சென்ற வாரத்தில் நான் படித்த நாவல் “தோட்டியின் மகன்”. பத்மபூஷன்,ஞானபீடம், சாகித்ய அகாடெமி பரிசுகளை வென்ற திரு.தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் மலையாளத்தில் 1946 ல் எழுதிய நாவல்.,இதனை திரு.சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.

நான் சிறு வயதில் 80 களில் அயனாவரத்திலுள்ள என் பெரியம்மா வீட்டிற்கு செல்லும்போது பெரியம்மா வீட்டிலிருந்து மலம் அள்ளிச்செல்லும் தோட்டிகளை கண்டிருக்கிறேன், அப்பொழுதே எனக்கு தோட்டிகள் பரிச்சயம்.

இந்நாவலின் ஆச்சரியம் என்னவென்றால் இதன் உட்பொருளும் இதை எழுதிய காலகட்டமும் தான்.,இங்குதான் ஒரு படைப்பாளி நிற்கிறான்.

யாருமே கண்டுக்கொள்ளாத, யாருக்குமே அவ்வளவு முக்கியமில்லாத, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜீவராசிகள்தான் தோட்டிகள்.,அவர்களின் அவலங்கள், மதிப்பீடுகள், அரசால் ஏமாற்றப்படுவது, அங்கிகாரமற்று தீண்டத்தகாத நிலை, செய்யும் வேலையினால் குறையும் ஆயுள், கல்வி மறுக்கப்படுவது என சகலத்தையும் நாவலாசிரியர் அந்த காலத்திலேயே பதிவிட்டது தலித் இலக்கியத்தின் முன்னோடி மற்றும் அதன் வளர்ச்சிக்கும் வித்திட்டது இந்நாவல் எனலாம்.

கேரளாவிலுள்ள ஆலப்புழைதான் கதைக்களம். இசக்கிமுத்து என்ற வயதான தந்தை தோட்டியிடமிருந்து கதை ஆரம்பித்து மகனான சுடலைமுத்துவிடம் மய்யம் கொள்கிறது, கடைசியில் சுடலைமுத்துவின் மகன் மோகனிடம் கதை முடிகிறது. மூன்று தலைமுறை தோட்டிகளின் வாழ்க்கையை சொல்லிய இந்நாவலில் எந்த தலைமுறையும் வளர்ச்சிக்கண்டதாக இல்லை..அதுதானே உண்மை.

வளவனுக்காக: செம்மீன் - நாவல்
தகழி சிவசங்கரப் பிள்ளை

சுடலைமுத்து எவ்வாறு தன் அதிகாரிகளால் தந்திரமாக ஏமாற்றப்படுகிறான் என்று படிக்கும்போது மனம் பதைக்கிறது. பணம் சம்பாதிக்க வேண்டுமானால் பாவப்புண்ணியம் பார்க்காமல் எந்த நிலைக்கும் சென்று தீங்கிழைக்கலாம் ஏன் நண்பனே ஆனாலும் கூட என்று மய்ய கதாப்பாத்திரமான சுடலைமுத்துவை குறுக்குப்பாதைக்கு இட்டுச்செல்வது கதைச்சொல்லியின் நேர்மையைக்காட்டுகிறது.

பிச்சாண்டியும் அவனுடைய மனைவி அலமேலுவும் அவர்களின் நான்கு குழந்தைகளுக்கும் ஏற்படும் இன்னல்களும் குடும்பம் சிதறுண்டு அழிவதையும் படித்த பிறகும் மனம் கணப்பது தொடர்கிறது.

தான் தோட்டியாக வாழக்கூடாது, தன் குழந்தை தோட்டியின் மகனாக இருக்கக்கூடாதென்று சுடலைமுத்து எடுக்கும் முயற்சிகள் தோற்கும்போது அவன் உளவியலாக பாதிப்பது, அவனை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோரின் உளவியல் சிக்கலுக்கும் சான்றாக உள்ளது.
சுடலைமுத்துவின் மிகப்பெரிய மனப்போராட்டம் முடிவில் தோல்வியில் விழும்போது நாவலாசிரியர் அரசின், சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி எடுக்கிறார்.

தற்சமயம் நாம் ” கொரோனா” தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்., அக்காலத்திலிருந்த கொள்ளை நோய்கள் வைசூரி, காலரா.

இந்நாவலில் வைசூரி, காலரா போன்ற தொற்றுநோய்கள் ஒவ்வொறு கால இடைவெளியில் ஆலப்புழாவில் வருகிறது, இத்தொற்று நோய்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற அசுத்தமானப் பகுதிகளில் வாழும் மக்களையே தாக்கி உயிர் சேதமும் அதிகமாகிறது. இவ்வாறு சாகும் பெரும்பான்மை மனிதர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சமூகமும் அரசும் பாரபட்சம் காட்டி ஒடுக்கப்பட்டவர்களாக ஆக்கி பொருளாதாரமும் சுகாதாரமும் இல்லாமல் ஒரு பிரிவினரை ஒதுக்கும்போது கொள்ளை நோய்களும் அவர்களை எளிதில் பலி கொண்டுவிடுகிறது. இதில் கொள்ளை நோயை குறைச்சொல்லி என்ன பயன்.,திருந்த வேண்டியது சமூகமும் அரசும்தான் என்று தகழி அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்.

தமிழ் சிறுகதைகள் on RadioPublic
திரு.சுந்தர ராமசாமி

கேரளாவில் இடதுசாரிகள் எழுச்சியால் இந்நாவலை திரு. தகழி சி.பி. எழுதினாரா இல்லை இவரின் நாவலினால் இடதுசாரிச்சிந்தனை அங்கு வேரூன்றியதா என்று சந்தேகிக்கும் அளவில் நாவலில் சமூகத்தின் அவலம் மக்கிய மலம்போல் எங்கும் புடை நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.

ஒரு நாவலையோ, சிறுகதையையோ மூலத்திலிருந்து வேறு மொழிக்கு மொழிப்பெயர்க்கும்போது கதை நடக்கும் களத்தை மாற்ற முடியாது, எனவே களத்தோடு ஒன்றினைந்த வழக்குச்சொற்கள், வட்டார கிளை மொழிகள் மாற்று மொழிக்கு வந்தடையாது. அவ்வாறு களத்தை மாற்றாமல் வழக்குச்சொற்களோ, வட்டார கிளை மொழிக்கு இணையான சொற்றொடர்களோ மொழிப்பெயர்க்கப்படும் மொழியில் இல்லாதபோது அதற்கிணையான பொதுவான சொல்லையே பயன்படுத்த வேண்டிவரும், அவ்வாறு நிகழும்போது கதாசிரியரின் தன்னியல்பும் கதையின் சாராம்சமும் இழந்து சுவைக்குன்றிய பண்டமாகவே அது நமக்கு கிடைக்கும், அது இந்நாவலில் நிகழ்ந்துள்ளது.

ஆனால் திரு.சுந்தர ராமசாமி தனது 21 வது வயதில் இந்நாவலை மொழிப்பெயர்த்துள்ளார் என்று அறியும்போது அவரின் இலக்கிய ஆர்வம் என்னவென்று கணிக்கமுடிகிறது.

செ.சந்திரன் யுவராஜ்

வெளியீடு : காலச்சுவடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *