வாக்குமூலம் / இந்திரன்
————————-
எனக்குள்ளிருந்து பெருகும் வெளிச்சம்
நிர்மலமான நிழலைச் சுவற்றில் தள்ளுகிறது.
நீ கூச்சப் படுகிறாய்
அது உன் ஜாடையில் இருப்பதாய்.
நான் எனும் எறும்புப் புற்றிலிருந்து
வரிசை வரிசையாய் வெளியேறி வரும் எறும்புகள்
தலையில் சுமந்து வரும் அரிசி மணி வார்த்தைகளின் மீது
உனது கையெழுத்து பொறிக்கப் பட்டிருப்பதாய் அஞ்சுகிறாய்.
எனக்குள் உருத்திரிபுகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
நீர்ப் பரப்பின் மீது காற்று வரையும் கோட்டுச் சித்திரங்கள்
தங்கமீனாய்த் தாமரையாய்க் கரையோரத் தாழம்பூவாய்
அதற்குள் ஊர்ந்து வரும் பாம்பாய்த்
தெரிவதாய்ச் சொல்கிறாய் நீ.
படிந்த பாசி விலக்கி தெளிந்த நீரில் தேடுகையில்
ஒரு தலைப்பிரட்டையாய்ப் பாசியில் நழுவி மறைகிறது
என் சொந்த முகம்
நீ மென்ற வார்த்தைகளால் நானும்
நான் மென்ற வார்த்தைகளால் நீயும்
அவரவர்க்கான அந்தப்புரங்களைக் கட்டியெழுப்புகையில்
திடீரென உறக்கத்திலிருந்து திகைத்து எழுகிறாய்
என் வார்த்தைகள் உன்னை வேவு பார்ப்பதாய்.
நிலவு காயும் நடு இரவில் நாடு விட்டு நாடு பறக்கும்
வெள்ளிப் பறவைகள் போல்.
பறந்து வரும் மின்னஞ்சல் கேள்விகளுக்கு
உன் விரல் நுனியில் அட்சரங்களாய்க்
காத்திருக்கின்றன பதில்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.