பவா மற்றும் மேய்ப்பர்கள் – வ.இரா.தமிழ்நேசன்

பொதுவாக கவிதையோ, கதையோ , கட்டுரையோ எழுதிவிட்டு உள்ளடக்கத்திற்கு தகுந்தாற்போல் தலைப்பு கொடுப்போம். “மேய்ப்பர்கள்” நூல் குறித்த இந்த எழுத்துக்கு முதலில் தோன்றியது தலைப்பு தான். பத்து நாட்களுக்கு முன்பே வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் “மேய்ப்பர்கள்” குறித்த எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளை பவாவுடன் பகிர்ந்து கொண்டேன். அதற்கு முதல்நாள் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.அதற்கு அவரது பிறந்தநாளை அறிந்து கொள்ளுவது அவசியமென்றும் தோன்றியது. இணையதளங்களில், முகநூலில் தேடினேன். வாழ்வில் பல நேரங்களில் நாம் செய்வது, யோசிப்பது அப்படி கிறுக்குத்தனமாகத் தோன்றும். எனக்கும் அப்படியே தோன்றியது.

இலக்கியம் - Indian Express Tamil

எழுத்தாளர் பாவா.செல்வராஜ்

பவா அவர்களுடன் பேசும் போது கிறுக்குத் தனத்தையும் சேர்த்தே பகிர்ந்து கொண்டேன். ஒன்றுமில்லை தோழர்களே, பவாவுடன் பேசும் போது தோழர் என அழைப்பது வழமை. ஒரு புள்ளியில் பவாவை தோழர் என்றழைப்பதை விட பவா என்றழைப்பது அத்தனை செளகரியமாகவும், பிடித்தமானதாகவும் எனக்குத் தோன்றியது. நம்மை விட வயதில் மூத்தவராக இருந்ததால் மரியாதைக் குறைவாக அமைந்து விடக்கூடாதே என்ற அச்சம் தான் அவரது பிறந்தநாளை அறிந்து கொள்ள தேடியதற்கு காரணம். ‘அய்யய்யோ,தமிழ் , நீங்க என்னை “பவா” னே கூப்பிடுங்க. எனக்கு பிடித்தமானதும் அதுதான்’ என்றார். பேசி முடித்த சிறிது நேரத்தில் தான்
எனக்கு ஒன்று புரிந்தது .

தோழர் பவா வெகு இயல்பாக “தோழர்” என்பதிலிருந்து மாறி ” தமிழுக்கு” வந்திருந்தார்; அது தான் பவா. முன்னுரை போதுமென நினைக்கிறேன். இனி புத்தகத்திற்குள்ளாக… “மேய்ப்பர்கள்” எத்தனை அழகான சொல். எத்தனை பொருள் பொதிந்த சொல்.என் இத்தனை நாள் வாழ்வில் சந்தித்த மனிதர்கள். எலும்பும், சதையுமாக தன்னோடு கலந்து விட்ட மனிதர்கள். அவர்களது வாழ்க்கை, அவர்களது எளிமை, அவர்களது ஆற்றல் என நினைத்து, நினைத்து நெக்குருகிப் போகிறார் பவா. தன் வாழ்வோடு அவர்களை பிரித்தறிய முடியாத ஒரு சூழலில் அவர்களை தனக்கான மேய்ப்பர்களாக அடையாளம் கண்டு கொள்கிறார். அப்படியொன்றும் பவா வழி தவறிய ஆட்டுக்குட்டியல்ல.

Elections 2019: In Madurai, a rockstar writer revives the ...

நாடாளுமன்ற உறுப்பினர் வேள்பாரி சு.வெங்கடேசன்

தன் வாழ்வை துவக்கத்திலிருந்தே நேர்படுத்திக் கொண்டவர் தான். நண்பர்களால் நிரம்பும் வீடுதான் அவரது வீடு. அவரது அம்மாவும் அப்படித்தான் . அன்பால் நிரம்பியவர். தன் வீட்டிற்கு பின்னிரவில் கூட யாராவது வரக் கூடும், அவர்கள் பசியோடு படுக்கக் கூடாதென இரண்டு கை அரிசியை சேர்த்தே சமைத்துப் பழக்கப்பட்டவர். அவரிடம் எத்தனை அன்பு இருந்தால் அப்படி செய்யத் தோன்றும். அந்த வகையில் அம்மாவே முதல் மேய்யப்பராக இருந்திருக்கிறார். ஆனால், தன் அம்மா குறித்து அவர் தனியாக எழுதவில்லையென்பதில் எனக்கு வருத்தம் தான். இனியாவது எழுதுவார் என்று நம்புகிறேன். கனலி நேர்க்காணலில் தொடங்கும் நூல், அடுத்தடுத்து மேய்பர்களை குறித்துப் பேசுகிறது. கனலி நேர்க்காணலை அவ்வளவு எளிதில் கடந்து நாம் சென்று விட முடியாது. தனது உள்ளங்கையின் சூட்டை ஒவ்வொரு சொல்லிலும் அப்படியே நம் கைகளுக்கு கடத்துகிறார். ஒவ்வொரு பக்கமும் கடப்பதற்கு சில மணி நேரங்களை எடுத்துக் கொண்டது.

அவரது கதைகள் மட்டுமல்ல நேர்க்காணலின் ஒவ்வொரு சொல்லும் சோடைபோகாத சொல்தான். பால்யம், படிப்பு, காதல், இயக்கம், வாழ்க்கை, இலக்கியம், மொழிபெயர்ப்பு என அத்தனையும் பேசுகிறார். நிலமும், எளிய மக்களும், நட்பும் இவரது பயணத்தினூடே சேர்ந்தே இடையறாது வருகின்றனர்.  தோழர் நன்மாறன் தொடங்கி வேள்பாரி வெங்கடேசன் வரை பல மேய்ப்பர்களை அடையாளப் படுத்துகிறார். அத்தனை மேய்ப்பர்களும் ஏற்படுத்திய அதிர்வுகளை எழுத்தில் கொண்டு வந்தால் ஒரு புத்தகமாக வம்சி பதிப்பில் வெளிவர வேண்டியதிருக்கும். அவ்வளவும் கவிதையாய் ஊற்றெடுக்கும் உணர்வுகளை வாசிப்பவர்கள் உள்ளத்தில் பதியமிட்டு
நகர்கிறார். எத்தனை வியப்பு குறிகளைத்தான் என்னுள் இட்டு நிரப்புவதென அறியாமல் முளை கட்டி நிற்கிறேன் நான்.

பேசினால் வெடிகுண்டு வீசுவோம் ! (மைக் ...

தோழர் நன்மாறன்

“பேச்சிற்கு எதற்கு சத்தம் ” என்ற கேள்வியை விதைத்த தோழர் நன்மாறன். முதல் வாய் சோறும், கடைசி வாய் சோறும் அப்பாவின் ஈரமான கைகளிலிருந்து மகன் வாய்க்கு வரும் கொடுப்பினை எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது. பிளாட்பாரத்தில் உட்கார்ந்து சூடு ஆறாத உணவை பித்தளை தூக்குவாளியிலிருந்து எடுத்து சாப்பிட்ட தனக்கு உட்கார்ந்து சாப்பிட நான்கு சுவர் போதும் என்ற மன நிலை. எம்.எல்.ஏ ஆனபிறகும் எவருக்கு கைகூடும். “இவர் யாரின் மிச்சம்? அல்லது யாரோட தொடர்ச்சி” எனில் தனக்கு பல மேய்ப்பர்கள் என பட்டியலிடுகிறார்.தோழர் எஸ்.ஏ.பி. பலருக்கும் மேய்ப்பனாக இருந்திருக்கிறார். இவரது மந்தையிலிருந்த எந்த ஆடும் வழிதப்பவில்லை என்பதே
அவருக்கான அடையாளமாக ஒளிர்கிறது. அவரை மேய்ப்பனாக கொண்டவர்கள் தவமின்றி பெற்ற வரமல்லவா? “பிரிவுக்குப் பின்னும் நமக்குள் பகையில்லை தோழமை தான்” என்னும் ஒருவரிடம் கற்றுக் கொள்வதைத் தவிர பேச என்னயிருக்கிறது?

Tamil writer Melanmai Ponnusamy passes away - gatewaylitfest.com

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி

மேலாண்மை பொன்னுசாமி கிராமிய மணம் கமிழும் எழுத்தாளர். மண்ணின் வாசத்தையே வார்த்தைகளாக மாற்றும் வித்தைக்காரர். பெட்டிக் கடையிலிருந்து புறப்பட்ட ப்ரவாகம் அவர். மேலாண்மை பொன்னுசாமி என்றவுடன் எனக்கும் நினைவு பின்னோக்கி ஓடுகிறது. 90 களின் பிற்பகுதியா அல்லது 2000 ஆண்டுகளின் துவக்க வருடங்களா என சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனந்தவிகடனில் ஒரு சிறுகதைப் போட்டி . முதல் பரிசு அப்போதே ரூபாய் பத்தாயிரம். முதல் பரிசு மேலாண்மை பொன்னுசாமி என ஒரு கிராமத்து கதை பிரசுரமானது. திரும்ப, திரும்ப வாசித்த கதை. அந்த கதையைப் படித்தவுடன் இந்தக் கதை இடம் பெற்ற போட்டிக்கு நாமும் கதையெழுதினோம் என்பதே அப்போதைக்கு போதுமானதாக இருந்தது எனக்கு. அவரை முன்னத்தி ஏராக கொண்டு பின் தொடர எனக்கு கொடுப்பினை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி நூலில் வரும் மேய்ப்பர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். வாசிக்கின்ற பொழுது எனக்குள் பெரும் பிம்பமாக உருவெடுத்தவர் ஒருவர் உண்டு. வாய் மொழியாக ஒருவர் இரண்டாயிரம் பாடல்களைப் பாடினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  அவரைக் கேட்டால் அதற்கும் மேலே என்கிறார். ஆனால், வையம்பட்டி முத்துசாமியைப் பற்றிய பவாவின் எழுத்துகளை வாசித்தால் நீங்கள் நம்பாமல் இருக்க முடியாது. அத்தகைய ஆற்றலாளர் வையம் பட்டி முத்துசாமி.

நான் மரமாக மாறாவிட்டால் கிளிகளை பிடிக்க முடியாது. ஆனால், நானோ சிறு செடி எப்போது மரமாவது? எப்போது கிளிகளை அடைகாப்பது.‘கந்தர்வன்” அந்தப் பெயர் என்னுள் நுழையும் ஒவ்வொரு முறையும் என்னை நானே அத்தனை கம்பீரமாக உணர்வேன். அவரை அறிந்தவனில்லை தான் நான். ஆனால் அந்தப் பெயரே எனக்குள் பலவிதமான வேதியியல் மாற்றங்களை உருவாக்கிவிடும். ‘நான் உத்தமிடா…, நான் பத்தினிடா…” என்ற பெருங்குரல் ஆழ்ந்த தூக்கத்திலும் பலகாலமாக கேட்கும். அந்த குரல் இன்னும் பெருங்குரலெடுத்து அரற்றுகிறது.

CPM IMAGE: S.A.Perumal

முதுபெரும் எழுத்தாளர் எஸ்.ஏ.பி

தனிமையினை என்னுள் கடத்தும் உதயசங்கர், ஆடுகளத்தில் நின்றாடும் பிரளயன், துறவின் வாசம் கொண்ட க்ருஷி, கிழிந்த துணியை தைக்க மனைவியைத் தேடும் நாடக கலைஞன் முருக பூபதி , காற்றில் இசைத்து திரியும் பாடல்களின் மூல இசை கரிசல்குயில் கிருஷ்ணசாமி , குற்றப் பரம்பரையின் தாதியாய் தன்னை வரித்துக் கொண்ட வேலராமமூர்த்தி, சொற்களை விதைககளாக மாற்றும் பாரதி கிருஷ்ணகுமார், உயிர்மை கட்டுரைகளில் நான் பார்த்த ஆதிக் குழந்தை அ.முத்துக் கிருஷ்ணன், முரண்பாடுகளின் தோழன் சு.வெங்கடேசன் என மேய்ப்பர்கள் அனைவரும் எனக்கும் மேயப்பர்களாக பின் தொடர, முன்னே வழிதவறி விடக்கூடாதென்ற பதைபதைப்புடன் செல்லும் ஆடாக உணர்கிறேன் என்னை.

இன்னும் பல மேய்ப்பர்களை அடையாளப்படுத்த இருப்பதாக தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் பவா . அந்த மேய்ப்பர்களில் அவரது அம்மா இருப்பார்கள் என நம்புகிறேன். இருக்க வேண்டும். ஏனெனில் எனக்கு என் “அம்மா”வை அவ்வளவு பிடிக்கும், அம்மாக்களும் தான்.

– நன்றி வ.இரா.தமிழ்நேசன்