வீரம் விளைந்தது (தொடர்ச்சி)

பாவெல் versus பாய்லோ

(தோழர் பாவெல் கர்ச்சாகின், கம்யூனிச ஒழுக்கநெறியைக் கறாராகக் கடைப்பிடிப்பவன். குறிப்பாக, பெண் தோழர்களைப் பாலியல்ரீதியாக ஏமாற்றும் நபர்களை, கம்யூனிஸ்ட் என்று அங்கீகரிக்க அவன் மனம் இடம் தராது. அவர்களுக்கு எதிராக, எவ்விதமான சமரசமுமின்றி நடந்துகொண்டு அவர்களை கட்சியின் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் தோலுரித்துக்காட்டத் தயங்கமாட்டான். இயக்கப் பெண்களை ஏமாற்றிவந்த பாய்லோ என்பவனுக்கும் பாவெலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை இத்துடன் பதிவிட்டிருக்கிறேன்.)

தோழர் கர்ச்சாகின் தன் உடல் நலிவுற்று, வருவதை நன்கு உணர்ந்தான். இரண்டே வழிகள்தான் அவன்முன் இருந்தன. அவனது வேலைக்குத் தேவையான தீவிர முயற்சிகளை அவனால் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, வேலைக்குத் தகுதியற்றவனாக ஒதுங்கிவிடுவது ஒன்று. அல்லது அவனால் முடிந்தவரையில், உரிய வேலையைச் செய்து கொண்டிருப்பது. பிந்தைய வழியைத்தான் அவன் தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

ஒருநாள், கட்சியின் பிரதேசக் கமிட்டியின் தலைமைக்குழு கூடியிருந்தது. தலைமறைவாயிருந்து கட்சிப் பணிபுரிந்த பழந்தோழரும், இப்பொழுது பிரதேசத்தின் பொது சுகாதாரத்துக்குப் பொறுப்பாயிருந்தவருமான டாக்டர் பார்த்தேலீக் அவனருகே வந்து உட்கார்ந்தார்.

“கர்ச்சாகின், நீ ஒரு மாதிரியாக இருக்கிறாய். உன் உடல் நலன் எப்படி உள்ளது? உன்னை வைத்தியக் குழு பரீட்சித்துவிட்டதா? பரீட்சை செய்துகொள்ளவில்லையா? நானும் அப்படித்தான் நினைத்தேன். நண்பா, உன்னை நன்றாகச் சோதித்துக் குணப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. வியாழக்கிழமை மாலை வா. நாங்கள் சோதித்துப் பார்க்கிறோம்,” என்று டாக்டர் கூறினார்.

அந்த நாளில் அவன் போகவில்லை. எனினும் டாக்டர் பார்த்தேலீக் தொடர்ந்து அவனைச் சந்தித்து, நிர்ப்பந்தம் செய்து, வைத்தியக்குழுவிடம் அழைத்துச்சென்றார்.

“பாவெல், உடனடியாக ஓய்வு எடுத்து, கிரிமியாவில் நீண்டகாலம் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அதன் பிறகும் முறையான வைத்தியம் செய்து கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறு செய்யத் தவறினால், அபாயகரமான விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதென்றும்” வைத்தியக்குழு கருத்துத் தெரிவித்தது. இதன் அடிப்படையில் மூன்று வார காலத்திற்கு விடுமுறை எடுத்துச் செல்ல அவனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. யெவ்பத்தோரியாவிலுள்ள ஆரோக்கிய விடுதி ஒன்றில் அவனுக்கு இடவசதி ஏற்பாடாகிவிட்டது. இந்தச் சேதியைத் தெரிவிக்கும் கடிதம் மேசையில் இருந்தது.

இந்த இடைக்காலத்தில் அவன் முன்பைவிட வேகமாகவும், உக்ரமாகவும் வேலை செய்தான். பிரதேசக் கம்ஸமோலின் முழுக் கூட்டம் நடத்தினான். ஆங்காங்கு இருந்த குறைகளை நீக்குவதில் தயவுதாட்சண்யமில்லாமல் உடலைக் கஷ்டப்படுத்தி உழைத்தான். அப்பொழுதுதானே, அவன் மன அமைதியுடன் ஆரோக்கிய விடுதிக்குச் செல்ல முடியும்!

கடலை முதன்முதலாகத் தரிசிப்பதற்காக அவன் கிளம்பவிருந்த சமயத்தில் ஒரு அருவறுப்பான சம்பவம், நம்ப முடியாத சம்பவம், நடைபெற்றது.

நாள் வேலையை முடித்துவிட்டு ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகக் கிளர்ச்சி-பிரசாரப் பகுதிக்குப் பாவெல் சென்றிருந்தான். அவன் அங்குச் சென்றபொழுது, அறையில் ஒருவரும் இல்லை. எனவே, மற்றவர்கள் வந்துகூடும்வரை காத்திருப்பதற்காக, அவன் திறந்த ஜன்னலுக்கு அருகில், ஜன்னல் கட்டைமீது உட்கார்ந்திருந்தான். அந்த இடம், புத்தகப் பீரோவுக்குப் பின்னால், இருந்தது. சிறிது நேரமானபின், பலர் அறைக்குள் வந்தனர். புத்தகப் பீரோவுக்குப் பின்னாலிருந்த பாவெலால் வந்தவர்களைப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு குரலை அவன் புரிந்துகொண்டான். அது பிரதேசப் பொருளாதார கவுன்சிலுக்குப் பொறுப்பாயிருந்த பாய்லோவின் குரல். பாய்லோ உயரமானவன். பகட்டான ராணுவக் கோலத்துடன் வெளிச்சம்போடும் சுந்தர புருஷன். குடிப்பதிலும், பெண்களுக்குப் பின்னால் சுற்றித்திரிவதிலும் பிரசித்தி பெற்றிருந்தான்.

ஒரு காலத்தில் பாய்லோ கொரில்லா வீரனாயிருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் டஜன் கணக்கான மாஹ்னோ ஆட்களின் தலைகளைச் சீவியதைப் பற்றிச் சிரித்துக்கொண்டே பெருமையடிக்கத் தவறமாட்டான். ஒரு நாள், ஒரு கம்ஸமோல் மங்கை, புலம்பிக்கொண்டே பாவெலிடம் வந்தாள். பாய்லோ அவளைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்தானென்றும், ஒரு வாரம் அவளுடன் வாழ்ந்தபின் அவளுக்குத் துரோகம் செய்துவிட்டானென்றும் இப்பொழுதெல்லாம் சந்தித்தால் பராமுகமாயிருக்கிறானென்றும் அவள் பாவெலிடம் கூறினாள். இந்த விவகாரம் கண்ட்ரோல் கமிஷனுக்கு முன் வந்தபொழுது, பாய்லோ நழுவிவிட்டான். அந்தப் பெண் ருஜுக்காட்ட முடியாத காரணத்தால் அவன் தப்பினான். ஆனால், பாவெல் அவளை நம்பினான். இப்பொழுது தான் அங்கிருப்பதை அறியாமல் பிறர் மனம் விட்டுப் பேசுவதை பாவெல் கேட்டான்.

“நன்று பாய்லோ. எப்படியிருக்கிறாய்? உனது சமீப காலச் சாதனை என்ன?”

இவ்வாறு உசாவியவன், க்ரீபோவ். இவன் பாய்லோவின் உயிர்த் தோழரில் ஒருவன். ஏதோ ஒரு காரணத்தால், க்ரீபோவ் ஒரு பிரசாரகனாகக் கருதப்பட்டான். உண்மையில், அவன் ஒன்றுமறியாதவனாகவும் குறுகிய மனப்பான்மைக்கு உரியவனாகவும் மடையனாகவும் இருந்தான். எனினும், அவன் பிரசார ஊழியன் என்று அழைக்கப்படுவதில் பெருமை கொண்டான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன் அந்தஸ்தை நிலைவூட்டுவதில் அவன் குறியாயிருந்தான்.

“நண்பா, நீ என்னைப் பாராட்ட வேண்டும். நேற்று, இன்னொரு வெற்றி அடைந்தேன். காரொத்தாயெவா என் வசப்பட்டாள். அவளை வேட்டையாடுவது வீண் என்றாயே? அதுதான் உன் தவறு. நான் ஒரு பெண்ணுக்குப் பின்னால் போனால், உடனேயோ கொஞ்ச காலம் கழித்தோ அவளை அடைவது உறுதி,” என்று பாய்லோ பீத்திக்கொண்டான். ஒரு ஆபாசமான சொற்றொடரையும் அவன் உபயோகித்தான்.

பாவெல் கிளர்ந்தெழுத்தான். அவனது நரம்புகள் சில்லிட்டுப்போய், உடலெல்லாம் நடுக்கமெடுத்தது. ஆழ்ந்த உள்ளக்கிளர்ச்சி ஏற்படும்போதெல்லாம் அவனுக்கு இத்தகைய நடுக்கம் ஏற்படுவதுண்டு. காரொத்தாயெவா, மாதர் சங்கத்துக்குப் பொறுப்பாய் வேலை செய்தாள். பாவெல் வந்தபோதே அவளும் இந்த ஊருக்கு வந்தாள். இனிமையான சுபாவத்தை உடையவள். சுறுசுறுப்பாகச் செயல்படும் கட்சி ஊழியர். அவளிடம் உதவியும் யோசனையும் பெறுதற்கு வந்த பெண்களிடம் அன்பாகவும் இங்கிதமாகவும் நடந்துகொள்ளும் பெண். கமிட்டியில் உள்ள சக ஊழியர்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமானவள். அவளுக்குத் திருமணமாகவில்லை என்பதைப் பாவெல் அறிந்திருந்தான். பாய்லோ அவளைப் பற்றித்தான் பேசினான் என்பதில் பாவெலுக்கு ஐயமில்லை.

“பாய்லோ, நீ கதை கட்டுகிறாய்! அவள் அம்மாதிரி சிக்க மாட்டாள்.”

“நான் கதை புனைகிறேனா? நான் எப்படிப்பட்டவன் என்று எண்ணினாய்? இதைவிடக் கடினமான விஷயங்களைச் சாதித்தவன் நான். எப்படி யென்று தெரிந்தால் போதும், ஒவ்வொருவரையும் தகுதியான தோரணையில் அணுக வேண்டும். சிலர் உடனே இணங்கிவிடுவார்கள். ஆனால் சிலர், இணங்கிவருவதற்கு ஒரு மாதம் ஆகிறது. அவரவர் மனப்பான்மையைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமான விஷயம். தகுதியான முறையில் அணுக வேண்டும். அட, போ! இதுவே ஒரு முழுமையான விஞ்ஞானம். இத்தகைய விவகாரங்களில் நான் ஒரு பேராசிரியர்! ஹோ! ஹோ! ஹோ!”

பாய்லோ சுயதிருப்தியுடன் உமிழ்நீரை ஒழுகவிட்டுக் கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்திருந்தவர்கள், மேலும் ருசிகரமான விவரங்களைக் கேட்பதற்கு ஆவலாகி, அவனைத் தூண்டினர்.

பாவெல் எழுந்து நின்றான். அவனது இதயம் மார்புக் கூட்டை அசுர வேகத்தில் தாக்கியது. அவன் மணிக்கட்டை இறுக மூடினான்.

How The Steel Was Tempered Nikolai Ostrovsky Moscow 1952 2 volumes dust  jacket | #495709461

“வாடிக்கையான இரையைக் கொண்டு இவளைச் சிக்க வைப்பது கடினம் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் வேட்டையைக் கைவிட விருப்பமில்லை. மேலும் அவளை அடைவேன் என்று கூறிக் க்ரீபோவிடம் ஒரு டஜன் ஒயின் பாட்டில் பந்தயம் கட்டியிருந்தேன். எனவே, அண்டிக்கெடுக்கும் உபாயத்தைக் கடைப்பிடித்தேன் என்று சொல்லலாம். அவளைப் பார்ப்பதற்காக ஓரிரண்டு தடவை சென்றேன். ஆனால் அவள் என்னை ஒருவிதமாகப் பார்க்கத் தொடங்கினாள். மேலும் என்னைப்பற்றிக் கேவலமாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் கொஞ்சம் அவள் காதுகளிலும் விழுந்திருக்கலாம். சரி, சுருக்கமாகச் சொல்வதென்றால், நேரான தாக்குதல் தோல்வியுற்றது. எனவே, பக்கவாட்டில் தாக்கும் உபாயத்தைக் கடைப்பிடித்தேன். ஹோ! ஹோ! அது அருமையான தந்திரம். நான் என் சோகக் கதையை அவளிடம் கூறினேன். எப்படிப் போர்க்களத்தில் சமர் செய்தேன், நாடெல்லாம் அலைந்தேன், பல இடுக்கண்களை அனுபவித்தேன் என்பதையெல்லாம் விவரித்தேன். சரியான பெண் ஒருத்தி கிடைக்காத காரணத்தால், என்னை நேசிப்பதற்கு எவருமில்லாமல் தன்னந்தனியாகத் தவிக்கிறேன் என்று கூறினேன். இந்த மாதிரி கதைகளை மேலும் மேலும் விட்டுக்கொண்டே போனேன். இதன்மூலம் அவளது பலவீனத்தை நான் தொட்டுவிட்டேன். அவளிடம் ரொம்பக் கஷ்டப்பட்டேன் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு சமயம் இந்த அற்ப வேலையை விட்டுத் தொலைக்கலாமா என்றுகூடத் தோன்றியது. ஆனால் அதற்குள் இது ஒரு கொள்கைப் பிரச்சனையாகிவிட்டது. எனவே, கொள்கைக்காக நான் உறுதியாயிருக்க வேண்டியதாயிற்று. இறுதியாக, அவளது எதிர்ப்பைத் தகர்த்தெறிந்தேன். என்ன நினைக்கிறாய்? அவள் கைபடாத கன்னிப்பெண். ஹா! ஹா! ஒய்! ஒய்! என்ன வேடிக்கை!”

இவ்வாறு பாய்லோ தனது அருவறுக்கத்தக்க கதையை விவரித்துக்கொண்டிருந்தான்.

கோபாவேசம் பொங்கும் நிலையில் , பாவெல், பாய்லோவுக்கருகில் தோன்றினான்.

“அட, பன்றி!” என்று அவன் கர்ஜித்தான்.

“நான் பன்றியா, அல்லது பிறர் பேசுவதை ஒட்டுக்கேட்கும் நீ பன்றியா!”

பாவெல் வேறு ஏதோ சொன்னான் போலும். குடிவெறியில் இருந்த பாய்லோ, பாவெலின் சட்டையைப் பற்றினான். “அவமதிக்கிறாயா?” என்று கத்திக்கொண்டே பாவெல் மேல் குத்து விட்டான்.

பாவெல் ஓக் மரத்தில் செய்த ஒரு கனமான நாற்காலியை எடுத்து, ஒரே அடியில் பாய்லோவைக் கீழே தள்ளினான். பாவெல் கையில் துப்பாக்கி இல்லாதது, பாய்லோவுக்கு அதிர்ஷ்டமாய் முடிந்தது. துப்பாக்கி இருந்திருந்தால் அவன் பிணமாகி இருப்பான்.

ஆனால் ஒரு அர்த்தமில்லாத, நம்ப முடியாத சம்பவம் நிகழ்ந்தது. கிரிமியாவுக்குப் புறப்பட வேண்டிய நாளில், பாவெல் ஒரு கட்சிக் கூட்டத்தினருக்கு முன்பு குற்றஞ்சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டான்.

கட்சி உறுப்பினர் அனைவரும் நகரத் தியேட்டரில் கூடியிருந்தனர். பாய்லோ விவகாரம், பெரிய பரபரப்பை உண்டாக்கியிருந்தது. கூட்ட விசாரணை, கட்சி ஒழுக்கம், கட்சியின் ஒழுக்க நெறிகள், சொந்த உறவுகள் ஆகியவற்றைப் பற்றிய ஆழமான விவாதமாக மாறியது. அந்தச் சம்பவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதில் அடங்கியுள்ள பொதுப் பிரச்சனைகளில் விவாதத்துக்கு, இந்த சம்பவம் அடிகோலியது. பாய்லோ மிகவும் துடுக்காக நடந்துகொண்டான். கேலியும், வன்மமும் கொப்பளிக்கும் வகையில் நகைத்தான். பொதுஜனக் கோர்ட்டில் பிராது கொடுக்கப் போவதாகப் பறைசாற்றினான். அவனது மண்டையில் ஓங்கி அடித்ததற்காக பாவெலைச் சிறையில் அடைக்கச் செய்வேனென்று பொறிந்தான். எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க முடியாதென்று திட்டவட்டமாகக் கூறினான்.

“என்னைப் பயன்படுத்தி வம்பு அளக்கலாமென்று எண்ணுகிறீர்களா? அதெல்லாம் முடியாது. நீங்கள் என்மீது என்ன குற்றம் வேண்டுமானாலும் சுமத்தலாம். ஆனால் உண்மை என்னவென்றால், இந்தப் பெண்கள் இஷ்டப்படி நான் ஆடாமல் இருப்பதால், அவர்களது இச்சைக்கு நான் இணங்காமலிருப்பதால், என்னை ஒழிக்க அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு ஒன்றுக்கும் உதவாது. 1918ஆம் ஆண்டாயிருந்தால், நான் அந்தக் கர்ச்சாகின் வெறியனுக்குத் தனிப்பட்ட முறையில் பாடம் கற்றுக் கொடுத்திருப்பேன். அவ்வளவுதான். இனி நான் இல்லாமலேயே வழக்கை நடத்துங்கள்” என்று கூறிவிட்டு அவன் ஹாலிலிருந்து வெளியேறினான்.

அதன்பின், அவைத் தலைவர், நடந்ததைக் கூறும்படி பாவெலிடம் கோரினார். பாவெல் தன் உணர்ச்சிகளைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டே நிதானமாகப் பேசினான்.

“என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது போனதே, இந்தச் சம்பவத்துக்குக் காரணம். ஆனால் நான் என் மூளையை உபயோகிக்காமல், புஜங்களைப் பயன்படுத்திக் காரியம் செய்த காலம் உருண்டோடிவிட்டது. இந்தச் சம்பவம் தற்செயலாக நிகழ்ந்துவிட்டது. என்ன செய்கிறேன் என்பதை உணராமல், நான் பாய்லோவை அடித்து வீழ்த்தினேன். கடந்த சில வருஷங்களில், நான் ‘கொரில்லா நடவடிக்கையில்’ ஈடுபட்டது இந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான். அந்த அடி பாய்லோவுக்கத் தேவைதான் என்றாலும், நான் என் நடவடிக்கையைக் கண்டிக்கிறேன். பாய்லோ போன்ற நபர்கள், அருவறுக்கத்தக்க ஆட்கள். ஒரு புரட்சிக்காரன், ஒரு கம்யூனிஸ்ட், அதே சமயத்தில் ஆபாச மிருகமாகவும் துஷ்டப் போக்கிரியாகவும் இருக்க முடியுமென்பதை நான் ஒருபொழுதும் நம்ப முடியாது. நமது கம்யூனிஸ்ட் தோழர்கள், சொந்த வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற பிரச்சனையில் கவனம் ஏற்பட்டிருப்பதே, இந்த விவகாரத்தின் ஒரு நல்ல அம்சம்.”

பாய்லோவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்துப் பெரும்பாலான உறுப்பினர்கள் வோட் செய்தார்கள். பொய்ச் சாட்சியம் அளித்ததற்காக க்ரீபோல் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானான். மீண்டும் குற்றம் செய்தால், அவனைக் கட்சியிலிருந்து விலக்குவோமென்று எச்சரிக்கையும் செய்தனர். அந்த உரையாடலின்போது கலந்துகொண்ட இதரர்கள், தங்கள் தவற்றை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் கண்டிக்கப்பட்டார்கள்.

(வளரும்)

வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்) | ரீத்தாவும் பாவெலும்  | ச.வீரமணி

வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்)-பாவெல் – ஆன்னா – த்ஸெவெத்தாயெவ் | ச.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *