“பஷீரின் நாவல்கள்’ எனும் இத்தொகுப்பில் ஏழு நாவல்கள் உள்ளன. ஒவ்வொரு நாவலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வைக்கம் முகமத் பஷீர் மிகச்சிறந்த மலையாள எழுத்தாளர். மிக எளிமையான மக்களின் புழங்குமொழியில் எழுதியவர், கேரள முஸ்லீம் மக்களின் வாழ்வை, மிக அழகாக சித்தரித்துள்ளார். வரலாற்று ஆய்வாளர்களுக்கும் கூட நல்ல ஒரு ஆதாரமாக விளங்கும் அளவிற்கு கலாச்சார, பண்பாட்டுக்கூறுகளையும் கூறிச்செல்கிறார். 86 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த மிகப்பெரிய இலக்கிய ஆளுமை ஆவார். இத்தொகுப்பின் முதல் நாவலான “பால்யகால சகி” என்ற நாவலை மட்டும் அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு கேரள கிராமப்புறம்தான் கதைக்களம். மஜீது, சுகறா இருவரும் அருகருகே வீடுள்ளவர்கள். மஜீதின் அப்பா மரவியாபாரி,ஓட்டு வீட்டுக்கு சொந்தக்காரர்கள், நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர். மஜீதின் அப்பா முன்கோபி, கண்டிப்பு மிக்கவர் ஆனாலும் பிரியமானவர். மஜீதின் அம்மா அன்பே வடிவானவர். இரு தங்கைகள்.

சுகறாவின் குடும்பம் அவளுடைய அப்பாவின் பாக்கு வியாபாரத்தை மட்டும் நம்பியுள்ள வீடு. இரண்டு சகோதரிகளுடன் அன்பான அம்மாவும் கொண்டது சுகறாவின் குடும்பம்.

கதைகளின் சுல்தான் 'வைக்கம் முகம்மது ...
கதைகளின் சுல்தான் ‘வைக்கம் முகம்மது பஷீர்’

அருகருகே வீடாதலால் மிகச்சிறிய வயது முதலே இருவரும் பரிச்சயமானவர்கள். ஆரம்பத்தில் விரோதமாக இருப்பவர்கள் நட்பு பாராட்டுகிறார்கள். பள்ளியில் கணக்கு மிகவும் பிணக்காக உள்ளது மஜீதுக்கு. அனைத்து பாடத்திலும் சிறப்பாக தன் திறமையை காட்டுகிறாள் சுகறா. ஒருநாள் ஆசிரியர் மஜீத்திடம் ஒன்னும் ஒன்னும் எவ்வளவு எனக்கேட்க, கற்பனை வளமிக்க மஜீது தன் மனக்கண்களில் இரண்டு நதிகளைக் காண்கிறான், அந்த இரண்டு நதியும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கிறது அதன்பின் அது கொஞ்சம் பெரிய நதியாகிறது. கற்பனையில் வந்த விடையை கூறுகிறான், அதாவது ஒன்னும் ஒன்னும் சேர்ந்தால் கொஞ்சம் பெரிய ஒன்னு என்கிறான். வகுப்பே இவனை எள்ளி நகையாடுகிறது. கொஞ்சம் பெரிய ஒன்னு என்பது மஜீதின் பட்டபெயராக மாறுகிறது. ஆனால் சுகறா இவனருகில் வந்தமர்ந்து கணக்கின் விடையை பார்த்து எழுதவைத்து மஜீதுக்கு நற்பெயர் கிடைக்க உதவுகிறாள். சுகறா மஜீதின் ராஜகுமாரியாகிறாள். இவனுக்கு அவள் ராஜகுமாரி, அவள் இவனை செல்லமாக கொஞ்சம் பெரிய ஒன்னு எனகூப்பிடுவாள். இதுவரையில் கதை கேலியும் கிணடலுமாக போகிறது.

தொடக்கப்பள்ளி முடித்து டவுன் பள்ளிக்கு படிப்பதற்கு மஜீது செல்கிறான், ஆனால் குடும்பத்தின் ஆணிவேராக இருந்த சுகறாவின் அப்பா இறக்க சுகறாவினால் மேல்படிப்பு படிக்க இயலவில்லை. மஜீது தன் அப்பா அம்மாவிடம் சுகறாவின் படிப்புக்கு உதவ வேண்டுகிறான், மஜீதின் அம்மா உடன்பட்டும் அப்பாவின் கடுமையான எதிர்ப்பினால் அவர்களால் சுகறாவிற்கு உதவமுடியவில்லை. இருந்தாலும் சுகறாவும் மஜீதும் ஒருவரையொருவர் உள்ளன்போடு நேசிக்கின்றனர். பள்ளியின் இறுதிவகுப்பிற்கு முந்தைய ஆண்டில் சொன்னதை செய்யவில்லையென்று மஜீதின் அப்பா மஜீதை அடித்து வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறுகிறார். மஜீதுக்கு ரோசம் வருகிறது, தன்னுடைய பிரியமான சுகறாவிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறுகிறான்.

ஏறக்குறைய பத்தாண்டுகள் பரதேசியாய் திரிகிறான். எல்லாவேலைகளும் செய்கிறான், எப்படியோ காலந்தள்ளி பத்தாண்டுகள் கழித்து வீடு திரும்புகிறான், அனைத்து சொத்தையும் இழந்து, இருந்த வீட்டையும் அடமானத்தில் வைத்து மிக மோசமான சூழ்நிலையில் மஜீதின் குடும்பம் இருக்கிறது. எந்த சம்பாத்தியமும் இல்லாமல் வந்து சேர்ந்த மஜீது தன் இயலாமையை எண்ணி வருந்துகிறான். தன் பிரியமான சுகறாவிற்கு திருமணம் முடிந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு நாள் சுகறா வருகிறாள், கணவனின் கொடுமையால் சிதைந்து போய் உருக்குலைந்து நிற்கிறாள். அழகுப் பதுமையான சுகறா அடியோடு மாறிப்போய் வந்து நின்றாள்.

பஷீர்: மாறாத மனிதநேயப் பண்பாளர்! - Uyirmmai

வீட்டின் சூழ்நிலையில் மஜீதின் சம்பாத்தியம் அவசியமாகிறது. மீண்டும் வெளியூர் செல்ல புறப்படுகிறான், புறப்படுவதற்கு முன்பு சுகறாவை அழைத்து இவர்களைப் பார்த்துக்கொள் எனக் கூறுகிறான், அப்போது சுகறா ஏதோ சொல்ல வருகிறாள் ஜன்னலுக்கு அப்பாலிருந்து, இவனும் கூறு என்கின்றான், அதற்குள் மஜீதின் அம்மா நேரமாகிவிட்டது என்று கூறவும் சுகறா சொல்லவந்ததை கேட்காமலேயே புறப்படுகிறான்.

வெளியூரில், போனவுடன் கௌரவமான வேலை கிடைக்கிறது. முதல் மாதச்சம்பளத்தில் அனைவர்க்கும் (சுகரா உட்பட ) ஆடைகள் எடுப்பதற்கு பணம் அனுப்புகிறான். ஓரிரண்டு மாதங்களிலேயே ஒரு விபத்து நடக்கிறது, வலது கால் முழங்காலுக்கு கீழ் வெட்டியெடுக்கப்படுகிறது. வேலை போகிறது, ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் பணியில் சேருகிறான், அப்போது ஒரு கடிதம் வருகிறது சுகறா இறந்துவிட்டாளென. உலகமே அவனுக்கு எதிராக இருப்பதை போன்று உணருகிறான். அப்போதுதான் நினைவு வருகிறது, நான் புறப்படும்போது சுகறா ஏதோ சொல்ல வந்தாளே, அது என்னவாகியிருக்கும் என்று அவனாகவே கேள்விகேட்டுக்கொள்கிறான்.

சுகறாவின் நிலை, மரணம், மஜீதின் நிலை, ஏலம்போய் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ள மஜீதின் குடும்பம் இவையெல்லாம் என்னுடைய இரவின் தூக்கத்தை பறித்துக்கொண்டது. சுகறாவை மறப்பது என்பது எளிதில் முடியாது நண்பர்களே.

அருமையான நாவல். இதை தொடர்ந்து பஷீரின் ஆறு நாவல்கள் உள்ளன, வரிசையாக வாசிப்போம் நண்பர்களே.

Buy பஷீர் நாவல்கள் Basheer Novelkal Book Online at ...

நூல்: பஷீர் நாவல்கள்
தமிழில்: சுகுமாரன், குளச்சல் யூசப்
பதிப்பு: காலச்சுவடு
விலை: ரூ. 450

அன்புடன்,
பெ. அந்தோணிராஜ்
தேனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *