக்கக்கூடும் என்ற மனநிலையில் வாசிக்கத்…
வணக்கம். தமிழ் நாவல்களில் வித்தியாசமான கதையமைப்பு கொண்ட நாவல் பாகீரதியின் மதியம். எழுத்தாளர் பா.வெங்கடேசன் அவர்கள் நீண்ட, நெடிய வாக்கியமைப்பை பயன்படுத்தியுள்ளார். நாவலின் கதைக்களம் இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளோடு (ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், மதுரை இருப்புப்பாதை தொழிலாளர் போராட்டம், அவசர நிலை…