Poem - Good story writer | நல்ல கதை ஆசிரியர்

படித்த காலங்களில்

ஒரு வேளையாவது
பட்டினி!

பத்தும் பறந்து போனதில்
படித்ததையும்
மறக்க வைத்தது
பசி!

பசி ஒரு புறம்
பாது காப்பு உடை
ஒரு புறம்!

ஒருபுறம் ஒட்டுப் போட்டால்
மறுபுறம் கிழியும்,
மறுபுறம் ஒட்டுப்போட்டால்
ஒட்டுப்போட்டதில் கிழியும்!

எவ்வளவுதான் தாங்கும்
எத்தனை மாதங்கள்தான்
தாங்கும்?
தீவேளிக்கு எடுத்த உடை!

அறியாமை ஆசிரியர்
பாவம்!
கண்டிப்பானவர் என்ற
பெயர் வேறு;

என்
ஒட்டுப் போட்ட சொக்காயில்
பட்டன் போடாதது
ரௌடியின் தோற்றமாம்!

அறுந்துபோன பட்டனுக்கு
மாற்று பட்டன் தைக்க
நான்
எங்கே போவேன்?

அடி வாங்கிக் கொண்டு
அழுத மாணவர்கள்
மத்தியில்
அடக்க முடியா சிரிப்புக்காக
அடுத்த அடியையும்
வாங்கிக் கொண்டவன்
நான்;

பட்டன் தைக்க வேண்டிய
இடத்தில்
முள் தைத்து
உடலை மூடிக்கொண்டக் காலம்…..
இன்னும் சுகமான
முள் வலி சுகம்!

ஓட்டை சிலேட்டில்
எச்சில் தடவி
இலை தழைகளை தேய்த்து…
குப்புசாமியின்
உடைந்து போன
கல் சிலேட்டின் ஒரு சில்லை
அவனிடம் கடன் பெற்று
என்
ஓட்டை சிலேட்டில்
எழுத்துகளை எழுத முற்பட்டபோது….
கீரல் போட்டுக்கொண்டக் காலம்
என் மனதின் ஆறா வடு!

அப்பா
கடன் பட்டு
வாங்கிக் கொடுத்த
நோட்டும் புத்தகமும்
துணிக்கடையில் கொடுத்த
மஞ்சப்பைக்குள் அடங்காமல்
திமிரி கிழிந்தக் காலம்
என் மாணவப் பருவத்தை
தைத்தக் காலம்!

இரண்டு கைப்பிடியில்
ஒன்று ஒரு பக்கம் அறுந்து
முடி போட்டு….
அதுவும் அறுந்து….
சேறும் சகதியிலும்
விழுந்து நனைந்து கிழிந்து….

பெத்தவருக்கும்
பிரம்படி வாத்தியாருக்கும்
நடுங்கியக் காலம்
இன்றைய நினைவில்
வசந்த காலம்!

எலி கடித்தக் கால்சட்டையில்
எட்டிப்பார்த்த ஆண் குறி!

மதிய வேளையில்
ஓர் உருண்டை சோறு….
அப்போது…
அதனை யார் கொடுத்தார்கள்
எதற்காகக் கொடுத்தார்கள்
என்பதெல்லாம்
அறிந்துகொள்ள அறிவு இல்லை!

அய்யன்
பெருந்தலைவர் கொடுத்ததென
அறிந்தபோது…..
கடவுளே….. என
கையெடுத்துக் கும்பிட்டு
நன்றி சொல்ல வேண்டிய
கோடானுகோடிகளில்
நானும் ஒருவன்!

என் பஞ்சமி காலங்களை….
காலாட்டிக் கொண்டு
கணினியில் எதனையோ
தேடிக்கொண்டிருக்கும்
என் மகனிடம் சொன்னால்…
என்னை….
ஆம்
என்னைத்தான்
நல்ல கதையாசிரியர்
என்கின்றான்!

நான்
என் சொல்வேன்
என் பாடுகளை?
யாரிடமாவது இறக்கி வைக்க
நினைத்தாலும்
என்
வயதொத்த பெரும்பாலோர்
தலையிலும் மனதிலும்
சுமை!
*******

 

எழுதியவர் 

கவிஞர் பாங்கைத் தமிழன்

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *