Book day
Puthagam Pesuthu
‘மயிர்தான் பிரச்சினையா?’
(கல்விசார் கட்டுரைகள்)
மாதொருபாகன் புத்தகம் உள்ளிட்ட ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கிய பேராசிரியர் பெருமாள்முருகன் (Perumalmurugan) அவர்களின் 2022 டிசம்பரில் முதல் பதிப்பாகவும், 2023 பிப்ரவரியில் இரண்டாம் பதிப்பாகவும் காலச்சுவடு பதிப்பகத்தில் வந்த புத்தகம் தான் ‘மயிர்தான் பிரச்சினையா?’ கல்வி சார்ந்த கட்டுரைகள் கொண்ட நூல்.
இதில் 2009 முதல் 2022 வரை கல்வியில் நிகழ்ந்த முரண்பாடுகளை குறிப்பாக மாணவர்களை கல்வி வியாபாரப் பண்டமாக, சூதாட்டக் கருவியாக வைத்து விளையாடிய விளையாட்டு பொம்மைகளாக குழந்தைகள் ஆட்டுவிக்கப்பட்ட கொடுமையான வரலாற்றைத்தான் நமக்கு கட்டுரைகளாக வழங்கியிருக்கிறார். இதில் ஊடகங்களின் பங்கு மிகுந்து இருப்பதையும் சுட்டிக்காட்டி நம்மை ஊடகங்களை எவ்வாறு மூன்றாவது கண் கொண்டு பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருப்பார்.
அது குழந்தைகளின் முதல் மதிப்பெண்ணாகட்டும், மாநில அளவில் இடம் பிடிப்பதாக இருக்கட்டும், “தம் குழந்தைகளின் புகைப்படங்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களில் வராதா” என்று பெற்றோர்கள் ஏங்குவதாக இருக்கட்டும். இன்னும் இது போன்ற பல மாய்மாலத் தோற்றத்தை திட்டமிட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்கி தனது கல்வித்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான மூலதனக் கருவிகள் தான் குழந்தைகள்.
அதேபோன்று பெற்றோரின் பணம் காய்க்கும் மரங்கள் தான் குழந்தைகள் என்று பொதுப்புத்தியாய் கட்டமைக்கும் நிலையில் தான் இன்றைய கல்வி நிலை இருக்கிறது என்று 2009லேயே நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதி தனியார் கல்வி நிறுவன தொழிற்சாலையில் நடைபெற்ற அவலங்களை புட்டு புட்டு வைத்திருப்பார் 2009லேயே.
இன்று 9,10,11,12 நான்கு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்று வைக்கப்பட்டதற்கு காரணமே மேற்கண்ட நாமக்கல் கோழிப்பண்ணை கல்வி நிறுவனங்களே.
இன்று எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்று ஒன்றிய அரசு புகுத்தியதால் கோழிப்பண்ணை கல்வி நிறுவனங்கள் அடுத்த அடியை அதாவது ‘கோச்சிங் செண்டர்’ என்னும் தொழிற்பண்ணைக்குள் நுழைந்துள்ளார்கள். மாணவர்களுக்கு புதுவிதமான நெருக்கடி. எப்படியிருந்தாலும் குழந்தைகளுக்குத்தான் மனஉளைச்சல். சாமானிய பெற்றோருக்கு பண உளைச்சல். விடிவு அனைவருக்கும் கல்லூரிக்கல்வி வரை பணமில்லாக் கல்வி என்னும் நிலை வரும்போதுதான்.
*’மயிர்தான் பிரச்சினையா?’அடடா இது மிக முக்கியமான கட்டுரை. எல்லாமேதான். ஆனால் இதற்கு நாம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டும்.
“பறவைகள் தம் இனத்தின் சோடியை கவர்வதற்கு பல இறகு விரிக்கும் தந்திரங்களைச் செய்கிறது. மயில் தோகை விரிக்கிறது, இன்னும் பல பறவைகள் கேரள கதகளி நடனம் போல கழுத்தை அந்தத் திருப்பு திருப்பி இணையைக் கவரும். அதுபோன்று சிங்கம் தன் பிடரியை சிலிர்க்கும். பறவை, விலங்குகளுக்கே தமது மயிர்களை கூச்செரியும்போது நாம் மனிதர்கள் தானே நமக்கும் முடி மீது கவனம் இருக்காதா?” என்பது போன்று மிகவும் எதார்த்தமான உரையாடல்களுடன் இக்கட்டுரையை எழுதியிருப்பார். இதில் கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா கலைஞர்கள் வரை தமது முடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அலங்கார சலூன்களில் விளம்பரங்கள் இப்படி போகும் கட்டுரை 1970, 80 வாக்கில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தலை முடியை அலங்காரம் செய்த கலைகளை திரைப்படமாக இன்றும் இருக்கிறதே. அப்படி இருக்கும்போது “கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் கையில் கத்தரிக்கோல் இருப்பது சரியா?” உச்சித் தலையில் கொண்டை, பின் மண்டை கொண்டை, நீண்டு முதுகில் தொங்கும் கொண்டை என உயர் சாதி முதல் ஒடுக்கப்பட்ட மக்கள் வரை முடியப்பட்ட கொண்டை முடி மறந்துவிட்டதா? மாணவனின் தலை உச்சியில் முடி தூக்கி நின்றால் அது ஆசிரியருக்கு சவாலாகத் தெரிகிறது. ‘உலத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்கிற திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி இன்றைய உலக வழமைக்குள் அன்றாடம் நடக்கும் நடப்புக்குள் ஆசிரியர்கள் தம்மை புகுத்தி மாற்றத்தை ஏற்று “மயிரை மாணவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் கற்பித்தலில் நாம் கவனம் செலுத்துவோம்” என்று ஆசிரியர்களைக் கேட்டு கட்டுரையை முடித்திருப்பார்.
நான் கூறியது அவருடைய ஒன்றிரண்டு துண்டுகள் தான். இதுபோன்று 25 நறுக்குத் தெறித்த கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் ஆசிரியர். ஆகச்சிறந்த எழுத்தாளருக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
ReplyForward |
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.