தலைநகரின் மருத்துவமனைகளில் பெருங்கூட்டம்!
அய்யோ அம்மாவென்று அலறுகின்றன ஊடகங்கள்!
அதிபர் துணைஅதிபர் ஆளுங்கட்சியினர்
அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு நோயாம்!
மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கைகள் வந்தன.
அதிபருக்கானது முதலில்!
“பெருங்குடலில் வேர்விட்டு வளர்கிறது
தக்காளிச் செடியொன்று.
அறுவைச் சிகிச்சை அவசியம்”
-ஆதார விலையில்லாமல் மூடைமூடையாய்
சாலையில்  கொட்டப்பட்ட தக்காளிகளுக்கு
நீதி கேட்கிறதாம் அச்செடி.
அடுத்தது துணைஅதிபருக்கானது !
“சிப்ஸ் வகை  கிழங்கை விளைவித்து
ஒப்பந்தத்தை மீறிய பெருங்குற்றத்திற்காக
கோடிரூபாய் இழப்பீடு கேட்டு
கோர்ட்டுக்கு இழுத்தபோது என்ன செய்தார்?”
சிறுகுடலை இடைமறித்து நின்று கேட்கிறதாம்
உருளைச் செடியொன்று..
அடுத்து அமைச்சர்களுக்கானது!
மொடமொடவென்று உடுத்திய பருத்தியாடைகளின் நூலிழைகள்
வியர்வை நாளங்களின் வழியே உட்புகுந்துள்ளனவாம்
வேர்விட்டு முளைப்பதற்காய்!
-வட்டிக்கு குட்டிபோடும் நிதிநிறுவனங்களின் மூலம்
தற்கொலைக்குள்ளான விவசாயிகள் சார்பாக
அவை கேட்கின்றன மறுக்கப்பட்ட நீதியை..
தொடர்ந்து கூட்டணிக் கட்சியினருக்கானது-
“நாலுபோகம் வெளஞ்ச நிலம் வரண்டு போகக் காரணமான,
குளிர்பானக் கம்பெனிகளுக்கு
ஆழ்துளை அகழ்துளைக் கிணறுகள் மூலம்
தாராளமாய் தண்ணீர் எடுக்க
அனுமதித்தபோது எங்கே போனார்கள்?”
இது
குளிர்பானங்களாக உட்புகுந்து கொடிய நஞ்சாக மாறியிருக்கும் ஊற்றுநீரின் குரல்..
செயற்கைப் பஞ்சங்களையெல்லாம் இயற்கையின் கணக்கில் வரவு வைக்கும்
பொருளாதார வல்லுந‌ர்களையும்
அரசியல் விமர்சகர்களையும்
விட்டு வைக்கவில்லை
அரிசிப் பண்டங்களும் கோதுமை பதார்த்தங்களும்
வயிற்றுக்குள் புகுந்த நேரத்தில்
நெற்பயிர்களாகவும் கோதுமைப் பயிர்களாகவும்
உருமாறத் தொடங்கி பெரும் உபாதைகளை ஏற்படுத்தத் தொடங்கின அவை!
அரசின் கொடிய சட்டங்களுக்கு வியாக்கியானம் வழங்குகிறவர்கள்,
போராடுகிற விவசாயிகளின் பக்கம் நிற்காதவர்கள் என
அடுத்தத்த இலக்குகளை அறிவித்துச் சென்றது
வேளாண் பொருட்கள் கூட்டமைப்பின் தலைமை பயிர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *